இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (பிப்ரவரி 28)I தொடக்க நூல் 22: 1-2, 9-13, 15-18

II உரோமையர் 8: 31-34

III மாற்கு 9: 2-10

“ஆம் ஆண்டவரே!”

நிகழ்வு

ஒரு பங்கில் இளம் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் திருவழிபாட்டை வழிநடத்துவதிலிருந்து மக்களை ஒருங்கிணைப்பது வரை, யாவற்றையும் மிகச் சிறப்பாக செய்து வந்தார். அவர் செய்துவந்த இப்பணிகளைப் பார்த்துவிட்டுப் பலரும், ‘இந்தச் சிறுவயதில் இவ்வளவு சிறப்பாக எல்லாவற்றையும் செய்து வருகின்றாரே!’ என்று வியந்துபோயினர்.

இதற்கு நடுவில் அந்த அருள்பணியாளரை மிக அருகிலிருந்து கவனித்து வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “சுவாமி! எல்லாவற்றையும் நீங்கள் மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றீர்களே! உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அருள்பணியாளர் அவரிடம், “ஆம் ஆண்டவரே’ என்று சொல்லிக் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பேன்; அதுதான் எனது வெற்றிக்குக் காரணம்” என்றார் (The Next 500 Stories – Frank Mihalic, SVD).

இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளர் தன்னுடைய விருப்பத்தை அல்ல, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றி வாழ்ந்தார். அதுதான் அவரது வெற்றிக் காரணமாக இருந்தது. தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டும், அவரது திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த ஆபிரகாம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுளுக்குக் கீழ்ப்படிவது என்பது, அவரது குரலுக்குச் செவிசாய்ப்பது, அவர் எந்த வழியைச் சுட்டிக்காட்டுகின்றாரோ அந்த வழியில் திறந்த மனத்தோடு நடப்பது.”

திருத்தந்தை பிரான்சிசின் இவ்வார்த்தைகளை இன்றைய இறைவார்த்தையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, அதற்கு முதலில் அப்படியே பொருந்திப் போகிறவர் ஆபிரகாம். ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாம் – சாரா தம்பதிக்கு அவர்களது முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையைக் கொடுத்தார், அந்தக் குழந்தையைக்கூட அவர் பலியிடுமாறு சொல்கின்றார். ஆண்டவர் ஆபிரகாமிடமிருந்து சொன்னதற்கு அவர் மறுப்பேதும் சொல்லாமல், தன் ஒரே மகனைப் பலியிட முன்வருகின்றார். அப்பொழுதுதான் கடவுள், “நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்கிறார்.

ஆண்டவர் ஆபிரகாமிடம் அவரது ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு சொன்னது, அவருக்கு மிகுந்த வேதனையையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரையும் நிச்சயம் தந்திருக்கும். ஆனாலும், அவர் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து வாழவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கின்றார். இவ்வாறு ஆபிரகாம் கீழ்ப்படிதலுக்கும் நம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்த, அவரது திருவுளம் நிறைவேற்றிய இயேசு

இன்றைய முதல் வாசகம், ஆபிரகாம் கடவுளின் குரலுக்கு எப்படிச் செவிகொடுத்து வாழ்ந்தார் என்பதை எடுத்துச் சொல்கின்ற வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் தந்தையின் ஒரே மகனான இயேசு எப்படி அவரின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரது திருவுளத்தை நிறைவேற்றினார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வானது இடம்பெறுகின்றது. இதில் பழைய ஏற்பாட்டுச் சட்டப் பிரதிநிதியான மோசேயும், இறைவாக்கினரின் பிரதிநிதியான இறைவாக்கினர் எலியாவும் இடம் பெறுகின்றார்கள். இவர்கள் இருவருமே இறைவாக்கினர் ஒருவரைக் குறித்து முன்னறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (இச 18: 15-19; மலா 4: 5-6) மேலும் இவர்கள் இருவரும், எருசலேமில் நிறைவேறவிருந்த இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது (லூக் 9: 31)

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் மேகத்தினின்று ஒலிக்கும் குரல் சொல்லும், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஒருவர் தன் தந்தையின் அன்பார்ந்த மைந்தராக எப்பொழுது ஆக முடியும் எனில், அவர் இயேசு சொல்வது போல், தன் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது மட்டுமே! (யோவா 14: 15). இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் கட்டளை அல்லது அவரது திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தார் (லூக் 2: 49, 22: 42; யோவா 4: 34). அதனாலேயே அவர் தந்தையின் அன்பு மைந்தர் ஆனார். முன்பு இயேசு திருமுழுக்குப் பெறும்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் (மத் 3: 17) என்ற வார்த்தைகள் ஒலித்தன. இப்பொழுது இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுது ஒலிக்கின்றன. இயேசு தொடர்ந்து தந்தையின் குரலைக் கேட்டு, அவரது திருவுளத்தை நிறைவேற்றி வந்தாலேயே இத்தகைய வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்தன என்பதை நாம் நினைவுகூரத் தக்கது நல்லது.

இயேசுவுக்குச் செவிகொடுத்து வாழ அழைப்பு

மேகத்திலிருந்து ஒலித்த குரல், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” என்று சொன்னதோடு நின்றுவிடவில்லை; தொடர்ந்து, “இவருக்குச் செவிசாவியுங்கள்” என்கின்றது. இக்குரல் ஒலித்தபின்பு, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரும் சுற்று முற்றும் பார்க்கும்பொழுது, அவர்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அப்படியெனில், அவர்கள் மூவரும், இன்று நாமும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

திருவிவிலியத்தில் ‘செவிசாய்த்தல்’ என்றால் கேட்பது மட்டும் கிடையாது; கேட்டதன்படி நடப்பதும் ஆகும். “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்” (திபா 95: 7) என்ற இறைவார்த்தை இந்த உண்மையையே நமக்கு உணர்த்துகின்றன. “இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரல் கேட்டு சீடர்கள் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவரது திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தது போன்று, நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்குச் செவிசாய்த்து, அவரது திருவுளத்தை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும். நமது விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இறைவனின் திருவுளத்தின்படி நாம் வாழ்கின்றபொழுது நமக்கு இயேசுவுக்கு வந்ததுபோல் துன்பங்களும் போராட்டங்களும் நிச்சயம் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் இறுதிவரை மன உறுதியோடு இருக்க வேண்டும் (மத் 24: 13). அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய செயல். நாம் இறுதிவரை மன உறுதியோடு இருந்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது அன்பு மக்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ (திபா 119: 35) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் இயேசுவின் கட்டளைகளின் படி... தந்தைக் கடவுளின் திருவுளத்தின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.