இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 34

இஸ்றாயேலியருக்குக் கொடுத்த தேசத்தின் எல்லைகளும்--அதைப் பங்கிட்டுக் கொடுப்பவர்களின் பெயர்களும்.

1. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்ல வேண்டியதென்னவென்றால்: நீங்கள் கானான் தேசத்தில் பிரவேசிக்கப் போகிறீர்களே ; அது உங்கட்குத் திருவுளச் சீட்டுப் படி சுதந்தரமாய்க் கொடுக்கப்பட்ட பின்பு அதின் எல்லைகள் பின்வருமாறு:

3. உங்கள் தென்புறம் எதோமுக்குச் சமீபத்திலிருக்கிற சீன் என்னும் வனாந்தரந் தொடங்கிக் கிழக்கிலிருக்கிற உவர்க்கடல் அட்டுமேயாம்.

4. அந்த எல்லைகள் தெற்கிலுள்ள தேள் என்னும் மேட்டைச் சுற்றிச் சென்னா வழியே போய், காதேஸ்பர்னே வரைக்கும் வரவிய பிற்பாடு, அங்கிருந்து எல்லையூர்களின் வழியாய் ஆதாருக்குப் போய் அசேமொனா வரைக்கும் சென்று தென்புறத்தை முழுவதுஞ் சூழும்.

5. அரேமொனாவிலிருந்து எஜிப்த்தின் நதி மட்டும் சுற்றிப் போய் பெருங்கடலின் கரையைச் சேரும்.

* இங்கே சொல்லப் பட்ட பெருங்கடல் உட்சமுத்திரமாகிய மெதித்தெறேனியக் கடலாம் (அதாவது, மத்திய தரைக் கடலாம்.)

6. மேற்றிசையில் பெருங்கடலே உங்களுக்கு எல்லையாம். அது பெருங்கடலோடு துவக்கும். பெருங்கடலோடு முடியும்.

7. வடதிசைப்புறத்திலோ எல்லைகள் பெருங்கடல் துடங்கி அதி உயரமான மலைமட்டும் போய்,

* இவ்விடத்தில் சொல்லப் பட்ட அதி உயரமான மலை லிபான் மலையாம்.

8. அங்கிருந்து ஏமாத்தைத் தொட்ச் சேதாதாவில் போய்ச் சேரும்.

9. அவ்விடத்திலிருந்து எல்லை வழியாக ஜெப்பிறோனாவுக்கும் ஏனானுக்கும் போய்ச் சேரும்.

10.  அங்கிருந்து எல்லை கீழ்த்திசைக்கு எதிரேயிருக்கிற ஏனான் துடங்கிச் சேப்பமா வரைக்கும் பரவும்.

11. சேப்பமாவிலிருந்து எல்லையானது தப்னீம் ஊறணிக்கு எதிரிலிருக்கும் ரேபிலாவுக்குப் போய்க் கீழ்ப் புறத்திற்குப் பிரத்திமுகமாயுள்ள கெனெரேத் கடலையணுகி,

12. யோர்தான் வரையில் பரம்பி உவர்க் கடலில் முடியும். இந்தச் சுற்றெல்லைகளுக்குள்ளடங்கிய தேசமே உங்களுக்குரித்தான தேசமென்றருளி னார்.

13. ஆகையால் மோயிசன் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நீங்கள் திருவுளச் சீட்டு போட்டு அவரவர் தனக்கு விழுந்தபடி சுதந்தரித்துக் கொள்ள வேண்டிய தேசமும் கர்த்தருடைய கட்டளையின்படியே ஒன்பது கோத்திரத்தாருக்கும் அரை கோத்திரத்தாருக்கும் பங்கிட வேண்டிய தேசமும் அதுவே!

14. ஏனென்றால் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படி ரூபன் புத்திரர்களும், காதின் புத்திரர்களும், மனாசேயின் அரைக் கோத்திரத்தின் புத்திரர்களும்,

15.  ஆக இரண்டரை கோத்திரத்தின் புத்திரர் எரிக்கோவின் அருகே கீழ்த்திசையாகிய யோர்தான் நதிக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

16. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

17. உங்களுக்குத் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவர்களின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயஸாரும், நூனின் குமாரனான ஜோசுவாவும்,

18. அவ்விருவரை யன்றி ஒவ்வொரு கோத்திரத்தின் ஒவ்வொரு தலைவனுமே.

19. அதாவது: யூதா கோத்திரத்திலே யஜ்போனேயின் குமாரனாகிய காவேப்,

20. சிமையோன் கோத்திரத்திலே அம்மியூதின் குமாரனாகிய சமுயேல்,

21. பெஞ்சமீன் கோத்திரத்திலே காயஸலோனின் குமாரனாகிய எலிதாத்,

22. தான் புத்திரரின் கோத்திரத்திலே ஜொகிலியின் குமாரனாகிய பொக்சி,

23. ஜோசேப் புத்திரருக்குள்ளே மனாஸேயின் கோத்திரத்திலே எப்போதுடைய குமாரன் ஆனியேல்,

24. எப்பிராயீம் கோத்திரத்திலே யஸப்தானுடைய குமாரன் கமுயேல்,

25. சபுலோன் கோத்திரத்திலே பர்னாக்குடைய குமாரனாகிய எலிஸப்பான்,

26. இஸக்கார் கோத்திரத்திலே ஒஸானுடைய குமாரனாகிய பல்தியேல்,

27. ஆஸேர் கோத்திரத்திலே ஸலோமீயுடைய குமாரனாகிய அகியூத்,

28. நேப்தளி கோத்திரத்திலே அம்மியூதுடைய குமாரனாகிய பெதாயேல் என்பவர்களாம் என்றருளினார்.

29. கானான் தேசத்தை இஸ்றாயேல் புத்திரருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்குக் கர்த்தரால் நேமிக்கப் பட்டவர்கள் இவர்களே.