மறையுரை சிந்தனைகள் - துன்பம் ஏற்றல் ***

'க்வோரா' என்ற இணையதளத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டு வாசகர்கள் விடைகளைப் பகிர்வதுண்டு. கடந்த வாரம் கேட்கப்பட்ட வினாக்களில் ஒன்று இது: 'உங்கள் மகள் உங்கள்மேல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?' இக்கேள்விக்கு வாசகி ஒருவர் பின்வருமாறு விடையளிக்கின்றார்: 'நுழைவுத்தேர்வு ஒன்றுக்குத் தயாரித்துக் கொண்டிருந்த என் மகள், தேர்வின் இறுதி நாள் என்னிடம், 'அம்மா! இதுவே என் வாழ்வில் நான் எழுத வேண்டிய இறுதித் தேர்வாக இருக்கட்டும். தேர்வுத் தயாரிப்புக்கான வலியை என்னால் தாங்க இயலவில்லை. 15 இலட்சம் பேருடன் மோத என்னால் இயலாது. தினமும் எனக்குக் கொஞ்சம் சோறு கொடுங்கள். தூங்க ஓர் இடம் கொடுங்கள். நான் இந்த வீட்டிலேயே இருந்துவிடுகிறேன். புத்தகங்கள் வாசிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும், உறவினர்களைச் சந்திப்பதிலும், நண்பர்களோடு உரையாடுவதிலும் என் நேரத்தைக் கழித்துக்கொள்கிறேன்' என்றாள். இந்தக் காலக் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனச்சோர்வை நான் அறிந்துகொண்டேன். ஆனால், வாழ்க்கையின் இனிமையான இரகசியங்கள் அனைத்தும் துன்பங்களைக் கடந்து வருவதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை என் மகளுக்குச் சொல்ல இயலாமல் தவிக்கிறேன். இதுவே அவள் ஏற்படுத்திய தாக்கம்!'

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோபு 7:1-4,6-7) நாம் காணும் யோபின் வார்த்தைகள் மேற்காணும் விடையில் வரும் மகளின் வார்த்தைகள் போல உள்ளன: 

'மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?' நேர்மையாளரின் துன்பம் பற்றியும், ஒருவர் தாங்க இயலாத அளவுக்கு அனுமதிக்கப்படும் துன்பம் பற்றியும் பேசுகிறது யோபு நூல். நேர்மையாளராகவும் பாவமற்றவராகவும் வாழ்ந்த யோபு திடீரென ஒரு நாள் தன் பிள்ளைகள், கால்நடைகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்து, உடல் எல்லாம் கொப்புளங்களால் நிரம்பி வழிய, ஆழ்ந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. தன் துன்பத்திற்குக் காரணம் தன்னைப் பற்றிக் கடவுளும் அலகையும் மேற்கொண்ட உரையாடல் என்பது யோபுக்குத் தெரியாது. வருந்துகிறார், புலம்புகிறார், கொந்தளிக்கிறார் யோபு. ஆன்மீக அளவில் அந்நியப்பட்டவராய், உடலளவில் துன்புறுபவராய், சமூக அளவில் ஒதுக்கப்பட்டவராய் மாறுகிறார் யோபு. கோபமும் கிளர்ச்சியும் கொண்ட அவரால் தன் துன்பத்தின் தோற்றுவாயைக் காண இயலவில்லை. அவருடைய துன்பத்திற்கான காரணம் என்று நண்பர்கள் கொடுத்த இறையியல் காரணங்கள் ஆழமற்றவையாக இருந்தன. அவர்களால் இன்னும் அதிகச் சோர்வுக்கு உள்ளாகிறார் யோபு.

யோபு கடவுளோடு உரையாடும் பகுதியான முதல் வாசகத்தில், 'கூலியாள்களின் நாள்,' 'நிழலுக்கு ஏங்கும் அடிமை,' 'காத்திருக்கும் வேலையாள்,' 'வெறுமையான திங்கள்,' 'தறியின் ஓடுகட்டை', 'வெறுங்காற்று' என்னும் பல்வேறு உருவகங்களால் தன் துன்பத்தை விவரிக்கின்றார். வாழ்க்கை மிகக் குறுகியதாக இருந்தாலும், அதில் மாந்தர் படும் துன்பம் அளவுக்கதிகமாக இருக்கிறது. கடின உழைப்பு, அடிமையின் வேலை, வேலையாளின் காத்திருத்தல் போன்றவை இந்த உலகில் நடக்கும் அநீதியான துன்பத்தை அடிக்கோடிடுவதோடு இந்த உலகில் உள்ள அனைத்தும் வெறுமையையும் துன்பத்தையுமே தருகின்றன எனச் சொல்கின்றன. தூக்கமின்மையிலும் ஓய்வின்மையிலும் கடக்கின்றன யோபின் நாள்கள். இதற்கு மேல் துன்புறத் தன்னால் இயலாது என்பது போல, 'என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா' என விரக்தியில் சோர்ந்து போகின்றார் யோபு.

யோபு நம்பிக்கையாளராக இருப்பதால் அவருடைய துன்பம் இன்னும் மோசமானதாக இருக்கிறது என்பதை அவர் உணர்கிறார். துன்பத்தின் தொடக்கத்தில் எல்லாம் கடவுளிடமிருந்து வந்தது என ஏற்றுக்கொள்கின்றார்: 'கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்துக்கொண்டார்' (யோபு 1:21). ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, கடவுளும் தன்னை மறந்துவிட்டதாக உணர்கிறார் யோபு. தன் எல்லைக்கு மேல் தான் தள்ளப்பட்டுவிட்டதாக உணர்கிறார் யோபு. கடவுளோடு சொற்போரிடுகிறார், விவாதம் செய்கிறார், அவருக்குச் சவால் விடுகின்றார். ஆனால், யோபு கடவுளிடமிருந்து தன்னைத் திருப்பிக்கொள்ளவே இல்லை. தன் துன்பத்தை ஏற்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19,22-23), நற்செய்திக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பவுல். இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதற்காக மக்களைத் துன்புறுத்திய பவுல், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவராய் தானே துன்புறுபவராக மாறுகின்றார். அவருடைய இதயம்-பணி, இயல்பு-இயக்கம் என அனைத்திலும் கிறிஸ்துவே நிறைந்து வழிகிறார். ஆக, நற்செய்தி அறிவித்தல் என்பது கட்டாயமும் அவசியமும் என்ற நிலை ஏற்படுகிறது பவுலுக்கு.

தன் பணி நிறைவேற வேண்டும் என்பதற்காக இரண்டு துன்பங்களை ஏற்கின்றார் பவுல். முதலில், தன் குழுமத்திடமிருந்து எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் நற்செய்தி அறிவிக்க உறுதி ஏற்கிறார். தான் பெறுகின்ற கைம்மாறுக்காக அல்லாமல் இலவசமாக நற்செய்தியை அறிவிப்பதன் வழியாக, நற்செய்தி என்பது விலைமதிப்பற்றது என்பதையும் உணர்த்துகிறார் பவுல். இரண்டாவதாக, தனக்கெனச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலை இருந்தாலும், அந்த நிலையையும் விடுக்க முன்வருகின்றார் பவுல்: 'நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவரக என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.' தன் உழைப்புக்கு ஏற்ற எந்தவித கைம்மாறும் இல்லாத துன்பத்தையும், அனைவருக்கும் அடிமையாகும் துன்பத்தையும் நற்செய்திக்காக ஏற்க முன்வருகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:29-39), மனிதத் துன்பத்திற்கான இயேசுவின் பதிலிறுப்பை வாசிக்கின்றோம். இயேசுவின் வழக்கமான ஒரு நாள் வேலையை நற்செய்தி வாசகம் நம் கண்முன் கொண்டுவருகிறது: இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார், நோயுற்றோருக்கு நலம் தருகின்றார். நோயுற்றோர் நலம் பெறுதல் என்பது இறையாட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஏனெனில், நோய் என்பது தீமையின் ஆதிக்கம் என்று கருதப்பட்டது.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், சீமோனின் மாமியாரின் காய்ச்சலைக் குணமாக்குகிறார் இயேசு. சீமோனின் மாமியார் வீட்டில் இருக்கிறார். அந்த வீடுதான் அவருடைய உலகம். அந்த வீட்டை அவர் நிர்வகித்தார், அந்த வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்தார். சமூகம் வரையறுத்த அந்த வேலைகளை அவர் துன்பமெனக் கருதவில்லை. நோயினால் வருந்திய அவர் வீட்டுக்குள்ளேயே செயலற்றவராகக் கிடந்தார். இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்கியதன் வழியாக, தன் முழுமையையும் நிறைவையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார். எழுந்த அவர் உடனடியாகத் தன் உலகத்தை இயக்கத் தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் கரம் மானுடத்தின் துன்பம் நீக்கும். இரண்டாவது பிரிவில், அந்த ஊரில் இருந்த நோயாளர்கள், தீய ஆவி பிடித்தோர், மற்றும் பல்வேறு பிணிகளால் வருந்திய அனைவருக்கும் நலம் தருகின்றார் இயேசு. இயேசு தீய ஆவியின்மேல் கொண்டிருந்த அதிகாரம் இங்கே புலனாகிறது. மூன்றாவது பிரிவில், 'எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்' என்று இயேசுவிடம் சொல்லப்பட்டபோது, 'ஆஹா! இங்கிருத்தல் நலம்! எல்லாரும் நம்மை அறிவர்! நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்!' என்ற இன்பத்தின் வழியைத் தேடாமல், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்!' என இலக்குத் தெளிவுடன் புறப்படுகின்றார் இயேசு. தான் செல்கின்ற வழியில் துன்பங்கள் பல இருக்கும் என்று தெரிந்தாலும், இயேசு துன்பத்தையே தெரிவு செய்கின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, துன்பத்துக்கான மனித பதிலிறுப்புகளை வரையறுக்கிறது. துன்பத்தின் நடுவில் சோர்வு மற்றும் விரக்தியடைந்த யோபு, கடவுளிடமிருந்து விலகாமல் நிற்கின்றார். துன்பத்தையும் ஏழ்மையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு நற்செய்தி அறிவித்தல் என்னும் தன் இலக்கோடு சமரசம் செய்யாமல் இருக்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் தன் இறைவேண்டல் வழியாகவும், உடனிருப்பு வழியாகவும் மனிதத் துன்பத்தைத் தன்மேல் ஏற்றுக்கொள்கின்றார் இயேசு.

நம் மனித உடலும் மனமும் இயல்பாகவே துன்பத்தை வெறுக்கின்றன. நம்மை நோக்கி வேகமாக ஒரு பொருள் வந்தால் உடனடியாக கண்கள் மூடிக்கொள்கின்றன. நம் கைகள் நம் முகத்தின்முன் வந்து குவிகின்றன. நம் கால்கள் பின்னால் இழுக்கின்றன. நம்மை அறியாமல் நடக்கும் அனிச்சை செயல் இது. ஆக, நம் இயல்பே துன்பத்திற்கானது அல்ல. ஆனால், துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடியவை என்பதை நாம் அறிவோம்.

சில கலாச்சாரங்களில், சிறுவர் சிறுமியர்கள் இளவல் நிலை அடைந்தவுடன், அவர்களைக் கட்டாயத் துன்பத்துக்கு உட்படுத்துவர். காடுகளில் அவர்களை அலைந்து திரியச் செய்தல், தன் உணவைத் தானே சேகரித்தல், தனியாக வாழக் கற்றுக்கொள்தல், வேலை தேடுதல் எனப் பல்வேறு துன்பங்களை அவர்கள் ஏற்க வேண்டும். அப்படி அவர்கள் துன்பம் ஏற்பதன் வழியாகவே, அவர்கள் விழுமியங்களில் வளர முடியும் என்பது இதில் அடங்கியுள்ளது.

நாம் முதலில் கண்ட அந்தப் பெண்ணுடைய மகள்போல இருந்தால் துன்பம் போய்விடுமோ? இல்லை! இன்பம் என நினைத்த அனைத்தும் அந்தப் பெண்ணுக்குத் துன்பமாக மாறலாம். வீட்டிலேயே இருப்பதால் மனம் சோர்வடையலாம். உறவினர்களிடம் அதிகமாகப் பேசுவதால் சண்டைகள் வரலாம். நண்பர்களோடு உரையாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம். போதிய உடற்பயிற்சி இராததால் நோய்கள் வரலாம். ஆக, இன்பம் காலப்போக்கில் துன்பமாக மாறிவிடும்.

இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

(அ) பொறுமை:

தன் துன்பத்துக்கான காரணம் யோபுக்குத் தெரியாது. தன்னைப் பற்றி கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடந்த உரையாடலும் யோபுக்குத் தெரியாது. ஆயினும் பொறுமை காக்கின்றார். துன்பம் ஏற்றலின் முதற்படி பொறுமை காத்தல். உடனடியாகத் தீர்வு வரவில்லை என்றாலும், பொறுமை காப்பின் தீர்வை நாம் கண்டிப்பாக அடையலாம்.

(ஆ) எதிர்பார்ப்புகள் விடுப்பது:

தனக்கு வர வேண்டிய கைம்மாறு பற்றியும், தன் சமூக நிலை பற்றியும் தான் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை விடுக்கத் தயாராகின்றார் பவுல். தனக்குத் துன்பம் தருபவற்றைக் கண்டு, 'நான் மனநிறைவு கொள்கிறேன்' என்கிறார் பவுல். நிறைவு மனப்பான்மை கொண்டவர்கள் எந்தத் துன்பத்தையும் எளிதில் ஏற்றுக்கொள்வர். எதிர்பார்ப்புகள் குறையக் குறைய நம் மனம் நிறைவு பெறும்.

(இ) இறைவேண்டல்:

மனிதர்களின் துன்பங்களில் அவர்களோடு உடனிருக்கின்ற இயேசு, தந்தையுடனான தனித்திருத்தல் வழியாகத் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொள்கின்றார். 'நம் பிணிகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்ட அவர்' நம்மோடு இணைந்து துன்புறுகிறார். இன்பம் விரிக்கின்ற பாதுகாப்பு வளையத்துக்குள் சிக்கிவிடாமல், 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்' எனப் புறப்படுகின்றார்.

இறுதியாக,

துன்பம் என்பது நம் வாழ்வியல் எதார்த்தம். மண்ணில் வாழ்வது மனிதருக்குப் பேராட்டம்தான். ஆனால், பொறுமை, துணிவு, மற்றும் இறைவேண்டல் என்னும் மூன்று படைக்கலன்களைக் கொண்டு அப்போராட்டத்தில் வெற்றி காண நம்மால் இயலும். துன்பத்தை ஏற்கும் எவரும், 'உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்' (காண். திபா 146) என்னும் அனுபவம் பெற்றவர் ஆகிறார்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)