லேவியராகமம் - அதிகாரம் 26

தேவன் தம்முடைய கற்பனைகளை அனுசரிக்கிறவர்களுக்கு அனேகம் சம்பாவனை வாக்குத்தத்தம் செய்ததும் -மீறி நடப்பவர்களுக்கு ஆக்கினைகளை மிரட்டி அறிவிக்கிறதும்.

1. உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலைச் சுரூபங்களையும் உண்டாக்காமலும், ஞாபகஸ்தம்பம் முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான விசேஷித்த கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே.

2. நமது சாபத் நாட்களை அனுசரியுங்கள். நமது பரிசுத்த ஸ்தலத்தண்டை பயபக்தியாயிருங்கள். நாமே ஆண்டவர்.

3. நீங்கள் நமது கற்பனை வழியிலே நடந்து, நமது கட்டளைகளையும் காத்தனுசரிப்பீர்களாகில், உங்கட்குப் பருவ காலங்களிலே மழையைப் பெய்யப் பண்ணுவோம்.

4. பூமியும் தன் பலனை விளைவிக்கும். மரங்களும் தங்கள் பழங்களைத் தரும்.

5. வெள்ளாண்மை போரடித்தல் முடியுமுடியாமுன்னே திராட்சப் பழம் பறிக்கும் காலம் வரும். திராட்சப் பழம் பறிக்கும் காலம் முடியுமுடியாமுன்னே விதைப்புக் காலம் வரும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகப் புசித்து ஓர் அச்சமுமின்றித் தேசத்தில் குடியிருப்பீர்கள்.

6. நாம் உங்கள் எல்லைகளில் சமாதானத்தைத் தந்தருளுவோம். உங்களைப் பயப்படுத்தி உங்கள் நித்திரையைக் குலைத்துப் போடுவாரில்லை. துஷ்ட மிருகங்களையும் நீக்கி விடுவோம். பட்டயமும் உங்கள் எல்லைகளைக் கடப்பதில்லை.

7. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன் விழுவார்கள்.

8. உங்களில் ஐவர் நூறு அன்னியரையும், உங்களில் நூறுபேர் பத்தாயிரம் பேரையும் துரத்துவார்கள். உங்கள் சத்துருக்கள் உங்கள் முன் பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.

9. நாம் உங்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து உங்களைப் பலுகவும் பெருகவும் செய்வோம். நீங்கள் விருத்தியடைவீர்கள். நமது உடன்படிக்கையையும் உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.

10. பழைமையான தானியங்களைச் சாப்பிட்டுப் புதிய தானியங்களுக்கு இடங் கொடுக்கும்படி பழையதை விலக்குவீர்கள்.

11. உங்கள் நடுவில் நமது வாசஸ்தலமாகிய கூடாரத்தை ஸ்தாபிப்போம். நமது ஆத்மா உங்களை அரோசிப்பதில்லை.

12. உங்கள் நடுவில் எழுந்தருளிச் சென்று நாம் உங்களுக்குத் தேவனாக இருப்போம். நீங்கள் நமது பிரஜைகளாக இருப்பீர்கள். 

13. நீங்கள் எஜிப்த்தியருக்கு அடிமையாயிராதபடிக்கு நாம் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப் பண்ணி உங்கள் கழுத்து விலங்குகளை முறித்துப் போட்டு உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்த உங்கள் தேவனாகிய ஆண்டவரே நாம்.

14. ஆனால் நீங்கள் நமக்குச் செவிகொடாமலும் நமது கற்பனைகளையெல்லாம் அனுசரியாமலும்

15. நமது பிரமாணங்களை அலட்சியம் பண்ணி நமது நீதிச்சட்டங்களையும் புறக்கணித்து, நம்மாலே கற்பிக்கப் பட்டவைகளை நிறைவேற்றாமலும், நமது உடன்படிக்கையை வியர்த்தமாக்குவீர்களாகில்,

16. நாம் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்: உடனே வறுமையாலும் உங்களை வாட்டி வதைத்து உங்கள் கண்களையுமெரித்து, உங்கள் உயிர்களை அழித்து விடுங் காய்ச்சலாலும் தண்டிப்போம். நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும். உங்கள் சத்துருக்கள் அதன் பலனைப் பட்சிப்பார்கள்.

17. உங்களுக்கு விரோதமாய் நம்முடைய முகத்தைத் திருப்புவோமாதலால் உங்கள் சத்துராதிகளுக்கு முன் விழுவீர்கள். உங்கள் பகைவரே உங்களைக் கீழ்ப்படுத்தி ஆளுவார்கள். துரத்துவாரில்லாதிருந்தும் நீஙகள் ஓடிப் போவீர்கள்.

18. இவையெல்லாம் நாம் செய்தும் இன்னும் நீங்கள் நமக்குக் கீழ்ப்படியீர்களேயாகில் உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை நாம் ஏழு மடங்கதிகமாகத் தண்டித்து,

19. உங்கள் கன்னெஞ்சத்தின் ஆணவத்தை நொறுக்கிப் போடுவோம். உங்கள் வானத்தை இரும்பைப் போலவும் உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவோம்.

20. வீணிலே வேலை செய்வீர்கள். பூமி தன் பலனை இடாது. மரங்களும் தங்கள் கனிகளைத் தர மாட்டாது.

21. நீங்கள் நமக்குச் செவி கொடுக்க மனதில்லாமல் நமக்கெதிர்த்து நடப்பீரகளேயாகில் நாம் உங்கள் பாவங்களினிமித்தம் உங்களுக்கு ஏழத்தனை வாதை உங்கள் மேல் வரப்பண்ணி,

22. உங்களுக்கு விரோதமாய்த் துஷ்ட மிருகங்களை ஏவிவிடுவோம். அதுகள் உங்களையும் உங்கள் மந்தைகளையும் பட்சித்து, உங்கள் மிருக ஜீவன்களையும் குறைந்து போகப் பண்ணும். உங்கள் வழிகளும் பாழாய்க் கிடக்கும்.

23. அப்போதுகூட நாம் செய்யும் தண்டனையினாலும் நீங்கள் குணமாகாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களானால்,

24. நாமே உங்களுக்கு எதிர்த்து, உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழுமடங்கதிகமாய்த் தண்டிப்போம்.

25. (எங்ஙனமெனில்) நமது உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள் மேல் வரப் பண்ணுவோம். நீங்கள் பட்டணங்களில் ஒதுங்கிய பின்னரும் கொள்ளை நோயை உங்கள் நடுவில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் பகைவர் கைவசமாவீர்கள்.

26. அதற்கு முந்தியே உங்கள் அப்பமென்னும் ஆதரவு கோலை நாம் முறித்துப் போட்டிருப்போமாதலால் பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பங்களைச் சுட்டு உங்களுக்கு அதுகளை நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் புசித்தும் திருப்தியடைய மாட்டீர்கள்.

27. இன்னும் நீங்கள் இவைகளாலும் குணப்படாமல் நம் பேச்சைத் தள்ளி நமக்கு விரோதமாய் நடப்பீர்களாகில்,

28. நாம் உக்கிரமான கோபத்துடன் உங்களுக்கு விரோதியாகி உங்கள் பாவங்களின் நிமித்தம் ஏழு வாதைகளால் உங்களைத் தண்டிப்போம்.

29. அப்போது நீங்கள் உங்கள் குமாரர் குமாரத்திகளுடைய மாம்சத்தைப் புசிப்பீர்கள்.

* 29-ம் வசனம். அப்படிப்பட்ட பயங்கரமான தீர்க்கதரிசனம் பலவிசையும் நிறைவேறிற்று. சமாரி பட்டணத்தைப் பிடிக்க சீரியருடைய இராசா பேன்தாபென்பவன் வந்து முற்றுகை போட்ட போதும், எருசலேம் பட்டணத்தைப் பிடிக்க நாபுக்தனசார் என்னும் இராசா வந்து முற்றுகை போட்ட போதும் பசியைத் தாளமாட்டாமல் சில ஸ்திரீக்ள தங்கள் பிள்ளைகளின் மாம்சத்தைப் புசித்தார்கள் (இராசா. 4-ம் புஸ்தகம் 6-ம் அதி. 28-ம் வசனம்; எரேமியாஸ் புலம்பல் 4-ம் அதி. 10-ம் வசனம் காண்க.)

30. மேடை குன்றுகளின் மேல் நீங்கள் கட்டிய கோவில்களையும் அழிப்போம். அதுகளில் இருக்கும் விக்கிரகங்களையும் நிர்த்தூளியாக்குவோம். உங்கள் விக்கிரகச் சிலைகளின் இடிசலிலே விழுவீர்கள். நமது ஆத்துமா உங்களை அரோசித்து விடும்.

31. அதினால் நாம் உங்கள் பட்டணங்களை நிர்மானுஷியமாக்கி, உங்கள் தேவாலயங்களைப் பாழாக்கி, உங்கள் அதி சுகந்த தூபவர்க்க வாசனையையும் இனி முகராதிருப்போம்.

32. உங்கள் தேசத்தைப் பாழாக்குவோம். உங்கள் சத்துருக்கள் அதில் குடியேறின பிற்பாடு இது விஷயத்திலே பிரமித்துக் கொள்வார்கள்.

33. உங்களையோ நாம் அந்நிய சாதி சனங்களுக்குள்ளே சிதறடித்து உங்கள் பிறகாலே பட்டயத்தை யுருவி, உங்கள் தேசத்தைக் காடாக்கி உங்கள் பட்டணங்களை நாசமாக்குவோம.

34. (நீங்கள் சத்துருக்களுடைய தேசத்தில் கொண்டு போகப் பட்டபோது) நிர்மானுஷியமான உங்கள் தேசம் பாழாகிக் கிடக்கிற நாளெல்லாம் சாபத் கொண்டாடிக் களிகூரும்.

35. நீங்கள் அதில் வசித்திருக்கும்போது அது உங்கள் சாபத் நாட்களிலே இளைப்பாறவில்லையே. இப்போதல்லவா அது சும்மாயிருந்து சாபத் கொண்டாடும்.

36. உங்களில் எவர்கள் உயிரோடு தப்பித்துக் கொண்டிருப்பார்களோ அவர்கள் சத்துருக்களின் தேசத்திலே குடிகொண்டிருக்கும்போது திகிற்படும்படியாய் அவர்களுடைய மனதிலே திடுக்காட்டம. வரப்பண்ணுவோம். பறக்கும் இலையின் சத்தம் கேட்டு அவர்கள் பயப்பட்டுப் பட்டயமோ (என்னவோ) வென்று வெருண்டு மிரண்டோடி, துரத்துவார் இல்லாமல் தரையில் விழுவார்கள்.

37. பட்டயத்துக்கு முன் பயந்தோடுவது போல் அவர்கள் ஓடி, தங்கள் சகோதரர் மேல் தாக்கி மோதி விழுவார்கள். உங்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்க உங்களுக்குத் துணிகரமிராது.

38. புறச்சாதி சனங்களுக்குள்ளே நீங்கள் பிழைக்க மாட்டீர்கள். உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.

39. இவர்களில் சிலர் உயிரோடு தப்பித்துக் கொண்டால் அவர்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் அக்கிரமங்கள் என்னும் தீயில் வாடி வதங்கித் தங்கள் சொந்தப் பாவங்களினிமித்தமும் பிதிர்கள் செய்த பாவங்களினிமித்தமும் பாடுபடுவார்கள்.

40. அவர்கள் நமக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் சங்கீர்த்தனம் பண்ணுமட்டும் வியாகுலப் படுவார்கள்.

41. ஆகையால் தங்களுடைய விருத்தசேதனமில்லாத மனதைப் பற்றி அவர்கள் நாணி வெட்கம் அடையும் வரையிலும் நாம் அவர்களுக்கு விரோதியாகி அவர்களைச் சத்துருக்களின் தேசத்தில் கொண்டு போவோம். அப்போது தங்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்கள் செபம் பண்ணுவார்கள்.

42. அந்நேரத்தில் நாம் யாக்கோப், இசாக், அபிரகாம் என்பவர்களுடன் பண்ணின நம் உடன்படிக்கையை நினைத்துக் கொள்ளுவோம்.

43.   அவர்களாலே விடப்பட்டபின்பு அது அவர்களினிமித்தம் தன் பாழாகிய தீய அந்தஸ்தைக் குறித்துத் துக்கப் பட்டாலும் தன் சாபத்தென்னும் இளைப்பாற்றி நாளைக் கொண்டாடும். அவர்களோ நம்முடைய கற்பனைகளை மீறி நமது சட்டங்களை அலட்சியம் பண்ணிச் செய்த பாவங்களைப் பற்றி மன்றாடுவார்கள்.

44. அவர்கள் தங்கள் பகைஞர் தேசத்தில் இருக்கும்போதுகூட நாம் அவர்களை முற்றும் வெறுக்கவுமில்லை. அவர்களை முழு நாசமாய்ப் போகும்படிக்கும், நாம் அவர்களோடு செய்த உடன்படிக்கை வியர்த்தமாய்ப் போகும்படிக்கும் நாம் அவர்களைக் கைவிடவுமில்லை. ஏனெனில் நாம் அவர்கள் தேவனாகிய கர்த்தரல்லவா?

45. அவர்களுடைய தேவனாகவிருக்கும் பொருட்டு புறஜாதிகள் பார்த்து (ஆச்சரியப்பட) அவர்களை நாம் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த போது அவர்கள் பிதாக்களோடு நாம் பண்ணின உடன்படிக்கையை நினைத்துக் கொள்ளுவோம். நாம் ஆண்டவர். கர்த்தர் சீனாயி மலையிலே தமக்கும் இஸ்றாயேல் புத்திரருக்கும் (ஒப்பந்தம் பண்ணி) மோயீசன் மூலியமாய் விதித்தருளிய நியாயங்களும் கற்பனைகளும் சட்டதிட்டங்களும் அவைகளேயாம்.