இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 25

ஏழாம் வருஷத்திய சாபத்--ஐம்பதாம் வருஷத்திய ஜூபிலிக்குரிய ஆசாரங்கள்-நிலத்தையும் வீட்டையும் மீட்குதல்-அடிமைகளைக் கையாளுகை.

1. மீண்டுங் கர்த்தர் சீனாயி மலையில் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவென்றால்: நாம் உங்கட்கு அளிக்கவிருக்கிற பூமியில் நீங்கள் பிரவேசித்த பின்னர் கர்த்தருக்குத் தோத்திரமாக சாபத்தென்னும் ஓய்வு (நாளைக்) கொண்டாடக் படவீர்கள்.

3. ஆறு வருஷம் உன் வயலை விதைத்து உன் திராட்சைக் கொடிகளின் கிளைகளைக் கழித்து அதன் பலனைச் சேர்ப்பாய்.

4. ஏழாம் வருஷத்திலோ பூமியுடைய சாபத். இது ஆண்டவர் ஓய்ந்திருந்த ஓய்வுக்கேற்றபடி (அனுகரிக்கப் படும்.) அந்த வருஷத்திலே உன் வயலை விதைக்கவும், உன் திராட்சத் தோட்டத்துச் செடிகளின் கிளைகளைக் கழிக்கவும் வேண்டாம்.

* 4-ம் வசனம். மனிதன் மாத்திரமல்ல, உயிருள்ள வஸ்துகளும் உயிரில்லா வஸ்துக்களும் இளைப்பாறாமல் சும்மா வேலை செய்வது அசக்தமே. உதாரணம்: பூமியானது ஓயாமல் பலனைத் தராது. ஆறேழு வருஷத்தில் ஒரு வருஷம் உன் வயலைத் தரிசாய்க் கிடக்க விட்டாலே உத்தமம். பிறகு அதிக பலனைக் கொடுக்கும். இஸ்றாயேலியர் இதை மறவாதபடிக்கு கர்த்தர் ஏழு வருஷத்தில் ஒரு வருஷம், ஏழு நாளில் ஒரு நாள் மனிதனுக்கும் மிருகத்துக்கும், நிலங்களுக்கும் ஒரு ஓய்வு நாளைக் கட்டளையிட்டார்.

5. நிலங்களில் தானாய் விளைந்ததை நீ வெள்ளாண்மையென்று அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். உன் நவப் பலனின் திராட்சப் பழங்களை நீ சாதாரணப் பலனைப் போல் அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். ஏனெனிவ் அது பூமிக்கு அது ஓய்வு வருஷம்.

6. ஆனால் அதுகள் உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக. உனக்கும் உன் வேலைக்காரனுக்கும் உன் வேலைக்காரிக்கும் உன் கூலிக்காரனுக்கும் உன்னிடத்திற் சஞ்சரிக்கின்ற அந்நியனுக்கும்,

7. உன் ஆடுமாடுகளுக்கும் தானாய் விளைந்திருப்பதெல்லாம் உணவாயிருக்கும்.

8. மீளவும் ஏழு வருஷ வாரங்களை, அதாவது ஏழு விசை ஏழு: ஆக நாற்பத்தொன்பது வருஷங்களை எண்ணுவாய்.

9. தேசமெங்கும் பிராயச்சித்த காலமாகிய ஏழாம் மாதத்திலே (அம்) மாதத்துப் பத்தாம் தேதியிலே எக்காளச் சத்தம் தொனிக்கும்படி செய்ய வேண்டும்.

10. ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி உன் தேசத்தின் சகல குடிகளுக்கும் மன்னிப்பென்று கூறுவாய். ஏனெனில் அது (சந்தோஷமென்னும்) ஜூபிலி வருஷம். அதிலே உங்களில் ஒவ்வொரு மனிதனும் தன் தன் காணியாட்சியைத் திரும்பி யடைவான். தன் தன் முந்தின குடும்பத்திற்குத் திரும்பிப் போவான்.

* 10-ம் வசனம். ஐம்பதாம் வருஷத்தைச் (சந்தோஷமென்று) ஜூபிலி வருஷமென்று சொல்லுகிறதற்கு முகாந்தரமேதெனில், அவ்வருஷத்தில் அவனவன் தன் காணியாட்சி சுதந்தரத்தைத் திரும்ப அடைவான். கடன்கள் மன்னிக்கப் படும். அடிமைத்தனம் ஒழியும். ஆனது பற்றி அது மகா ஆனந்தத்துக்குரிய காலமாம்.

11. ஏனெனில் அது ஜூபிலி வருஷமும் ஐம்பதாம் வருஷமுமாமே. அப்போது நீங்கள் விதைப்பதுமில்லை. வயலில் தானாய் விளைந்திருப்பதை அறுத்துச் சேகரிப்பதுமில்லை. திராட்சைகளின் நவப்பலனாகிய பழங்களை அறுத்துச் சேர்ப்பதுமில்லை.

12. அதன் காரணம்: ஜூபிலி வருஷத்தின் பரிசுத்ததனமே. (அந்த வருஷத்தில்) வயல்வெளிகளில் எது அகப்படுமோ அதை நீங்கள் புசிக்க வேண்டும்.

13.  ஜூபிலி ஆண்டிலே யாவரும் தங்கள் காணியாட்சிகளைத் திரும்பி அடைவார்கள்.

14. உன் ஊரானுக்கு நீ எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் உன் சகோதரனைத் துன்பப்படுத்தாமல் ஜூபிலி ஆண்டுக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்றபடி தானே நீயும் அவனிடத்திற் கொள்வாய்.

15. அவனும் பலனுள்ள வருஷங்களின் எண்ணிக்கைப்படி தானே உனக்கு விற்பான்.

16. ஜூபிலி வருஷத்திற்குப் பின்வரும் வருஷங்களின் தொகை எவ்வளவெறுமோ அவ்வளவும் விலையேறும். வருஷங்களின் தொகை எவ்வளவு குறையுமோ, வாங்குகிற விலையும் அவ்வளவாகக் குறையும். ஏனெனில் பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்தல்லவா அவன் உனக்கு விற்பான்.

17. உங்கள் இனத்தாரை நீங்கள் துன்பப்படுத்தாதேயுங்கள். தேவனுக்குப் பயப்பட அவனவனுக்குக் கடமை. ஏனெனில் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

18. நீங்கள் நமது கட்டளைப்படி செய்து நமது நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளை நிறைவேற்றக் கடவீர்கள். இப்படி செய்வீர்களாகில் நீங்கள் ஓர் அச்சமுமின்றித் தேசத்தில் குடியிருப்பதற்கும்,

19. பூமி ஏராளமாய் உங்களுக்குத் தன் பலனைத் தருவதற்கும், ஒருவனுடைய வல்லடிக்கு அஞ்சாமல் நீங்கள் திருப்தியாய்ப் புசித்துச் சுகமாயிருப்பதற்கும் தடையில்லை.

20. ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம், நங்கள் விதை விதைக்காமலும் விளைந்ததைச் சேர்க்காமலும் சும்மாயிருக்க வேண்டுமே என்று நீங்கள் சொல்லுவீர்களானால்,

21. நாம் ஆறாம் வருஷத்திலே உங்கட்கு நமது ஆசீர்வாதத்தை அனுக்கிரகம் பண்ணுவோம். அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.

22. நீங்கள் எட்டாம் வருஷத்தில் விதைத்து ஒன்பதாம் வருஷம் மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள. புதுப்பலன் விளையும் வரைக்கும் பழைய பலனையே புசிப்பீர்கள்.

23. அன்றியும் தேசம் நம்முடையதாகையாலும், நீங்களோ அந்நியர்களும் இரசற் குடிகளாகையாலும் நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம்.

* 23-ம் வசனம். பூமியும் அதில் அடங்கிய சமஸ்தமும் சம்பூரணமாய்க் கர்த்தருக்குச் சொந்தம். (23-ம் சங்கீதம் 1-ம் வசனம்.) இதுவரையிலும் சுவாமி ஓர் அரசனைப் போலத் தமது பிரசையை ஆண்டு கொண்டு வந்தபடியால் அவர்களுக்கு உபயோகமான அவ்விதக் கட்டளைகளையும் விதித்தருளினார்.

24. ஆதலால் உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களைப் பிறகு மீட்டுக் கொண்டாலும் கொள்ளுவோமென்று ஒப்பாசாரம் பண்ணி விற்கலாமொழிய மற்றப்படியல்ல.

25. உன் சகோதரன் தரித்திரத்தால் நெருக்கப் பட்டுத் தன் சிறிய காணியாட்சியை விற்றானாகில் பிறகு அவனினத்தாரில் ஒருவன் வந்து அது தனக்கு வேண்டுமென்றால் தன் சகோதரன் விற்றதை அவன் மீட்கலாம்.

26. அதை மீட்க இனத்தாரில் ஒருவனும் இல்லாமல் தானே அதை மீட்கத் தக்கவனானால்,

27. அதை விற்ற நாள் முதல் உண்டான பலன்களின் பெறுமதியைக் கணக்கிட்டு மீந்திருக்கிறதைக் கொண்டவனுக்கு உத்தரிப்பான். அவ்விதமே தன் காணியாட்சியை மீட்பான்.

28. ஆனால் விலையைக் கொடுக்க அசக்தனாகில், அவன் விற்றது வாங்கினவன் கையிலே ஜூபிலி வருஷ மட்டுமிருக்கும். ஜூபிலி வருஷத்திலேயோவென்றால் விற்கப் பட்டதெல்லாம் முந்தின எஜமானுக்கும் சுதந்தரவாளிக்கும் திரும்பவும் போகும.

29. பட்டணத்து மதில்களுக்குள்ளிருக்கிற தன் வீட்டை எவன் விற்றிருப்பானோ அவன் அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக் கொள்ளலாம்.

30. ஒரு வருஷத்துக்குள் மீட்டுக் கொள்ளாதிருந்தாலோவெனில் அந்த வீடு ஜூபிலி ஆண்டிலே முதலாய் மீட்கப் பட முடியாது. தலைமுறைதோறும் அதை வாங்கிக் கொண்டவனுக்கும், அவன் சந்ததியாருக்குமே உரியதாகும்.

31. மதில் சூழப்படாத கிராமத்திலுள்ள வீடோவெனில் தேச நிலங்களுக்கடுத்த சட்டப் படி விற்கப் படும். முன்னே மீட்கப் படாதாயின் ஜூபிலி ஆண்டிலே (முந்தின( சொந்தக்காரனுக்குத் திரும்பும்.

32. லேவியர்களின் (காணியாட்சியாகிய) பட்டணங்களிலுள்ள வீடுகளோ எக்காலத்திலும் மீட்கப் படக் கூடும்.

* 32-ம் வசனம். சனங்களின் பொதுநன்மைக்காக லேவியர்கள் கடவுளுடைய ஊழியத்திற்குப் பிரதிஷ்டையானவர்கள். ஆகையால் உலகக் காரய விஷயத்தில் அவர்களுக்கு வீண் சிந்தை உண்டாகாதபடிக்குச் சுவாமி அவர்களுக்கு உபயோகமான ஒரு விசேஷச் சட்டம் பண்ணினது நியாயமே. அவ்விதப் பிரமாணம் கத்தோலிக்குத் திருச்சபையிலும் வழங்கி வருகின்றது. திருச்சபைக்குச் சொந்தமாயிருக்கிற காணி பூமி முதலியனவற்றை யாதொரு துஷ்டன் பலவந்தமாய்ச் சுதந்தரித்துக் கொள்ளப் பார்த்தால், அர்ச். பாப்பானவர் அப்படிப்பட்டவனைச் சபித்துத் திருச்சபைக்குப் புறம்பே தள்ளிப் போடுகிறார்.

33. இஸ்றாயேல் புத்திரருக்குள்ளே லேவியர்களுக்கிருக்கிற வீடுகள் அவர்களுடைய காணியாட்சியைப் போலாகையால் அதுகள் மீட்கப் படாதாயின் ஜூபிலி வருஷத்திலே அதுகள் உடையவர்களுக்குத் திரும்பவும் வந்து சேரும்.

34. மேலும் பட்டணங்களுக்கடுத்த அவர்களுடைய வெளி வயல் முதலியன விற்கப் படலாகாது. அதுகள் அவர்களுக்கு நித்திய காணியாட்சி.

35. தரித்திரத்தால் நொறுக்கப் பட்டுக் கையிளைத்துப் போன உன் சகோதரனை அன்னியனென்றாவது பரதேசியென்றாவது நீ ஏற்றுக் கொண்டு அவன் உன்னோடுகூடத் தங்குவானாகில்,

36. அவன் கையில் வட்டியாவது அவனுக்கு நீ கொடுத்ததுக்கு அதிகமாவது வாங்காதே. உன் சகோதரன் உன்னிடத்தில் பிழைக்கும்படி உன் தேவனுக்குப் பயந்து நட.

* 36-ம் வசனம். நெடுநாளுங் கொடுத்த முதலுக்கு வட்டியை வாங்க உத்தாரமில்லாமல் இருந்தது. ஏனென்றால் வட்டியை வாங்கும் பழக்கத்தினால் பிரசைகளுக்கு அநேக அக்கிரமங்களும் அநியாயங்களும், நஷ்டங்களும் நேரிடுகிறதுண்டு. எவர்கள் கொடுத்த பணத்துக்கு அதிகமான வட்டியை வாங்குகிறார்களோ அவர்கள் மகா பாவிகளென்பதற்குத் தடையில்லை.

37. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

38. உங்களுக்குக் கானான் பூமியை அளிக்கும்படிக்கும், உங்கள் தேவனாகவிருக்கும்படிக்கும், உங்களை எஜிப்த்து நாட்டினின்று விடுதலையாக்கின உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே.

39. உன் சகோதரன் தரித்திரத்தால் வருந்தி உனக்கு விலைப்பட்டுப் போனால் அவனை அடிமையைப் போல நெருக்க வேண்டாம்.

40. அவனோ கூலிக்காரனைப் போலவும் தங்க வந்தவனைப் போலவும் உன்னோடு இருந்து ஜூபிலி வருஷம் வரையிலும் உன்னிடத்தில் வேலை செய்வான்.

41. பின்பு அவன் தன் பிள்ளைகளோடுகூட உன்னை விட்டு நீங்கித் தன் குடும்பஸ்தரிடத்திற்கும் தன் பிதிர்களின் காணியாட்சிக்கும் திரும்பிப் போவான்.

42. உள்ளபடி அவர்கள் நமக்கே அடிமையாயிருக்கிறார்கள். நாம் எஜிப்த்து தேசத்திலிருந்து அவர்களை விடுதலையாக்கினோம். ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப் படலாகாது.

43. நீ அவனை அதிகக் கொடூசமாய் ஆள வேண்டாம். உன் தேவனுக்குப் பயந்திரு. 

44. சுற்றிலுமிருக்கிற புறச்சாதிகளைச் சேர்ந்தவர்களே உங்களுக்கு ஆண் அடிமையும் பெண் அடிமையுமாயிருப்பார்கள்.

45. உங்களிடத்திலே பரதேசியாய்க் குடியிருக்கிற அந்நியர்களிலும், உங்களிடத்தில் அவர்கள் வயிற்றிலே பிறந்தவர்களிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொள்வீர்கள்.

46. அவர்களை நீங்கள் எப்போதைக்கும் உங்கள் வசத்தில் வைத்துக் கொள்வதுமன்றி, சுதந்தர உரிமையாக அவர்களை உங்கள் சந்ததியாருக்கும் கையளிக்கக் கூடும். ஆனால் உங்கள் சகோதரராகிய இஸ்றாயேலியரைக் கொடூரமாய் ஆளக் கூடாது.

47. உங்களிடத்திலிருக்கிற அந்நியனும் பரதேசியும் செல்வனான பிற்பாடு தரித்திரனான உன் சகோதரன் அவனுக்காவது அவன் குடும்பத்தாரில் எவனுக்காவது விலைப்பட்டுப் போனானானால்,

48. விலைப்பட்டுப் போன பின்பு அவன் திரும்பவும் மீட்கப் படக் கூடும். அவன் சகோதரரில் எவனும்,

49. அவன் தகப்பனோடு பிறந்தவனாவது, இவனுடைய குமாரனாவது அவன் குடும்பத்திலுள்ள உறவின் முறையாரில் ஒருவனாவது அவனை மீட்கலாம். தன்னாலே கூடுமாகில் அவன் தன்னைத்தானே மீட்டுக் கொள்ளக் கூடும்.

50. (அதப்படியானால்) தான் விற்கப்பட்ட நாள் முதல் ஜூபிலி வருஷமட்டும் சென்று போன வருஷத் தொகை எத்தனையென்று கணக்கிட வேண்டும். அவனுடைய விலைக்கிரயமோ கூலிக்காரனுடைய காலக் கணக்குப் படியும் அவன் வேலை செய்து வந்த வருஷக் கணக்குப் படியும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

51. ஜூபிலி வருஷமட்டும் இன்னும் அனேக வருஷங்களிருக்குமென்றால் அவன் அதுகளுக்குத் தக்கபடி விலைக்கிரயங் கொடுத்து உத்தரிக்கக் கடவான்.

52.  ஜூபிலி வருஷமட்டும் மீதியாயிருக்கும் வருஷங்கள் கொஞ்சமேயானால் அவன் தன் எசமானோடு கணக்குப் பார்த்து வித்தியாசமான வருஷங்களுக்குத் தக்கபடி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து உத்தரிக்கக் கடவான்.

53. ஆனால் தான் அதற்குள்ளே வேலை செய்து வந்தமையால் தனக்கு வந்து சேர வேண்டிய அதன் கூலிப்பணத்தைக் கழித்துப் போடுவான். அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய்ப் பீடிக்க வேண்டாம்.

54. இப்படி இவன் மீட்கப் படக் கூடாதாயின் இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும் ஜூபிலி வருஷத்திலே விடுதலையாவார்கள்.

55. ஏனென்றால் இஸ்றாயேல் புத்திரர் நமது ஊழியக்காரரேயாம். நாமல்லோ எஜிப்த்து தேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச் செய்தோம்.