இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 35

லேவியருக்குக் கொடுக்கப் பட்ட பட்டணங்களும் -- அடைக்கலப் பட்டணங்களும் -- கொலை பாதகத்துக்கடுத்த நீதிப் பிரமாணங்களும்.

1. மீண்டும் மோவாப் சமபூமிகளில் ஜெரிக்கோவுக்கெதிரிடையில் யோர்தானின் இக்கரையிலே கர்த்தர் மோயீசனுக்குத் திருவாக்கருளினதாவது:

2. நீ இஸ்றாயேல் புத்திரருக்குக் கட்டளையிட வேண்டியதேதெனில்: அவர்கள் தங்கள் சுதந்தரக் காணியாட்சிகளில் லேவியருக்கு இடந்தர வேண்டும்.

3.  குடியிருக்கத் தக்க பட்டணங்களையும், இவைகளின் சுற்றிலுமுள்ள கிராமங்களையும் அவர்களுக்குக் கொடுக்கக் கடவார்கள். மேற்படி பட்டணங்களில் லேவியர் வாசம் பண்ணி அந்தப் பட்டணங்களுக்கடுத்த சுற்று கிராமங்களிலே அவர்கள் தங்களுடைய ஆடுமாடு முதலியவைகளை வைத்துக் கொள்வார்கள்.

4. இந்தக் கிராமங்கள் மேற்படி பட்டணங்களின் மதில்களுக்குப் புறம்பேயிருக்கும். மதில் தொடங்கி வெளியிலே சுற்றிலும் ஆயிரம் கஜம் தூரத்துக்கு எட்ட வெண்டும்.

5. பட்டணங்கள் மத்தியிருக்க, பட்டணங்களைச் சேர்ந்த கிராமங்கள் வெளியிலிருக்கும். இதுகளுக்கும் அதுகளுக்கும் கீழ்ப்புறத்தில் இரண்டாயிரம் முழமும், தென்புறத்தில் இரண்டாயிரம் முழமும், மேற்புறத்தில் இரண்டாயிரம் முழமும், வடபுறத்தில் இரண்டாயிரம் முழமும் (உள்ளந்தரமிருக்கும்படி அளந்து விடுவீர்கள்.)

6. நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில், கொலை செய்திருப்பவன் ஓடித் தப்பிப் போகத்தக்க ஆறு பட்டணங்களைச் சரணாகதி என்று குறிக்கக் கடவீர்கள். இவ்வாறுந் தவிர வேறே நாற்பத்திரண்டு பட்டணங்கள் லேவியருக்குரியவைகளாயிருக்க இருக்க வேண்டும்.

7. எல்லாங் கூடி லேவியருக்குக் கொடுக்க வேண்டியது நாற்பத்திரண்டு பட்டணங்களும் அதுகளுக்கு அடுத்த வெளி; கிராமங்களுமேயாம்.

8. நீங்கள் இஸ்றாயேல் புத்திரருடைய சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைக் குறிக்கும்போது அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலே நின்று கொஞ்சமும் பிரித்தெடுக்க வேண்டும். அவரவருடைய சுதந்தரத்தின் தராதரப்படியே அவரவர் லேவியருக்குக் கொடுக்கக் கடவார்கள் என்று திருவுளம் பற்றினார்.

* லேவியர்களுக்கிருந்த பட்டணங்கள் அதிக சுகமாகவும், அழகாகவுமிருந்தன என்று பரம்பரையான ஜதீகப் பிரமாணத்தினால் தெரிய வருகிறது.

9. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

10. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதேதென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தில் சேர்ந்த பின்பு,

11.மனதறியாமல் கொலை செய்தவன் ஓடித் தப்பிப் போகத்தக்க பட்டணங்களில் எவைகள் சரணாகதியாகுமென்று நீங்கள் தீர்மானித்துக் குறிக்கக் கடவீர்கள்.

12. கொலை செய்தவன் அவைகளில் அடைக்கலம் புகுந்தவனெவனோ (நியாய) சபையிலே நியாயம் விசாரிக்கப் படுவதற்கு முன் அவன் கொலைசெய்யப் பட்டவனுடைய பந்துக்களின் கையாலே சாகாமல் தப்பித்துக் கொள்வான்.

13. அப்படியிருக்கச் சரணாகதியென்று குறிக்கப் படும் பட்டணங்களில்,

14. யோர்தானுக்கிப்பாலே மூன்றும், கானான் தேசத்திலே மூன்றும் இருக்க வேண்டும்.

15. மனதறியாமல் கொலை செய்தவன் இஸ்றாயேல் புத்திரனானாலும், உங்கள் நடுவே இருக்கும் பரதேசியானாலும், அன்னியனானாலும் (எவனும்) அங்கே அடைக்கலம் புகக்கூடும்.

16. ஒருவன் இருப்பாயுதத்தால் மற்றொருவனை அடித்திருக்கிறான். அடியுண்டவன் செத்தால் அடித்தவன் நர கொலைபாதகனென்று கொலை செய்யப்பட வேண்டும்.

17. ஒருவன் மற்றொருவன் மேலே கல்லையெறிந்திருக்கிறான்; அடிபட்டவன் செத்தால் கல்லெறிந்தவன் அப்படியே கொலை செய்யப் பட வேண்டும்.

18. ஒருவன் மர ஆயுதத்தால் அடிபட்டுச் செத்தால், அந்தப் பழி அடித்தவன் கொலை செய்யப் படுவதாலே தீரும்.

19. கொலை செய்யப் பட்டவனுடைய பந்துக்கள் கொலைப்பாதகனைக் கொல்ல வேண்டும். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனைக் கொன்று போடுவார்கள்.

20. ஒருவன் பகையால் மற்றொருவனை விழத் தள்ளினான். அல்லது பதுங்கியிருந்து அவன் மேல் ஏதாகிலும் எறிந்தான்,

21. அல்லது அவனை விரோதித்துக் கையால் அடித்தான். அடிபட்டவன் செத்தானானால் அடித்தவன் கொலைபாதகனாகையால் கொலைசெய்யப்படுவான். செத்தவனுடைய பந்துக்கள் அவனைக் கண்டமாத்திரத்தில் கொன்று போடுவார்கள்.

22. ஆனால் அவன் துர் அதிர்ஷ்டத்தினாலே பகையொன்றுமில்லாமலும், 

23. வர்மமில்லாமலும் அவ்விதக் காரியம் செய்திருப்பானானால்,

24. அப்பொழுது கொலைசெய்தவனும் பழிவாங்க வேண்டிய உறவினனும் சபையார் முன்பாக நியாயம் பேசி (அது துரதிருஷ்டத்தினால் சம்பவித்ததேயன்றி வேறொன்றினால் அல்லவென்று) ருசுவானால்

25. அவனைக் குற்றமற்றவனென்று பழிவாங்குபவனுடைய கைக்குத் தப்புவித்து அவன் அடைக்கலம் புகுந்த படடணத்திற்கு நீதித் தீர்ப்புப் படி கொண்டுவரப் படுவான். பிறகு அவன் பரிசுத்த தைலத்தைப் பூசி அபிஷேகஞ் செய்யப்பட்ட பிரதான ஆசாரியனுடைய மரணமட்டும் அவ்விடத்திலேயே இருக்கக் கடவான்.

26. ஆனால் கொலை செய்தவன் தான் ஓடிப் போயிருந்த அடைக்கலப் பட்டணத்தின் எல்லைகளை விட்டு வெளிப்பட்டிருக்கும்போதே,

27. அவனைக் கண்டுபிடித்துக் கொன்று போட்ட பழிவாங்கினவனுக்குக் குற்றமில்லை.

28. ஏனெனில் ஓடினவன் பிரதான ஆசாரியனின் மரணமட்டும் அடைக்கலப் பட்டணத்தில் இருக்க வேண்டியிருந்ததே. பிரதான ஆசாரியன் மரித்த பின்னரோ கொலை செய்தவன் தனது சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப் போவதற்குத் தடையில்லை.

29. இவைகள் உங்கள் வாசஸ்தலங்களெங்கும் நித்தியப் பிரமாணமாக வழங்கி வரக் கடவது

30. கொலை செய்தவன் சாட்சிகளுடைய வாக்குமூலத்தின் படியே தண்டனையிடப் படுவான். மேலும் ஒரே சாட்சியைக் கொண்டு ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச் செய்யலாகாது.

31. இரத்தத்தைச் சிந்திய பாதகன் தன் உயிருக்காக மீட்கும் பணத்தைக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கலாகாது. அவன் சாகவே சாக வேண்டும்.

* கொலையென்ற பாதகத்தின் மேல் இஸ்றாயேலியருக்கு அதிக வெறுப்பும் பயங்கரமும் உண்டாகும் பொருட்டாகத் தானே கர்த்தர் இக் கட்டளையைக் கொடுத்தார்.

32. கட்டளையிடப்பட்டவர்களும் ஓடிவந்தவர்களும் அடைக்கலப் பட்டணத்திலிருந்து ஆசாரியனுடைய மரணத்துக்கு முன் தங்கள் ஊருக்குப் பரிச்சேதம் திரும்பிப் போகலாகாது.

33. உள்ளபடி நீங்கள் குடியேறின தேசம் குற்றமல்லாதவருடைய இரத்தத்தினால் தீட்டுள்ளதாகி விட்டதே. அந்தத் தோஷம் இரத்தத்தைச் சிந்திய பாதகனுடைய இரத்தத்தாலொழிய மற்ற எதினாலும் கழுவப்படாதென்று (நீங்கள் மறவாதபடிக்கு அதைச் சொன்னோம்.)

34. அவ்வாறு உங்கள் தேசம் சுத்தமாகும். நாமும் அப்பொழுது உங்களோடு வாசம் பண்ணுவோம். ஏனெனில் கர்த்தராகிய நாம் இஸ்றாயேல் புத்திரர் நடுவே வாசம் பண்ணுகிறோமென்று திருவுளம் பற்றினார்.