அருள் நிறை மரியே - இது வாழ்வின் செபம் ***

" அருள் நிறை மரியே " என்ற செபத்தின் மூலம் ஒரே ஒரு காரியத்தை நாம் அன்னையிடம் கேட்கிறோம். அதாவது நமது மரணவேளையில் நமக்காக இயேசுவிடம் பரிந்துரைப்பது. மரணம் என்பது நமது வாழ்க்கையின் கடைசி செயல்,  கடைசி நிலை, கடைசி உணர்வு, கடைசி சந்திப்பு, கடைசி துன்பம், கடைசி மகிழ்ச்சி, இவற்றைப் போல நாம் விடும் கடைசி மூச்சே நமது இறப்பு. நம்முடைய இறப்பு என்றோ ஒருநாள் நடப்பதல்ல . நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான திசுக்கள் இறக்கின்றன. மேலும் பிறக்கின்றன. நம்முடைய திசுக்கள் பிறக்கும்போதும், இறக்கும்போதும் அது நம்முடைய பிறப்பு, நம்முடைய இறப்பு. இந்த உடலோடு மறுவுலகிற்குச் செல்ல முடியாது. அதை இவ்வுலகில் விட்டுவிட்டுத்தான் செல்ல முடியும்.

   நாம் இவ்வுலகத்தில் சாகும்பொழுது மறுவுலகில் பிறக்கிறோம் என்பது உண்மை. எனவே நமது பிறப்பும் இறப்பும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. மறுவுலகத்தில் என்ன நடக்கும் என்பது நமக்கு நிச்சயமல்ல. அவ்வாறு மறுவுலகில் பிறக்கும்பொழுது நமக்கு ஆதரவு தேவை. அந்த ஆதரவே மரியாள். எனவேதான் மரணவேளைக்காக மரியாளிடம் மன்றாடுகிறோம்.

   நாம் மரணிக்கும் வேளையில் இவ்வுலக செல்வம், உறவு, மகிழ்ச்சி, துன்பம் இவை அனைத்தையும் விடுத்து தனிமைப்படுத்தப்படுகிறோம். அடுத்து அந்த மரணவேளை நாம் பாவம் செய்யாத வேளையாக இருக்க வேண்டும். மேலும் நாம் எப்பொழுது மரணிப்போம் என்பது நமக்குத் தெரியாது. அனைத்தும் நம்மை கைவிட்ட நேரத்தில், நம் பாவங்களைச் சுமத்து கடவுளை நாம் எதிர்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கும்பொழுது, நமக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே உறவு, அன்னையின் உறவு மட்டுமே. இவ்வுலகில் நாம் மரணிக்கும்பொழுதும் அவர் நம்மோடு இருப்பார். அதுபோல மறுவுலகில் நாம் பிறக்கும்போதும் அவர் நம்மோடு இருப்பார். ஆனால் அது நம் கண்களுக்குத் தெரியாது.

   அருள் நிறைந்த மரியே செபம் உலகத்து அனைத்து செபங்களிலும் தலைசிறந்த செபம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் மத வேறுபாடின்றி சொல்ல வேண்டிய செபம். நாம் எந்தத் துன்பத்தையும், அனுபவிக்க முடியாத இனிமையான நேரம் . நாம் இறக்கும் நேரமே. துன்பமே இல்லை என்ற மகிழ்ச்சியை உணரும் நேரமும் நாம் இறக்கும் நேரமே. ஆனால் அதை நாம் உணர முடியாது.

நமது சிந்தனைக்கு : -
---------------------------------------

    நம்முடைய இறப்பை அர்த்தம் கொடுத்து மகிமைப் படுத்துவதற்கான செபம் ' அருள்நிறை மரியே ' . வாழ்க்கையில் நாம் பயணிப்பது நமது மரணவேளையை நோக்கி, அந்த மரணவேளை நன்றாக அமைய வேண்டுமென்பதுதான் எல்லா மனிதர்களின் நோக்கம். அதற்கான ஒரே செபம் ' அருள்நிறை மரியே ' செபம். இறப்பு என்பது ஒரு புதிர். அதுசமயம் அதுதான் புதிருக்கான விடை. எனவே நாமும் அன்னை மரியாளிடம் மன்றாடுவோம் " அருள்நிறை மரியே, இறைவனின் தாயே! எங்கள்  மரணவேளையில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் " என்று செபிப்போம். ஏனென்றால் இந்த செபம் நிலை வாழ்வின் தொடக்கம்.