இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 31

மதியானியர் அழிக்கப் பட்டதும்-கொள்ளையிட்ட பொருட்கள் பங்கிடப் பட்டதும்.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2.  இஸ்றாயேல் புத்திரர் நிமித்தம் மதியானியரிடத்தில் பழிவாங்குவாய். அதன் பின்பு மாத்திரமே நீ உன் சனத்தாரிடத்தில் சேர்க்கப் படுவாய் என்றார்.

* இந்த மதியானியர் வேறு ஜாதியும், மோயீசனுடைய மாமனாராகிய ஜேத்திரோ என்பவர் குருவாகவும் அரசனாகவும் ஆண்டுகொண்டிருந்த மதியானியர் வேறொரு சாதியுமாயிருந்தார்கள். இந்த வசனத்தில் குறிக்கப் பட்ட மதியானியர் காமின் சந்ததியார். சாக்கடலுக்கு மேற்கே வாசம்பண்ணியிருந்தார்கள்.

3.  தாமதம் பண்ணாமல் மோயீசன் சனங்களைப் பார்த்து: கர்த்தர் பெயராலே மதியானியரிடத்தில் பழிவாங்கத் தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்து யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுங்கள்.

4. இஸ்றாயேலருடைய எல்லாப் புத்திரர்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம் பேர் யுத்தத்திற்குப் போகும் பொருட்டு முஸ்திப்பு செய்யுங்கள் என்றான்.

5. அவர்கள் (அவ்வாறே செய்து) ஒவ்வொரு கோத்திரத்திலிருந்து ஆயிரம் பேர் ஆக பன்னீராயிரம் போர்வீரர்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணினார்கள்.

6. மோயீசன் அவர்களைப் பிரதான ஆசாரியனான எலெயஸாரின் குமாரன் பினேஸ் என்பவனோடு அனுப்புகையில் இவனுடைய கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும் ஊதுவதற்கான எக்காளங்களையும் கொடுத்தனுப்பி விட்டான்.

7. அவர்கள் போய் மதியானியரோடு போராடி வெற்றியடையந்து சகல ஆண்மக்களையும்,

8. அவர்களுடைய அரசர்களாகிய ஏலி, ரேஸேம், சூர், ஊர், ரேபே ஆகிய அந்நாட்டு அதிபதிகள் ஐவரையும் பேயோரின் குமாரனான பலாமென்பவனையும் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள்.

9. அன்றியும் இஸ்றாயேலியர் அவர்களுடைய ஸ்திரீகளையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்துச் சமஸ்த மந்தைகளையும் தட்டுமுட்டுக்களையும் மற்றுமுள்ள ஆஸ்திகள் யாவையுங் கொள்ளையிட்டு,

10. அவர்களுடைய நகரங்களையும் ஊர்களையும் அரண்மனைகளையும் தீப்போட்டுப் பாழாக்கி,

11. தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும், தாங்கள் பிடித்திருந்த நரஜீவன் மிருக ஜீவன் அனைத்தையுஞ் சேர்த்துக் கொண்டு,

12. இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், பிரதான ஆசாரியனான எலெயஸாருக்கும், இஸ்றாயேல் புத்திரராகிய முழு சபையாருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால் தங்களுக்கு உபயோகமாயிருக்கத் தக்க மற்றுமுள்ள பொருட்களையெல்லாம் எரிக்கோவக்கு எதிரேயுள்ள யோர்தானுக்குச் சமீபத்திலே மோவாப் வெளிகளிலிருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள்.

13. மோயீசனும் பிரதான ஆசாரியனான எலெயஸாரும் சபையின் சமஸ்த பிரபுக்களும் பாளையத்திற்கு வெளியே அவர்களுக்கு எதிர்கொண்டு போனார்கள்.

14. அப்பொழுது மோயீசன் யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம் பேர்களுக்குத் தலைவரும், நூறு பேர்களுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகளின் மேலே கோபங்கொண்டு,

15. அவர்களை நோக்கி: ஸ்திரீகளை ஏன் உயிரோடு காப்பாற்றினீர்கள்?

* தாங்களே தேவ கோபத்திற்கு ஆளாகாமலும், மற்றவர்களைத் தேவ பழிக்குடன்படுத்தாமலும் எவர்கள் இருந்தார்களோ அவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் அப்படிக்கில்லாதவர்களை மாத்திரம் கொல்ல வேண்டும் என்றும் மோயீசன் கற்பித்தார்.

16. பொகோர் பாவமான சங்கதியிலே பலாமின் ஆலோசனையைக் கேட்டு இஸ்றாயேல் புத்திரர்களை வஞ்சித்து கர்த்தருக்கு விரோதமாய் உங்களைத் துரோகம் பண்ண ஏதுவாயிருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப் பற்றித்தானே சபையார் கர்த்தரால் வாதிக்கப் பட்டார்கள்?

17. ஆதலால் நீங்கள் குழந்தைகளில் கூட எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷருடைய சம்போகத்தைப் பண்ணின ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்.

18. சிறு பெண்களையும் கன்னியர்களையும் மாத்திரம் உங்களுக்காக உயிரோடு காப்பாற்றுங்கள்.

19. பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்க வேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ, அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் சுத்திகரிக்கப் படுவான்.

20. அந்தப்படியே கொள்ளையிடப் பட்டவைகளில் எல்லா வஸ்திரத்தையும் தட்டுமுட்டுகளையும் வெள்ளாட்டுத் தோலாலேயாவது, மயிராலேயாவது மரத்தினாலேயாவது செய்யப்பட்ட கருவி முதலிய சாமான்களையும் சுத்திகரிக்கக் கடவீர்கள் என்றான்.

21. பிரதான ஆசாரியனாகிய எலெயஸாரும் யுத்தஞ் செய்திருந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்த விதிப்பிரமாணத்தைக் கேளுங்கள்:

22. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம், தகரமாகிய இவைகளும்

23. நெருப்பிலே நஷ்டப்படாத எவ்வித (கருவி முதலிய) பாத்திரங்களையும், நெருப்பிலே போட்டுச் சுத்திகரிக்கவும், நெருப்பிலே நஷ்டப்படுவதெல்லாவற்றையும் தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே சுத்திகரிக்கவும் கடவீர்கள்.

24. நீங்கள் ஏழாம் நாளிலே உங்கள் வஸ்திரங்களைக் கழுவிச் சுத்திகரமடைவீர்கள். பின்பு நீங்கள் பாளையத்திற்குள் வரலாமென்றான்.

25. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

26. பிடித்துக் கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் பிரதான ஆசாரியனாகிய எலெயஸாரும் பிரஜாபதிகளும் தொகை பார்த்து,

27. கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகச் சரியாய்ப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும், சாதாரண சபையாருக்கொரு பங்கும் கொடுப்பாய்.

28. அன்றியும் யுத்தத்திற்குச் சென்ற படைவீரர்களுடைய பங்கிலே கர்த்தருடைய பங்கை எடுக்கக் கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும், கழுதைகளிலும் ஐந்நூறுக்கு ஒரு பிராணியாம்.

* கன்னியரான ஸ்திரீகள் இன்னாரென்று அறிவது அவர்களுக்குச் சுலபமான காரியமாயிருந்தது. உள்ளபடி அந்த ஜாதியிலே கலியாணமில்லாத ஸ்திரீகள் விசேஷமான புடவையை உடுத்திக் கொண்டிருந்தார்கள்.

29. அதைப் பிரதான ஆசாரியனாகிய எலெயஸாருக்குக் கொடுப்பாய். ஏனெனில் அது கர்த்தருக்குச் செல்ல வேண்டிய காணிக்கை.

30. இஸ்றாயேல் புத்திரர்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாயென்றருளினார்.

31. மோயீசனும், எலெயஸாரும் கர்த்தர் கற்பித்தபடிசெய்தார்கள்.

32. படைவீரர் கொள்ளையிட்ட பொருட்களில் ஆறு இலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

33. எழுபத்தீராயிரம் மாடுகளும்,

34. அறுபத்தோராயிரம் வேசரிகளும்,

35. புருஷ ஸ்பரிசம் அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம் பேர்களும் இருந்தார்கள்.

36.  யுத்தத்திற்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப் பட்ட பாதிப் பங்கின் தொகை மூன்று இலட்சத்து முப்பத்தேழாயிரத்தைந்நூறு ஆடுகள்.

37. இவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்றெழுபத்தைந்து.

38. முப்பத்தாறாயிரம் மாடுகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.

39. முப்பதினாயிரத்தைந்நூறு வேசரிகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.

40. பதினாயிரம் ஸ்திரீகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்கள்.

41. பின்னும் மோயீசன் தனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தபடி கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப் பட்ட பகுதியை ஆசாரியனாகிய எலெயஸாரிடத்தில் கொடுத்தான்.

42. இஸ்றாயேல் புத்திரர் கொள்ளையிட்ட எல்லாப் பொருள்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டிருந்தானே, எலெயஸாருக்கு அவன் கொடுத்த பகுதி போர்வீரர்களைச் சேர்ந்த பேர்பாதியில்தான் எடுக்கப் பட்டது.

43. சாதாரண சபையாருக்குக் கிடைத்த பாதி பங்கின் தொகை, அதாவது: மூன்று இலட்சத்து முப்பத்தேழாயிரத்தைந்நூறு ஆடுகளிலும்,

44. முப்பத்தாறாயிரம் மாடுகளிலும்,

45. முப்பதினாயிரத்தைந்நூறு வேசரிகளிலும்,

46. பதினாறாயிரம் பெண்களிலும்,

47.  மோயீசன் ஐம்பதிற்கு ஒன்று வீதமாக எடுத்துக் கர்த்தர் கற்பித்திருந்தபடி கர்த்தருடைய வாசஸ்தலத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான்.

48. அப்பொழுது சேனாதிபதிகளாகிய ஆயிரம் பேருக்குத் தலைவரும், நூறு பேருக்குத் தலைவரும் மோயீசனிடத்திற்கு வந்து:

49. அடியோர்கள் எங்கள் அதிகாரத்திற்குள்ளிருந்த படைவீரரின் கணக்கை எண்ணிப் பார்த்தோம். அவர்களில் ஒருவனுங் குறையவில்லை!

50. ஆனதுபற்றி தேவரீர் கர்த்தரை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட பாதசரங்களும், அஸ்தகடகங்களும், மோதிரங்களும், வலக்கையின் அங்குரீயங்களும், சரப்பளிகள் முதலிய பொன் பணிகளையெல்லாம் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள்.

51.  மோயீசனும், ஆசாரியனாகிய எலெயஸாரும் இந்த நானாவித பொன்னாபரணங்களையும் அவர்களிடத்தில் வாங்கினார்கள்.

52. இப்படி ஆயிரம் பேருக்கும் நூறு பேருக்கும் தலைவர்களால் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்தெழுநூற்று ஜம்பது சீக்கல் நிறையாயிருந்தது.

53. ஏனென்றால் யுத்தத்திற்குப் போன வீரர்களில் அவனவன் பிடித்திருந்ததெதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாயிருந்தது.

54. மோயீசனும் ஆசாரியனான எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே கர்த்தருடைய சமூகத்தில் இஸ்றாயேல் புத்திரருடைய ஞாபகக் குறிப்பாகக் கொண்டு வைத்தார்கள்.

* கானானையர் கடவுளுக்குச் செய்த துரோகத்தைப் பற்றித் தாமே இம்மாத்திரம் தண்டிக்கப் பட்டார்கள்.