இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - முகவுரை

இஸ்றாயேலியர் ஏறக்குறைய முப்பத்தொன்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் திரிந்தார்களே, அதற்குள் அவர்கள் விஷயத்தில் நடந்தேறிய பிரதான வர்த்தமானங்கள் இந்தப் பிரபந்தத்தில் எழுதப் பட்டிருக்கின்றன. இதற்கு எண்ணாகமம் என்னும் பெயர் இடப்பட்ட முகாந்தரமேதென்றால், இதிலே இஸ்றாயேலிய வீரர்களின் தொகை இன்னதென்றும், ஒவ்வொரு வம்சத்தில் சனத் தொகை இன்னதென்றும், இஸ்றாயேல் புத்திரர்கள் பலுகிப் பெருகின விதமின்னதென்றும், வனாந்தரத்திலே திரியும் போது அவர்கள் அங்கங்கே இத்தனை விசை தங்கி பாளையமிறங்கின கணக்கு இன்னதென்றும் சொல்லி இருக்கிறதினிமித்தமே இந்தப் பிரபந்தத்திற்கு எண்ணாகமம் என்னும் பெயர் வந்தது நியாயமே.

அதிலுள்ள ஞானப் போதனைத் திரவியம் இந்து தேசத்தில் உள்ள இரத்தினத் திரவியம் போல் ஒருவராலும் மதிப்பிட முடியாது: இந்தப் புஸ்தகத்தின் அர்த்தம் நன்றாய்க் கண்டுபிடிப்பதற்குச் சுவிசேஷத்தைக் கையிலேந்திக் கொண்டு வாசிக்க வேண்டியது. அர்ச். சின்னப்பர் (கொரிந். முதல் நிரு. 10:2) எழுதியது போல்: “இவைகளெல்லாந் திருஷ்டாந்தமாக அவர்களுக்குச் சம்பவித்தன. உலகத்தின் முடிவிலுள்ள நமக்கு அவைகளால் புத்தியுண்டாகும்படி எழுதப் பட்டிருக்கிறது.”, “முன்பு எழுதியிருக்கின்றவை எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கின்றன” (ரோம. 15:4).