எண்ணாகமம் - அதிகாரம் 25

இஸ்றாயேலர் மோவாபியருடைய ஸ்திரீகளோடு வேசித்தனமும் விக்கிரகாராதனையும் செய்ததும்--பினேயஸ் தேவ மகிமையின் பேரில் சுறுசுறுப்புக் காட்டினதும்--தேவன் அவனுக்கு நித்திய ஆசாரியத் தொழிலைக் கொடுத்ததும்.

1. அக்காலத்தில் செத்தீமிலே தங்கிக் கொண்டிருந்த இஸ்றாயேலியர் மோவாபியரின் குமாரத்திகளோடு வேசித்தம் பண்ண ஆரம்பித்தார்கள்.

2. இந்தப் பெண்கள் தங்கள் (தேவர்களுக்குப்) படைத்த பலிகளுக்கு அவர்களை வரவழைத்தார்கள். அவர்கள் போய்ப் படைத்தவைகளைப் புசித்து விக்கிரக ஆராதனை பண்ணினார்கள்.

3. இப்படி இஸ்றாயேலியர் பெல்பேகோர் ஆராதிப்பதில் தீட்சிக்கப்படத் துடங்கினார்கள். ஆனது பற்றி கர்த்தருடைய கோபம் மூண்டது.

* மோவாபியர் பேல்பெகோர் என்னும் விக்கிரகத்திற்குச் செய்யும் பூசை சமயத்திலே சொல்லுதற்கரிய அரோசிக மோகபாவங்களைக் கட்டி வருவார்கள். இஸ்றாயேலியரைக் கெடுக்கும்படி உபாயஞ் செல்லுவதாகப் பலாக்கிடத்தில் பலாம் சொல்லியிருந்தானே (முந்தின அதி. 14-ம் வசனம்.) அதுவே இது.

4. அவர் மோயீசனை நோக்கி: நமது கோபம் இஸ்றாயேல் புத்திரர்களை விட்டு விலகும் பொருட்டு நீ சனங்களின் தலைவர்களெல்லோரையும் பிடித்துப் பிரசித்த மாய் அவர்களைத் தூக்கு மரத்திலே தூக்கிப் போடென்றார்.

5. அப்படியே மோயீசன் இஸ்றாயேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் பெல்பேகோர் ஆராதனையில் தீட்சிக்கப் பட்ட உங்கள் உறவின் முறையாரைக் கொன்று போடுங்களென்றான்.

6. அப்பொழுது மோயீசனும் இஸ்றாயேல் புத்திரர் அனைவரும் ஆசாரக் கூடார வாசலுக்கு முன்பாக அழுது கொண்டிருக்கையில் அதோ எல்லோரும் பார்க்க ஒரு இஸ்றாயேலியன் மதியானிய ஸ்திரீயான ஒரு குட்டினி வீட்டிலே நுழைந்தான்.

7. ஆசாரியனாகிய ஆரோன் புத்திரனான எலெயஸாருடைய குமாரன் பினேஸ் என்பவன் அதைக் கண்டு நடுச்சபையிலிருந்து எழுந்து ஒரு கட்டாரியைக் கையிலேந்தி,

8. வேசித்தனம் பண்ணும் வீட்டில் அவனைப் பின்சென்று அவனையும் அந்த ஸ்திரீயையும் காணா ஸ்தலத்திலே குத்திப் போட்டான். அதனாலே இஸ்றாயேலியரின் மேல் விழுந்திருந்த வாதை நீங்கிப் போயிற்று.

9. இருபத்து நாலாயிரம் பேர்கள் கொலை செய்யப் பட்டார்கள்.

10. அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி:

11. நாமே நமது உக்கிரமான எரிச்சலில் இஸ்றாயேல் புத்திரரை நிர்மூலமாக்க இருக்கையிலே ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயஸாரின் புத்திரனாகிய பினேஸ் என்பவன் நம்மை அப்படிச் செய்யவொட்டாமல் தானே அவர்கள் மேல் எரிச்சலுள்ளவனாகி அவர்களைக் கண்டித்ததே நல்லது. அவன் தன் பக்தி வைராக்கியத்தினால் இஸ்றாயேலியர் மேல் நமக்குண்டான உக்கிரத்தைத் திருப்பினான்.

12. ஆனபடியால் இதோ நமது உடன்படிக்கையின் சமாதானத்தை நாம் அவனுக்கு அளித்துக் கொண்டோம் என்றும்,

13. அவன் தன் தேவனுக்காகப் பக்தி வைராக்கியங் காண்பித்து இஸ்றாயேல் புத்திரருடைய துரோகத்தைப் பரிகாரம் பண்ணினமையால், அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் சந்ததியாருக்கும் நித்திய ஆசாரிய பட்டத்துக்குரிய உடன்படிக்கையை ஸ்தாபிக்கின்றோம் என்றும் அவனுக்குச் சொல்வாய் என்றருளினார்.

14. மதியானிய ஸ்திரீயோடு குத்துண்டு செத்த இஸ்றாயேலிய புருஷனுடைய பேர் சம்பிரி. அவன் சலுவின் குமாரன். சிமையோன் வம்சத்திலும் கோத்திரத்திலும் பிரபுவாயிருந்தான்.

15. குத்துண்டு செத்த மதியானிய ஸ்திரீயின் பெயரோ கொஸ்பியம்மாள். அவள் சூரின் குமாரத்தி. அவளுடைய தகப்பன் மதியானியருக்கு அதிபிரபலமான தலைவன்.

16. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

17. மதியானியர் உங்களைத் தங்கள் சத்துருக்களென்று கண்டுபிடிக்கத் தக்கதாக நீங்கள் அவர்களை வெட்டிப் போடுங்கள்.

18. ஏனென்றால் அவர்கள் (முதலே) உங்களுக்கு விரோதஞ் செய்ததுமன்றி பேகோரின் சங்கதியிலும் மதியான் பிரபுவின் குமாரத்தியும் அவர்களின் சகோதரியுமான கொஸ்பி என்பவளுடைய சங்கதியிலும் அவர்கள் உங்களுக்குச் சர்ப்பனை பண்ணி மோசஞ் செய்தார்கள் (என்றார்.)