இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 28

அநுதினப் பலிகளுக்கடுத்த பிரமாணமும்--ஓய்வு நாளாகிய திருநாட்களைக் குறித்துக் கற்பித்த விஷயங்களும்.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புததிரரைப் பார்த்துக் கற்பிக்க வேண்டியதாவது: நீங்கள் நமக்குரிய காணிக்கைகளையும் அப்பங்களையும் அதிசுகந்த வாசனையான தகனப் பலிகளையும் குறிக்கப்பட்ட காலத்தில் நமக்குச் செலுத்துவீர்கள்.

* இஸ்றாயேலியர் வனாந்தரத்திலே யாத்திரை பண்ணிச் சஞ்சரித்துக் கொண்டிருக்கையிலே தேவன் கட்டளையிட்டிருந்த பலிகளுக்கடுத்த பற்பல ரீதி ஆசாரங்களை நுணுக்கமாய் நிறைவேற்றக் கூடாமற் போயிற்று. இப்பொழுது வாக்குத்தத்தப் பூமியில் பிரவேசிக்கப் போகிறார்களே ; அவர்களுக்கு அவைகளை நினைப்பூட்ட வேண்டியதாயிருந்தது.

3. நீங்கள் செலுத்த வேண்டிய பலிகளென்னவெனில்: நித்திய தகனப் பலியாகத் தினந்தோறும் ஒரு வயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் (கொண்டு வந்து)

4. காலையில் ஒரு ஆட்டுக் குட்டியையும், சாயந்தரம் மற்றொரு ஆட்டுக் குட்டியையும் பலியிட்டு,

5. எப்பியென்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் ஈன் என்னும் படியில் ஒரு காற்படி திராட்ச இரசத்தையும் பானப்பலியாக ஒப்புக் கொடுப்பீர்கள்.

6. இது நீங்கள் சீனாயி மலையில் கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையாக ஒப்புக் கொடுத்து வந்த நித்தியத் தகனப் பலியாம்.

7. அன்றியும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கு ஈன் என்னும் படியில் ஒரு காற்படி திராட்ச இரசத்தையும் பானப் பலியாக ஒப்புக்கொடுப்பீர்கள்.

8. காலையில் படைத்த தகனப்பலிக்கும் போஜனப் பானப் பலிக்கும் ஒப்பாகவே மாலையிலும் மேற்சொல்லிய இரீதி ஆசாரங்களுடன் மற்ற ஆட்டுக் குட்டியையும் பலியிடக் கடவீர்கள்.

9. சாபத் நாளிலோவென்றால் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், எண்ணெய் வார்த்த பத்தில் இரண்டு பங்கு மெல்லிய மாவையும் பானப் போஜனப் பலிக்காகக் கொண்டு வருவீர்கள்.

10. இந்தப் பானப் பலி இரீதிப்படியே ஒவ்வொரு சாபத் நாளில் நித்தியமாய்ச் செலுத்த வேண்டும்.

11. மாதம் முதல் தேதியிலோ கர்த்தருக்குத் தகனப்பலியாக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,

12. போஜனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்குப் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வொரு ஆட்டுக் கடாவுக்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,

13. ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அது ஆண்டவருக்கு அதிசுகந்த வாசனையான சர்வாங்கத் தகனப் பலியாயிருக்கும்.

14. அன்றியும் ஒவ்வொரு பலி மிருகத்துக்குச் செய்ய வேண்டிய பானப்பலி என்னவெனில்: ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கு ஈன் (படியில்) அரைப்படியும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கு மூன்றிலொரு பங்கும், ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கு நாலிலொரு பங்கும் திராட்சரசத்தைச் சிந்தக் கடவீர்கள். இது வருஷமுழுவதும் மாதமாதமாய்ச் செலுத்த வேண்டிய சர்வாங்கத் தகனப் பலியாம்.

15. மீளவும் பாவநிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், அதற்கடுத்த பானச் சிந்துதலையும் கர்த்தருக்குச் செலுத்த வேண்டியது.

16. முதலாம் மாதத்திலே அம்மாதத்துப் பதினாலாந் தேதி கர்த்தருக்குரிய பஸ்கா ;

17. பதினைந்தாந் தேதி பண்டிகை நாள். ஏழுநாள் மட்டும் புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்க வேண்டும்.

18. அவைகளில் முதல் நாளானது பரிசுத்தமும் வணக்கத்துக்குரியதுமாகையால், அன்று விலக்கப்பட்ட வேலையையும் செய்யலாகாது.

19. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

20. அவைகளுக்கேற்ற காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே ஒவ்வொரு கன்றுக்குட்டிக்குப் பத்தில் மூன்று பங்கையும், வெள்ளாட்டுக் கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கையும்,

21. ஏழு ஆட்டுக்குட்டிகளாகிய ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,

22. உங்கள் பாவ நிவிர்த்திக்குப் பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.

23. காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்கத் தகனப்பலியையும் அன்று கூடச் செலுத்தக் கடவீர்கள்.

24. இந்தப் பிரகாரமே அந்த ஏழுநாள் மட்டும் நாள்தோறும் அக்கினியை வளர்த்திக் கர்த்தருக்கு அதி சுகந்த வாசனையாகத் தகனப் பலியைச் செலுத்துவீர்கள். அந்த வாசனை தகனப்பலியிலிருந்தும் ஒவ்வொரு பலிக்கடுத்த பானப் பலியிலிருந்தும் எழும்பும்.

25. ஏழாம் நாளும் உங்கட்கு அதி ஆடம்பரமுள்ளதும் பரிசுத்தமுள்ளதுமாயிருக்கும். அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

26. வாரங்கள் கடந்தான பின்பு நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனப்பலியாக முதற்கனிகளைச் செலுத்தும் நாளும் அவ்விதமே பரிசுத்தமும் வணக்கத்துக்குரியதுமாயிருக்கும். அதில் சாதாரண யாதொரு வேலையும் செய்யலாகாது.

27. அதுதவிர, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கத் தகனப் பலியாக ஒரு மந்தையிலெடுக்கப் பட்ட இரண்டு இளங்காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.

28. அந்தப் பலிகளுக்கடுத்த போஜனப் பலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

29-30. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக் குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்திலொரு பங்கையும் ஒப்புக் கொடுப்பதோடு பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கடாவையுங் கொண்டு வர வேண்டியது. அன்றியும் (வழக்கப் படி) நித்திய சர்வாங்கத் தகனப் பலியையும், அதைச் சேர்ந்த பானப் பலியையும் படைக்கக் கடவீர்கள்.

31. இந்தப் பலி மிருகங்களும் அதுகளுக்கடுத்த பானப் பலிகளும் பழுதற்றவைகளாக இருக்க வேண்டும்.