இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 24

பலாம் இன்னொரு விசை இஸ்றாயேலியருக்கு ஆசீர்வாதம் தந்ததும்--தீர்க்கத்தரிசனமாய்ப் பேசினதும்.

1. இஸ்றாயேலியரை ஆசீர்வதிப்பது கர்த்தருக்குப் பிரியமென்று கண்டு, பலாம் முன் செய்தது போல் நிமித்தம் பார்க்கப் போகாமல் வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,

2. கண்களை ஏறெடுக்கவே இஸ்றாயேலியர் தன் கோத்திரங்களின் படியே பாளையம் இறங்கியிருக்கிறதைக் கண்டான். அந்நேரத்தில் தேவனாலே ஏவப்பட்டவனாய்,

3. தீர்க்கதரிசனம் உரைக்கலாயினான். எப்படியெனில்: பேயோரின் குமாரனாகிய பலாம் உரைத்த வசனம், இருண்ட கண்ணையுடையவன் பகர்ந்த வாக்கியம்:

4. தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டுச் சர்வ வல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழே விழுந்தபின் கண்பார்வை பெறுகிறவன் சொல்லும் சொல்லாவது:

5. இயாக்கோபே உன் படாம் வீடுகள் எவ்வளவோ அழகானவை! இஸ்றாயேலே உன் கூடாரங்கள் எம்மாத்திரமோ அலங்காரமாயிருக்கிறது! 

6. அவைகள் செடி கொடி மரங்களால் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் போலும், நதி ஓரத்திலுள்ள சிங்காரவனங்களைப் போலும் கர்த்தர் தாமே இயற்றிய வானிகளைப் போலும், புனலருகில் வளர்ந்து நின்ற கேதுரு விருட்சங்களைப் போலும் இருக்கின்றன.

7. அவனுடைய நீர்ச்சாலினின்று சலம் ஓடும். அவன் சந்ததி மிகுதியான தண்ணீர் போலப் பரவும். அவனுடைய அரசன் தள்ளுண்டு போய் ஆகாக் என்பவன் நிமித்தம் அவன் தன் இராச்சியத்தை இழந்து போவான். 

* இஸ்றாயேலியர் வாக்குத்தத்தப் பூமிக்குச் சென்று அவ்விடத்தில் குடியேறப் போகிறார்களே அந்தச் சரித்திரத்தை அல்லோ பலாம் என்பவன் தீர்க்கதரிசனமாய் வசனித்திருக்கிறான்.

8. காண்டாமிருக்த்துக்கு நிகரான பலத்தை உடையவன் ஆயினும் கர்த்தர் அவனை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்தார். அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய சாதிகளைப் பட்சித்து அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி அவர்களைத் தங்கள் அம்புகளால் எய்வார்கள்.

9. அவன் தாடிச் சிங்கம் போலும் யாரும் எழுப்பி விடத் துணியாத பெண்சிங்கம் போலும் படுத்துறங்குவான். உன்னை ஆசீர்வதிப்பவன் ஆசீர்வதிக்கப் படுவான். உன்னைச் சபிப்பவன் தானே சாபத்துக்குள்ளானவனென்று எண்ணப் படுவானே என்றான்.

10. அப்பொழுது பலாக் பலாமின் மேல் மனங் கொதித்தவனாய் கையோடு கையைத் தட்டி: என் சத்துருக்களைச் சபிக்க வேண்டுமென்று நான் உம்மை அழைத்திருச்க, நீர் மூன்று விசையும் அவர்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்தீரே.

11. உம்மிடத்திற்குத் திரும்பிப் போம். உம்மை வெகுவாய் மகிமைப்படுத்தத் தீர்மானித்திருந்தேனே, ஆனால் நீர் அந்தத் தனயோகம் அடையாதபடிக்குக் கர்த்தரே தடுத்தார் என்றான்.

12. அதற்குப் பலாம்: நீர் என்னிடத்தில் அனுப்பின உமது ஸ்தானாபதிகளுக்கு நான் என்ன சொன்னேன்?

13. பலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுக்கினும், என் இஷ்டப்படி நன்மையாவது தின்மையாவது வருவிப்பதற்கு என் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையை மீறி என்னாலே கூடாதென்றும், கர்த்தர் சொல்வதெல்லாத்தையும் சொல்வேனென்றும் நான் சொன்னேனன்றோ?

14. ஆயினும் நான் இதோ என் சனத்தாரிடத்திற்குப் போய்: பிற்காலத்திலே உமது சனங்கள் அந்தச் சனத்தாருக்கு இன்னின்னது செய்யலாம் என்பதைக் குறித்து உமக்குத் தெரிவிப்பேன் என்றான்.

* இதனுடைய அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும்படி பின்வரும் 25-ம் அதி. 1-3 வசனங்களையும், 31-ம் அதி. 16-ம் வசனத்தையும், காட்சியாகமம் 2-ம் அதி. 14-ம் வசனத்தையும் வாசித்தால் விளங்கும். துஷ்டனான பலாம் பசாசினால் ஏவப்பட்டு இஸ்றாயேலியரை மோகபாவத்திலும் மோகபாவத்திலும் அஞ்ஞானத்திலும் விழும்படி செய்ய வேண்டியதைப் பலாக்குக்குச் சொன்னான்.

15. பலாம் மறுபடியும் தீர்க்கத் தரிசனமாய் வசனிக்கத் துடக்கினான். எப்படியெனில்: பேயோரின் குமாரன் பலாம் பேசினானே, எவனுடைய கண் மூடியிருந்ததோ அவன் வசனித்தானே;

16. தேவ வாக்கியங்களையும் கேட்டு உனடனுத்தம (தேவனின்) சத்தியத்தையும் அறிந்து, சர்வ வல்லவரின் தரிசனங்க ளையும் கண்டு தாழே விழுந்து கண்பார்வை பெற்றுக்

17. கொண்ட நான், அவரைக் காண்பேன். ஆனால் இப்போதல்ல; அவரைத் தரிசிப்பேன், ஆனால் சமீபத்திருந்தல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல் இஸ்றாயேலியரிடமிருந்து எழும்பும். அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும். சேத் புத்திரர்களெல்லோரையும் நாசம் பண்ணும்.

* இந்த வசனத்தில் தாவீதிராயன் தானே குறிக்கப் பட்டிருக்கிறான். அவனே மோவாபியரை வென்று தனக்கு அடிமைப்படுத்தினதுமல்லாமல் ஏதோம் நாட்டையும் தன் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினான். ஆயினும் பலாம் இந்தத் தீர்க்கத்தரிசனத்திலே தாவீதையும் தாவீதின் குமாரன் என்னப்பட்ட சேசுகிறீஸ்து நாதரையும் குறித்து வசனித்தான் என்பதற்குச் சந்தேகமில்லை. உள்ளபடி யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரமானது உலக இரட்சகரைக் குறித்தே சொல்லப்பட்டதொழிய வேறொருவரைக் குறித்துச் சொல்லப்பட்டதல்ல. குழந்தை சேசுநாதர் சுவாமியைச் சந்திக்க வந்த மூன்று இராசாக்கள் பலாமின் தீர்க்கத்தரிசனத்தை அறிந்திருந்து தங்கள் தேசத்தை விட்டு எருசலேமுக்கும் பெத்லேமுக்கும் வந்தார்கள்.

18. யதோம் தேசம் அவருக்கு வசமாகும். செயீரின் காணியாட்சி தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும். இஸ்றாயேல் பராக்கிரமஞ் செய்யும். 

19. எவர் இராச்சியபாரம் பண்ணிப் பட்டணத்தின் மீதியானதைப் பாழாக்கினாரோ அவர் யாக்கோபினிடத்திலிருந்து தோன்றுவாராம் என்றான்.

20. மறுபடியும் அமலேக்கைக் கண்டு அவன்: அமலேக் ஜாதிகளில் முதலோன், அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவானென்று தீர்க்கதரிசனம் சொன்னான்.

21. மீளவும் சீனையனையும் கண்டு அவன் தீர்க்கத்தரிசனமாய்: உன் வாசஸ்தலம் அரணிப்பானது. வாஸ்தவம். ஆனால் உன் கூட்டைப் பாறையின் மேல் கட்டியிருந்தாலும்,

22. சீன் சந்ததியில் நீ அதிபனாயிருந்தாலும் எத்தனை நாள் மட்டும் நிலைநிற்பாய்? ஆசூர் உன்னைச் சிறைப்படுத்தப் போகிறானே, என்றான்.

23. மறுபடியும் அவன் வாயைத் திறந்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது ஆர்தான் பிழைப்பான்?

24. இத்தாலி தேசத்திலிருந்து மூன்று வரிசைத் தண்டுகளையுடைய கப்பல்களில் ஏறி வருவார்கள். அசீரியரைத் தோற்கடிப்பார்கள், எபிறேயரைப் பாழாக்குவார்கள், கடைசியில் அவர்களும் அதம் பண்ணப் படுவார்கள் என்றான்.

* இதிலே குறிக்கப் படுகிற இத்தாலியர் ரோமான் சாதியார்தான். பலாமின் காலத்தில் உரோமாபுரி இன்னும் கட்டப் படவில்லை. ஆனால் அவனை ஏவின கடவுளுக்கு எல்லாந் தெரியும்.

25. இதைச் சொல்லி முடித்துப் பலாம் எழுந்து தன் இடத்திற்குத் திரும்பினான். பலாக்கும் தான் வந்த வழியே திரும்பிப் போனான்.