எண்ணாகமம் - அதிகாரம் 27

காணியாட்சிளுக்கு அடுத்த பிரமாணமும், மோயீசனுக்குத் தன் மரணத்தைக் குறித்து அறிவிக்கப் பட்டதும்--ஜோசுவா அவனுடைய உத்தியோகத்தில் நியமிக்கப் பட்டதும்.

1. ஒருநாள் ஸல்பாத் என்பவனுடைய குமாரத்திகளாகிய மாலாள்,நோவாள் ஏகிலாள், மேற்காள், தேற்சாள் என்றழைக்கப் பட்ட பெண்கள் வந்தார்கள். (அவர்களுடைய தகப்பன்) ஏப்பேருடைய புத்திரன் ஏப்பேரோ கலாதின் மகன். கலாதோ மக்கீருக்குப் பிறந்தவன். மக்கீரோ மனாசே குமாரன். மனாசேயோவெனில் ஜோசேப்பின் புதல்வன்.

2. மேற்சொல்லப் பட்ட பெண்கள் உடன்படிக்கைக் கூடார வாசலிலே வந்து மோயீசனுக்கும் ஆசாரியனான எலேயஸாருக்கும், சபையின் பிரபுக்களுக்கு முன்பாக நின்று:

3. எங்கள் தகப்பனார் வனாந்தரத்திலே இறந்து போனார். கொறேயென்பவனாற் கர்த்தருக்கு விரோதமாய்ப் பண்ணப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்ல. ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குக் குமாரர்களல்லை. அவருக்கு ஆண்மக்களில்லாததினாலே அவருடைய பேர் வம்சத்திலே இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்யக் கேட்டு,

4. மோயீசன் அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தரிடத்தில் கொண்டு போனான். 

5. கர்த்தர் மோயீசனை நோக்கி:

6. சல்பாதுடைய குமாரத்திகள் கேட்கிறது நியாயமானதே. அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய குடும்பத்தாருக்குள்ளே சுதந்தரம் கொடுக்க வேண்டியதுந் தவிர, அவன் செத்து விட்டு விட்ட சொத்துக்கு அவர்களே சுதந்தரவாளியாகும்படி செய்வாயாக.

7. அன்றியும் நீ இஸ்றாயேல் புத்திரரை நோக்கிச் சொல்ல வேண்டியதே தெனில்:

8. ஒரு மனிதன் குமாரனில்லாமல் மரித்தால் அவனுக்குரிய சுதந்தரம் அவனுடைய குமாரத்திக்குக் கிடைக்கும்.

9. அவனுக்குக் குமாரத்தியும் இல்லாதாகில், அவனுக்குரிய சுதந்தரம் அவனுடைய சகோதரர்களுக்குக் கிடைக்கும்.

10. அவனுக்குச் சகோதரர்களும் இல்லாதாயின், அவனுக்குரிய சுதந்தரம் அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கிடைக்கும்.

11. அவன் தகப்பனுக்குச் சகோதரரில்லாதிருக்கில் அவன் சுற்றத்தாரில் அவனுக்கு எவன் அதிக் கிட்டின உறவு முறையானாயிருப்பானோ அவனுக்குத்தான் அவனுடைய சுதந்தரம் கிடைக்கும். இது கர்த்தர் மோயீசனுக்குக் கொடுத்தபடி இஸ்றாயேல் புத்திரருக்குப் பரிசுத்தமும் நித்தியமுமான நியாய விதிப் பிரமாணமாயிருக்குமென்று அருளினார்.

12. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ இந்த அபரீம் என்னப்பட்ட மலையிலேறி நாம் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுக்கப் போகிற தேசத்தை உற்றுப்பார்.

13. அதைப் பார்த்தபின்பு ஆரோனாகிய உன் சகோதரனைப் போல நீயும் உன் சனத்தாரோடு சேர்க்கப் படுவாய்.

14. ஏனென்றால் சீன் வனாந்தரத்திலே சபையார் வாக்குவாதம் பண்ணின போது தண்ணீருக்கடுத்த சங்கதியிலே நீங்கள் இருவரும் அவர்கள் முன்பாக நம்மைப் பரிசுத்தம் பண்ணாமல் இருந்தீர்கள். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊருக்கருகாமையிலேயுள்ள வாக்குவாதத் தண்ணீரென்றார்.

15. அதற்கு மோயீசன்:

16-17. கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தை போலிராதபடிக்குச் சபைக்கு முன்பாகப் போக்குவரத்துமாய் இருக்கவும், அவர்களைப் புறப்படுங்கள், திரும்பி வாருங்கள் என்று கட்டளை கொடுக்கவும், மாமிசத்தையுடைத்தான யாவருடைய ஆவிகளுக்குந் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனைத் தெரிந்து அவர்கள் மேல் அதிகாரியாக நியமிக்கக் கடவாராக என்று மறுமொழி சொல்ல,

* மோயீசனுடைய புண்ணியம் எவ்வளவோ விளங்குகிறது! சர்வேசுரன் சொல்லிய தீர்ப்புக்கு அமைந்து தனக்காக ஒரு வார்த்தையும் கூட சொல்லாமல் இஸ்றாயேல் பிரசைக்கு நன்மையுண்டாகத் தனக்குப் பதிலாளியாயிருக்கப் போகிறவருக்காக மாத்திரம் வேண்டிக் கொண்டார்.

18. ஆண்டவர் அவனை நோக்கி: நூனின் குமாரனாகிய ஜோசுவாவிடத்திலே இஸ்பிரீத்து வீற்றிருக்கின்றது. அவனை அழைத்து அவன் மேல் உன் கையை வைத்துக் கொள்ளுவாய்.

19. அந்நேரத்தில் அவன் ஆசாரியனான எலேயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நின்று கொண்டிருப்பான்.

20. இஸ்றாயேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவன் கொற்படி கேட்டு நடக்கும்பொருட்டு நீ சகலருடைய கண்களுக்கு முன்பாக அவனுக்கு (வேண்டிய) கட்டளைகளைக் கொடுத்து, உன் மகிமையின் ஒரு பாகத்தையும் அவனுக்குத் தருவாய்;

21. அவன் எதையாகிலும் செய்ய வேண்டியதாயிருக்கும் போது ஆசாரியனாகிய எலெயஸார் அது விஷயத்திலே ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட்டுக் கொள்ளக் கடவான். அவருடைய கட்டளையின்படியே ஜோசுவாவும் அவனோடுகூட இஸ்றாயேல் புத்திரர்களும் சபையார் அனைவரும் போகவும் வரவுங் கடவார்கள் என்றருளினார்.

22. கர்த்தர் கற்பித்திருந்தபடியே மோயீசன் செய்து ஜோசுவாவை அழைத்து, அவனைப் பிரதான ஆசாரியனாகிய எலேயஸாருக்கும் சபை யனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

23. அவன் தலையின் மேல் கைகளை வைத்துக் கர்த்தர் தனக்குக் கற்பித்திருந்த எல்லாவற்றையும் அவனுக்கு உரைத்தலாயினான்.