இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 32

மோயீசன் ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் யோர்தான் நதியின் கீழ்ப்புறத்து நிலங்களைக் காணியாட்சியாகத் தந்தது.

1. ரூபன் சந்ததியார்களும், காத் சந்ததியார்களும் திரளான மந்தையை வைத்துக் கொண்டு, மிகவும் சம்பத்துள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் யாஜேர் நாடும், கலாத் நாடும் ஆடு மாடுகளை மேய்ப்பதற்குத் தகுந்த புல்காடாயிருந்ததைக் கண்டு,

2.  மோயீசனிடத்திலேயும், ஆசாரியனான எலெயஸாரிடத்திலேயும், சபையின் அதிபதிகளிடத்திலேயும் வந்து அவர்களை நோக்கி:

3. அத்தரோட், திபோன், யாஜோ, நெமிரா, ஏசெபோன், சபான், நேபோ, பொயோன் என்னும் கிராமங்கள்,

4. இஸ்றாயேல் புத்திரருக்கு முன்பாகக் கர்த்தர் தண்டித்துக் கண்டித்த நாடே. அந்நாடானது ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு அதிசெழிப்பானதாகையாலும், அடியோர்கட்குத் திரளான மந்தைகள் இருக்கிறதினாலும்,

5. உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால் எங்களை யோர்தான் நதிக்கப்புறம் கொண்டு போகாமல் இந்த நாட்டையே உம்மடியார்களுக்குக் காணியாட்சியாகத் தரவேண்டுமென்றார்கள்.

6. மோயீசன் அவர்களுக்கு மறுவுத்தாரமாக: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்போது நீங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்பீர்களா?

7. கர்த்தர் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுக்கப் போகிற தேசத்திற்கு அவர்கள் போகத் துணியாமல் நீங்கள் அவர்களுடைய மனம் கலங்கப் பண்ணுகிறதென்ன?

8. அந்தத் தேசத்தைப் பார்க்கிறதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ் பார்னேயிலிருந்து அனுப்பின போது அவர்களும் அப்படியல்லவா செய்தார்கள்:

9. அவர்கள் திராட்சைப்பழத்துப் பள்ளத்தாக்கு மட்டும் போய் தேசத்தைப் பார்த்து வந்த போது, கர்த்தர் இஸ்றாயேல் புத்திரர்களுக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு அவர்களுடைய இருதயத்தைக் கலக்கிப் போட்டார்கள்.

10. அதனால் கர்த்தர் கோபித்து:

11-12. நம்முடைய சித்தத்திற்கு அடங்கி நடந்த செனேசையனான ஜெப்போனே குமாரனாகிய காலேபும், நூனின் குமாரனாகிய ஜோசுவாவுமாகிய இவ்விருவரையும் தவிர, எஜிப்த்தில் இருந்து வந்தவர்களில் இருபது வயதும், இருபது வயதுக்கு மேற்பட்டதும் உள்ளவர்களில் ஒருவனும் நாம் அபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் சத்தியம் பண்ணிக் கொடுப்போமென்று சொல்லிய அந்தத் தேசத்தைக் காணமாட்டான்; ஏனெனில் அவர்கள் நம்மைப் பின்செல்ல மனமொப்பவில்லை என்று ஆணையிட்டுத் திருவுளம் பற்றினார்.

13. அப்படியே இஸ்றாயேலின் மேல் கர்த்தர் கோபித்துத் தம்முடைய சந்நிதியில் அக்கிரமம் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகு மட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப் பண்ணினாரே ;

14. இப்பவும் இதோ இஸ்றாயேலின் மேல் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப் பண்ணும்படிக்கு நீங்கள் துஷ்ட மனிதர்களின் பிறப்பும் சந்ததியுமாயிருந்து உங்கள் பிதாக்களுக்குப் பதிலாய் எழும்பியிருக்கிறீர்களே!

15. நீங்கள் அவரைப் பின்பற்றி நடக்கச் சித்தமில்லாமல் இருந்தால் அவர் வனாந்தரத்திலே சனங்களை நிறுத்துவார்; இப்படி நீங்கள் இந்தச் சனங்களெல்லாம் அழிவதற்குக் காரணமாயிருப்பீர்கள் என்று மோயீசன் சொன்னான்.

16. அப்பொழுது அவர்கள் அவன் கிட்ட வந்து: நாங்கள் ஆடுகட்குப் பட்டிகளையும், மாடு முதலியவைகளுக்குத் தொழுவங்களையும் ஏற்படுத்தி நம்முடைய பிள்ளைகளுக்காக அரணிக்கப்பட்ட பட்டணங்களையும் கட்டுவோம்.

17. அல்லாமலும் நாங்கள் இஸ்றாயேல் புத்திரரை, அவரவருடைய ஸ்தானத்திலே கொண்டு போய்ச் சேர்க்கும் வரையில் யுத்த சன்னத்தராய் அவர்களுக்கு முன்பாகப் போர்க்களத்துக்குப் போவோம். ஊராருடைய வஞ்சகத்தினிமித்தம் எங்கள் பிள்ளைகளையும் எங்களுக்குண்டான எல்லாவற்றையும் அரணான பட்டணங்களிலே வைத்து விட்டுத்தானே போவோம்.

18. இஸ்றாயேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் காணியாட்சியைச் சுதந்= தரித்துக் கொண்ட பிற்பாடு மாத்திரமே நாங்கள் திரும்பி வீட்டுக்கு வருவோம்.

19. மேலும் யோர்தானுக்குக் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரமிருக்க, நாங்கள் நதிக்கு அக்கரையிலும் அதற்கு அந்தண்டையிலும் வேறே சுதந்தரம் ஒன்றையும் கேட்க மாட்டோம் எனக் கேட்டு,

20. மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தால் கர்த்தருடைய சமூகத்தில் யுத்தசன்னத்தராய்ப் புறப்படுங்கள்.

21. ஆண்டவர் தமது பகைஞரைச் சங்கரிக்குமட்டும் நீங்கள் யாவரும் ஆயுதபாணிகளாய் யோர்தானைக் கடந்து போங்கள்.

22. பிறகு அந்தத் தேசம் முழுவதும் கர்த்தருக்கு வசப்படுத்தப் பட்ட பிற்பாடு, நீங்கள் கர்த்தருக்கும் இஸ்றாயேலுக்கும் முன்பாகக் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள். அப்புறம் நீங்கள் அபேட்சித்த இந்தத் தேசம் கர்த்தருடைய சமூகத்திலே உங்களுக்குச் சுதந்தரமாகும்.

23. நீங்கள் சொல்லியபடி செய்யாமல் போனாலோ கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தவர்களாய் இருப்பீர்களென்பதற்குச் சந்தேகமில்லை. அந்தப் பாவம் உங்களைத் தொடர்ந்து பீடிக்குமென்று நிச்சயமாய் அறியுங்கள்.

24. ஆகையால் உங்கள் சிறுவர்களுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடு முதலியவைகளுக்காகப் பட்டி தொழுவங்களையும் கட்டுங்கள். பிறகு உங்கள் வாய்மொழிப்படியே செய்யுங்கள் என்றான்.

25. அப்பொழுது காத் புத்திரர்களும் ரூபன் புத்திரர்களும் மோயீசனை நோக்கி: நாங்கள் உமதடியார்கள். ஆண்டவன் கட்டளையிட்டபடியே செய்வோம்.

26. எங்கள் சிறுவர்களையும், ஸ்திரீகளையும் ஆடுமாடு முதலியவைகளையும் நாங்கள் கலாத்தின் பட்டணங்களில் விட்டுவிட்டு,

27. அடியோர்களனைவரும் ஆண்டவன் சொன்னது போல ஆயுதபாணிகளாய் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

28. அப்பொழுது மோயீசன் ஆசாரியனாகிய எலெயஸாரையும் நூனின் குமாரனாகிய ஜோசுவாவையும், இஸ்றாயேல் கோத்திர வமிசாதிபதிகளையும் பார்த்து:

29. காதின் புத்திரரும், ரூபன் புத்திரருமாகிய இவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் யுத்த சன்னத்தராய் உங்களோடுகூட யோர்தானைக் கடந்து போவார்களாகில் அந்தத் தேசம் உங்களுக்கு வசப்பட்ட பின்பு அவர்களுக்குக் கலாத் நாட்டைச் சுதந்தரமாகக் கொடுப்பீர்கள்.

30. ஆனால் அவர்கள் ஆயுதமணிந்தவர்களாய் உங்களோடுகூட கானான் தேசத்திலே கடந்துபோகச் சித்தமில்லாதே போனால் அவர்கள் உங்கள் நடுவே குடியேறக் கடவார்கள் என்றான்.

31. இதற்குக் காதின் புத்திரரும், ரூபன் புத்திரரும் பிரதிமொழியாக: கர்த்தர் அடியோர்களுக்குப் பேசினதெப்படியோ அப்படியே செய்வோம்.

32. நாங்கள் கர்த்தருடைய சமூகத்திலே யுத்தசன்னத்தராய்க் கானான் தேசத்திலே சந்தோஷமாய்ப் போவோம். மேலும் நாங்கள் யோர்தானுக்கு இக்கரையிலே எங்கன் சுதந்தரக் காணியாட்சியை ஏற்கனவே பெற்றோமென்று பிரசித்தமாய் ஒத்துக் கொள்கிறோம் என்றார்கள்.

33. அப்பொழுது மோயீசன், காத் புத்திரருக்கும், ரூபன் சந்ததியாருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாஸே பாதிக் கோத்திரத்துக்கும், அமோறையருடைய அரசனான ஓகின் இராச்சியத்தையும் அவர்களைச் சேர்ந்த தேசஙகளையும் பட்டணங்களையும் கொடுத்தான்.

34. பின்பு காதன் புத்திரர் காத், திபோன், அத்தரோட், அரொவேர்,

35. ஏத்திரோட், சொப்பான், யாஸேர், ஜெக்பா,

36. பெத்னேம்ரா, பெட்டரான் என்னும் அரணான பட்டணங்களையும் தங்கள் மந்தைகளுக்குப் பட்டித் தொழுவங்களையும் கட்டினார்கள்.

37. ரூபன் புத்திரர்களோ, ஏயஸபோன், ஏலையாலை, கரியத்தயீம் என்னும் பட்டணங்களையும்,

38. புதுப்பேர் கொடுத்து நாபோ, பாவால், மையோன், சபமா என்னும் பட்டணங்களையும் புதிதாய்க் கட்டினார்கள். கட்டின பட்டணங்களுக்குப் பேர்களைக் கொடுத்தார்கள்.

* பழைய அரசாட்சியின் ஞாபகம் நிலைத்திராதபடிக்கு ஜெய வீரர்கள் பிடித்த பட்டணங்களின் பெயர்களை மாற்றி விட்டார்கள். கிறீக்கரும் உரோமானரும் அநேகம் விசை அப்படியே செய்ததாய்ப் பற்பல தேசங்களின் சரித்திரத்தினால் தெரிய வருகின்றது.

39. ஒருநாள் மனாஸேயின் குமாரனான மக்கீரின் புத்திரர் கலாதுக்குப் போய் அதில் வசித்திருந்த அமோறையரை வெட்டிப் போட்டுத் தேசத்தைப் பாழாக்கிப் பிடித்துக் கொண்டார்கள்.

40. ஆதலால் மோயீசன் மனாஸேயின் புத்திரனான மக்கீருக்குக் கலாத் நாட்டைக் கொடுத்தான். அவன் அங்கே குடியேறினான்.

41. மனாஸேயின் குமாரனாகிய ஜயீரோவென்றால் போய் கலாதுக்கடுத்த கிராமங்களைக் கட்டிக் கொண்டு அவைகளுக்கு ஆவொட் ஜயீர் அதாவது ஜயீரூர் என்று பேரிட்டான்.

42. நொபே என்பவனும் போய் கானாட்டையும் அதைச் சேர்ந்த கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு நொபே என்று தன் பேரையிட்டான்.