இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 23

சாபத்நாளும் வருஷமும், ஜம்பதாம் வருஷமான ஜூபிலிக்குரிய ஆசாரங்களும்.

1. கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் பரிசுத்த நாட்களாகக் கூறி ஆசரித்து வர வேண்டிய கர்த்தருடைய திருநாட்களாவன:

3. ஆறுநாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் சாபத்தென்னும் ஓய்வுநாளாகையால் பரிசுத்தமுள்ளதென்று சொல்லப்படும். அதிலே ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருடைய சாபத் நாளாயிருக்கும்.

4. மேலும் நீங்கள் குறித்த காலத்திலே பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டிய கர்த்தருடைய ஓய்வு நாட்கள் என்னவெனில்:

5. முதலாம் மாதத்தில் பதினாலாந் தேதி சாயரட்சை வேளையில் கர்த்தருடைய பாசே (அதாவது பாஸ்கா பண்டிகையும்),

6. அம்மாதத்திய பதினைந்தாந் தேதியிலே கர்த்தருடைய புளிப்பில்லா (அப்பப்) பண்டிகையுமாம். (அப்போது) ஏழுநாள் புளிப்பில்லா (அப்பங்களைப்) புசிப்பீர்கள்.

7. முதலாம் நாள் உங்களுக்கு அதி சிறப்பானதும் பரிசுத்தமானதுமாயிருக்கும். அதிலே எவ்வித சாதாரண வேலையுஞ் செய்யாமல்,

8. அவ்வேழுநாளும் கர்த்தருக்குத் தகனப்பலிகளை இடக் கடவீர்கள். ஏழாம் நாளோ அதிசிறப்பானதும் பரிசுத்தமானதுமாயிருக்கும். அதிலே சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாதென்று திருவுளம்பற்றினார்.

9. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

10. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதேதெனில்: நாம் உங்கட்கு அளிக்கவிருக்கிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்து வெள்ளாண்டை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதல் பலனாகிய கதிர்க்கட்டுகளைக் குருவிடத்தில் கொண்டுவரக் கடவீர்கள்.

11. உங்களுக்காக அது அங்கீகரிக்கப் படும் பொருட்டு அவன் சாபத் நாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சமூகத்திலே அந்தக் கதிர்க்கட்டுகளை அசைவாட்டிப் பரிசுத்தமாக்குவான்.

12. அந்தக் கதிர்க்கட்டைப் பிரதிஷ்டையாக்கப் படும் அதே நாளிலே நீங்கள் பழுதற்ற ஒரு வருஷத்திய ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலியிட்டு,

13. அதனோடுகூட எண்ணை தூவிய மெல்லிய மாவில் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கு கர்த்தருக்குச் சுகந்த தூபவாசனையாகவும், திராட்ச இரசத்தின் கின் என்னும் அளவில் நாலிலொரு பங்கு பானப் பலியாகவும் படைக்கக் கடவீர்கள்.

14. உங்கள் தேவனுக்கு மேற்சொல்லிய நவப்பலனை நீங்கள் ஒப்புக்கொடுக்கும் நாள் மட்டும் அப்பத்தையாவது, வாட்டிய மாவையாவது, மாவின் கூழையாவது நீங்கள் புசிப்பீர்களாக. இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் அனுசரிக்க வேண்டிய நித்திய கட்டளை.

15. ஆகையால் நீங்கள் புதுப்பலன்களின் கதிர்க்கட்டை ஒப்புக்கொடுத்த சாபத் மறுநாள் முதற்கொண்டு ஏழு பூரண வாரங்களை எண்ணத் துவக்கி,

16. ஏழாம் வாரம் நிறைவேறின மறுநாள்மட்டும், அதாவது ஜம்பது நாட்களை எண்ணி முடித்துக் கர்த்தருக்குப் புதிதான பலியைச் செலுத்த வேண்டியது எப்படியெனில்:

17. நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கு அளவாகிய புளியேறின மெல்லிய மாவினாலே இரண்டு அப்பங்களைச் சுட்டு உங்கள் எல்லா வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கு நவப்பலனுக்குரிய காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

18. அந்த அப்பங்களோடுகூட பழுதற்ற ஒரு வருஷத்திய ஏழு ஆட்டுக்குட்டிகளையும், மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு இளங்காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் இவைகளுக்கடுத்த பானப் போஜனப் பலிப் பொருட்களையும் கொண்டு வந்து கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள பிரியமான பலியாய்ப் படைக்கக் கடவீர்கள்.

19. இதுவுமன்றி பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் சமாதானப் பலிக்காக ஒரு வருஷத்திய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பலியிடுவீர்கள்.

20. அவைகளைக் குரு கர்த்தர் சமூகத்தில் நவப்பலனின் அப்பங்களோடு அசைவாட்டிய பின்பு அவைகள் அவனுடையவைகளாகும்.

21. நீங்கள் அந்நாளை அதிசிறந்ததும் அதி பரிசுத்தமானதுமென்று கூற வேண்டும். அதி சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள். இது உங்கள் வாசஸ்தலங்கள் தோறும் தலைமுறைகள் தோறும் செல்ல வேண்டிய நித்தியப் பிரமாணமேயாம்.

22. அல்லாமலும் நீங்கள் நிலத்திலுள்ள வெள்ளாண்மையை அறுக்கும்போது அதைத் தரைமட்டமாக அறுக்காமலும், தரையில் சிந்திக் கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும் அவற்றை ஏழைகளுக்கும் பரதேசிகளுக்கும் விட்டுவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே (என்றருளினார்.)

23. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

24. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதாவது: ஏழாம் மாதத்தின் முதலாந் தேதியிலே சாபத் ஞாபகக் குறியான பண்டிகை எக்காளச் சத்தத்தினாலே கொண்டாடப் படும். அது பரிசுத்த நாளென்று கூறப்படும்.

25. அதிலே எந்தச் சாதாரண வேலையையும் செய்யாமல் கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப்பலியைச் செலுத்தக் கடவீர்கள் என்றார்.

26. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

27. அவ்வேழாம் மாதத்தின் பத்தாந் தேதியிலே பிராயச்சித்தம் செய்யும் பண்டிகை; அது மகா சிறந்த நாள், பரிசுத்த நாளென்று கூறப்படும். அந்த நாளிலே உங்கள் ஆத்துமங்களைத் தாழ்மைப்படுத்தி கர்த்தருக்குத் தகனப்பலி செலுத்துவீர்கள்.

28. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சகாயமாயிருக்கும்படி அது கிருபாகடாட்ச நாளாயிருப்பதினாலே அதில் யாதொரு சாதாரண வேலையும் செய்ய வேண்டாம்.

29. அந்நாளிலே தன்னை ஒறுத்தலை செய்யாதவன் எவனோ அவன் தன் சனத்திலிராதபடிக்கு அறுப்புண்டு போவான்.

30. அந்நாளிலே யாதொருவேலை எவன் செய்திருப்பானோ நாம் அவனைத் தன் சனத்திலிராதபடிக்கு அழிப்போம்.

31. ஆகையால் நீங்கள் அன்று எந்த வேலையும் செய்யாதிருப்பீர்களாக. இது உங்கள் தலைமுறைகள் தோறும் உங்கள் வாசஸ்தலங்கள் தோறும் உங்களுக்கு நித்திய கட்டளையாம்.

32. அது ஓய்வு சாபத் நாள்தானே, மாதத்தின் ஒன்பதாந் தேதி (துவக்கி) உங்கள் ஆத்துமாக்களை ஒறுத்துப் போடுங்கள். உங்கள் சாபத் நாட்களை மாலையாதி மாலை மட்டுமாகக் கொண்டாடக் கடவீர்கள் என்றருளினார்.

33. மீண்டுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

34. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதாவது: இந்த ஏழாம் மாதத்துப் பதினைந்தாந் தேதிமுதல் ஏழு நாளளவும் கர்த்தருக்குத் தோத்திரமாகக் கூடாரங்களில் பண்டிகை கொண்டாடக் கடவீர்கள்.

35. முதலாம் நாள் மிகவும் பிரதானமும் அதிபரிசுத்தமுமாக எண்ணப்படும். அன்று எந்த வேலையும் செய்யாதிருப்பீர்கள்.

36. அன்றியும் ஏழுநாள் வரையில் கர்த்தருக்குத் தகனப் பலிகளை ஒப்புக் கொடுப்பீர்கள். எட்டாம் நாளும் மிகப் பிரதானமும் அதிபரிசுத்தமுமாகையால் கர்த்தருக்குத் தகனப்பலியை ஒப்புக்கொடுப்பீர்கள். ஏனெனில் அன்று சபையும் கூட்டமும் இருக்கும். அன்றைக்கு யாதொரு சாதாரண வேலையையும் செய்யலாகாது.

37. இவைகளே கர்த்தருடைய திருநாட்கள். அவைகளை நீங்கள் மிகவும் சிறந்ததென்றும் அதிபரிசுத்தமானதென்றும் பாவித்து, அவைகளின் ஒவ்வொரு நாளுக்குரிய ஆசாரப்படி கர்த்தருக்குக் காணிக்கை, தகனப் பலி, பான போஜனப் பலி முதலியவற்றைச் செலுத்தக் கடவீர்கள்.

38. இதுவுந் தவிரக் கர்த்தருடைய சாதாரண சாபத் நாட்களில் நீங்கள் வழக்கத்தின்படி செலுத்தி வருகிற மற்றுமுள்ள காணிக்கை பொருத்தனை உற்சாகப் பலிகளையும் மாமூல் பிரகாரம் (நடத்தி வருவீர்கள்.)

39.  ஆகையால் நிலத்தின் சமஸ்த பலன்களையும் நீங்கள் சேர்த்து வைத்த பிற்பாடு ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் ஆண்டவருடைய திருநாட்களை ஆசரிக்கக் கடவீர்கள். அந்தப் பண்டிகையின் முதலாந் தினமும் எட்டாந் தினமும் உங்களுக்கு சாபத் அல்லது ஓய்வு நாளாயிருக்கும்.

40. முதல் நாளிலே அதியலங்காரமான மரங்களின் கனிகளையும், பேரீச்சங் குருத்துகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கொம்புகளையும் நீரோடையருகிலுள்ள சாலிஸ் என்னும் தருக்களின் தழைகளையும் கொண்டு வந்து நாட்டி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே மகிழ்வீர்கள்.

41. வருஷாவருஷம் ஏழுநாள் அந்தப் பண்டிகையை ஆசரிக்கக் கடவீர்கள். இது உங்கள் தலைமுறைதோறும் செய்ய வேண்டிய நித்திய கட்டளை. ஏழாம் மாதத்திலே அந்தத் திருநாட்களைக் கொண்டாட வேண்டும்.

42. ஏழுநாள் தழைப்பந்தல்களில் குடியிருப்பீர்கள். இஸ்றாயேல் சந்ததியைச் சேர்ந்த எவனும் கூடாரங்களில் வாசம் பண்ண வேண்டும்.

43. இதைக் கொண்டு உங்கள் சந்ததியார் (கர்த்தராகிய) நாம் இஸ்றாயேல் புத்திரரை எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினபோது அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச் செய்தோமென்று அறிந்து கொள்வார்கள். நாம் உங்கள் தேவனாகிய கர்த்தரே என்றருளினார்.

44. அப்படியே மோயீசன் கர்த்தருடைய திருநாட்களைக் குறித்து இஸ்றாயேல் புத்திரருக்குப் பேசித் தெரிவித்தான்.