இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 36

ஆண்பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் பெண்பிள்ளைகள் சுதந்தரத்தை அடைவதற்கடுத்த பிரமாணங்கள்.

1, அதிப்படியிருக்க, ஜோசேப்புடைய புத்திர சந்தானத்தைச் சேர்ந்த மனாசேயின் குமாரனாகிய மக்கீரின் குமாரர்களும், கலாத் வமிசங்களின் அதிபதிகளுமாயிருந்தவர்கள் வந்து இஸ்றாயேல் அதிபதிகளின் முன்னிலையில் மோயீசனோடு பேசிச் சொன்னதாவது:

2. சீட்டுப் போட்டுத் தேசத்தை இஸ்றாயேல் புத்திரருக்குச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவராகிய உமக்குத்தானே கர்த்தர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குத் தரக் கற்பித்தார்.

3. ஆனால் வேறொரு கோத்திரத்தின் புருஷர்கள் அவர்களை மணஞ் செய்வார்களானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்கள் சுதந்தரம் நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்து போம்.

4. அப்படியிருக்க ஜம்பதாம் வருஷமாகிய ஜூபிலி வருஷம் வந்தாலும் முந்திச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த காணியாட்சிகள் ஒன்றிலொன்று சிக்குப் பட்டுப்போம். ஒருவனுடைய சுதந்தரம் நீங்கிப் போய் மற்றொருவனுடைய சுதந்தரத்தோடு சேர்ந்துபோம். (அதற்கு நியாயம் என்ன?) என்று கேட்டார்கள்.

5. அதற்கு மோயீசன் கர்த்தருடைய கற்பனையின் படி இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: ஜோசேப் புத்திரராகிய கோத்திரத்தார் சொன்னதே நியாயம்.

6. ஆதலால் கர்த்தர் சல்பாதுடைய குமாரத்திகளைக் குறித்து விதிக்கிற கட்டளையேதெனில்: அவர்கள் தங்களுக்கு இஷ்டமான புருஷர்களை விவாகம் செய்யலாம். ஆனாலும் தங்கள் கோத்திரத்தாரோடு மாத்திரம் அவர்கள் கலியாணம் பண்ண வேண்டும்.

7. இல்லாவிட்டால் இஸ்றாயேல் புத்திரருடைய சுதந்தரம் ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்துக்குப் போகும். ஆதலால் புருஷர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வமிசத்திலும் மாத்திரம் விவாகம் பண்ண வேண்டும்.

8. அவரவருடைய சுதந்தரம் அவரவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மாத்திரம் வாழ்க்கைப்படவும் கட வார்கள்.

* இந்தப் பிரமாணம் உயிரோடிருக்கிற சகோதரர் இல்லாத பெண்களை மாத்திரம் சேர்ந்திருந்தது. ஆனது பற்றி வேறு கோத்திரத்திலே பெண்களை விவாகம் பண்ணின தாவீது இராசாவும் மற்றுமுள்ள புருஷரும் அதனாலே குற்றவாளியாகவில்லை.

9. அதிலே கோத்திரங்கள் ஒன்றோடொன்று கலவாமல் இப்போதிருக்கின்ற அந்தஸ்திலே நிற்கும்.

10. அந்தக் கோத்திரங்கள் கர்த்தராலேதான் வேறுவேறாகப் பிரிக்கப் பட்டதல்லவா என்று சொன்னான். சல்பாதின் குமாரத்திகள் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்து வந்தார்கள்.

11.  மாலாள், தேற்சாள், எகிலாள், மெல்காள், நோவாள் ஆகியவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய குமாரர்களை விவாகம் பண்ணினார்கள்.

12. இவர்கள் ஜோசேப்புடைய புத்திரனான மனாஸேயின் வமிசத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த சுதந்தரம் அவர்களுடைய பிதாவின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலைகொண்டது.

13. ஜெரிக்கோவின் அருகே யோர்தான் இப்புறத்திலுள்ள மோவாபின் சமமான வெளிகளிலே கர்த்தர் மோயீசன் முலியமாய் இஸ்றாயேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும், பிரமாணங்களும் இவைகளேயாம்.


எண்ணாகமம் முற்றிற்று.