லேவியராகமம் - அதிகாரம் 27

கர்த்தருக்குப் பண்ணின வேண்டுதல்களையும் -- பத்தில் ஒரு பங்கு கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய வரியையுங் குறித்து.

1. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதென்னவெனில்: ஒரு மனிதன் ஒரு விசேஷப் பொருத்தனை பண்ணித் தன் பிராணனைத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்தால் அவன் பின்வருமாறு (மதிப்பின்படி) கிரயஞ் செலுத்தக் கடவான்.

3. (எப்படியெனில்) இருபது வயது முதல் அறுபது வயதுக்குட்பட்ட புருஷனானால் அன் பரிசுத்த ஸ்தலத்துச் சீக்கலாகிய ஐம்பது வெள்ளி சீக்கலைக் கொடுக்கக் கடவான்.

4. ஸ்திரீயானால் முப்பது கொடுப்பாள்.

5. ஐந்து வயது முதல் இருபது வயது மட்டுமோவென்றால் ஆணானவன் இருபது சீக்கலையும் பெண்ணானவள் பத்து சீக்கலையும் செலுத்துவார்கள்.

6. ஒருமாதம் முதற்கொண்டு ஐந்தாம் வயது மட்டும் ஆண்பிள்ளையைப் பற்றி ஐந்து சீக்கல்களையும் பெண்பிள்ளையைப் பற்றி மூன்று சீக்கல்களையும் கொடுப்பார்கள்.

7. அறுபது வயது முதல் அதற்கு மேற்பட்ட புருஷன் பதினைந்து சீக்கல்களையும் ஸ்திரீ பத்து சீக்கல்களையும் செலுத்தக் கடவார்கள்.

8. மதிப்புக்கேற்றபடி செலுத்தக் கூடாத தரித்திரனானால் அவன் குருவுக்கு முன்பாக வந்து நிற்கக் கடவான். குரு மதிப்புப் பண்ணி அவன் எவ்வளவு கொடுக்கத் திராணியுள்ளவனென்று தீர்ப்பு சொல்வானோ அவ்வளவு அவன் கொடுக்கக் கடவான்.

9.  ஒருவன் கர்த்தருக்குப் பலியிடப்படத் தக்க மிருகத்தைக் கொடுப்பதாகப் பொருத்தனை பண்ணியிருந்தாலோ அது பரிசுத்தமாயிருக்கும்.

10. அதை இனி மாற்றவே கூடாது. எப்படியெனில் இளப்பமான மிருகத்துக்குப் பதிலாக பலமான வேறொன்றையும் பலமான மிருகத்துக்குப் பதிலாக இளப்பமானதையும் கொடுத்து மாற்றலாகாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுத்தால் அப்பொழுது இதுவும் அதுவும் கர்த்தருக்குச் சொந்தம்.

11. ஒருவன் கர்த்தருக்குப் பலியிடத் தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகத்தைப் பிரதிஷ்டை பண்ணியிருந்தால் அதைக் குருவுக்கு முன்பாக நிறுத்தக் கடவான்.

12. குரு அதை நல்லதென்றும் இளப்பமென்றும் மதித்து விலையைத் திட்டம் பண்ணுவான்.

13. பொருத்தனை செய்தவன் விலையைச் செலுத்த சம்மதிப்பானால் மதிப்புக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கக் கடவான்.

14. ஒரு மனிதன் பொருத்தனை பண்ணித் தன் வீட்டைக் கர்த்தருக்கு நேர்ந்தானானால் குரு அதின் இதாகிதம் பார்த்து எவ்வளவுக்கு மதிப்பு சொல்வானோ அவ்வளவுக்கு விற்கப் படும்.

15. ஆனால் நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனதாயிருந்தால் அவன் மதிப்புக்கு மேல் ஐந்தில் ஒருபங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வீடு அவனுடையதாகும்.

16. ஒருவன் தன் சுதந்தரத்திலுள்ள வயலைக் கர்த்தருக்கு நேர்ந்து பிரதிஷ்டை பண்ணினால் அதன் விதைப்புக்கேற்றபடி விலையிருக்க வேண்டும். ஒரு நிலம் விதைக்க முப்பது கலம் வாற்கோதும்பை செல்லுமென்றால் அந்த நிலம் ஐம்பது சீக்கல் பெறும்.

17. அவன் ஜூபிலி வருஷந் துவக்கமுதல் தன் வயலை நேர்ந்து கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணினானென்றால் அதன் பெறுமதி எவ்வளவோ அவ்வளவுக்கு மதிக்கப்படும்.

18.  ஜூபிலி வருஷத்துக்குப் பின் அது பிரதிஷ்டையானதென்றால் இன்னொரு ஜூபிலி வருஷமாவதற்கு எத்தனை வருஷம் செல்லுமென்று பார்த்துத்தான் குரு மதிப்பு சொல்ல வேண்டும். அதுகளுக்குத் தக்காப் போல் விலையைக் குறைக்கக் கடவான்.

19. தன் வயலை நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனதாயிருந்தால் மதிக்கப் பட்ட கிரயத்துக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வயல் அவனுடையதாகும்.

20. அவன் தன் வயலை மீட்டுக் கொள்ள மனமில்லாமல் அதை வேறொருவனுக்கு விற்றுப் போட்டிருப்பானானால், அதை நேர்ந்து கொண்டவன் இனிமேல் அதனை மீட்கக் கூடாது.

21. ஏனென்றால் ஜூபிலி வருஷம் வரும்போது அந்த வயல் கர்த்தருக்குப் பிரதிஷ்டையானது. இப்படிப்பட்ட ஆட்சியோ குருக்களுக்குச் சுதந்தரமாய்ப் போய்விடும்.

22. ஆயினும் அது தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் அதை விலைக்குத் தானே வாங்கிக் கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணினானானால்,

23. குரு ஜூபிலி வருஷமட்டும் எத்தனை வருஷமிருக்குமென்று பார்த்து அந்தக் கணக்குக்கேற்றபடி அதன் விலையைக் குறிக்கக் கடவான். அப்போது அதை நேர்ந்தவன் (கிரயத்தைக்) கர்த்தருக்கு செலுத்துவான்.

24. ஜூபிலி வருஷம் வரும்போதோவென்றால், எவன் அந்த வயலை முதலிலே தன் சொந்தமென்று அனுபவித்துப் பிறகு விற்றுப் போட்டிருந்தானோ அது அந்த முந்தின எசமானுக்கு வந்து சேரும்.

25. எல்லா மதிப்பிலும் பரிசுத்த ஸ்தலத்து சீக்கலே உபயோகித்துக் கொள்ளப்படும். ஒரு சீக்கலானது இருபது ஒபோல்.

26. தலையீற்றானவைகள் கர்த்தருடையதே. ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய சீவனை நேர்ந்து பிரதிஷ்டை பண்ணுதலாகாது. மாடாகிலும், ஆடென்கிலும் அதுகள் கர்த்தருடையதாம்.

27. அசுத்தப் பிராணியின் தலையீற்றோவெனில், அதைப் பிரதிஷ்டை பண்ணினவனெவனோ அவன் தன் மதிப்புக்கு மேலே ஐந்தில் ஒரு பங்கைக் கூடச் சேர்த்து அதை மீட்டுக் கொள்ளுவான். இப்படி மீட்டுக் கொள்ளச் சம்மதிக்காமலிருந்தால் தன் மதிப்புக்கேற்றபடி வேறொருவன் கையில் விற்கப் படும்.

28. கர்த்தருக்கென்று எது கர்த்தருக்குப் பிரதிஷ்டையாய் நியமிக்கப் பட்டதோ, மனுஷனுஞ் சரி, மிருகமுஞ் சரி, வயலுஞ் சரி, அது விற்கப் படவும் மீட்கப் படவும் கூடாது. அவ்விதமாகக் கர்த்தருக்கு நேர்ந்து கொள்ளப் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மகா பரிசுத்தமென்று கர்த்தருடையதாகும்.

29. அந்தப் பிரகாரமாய் ஒருவனாலே கர்த்தருக்கு நியமிக்கப் பட்ட சீவன்களெல்லாம் மீட்கப் படக் கூடாது. அதுகளைக் கொலை செய்ய வேண்டியது.

30. நிலங்களின் பலனிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பங்கு கர்த்தருக்கு உரியது. அது அவருக்குப் பரிசுத்தமானது.

31. ஆயினும் ஒருவன் தன்னுடைய தசம பாகங்களை மீட்டுக் கொள்ள மனதுள்ளவனானால் அதுகளின் கிரயத்தையும் கிரயத்தின் ஐந்திலொரு பங்கையும் சேர்த்துச் கொடுக்கக் கடவான்.

32. மேய்ப்பனுடைய கோலுக்குக் கீழ்ப்பட்ட ஆடு மாடு வெள்ளாடு முதலியவைகளில் பத்தில் ஒன்றாயிருக்கிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாகும்.

33. அதுகளில் நலமானதோ இளப்பமானதோவென்று அவன் விசாரிக்கவும் வேண்டாம், மாற்றவும் வேண்டாம். மாற்றினால் அதுவும் பதிலுக்குக் கொடுக்கப் பட்டதுமாகிய இரண்டுமே கர்த்தருக்குப் பரிசுத்தம். அது மீட்கப் படலாகாது.

34. கர்த்தர் சீனாயி மலையில் இஸ்றாயேல் புத்திரருக்காக மோயீசனுக்கு விதித்தருளிய கற்பனைகள் இவைகளேயாம்.

லேவியராகமம் முற்றிற்று.