இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 30

ஸ்திரீ புருஷர் ஆணையிட்டுச் செய்யும் பொருத்தனைகளைக் குறித்து.

1. மோயீசன் கர்த்தர் கற்பித்த யாவையும் இஸ்றாயேல் புத்திரருக்கு அறிவிக்கலாயினான்.

2. பின்னும் அவன் இஸ்றாயேல் புத்திரரின் கோத்திர அதிபதியானவர்களை நோக்கி: கர்த்தர் விதித்தருளின கட்டனை என்னவெனில்:

3. ஒரு மனிதன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணி அல்லது யாதொரு கருமம் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்குட்படுத்தியிருப்பானாகில் அவன் சொல் தவறாமல் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படி எல்லாம் செய்து முடிக்கக் கடவான்.

* தர்மமான விஷயத்திலே செய்யப்படும் பொருத்தனையே பொருத்தனை. அதர்மமான விஷயத்தில் செய்த பொருத்தனை பொருத்தனையென்று சொல்லாமல் அது அகந்தையும் தேவ நிந்தையும் அன்றி வேறென்னவென்று சொல்லக் கூடும்? பாவமான காரியத்தைச் செய்யப் பொருத்தனை செய்யலாகாது. செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது. தர்மவிஷயமான பொருத்தனை பண்ண வேண்டியென்று உனக்கும் எனக்கும் எவருக்கும் கட்டளையொன்றுமில்லை. பண்ணினாலோ அதை நிறைவேற்ற வேண்டும். லூத்தர் என்னும் பதித மதத் தலைன் தான் கலியாணம் பண்ணுவதில்லை என்று பொருத்தனை பண்ணினான். பிறகு அதை மீறி விவாகம் பண்ணினான். அவனைப் பெரும் பாவியென்றல்லோ சொல்ல வேண்டும்.

4. தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு வாலிபப் பெண் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணி அல்லது யாதொரு கருமம் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்குட்படுத்தியிருப்பாளாகில் அவள் செய்த பொருத்தனையையும் அவள் தன்னைப் பந்தித்த நிபந்தனையையும் அவள் தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றுஞ் சொல்லாமற் போனால் அவள் தன் பொருத்தனையை நிறைவேற்றக் கடவாள்.

5. அவளுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியும், அவளிட்ட ஆணையின்படியும் எல்லாம் செய்து முடிக்கக் கடவாள்.

6. ஆனால் தகப்பனானவன் கேள்விப்பட்டவுடனே வேண்டாமென்று தடுப்பானானால் அவள் செய்த பொருத்தனைகளும் அவள் இட்ட ஆணைகளும் நிஷ்பலமாய்ப் போய்விடும். அவள் தகப்பன் வேண்டாமென்று தடுத்ததினாலே அவள் தன்னைப் பந்தித்துக் கொண்ட நிபந்தனைப்படி நிறைவேற்ற வேண்டியதில்லை.

7. அவள் மங்கிலியக் காரியாயிருந்து பொருத்தனை பண்ணினால் அல்லது வாயைத் திறந்து ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தினால்,

8. அவளுடைய புருஷன் அதைக் கேட்டறிந்த நாளிலே ஒன்றுஞ் சொல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவள் தன் பொருத்தனையைச் செலுத்தவும், வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்து முடிக்கவுங் கடவாள்.

9. ஆனால் கேள்விப்பட்ட உடனே புருஷன் வேண்டாமென்று அவளைத் தடுத்து அவளுடைய வார்த்தைப்பாட்டையும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட சொற்களையும் ரத்து பண்ணுவானாகில் கர்த்தர் அவளுக்குத் தயவு பண்ணுவார்.

10. விதவையும் புருஷனால் தள்ளப் பட்ட ஸ்திரீயும் தாங்கள் என்னென்ன பொருத்தனைப் பண்ணியிருப்பார்களோ அவையெல்லாம் நிறைவேற்றக் கட வார்கள்.

11. புருஷன் வீட்டிலிருக்கிற மங்கிலியக் காரி யாதொரு பொருத்தனை பண்ணின போது அல்லது யாதொரு காரியத்தைச் செய்வதாக ஆணையிட்டு வார்த்தைப்பாடு கொடுத்தபோது,

12. புருஷன் அதைக் கேட்டறிந்து வேண்டாமென்று தடுக்காமல் மெளனமாயிருப்பானாகில் அவள் தான் பண்ணின வார்த்தைப்பாட்டுப்படி எல்லாம் செய்து முடிக்கக் கடவாள்.

13. மற்றப்படி புருஷன் உடனே ஆட்சேபம் பண்ணியிருந்தாலோ அவள் தன் வார்த்தைப்பாட்டை நிறைவேற்ற வேண்டியதில்லை., புருஷன் வேண்டாமென்று சொன்னமையால் கர்த்தர் அவள்மேல் தயவாயிருப்பார்.

14. அவள் ஒருசந்தியாலாவது சுத்த போஜன முதலியவைகளாலாவது தன் ஆத்துமாவை வருத்தப்படுத்தும்படி பொருத்தனை பண்ணி ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தி இருக்கும் பட்சத்தில் புருஷன் அதை ஸ்திரப்படுத்தவும் கூடும். அது செல்லாதபடிக்குப் பண்ணவுங் கூடும்.

15.  எப்படியென்றால், புருஷன் அதைக் கேட்டறிந்த பொழுது ஒன்றுஞ் சொல்லாமல் மேலைக்குப் பார்ப்பேனென்றிருந்தால் அவள் செய்த பொருத்தனையையும், கொடுத்த வார்த்தைப்பாட்டையும் நிறைவேற்றக் கடவாள். ஏனெனில் புருஷன் அதைக் கேட்டறிந்தவுடனே ஒன்றும் சொல்லாமற் போயினான்.

16. அவன் அதைக் கேட்ட பின்பு வேண்டாமென்று தடுத்தால் தன் ஸ்திரீயின் பாவத்தைத் தானே சுமருவான் என்று (கர்த்தர்) திருவுளம்பற்றினார்.

17. புருஷன் பெண்சாதியானவர்களைக் குறித்தும், தகப்பனையும் அவன் வீட்டிலிருக்கிற சிறு வயதுள்ள பெண்ணையுங் குறித்தும் கர்த்தர் மோயீசனின் மூலியமாய்க் கட்டளையிட்ட பிரமாணங்கள் இவைகளேயாம்.