இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 24

கிளைவிளக்கும் -- காணிக்கை அப்பங்களும் --தேவதூஷணத்திற்கும், மற்றும் சில பாவங்களுக்கும் விதிக்கப் பட்ட தண்டனைகளும்.

1. மீண்டுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. விளக்குகள் நித்தியமும் எரிந்து கொண்டிருக்கும்படி மகா சுத்தமும் தெளிவுமுள்ள ஒலீவெண்ணையை உன்னிடத்தில் கொண்டு வர வேணுமென்று இஸ்றாயேல் புத்திரர்களுக்குக் கட்டளையிடு.

3. உடன்படிக்கைக் கூடாரத்திற் சாட்சியத் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதுகளை எப்பொழுதும் சாயுங்கால முதல் விடியற்கால மட்டும் எரியும்படி கர்த்தருடைய சந்நிதியில் ஏற்றக் கடவான். இது உங்கள் தலைமுறைகள் தோறும் செய்ய வேண்டிய நித்தியப் பிரமாணமாமே.

4. அவைகள் ஆண்டவர் சமூகத்தில் எரியும்படி அதிபரிசுத்தமான கிளைவிளக்கின் மேல் எப்பொழுதும் வைக்கப் படும்.

5. அதுவுமன்றி மெல்லிய மாவை எடுத்து அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக. ஒவ்வொரு அப்பம் (மரக்காலிலே) பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

6. அவற்றை நீ கர்த்தருடைய கமூகத்தில் பரிசுத்தமான மேசையின்மீது இந்தண்டை ஆறு, அந்தண்டை ஆறாக அடுக்கி வைப்பாய்.

7. அவ்வப்பங்கள் கர்த்தருக்குச் செய்யப்பட்ட காணிக்கைக்கு ஞாபகக் குறியாயிருக்கத் தக்கதாய் அதுகளின் மீது மகா சுத்தத்தையுடைய தூபவர்க்கம் போடக் கடவாய்.

8. நித்திய உடன்படிக்கையாகக் (குரு) அந்த அப்பங்களை இஸ்றாயேல் புத்திரர் கையிலே பெற்றுக் கொண்டு சாபத் நாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளை மாற்றிப் போடுவான்.

9. அதுகள் ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். அவர்கள் அதுகளைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கக்கடவார்கள். ஏனெனில் கர்த்தருக்குச் செலுத்தப் படும் பலிகளிலே அந்தப் பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது நித்திய சுதந்தரமாய் அவர்களுடையதாயிருக்கும்.

10. அது நிற்க அக்காலத்திலே இஸ்றாயேல் சாதியான ஒரு ஸ்திரீக்கும் இஸ்றாயேலியரோடு குடியிருந்த ஒரு எஜிப்த்திய புருஷனுக்கும் பிறந்த குமாரனான ஒருவன் வெளியே வந்து பாளையத்திலே ஓர் இஸ்றாயேலியனோடு சண்டை பண்ணி,

11. கர்த்தருடைய (திரு) நாமத்தையும் கர்த்தரையும் நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோயீசனிடத்திற் கொண்டு வந்தார்கள். (அவனுடைய தாயின்பேர் சலுமிட், அவள் தான் கோத்திரத்தானாகிய தாபிரி என்பவனுடைய குமாரத்தி.)

12. கர்த்தருடைய திருவுளத்தை அறியுமட்டும் அவனைக் காவலில் வைத்தார்கள்.

13. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி:

14. இந்தத் தேவதூஷணக்காரனைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டுபோங்கள். அவன் சொல்லிய தூஷணமான வார்த்தையை எவர்கள் கேட்டார்களோ அவர்கள் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்கள். பிறகு சபையார் யாவரும் அவனைக் கல்லெறிந்து சாகடிக்கக் கடவார்கள்.

* 14-ம் வசனம். தேவதூஷணமானது மகா பாதகமென்பதற்குச் சந்தேகமில்லை. இதுவரைக்கும் வேதாகமங்கள் இப்படிப்பட்ட பாவத்தைக் குறித்துப் பேகினதேயில்லையாதலால் அது நூதனமாய் முதல் விசைக்குத் தானே கட்டப் பட்ட பாதகமென்று தோன்றுகின்றது. ஆனது பற்றியல்லவோ மோயீசன் செய்யவேண்டியது இதுவோ அதுவோ எதுவோ என்றறியாமல் கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்கத் துணிந்தார்.

15. பின்னும் நீ இஸ்றாயேல் புத்திரருக்குச் சொல்லுவதாவது: தன் தேவனானவரைத் தூஷித்தவனெவனோ அவன் தன் பாவத்தைச் சுமந்துகொள்ளுவான்.

16. கர்த்தருடைய நாமத்தை நிந்தித்தவன் கொலைசெய்யப் படுவான். அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும் சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிய வேண்டும். கர்த்தருடைய நாமத்தைத் தூஷணித்தவன் கொலை செய்யப் படுவான்.

17. ஒரு மனிதனை எவன் கொலை செய்தானோ அவன் கொலைசெய்யப் படுவான்.

18. ஒரு மிருகத்தைக் கொன்றவன் பதிலுக்கு வேறொன்றைக் கொடுக்கக் கடவான். அதாவது: மிருகத்துக்கு மிருகம் கொடுத்து உத்தரிக்கக் கடவான்.

19. தன் ஊராரிலொருவனை எவன் ஊனப்படுத்தினானோ அவன் செய்தபடியே அவனுக்குச் செய்யப்படும்.

20. முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலுக்கிருக்கும். ஒருவன் தன் பிறனுக்கு எவ்விதத் தின்மையைச் செய்தானோ அவ்விதத் தின்மையே அவனுக்குச் செய்யப் படும்.

* 20-ம் வசனம். பதிலுக்குப் பதிலுத்தரிக்கும் முறைமை அக்காலத்துச் சனங்களிலே சாதாரணமாய் வழங்கி வரும் நியாயப் பிரமாணமே. அது சாங்கோபாங்கமானதல்ல என்பது வாஸ்தவமென்றாலும் அக்காலத்து நாகரீக ஸ்திதிக்கும் விசேஷமாய் கன்னெஞ்சராயிருந்த இஸ்ராயேலியருடைய நிலைமைக்கும் அவசரமாயிருந்ததென்பதற்குச் சந்தேகமில்லை. அதுகிடக்க, அருள் வேதமாகிய சாங்கோபாங்கமான வேதத்திலே சேசுகிறீஸ்துநாதர் போதித்துக் கட்டளையிட்ட பிறர்சிநேகத்தின் உத்தமமான நிலைமை (மத்தேயு சுவி. 5-ம் அதி. 38-ம் வசனம். முதல் 48-ம் வசனம் வரைக்கும்) கண்டு ஆச்சரியப்படக் கடவாய்.

21. வாகன மிருகத்தைக் கொன்றவன். வேறொன்றைக் கொடுப்பான். மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப் படுவான்.

22. உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயமிருக்க வேண்டும். ஏனெனில் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று திருவுளம்பற்றினார்.

23. அவ்விதமே மோயீசன் இஸ்றாயேல் புத்திரரோடு பேசினபின்பு கர்த்தரைத் தூஷித்தவனைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்று போட்டார்கள். கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்த படியே இஸ்றாயேல் புத்திரர் செய்தனர்.