மறையுரை சிந்தனைகள் - பணியே ஓய்வாக ***

எங்கள் ஊரில், எங்க பக்கத்து வீட்டில் ராமசுப்பு என்ற ஓர் அக்கா உண்டு. இவர் தன் இளம் வயதிலேயே தன் கணவரை இழந்துவிட்டார். அதில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் உடல்நலம் குன்றிப்போனார். இவருடைய மனத்திற்கு ஓய்வு கிடைத்தால் மட்டுமே இவருடைய உடல்நலம் திரும்பும் என மருத்துவர்கள் சொல்லிவிட, இவர் தன் தாயின் ஊரான எங்க ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் இவருடைய தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். ஓய்வு எடுக்க வந்த ராமசுப்பு அக்கா, தன் தாயைப் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தார். தன் அம்மாவுக்கு உணவு தயாரிக்க, பணிவிடை செய்ய, துணி துவைக்க, பொருள்கள் வாங்க, சில நேரங்களில் வேலைக்குச் செல்ல எனத் தொடர்ந்த அவருடைய வாழ்வில் மகிழ்ச்சி திரும்பியது.

இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:

(அ) சோர்வுறம் நம் மனத்துக்கும் உடலுக்கும் ஓய்வு தேவை.

(ஆ) பல நேரங்களில் ஓய்வு என நாம் நினைக்கும் ஒன்றே நமக்கு பெரிய வேலையாக மாறிவிடுகின்றது.

(இ) நம் உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வு தேவைப்பட்டாலும், தேவையில் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்துகொள்ள நம் உடலிலும் மனத்திலும் ஆற்றல் இருக்கவே செய்கின்றது. மேலும், அந்த நேரத்தில் நம் களைப்பு மறைந்துவிடுகிறது. இன்னொருவரின் களைப்பை நீக்குவதே நம் ஓய்வாக மாறிவிடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் திருத்தூதர்கள் தங்கள் பணி முடிந்து இல்லம் திரும்புகின்றனர். தாங்கள் செய்தவை, கற்பித்தவை என அனைத்தையும் தங்கள் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். 'நீங்கள் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுங்கள்' என்று அவர்களை அனுப்பி அவரும் உடன் செல்கின்றார். ஆனால் என்ன நடக்கிறது தொடர்ந்து? அவர்கள் போவதைக் கண்ட மக்கள் அவர்களைவிட முன்னால் சென்று அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் கூட்டமாகத் திரள்கிறார்கள். யாருமற்ற தனிமையான இடத்தைத் தேடிச் சென்றவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய கூட்டம். ஓய்வை நாடிச் சென்றவர்களின் முதுகில் ஏறிக்கொள்கிறது வேலை.

கவலை தோய்ந்த மக்களின் முகத்தைக் கண்டவுடன் தங்கள் களைப்பை மறக்கின்றனர் இயேசுவும் சீடர்களும். 'அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்' என எழுதுகிறார் மாற்கு. திருத்தூதர்களும் இயேசுவின் அருகில்தான் இருந்திருப்பார்கள். 

தங்களின் பரபரப்பான பணியை ஓய்வு என மாற்றிக்கொள்கின்றனர் திருத்தூதர்கள்.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு பெரிய வாழ்வியல் மேலாண்மை பாடத்தைக் கற்றுத் தருகிறது. அது என்ன?

'நிலைத்தன்மை' அல்லது 'ஒருநிலை' (Consistency) தேவையா? தேவையற்றதா?

பல நேரங்களில் நாம் 'கன்சிஸ்டென்ட்டாக' இருக்கவே விரும்புகிறோம். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மாறக்கூடாது என நினைக்கிறோம். எப்பாடுபட்டாவது நாம் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க விரும்புகிறோம். மாற்றிப் பேசுவதும், மாற்றிச் செய்வதும் தவறு என நினைக்கிறோம்.

ஆனால், இயேசு இதற்கு ஒரு மாற்றான பாடத்தைக் கற்பிக்கிறார்.

திட்டத்தை மாற்றுவது தவறல்ல.

நிலைத்தன்மையும் ஒருநிலையும் எல்லா நேரத்திற்கும் தேவைப்படுவது அல்ல.

'நான் ஓய்வெடுக்கவே வந்தேன். என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன்' என்று இயேசு அடம் பிடிக்கவில்லை. மாறாக, 'இடத்திற்கும் நேரத்திற்கும் மக்கள் கூட்டத்திற்கும் ஏற்றாற் போல தன் திட்டத்தை மாற்றிக்கொள்கின்றார்.'

உயிரியல் பரிணாம வளர்ச்சியின் கொள்கையின்படி, 'தன்னை மாற்றத்திற்கு உட்படுத்துகின்ற உயிரினமே போராட்டத்தில் வெல்லும்.'

இன்று நம் வாழ்வில் திட்டங்களை மாற்ற வேண்டிய நிலை வந்தால் வருந்த வேண்டாம். 

நம் வாழ்வில் நாம் நினைப்பது போல நிகழ்வுகள் நடந்தேறுவதில்லை.

ஓய்வு எடுக்க விரும்பும் நேரத்தில்தான் வீட்டின் அழைப்பு மணி விடாமல் அடிக்கும்.

சீக்கிரம் புறப்பட்டு ஆலயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் வரும்போதுதான் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவார்கள், அல்லது மின்தடை ஏற்படும்.

திட்டங்களை மாற்றுவது நலமே! அப்படி மாற்றும்போது நமக்கு நாமே பொய் பேசுவதாக எண்ணிக் குற்றவுணர்வு கொள்தல் தவிர்க்க வேண்டும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)