இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 23

பலாம் இஸ்றாயேலியரைச் சபிக்கக் கருதி அவர்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்தது.

1. அப்போது பலாம் பலாக்கை நோக்கி: நீர் இங்கே ஏழு பீடங்களைக் கட்டிக் கொண்டு ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு முஸ்திப்புப் படுத்தும் என்றான்.

2. பலாம் சொன்னபடியே அவன் செய்தான். ஒவ்வொரு பீடத்தின் மேல் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் வைத்தார்கள்.

3. அப்பொழுது பலாம் பலாக்கை நோக்கி: ஒருவேளை கர்த்தர் என்னைச் சந்திக்க வருவாரோவென்று நான் போய் அறந்து அவர் கற்பித்திருப்பதெல்லாம் உமக்குச் சொல்லுவேன். அதற்குள்ளே நீர் சற்று நேரம் உமது தகனப்பலியண்டையில் நிற்கக் கடவீர் என்று சொல்லி,

4. சீக்கிரமாய் விலகிப் போன மாத்திரத்தில் தேவன் அவனுக்கெதிரில் வந்து நின்றார். பலாம் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் பண்ணி ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு இளங்காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல,

5. கர்த்தர் அவனுடைய வாயிலே ஒரு வார்த்தை வைத்தருளி: நீ பலாக்கினிடத்தில் திரும்பிப் போய் இதனைச் சொல்லக் கடவாய் என்றனுப்பினார்.

* பலாம் சர்வத்துக்குங் கர்த்தாவாகிய சர்வேசுரனுக்குத் தானே ஏழு பலிபீடங்களைக் கட்டி ஸ்தாபித்திருந்தான்; அவருக்கு அநேக பலிகளை ஒப்புக் கொடுத்ததாலே சிலவேளை தன் துஷ்டக் கருத்துக்குக் கர்த்தர் இசைவாராக்கும் என்று மனதிலே நினைத்தானோ என்னமோ?

6. பலாம் திரும்பிப் போய்ப் பார்த்த போது பலாக் மோவாபியரின் சகல பிரபுக்களோடு கூடத் தன் தகனப் பலியண்டையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,

7. தன் மறைப்பொருளை உரைக்கத் துடங்கி: மோவாபியரின் அரசனாகிய பலாக் என்னை அராமினின்றுங் கீழ்த்திசை மலைகளினின்றும் வரவழைத்து: நீ வந்து யாக்கோபைச் சபிக்கவும் இஸ்றாயேலியரை வெறுத்து விடவும் வேண்டுமென்றான.

8. கடவுள் எவனைச் சபிக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படிச் சபிக்கக் கூடும்? ஆண்டவர் எவனை வெறுக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி வெறுத்து விடக் கூடும்?

9. பாறையுச்சிகளிலிருந்து நான் அவனைக் காண்பேன். குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்ப்பேன். அந்தப் பிரசையானது தனிவாசம் பண்ணி மற்றுமுள்ள சாதிகளோடு கலவாமலிருக்கும்.

10. தூசிப்பெருக்கம் போன்ற யாக்கோபின் (சந்ததியை) எண்ணத் தக்கவன் யார்? இஸ்றாயேலரின் வம்சங்களைக் கணக்கிடத் தக்கவனார்? ஆ! நீதிமான்களின் மரணத்திற்கு என் மரணமே சரியொத்ததாகக் கடவது! என் இறுதி அவர்கள் இறுதி போலாகக் கடவது என்று சொல்லக் கேட்டு,

11. பலாக் (அரசன்) பலாமை நோக்கி: நீர் என்ன செய்கிறீர்? என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை வரச் சொன்னேன். நீரோ அவர்களை ஆசீர்வதிக்கிறீரேயென,

12. அவன்: கர்த்தர் கற்பித்ததையன்றி நான் வேறாக உரைப்பதாகுமோ? என்று பிரதிகூற,

13. பலாக்: நீர் அவர்களைப் பார்க்கத் தக்க வேறோரிடத்திற்கு என்னுடன் வாரும். அங்கே இஸ்றாயேலியர் எல்லோரையும் பாராமல் அவர்களுடைய ஒரு பாகத்தை மாத்திரம் காணப் பெறுவீர். அவ்விடத்திலிருந்து அவர்களைச் சபிக்க வேண்டுமென்று சொல்லி,

14. பலாக் அவனை உயர்ந்த ஸ்தலமாகிய பஸ்கா மலை கொடுமுடியில் கூட்டிக் கொண்டு போயிருக்க, பலாம் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் வைத்தான்.

15. பிறகு பலாக்கை நோக்கி: நீர் இங்கே உம்முடைய தகனப்பலியண்டையில் நில்லும். நான் போய் கர்த்தரைச் சந்தித்து வருவேன் என்றான்.

16. கர்த்தர் பலாமைச் சந்தித்து அவன் வாயில் ஒரு வார்த்தை வைத்தருளி: பலாக்கிடத்தில் திரும்பிப்போய் அவனுக்கு இந்த வார்த்தையைச் சொல்லுவாயென்று அனுப்பினார்.

17. அவன் திரும்பி வந்து பார்த்தான். பலாக்கும் அவனோடிருந்த மோவாபியரின் பிரபுக்களும் தகனப்பலி யண்டையில் நின்று கொண்டிருந்தார்கள். பலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று வினவ,

18. பலாம் மறைபொருளை வசனித்து, பலாக்கே எழுந்திரும். சேப்போரி;ன புத்திரனே நன்றாய்க் கேளும்.

19. கடவுள் மனிதனைப் போல் பொய் சொல்பவருமல்ல, மனுப்புத்திரனைப் போல மாறுபடுகிறவருமல்ல. அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரோ? பேசியதை நிறைவேற்றாதிருப்பாரோ என்ன?

20. ஆசீர்வதிக்கக் கொண்டு வரப் பட்டேன். அந்த ஆசீர்வாதத்தைத் திருப்ப என்னாலே கூடாது.

21. யாக்கோபிலே பொய்த் தேவர்களின் மூர்த்திகளுமில்லை; இஸ்றாயேலரில் விக்கிரகங்களுமில்லை. அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடுயிருக்கிறார். இராசாவின் ஜெய ஆர்ப்பரிப்பு அவனுக்குள்ளே இருக்கிறது.

22. தேவன் அவனை எஜிப்த்திலிருந்து புறப்படச் செய்தார். அவனது பலமோ காண்டாமிருகத்தின் பலத்தைப் போம்.

23. யாக்கோபில் மந்திரவாதிகளுமில்லை. இஸ்றாயேலில் குறிசொல்பவருமில்லை. யாக்கோபிடத்திலும் இஸ்றாயேலியரிடத்திலும் தேவன் இன்னின்ன வர்த்தமானங்களைச் செய்தாரென்று மேலைக்குச் சொல்லப் படும்.

24. இதோ ஜனம் பெட்டைச் சிங்கமென மேலெழும்பும். தாடிச் சிங்கமென நிமிர்ந்து நிற்கும். தான் பிடித்த இரையைப் பட்சித்து வெட்டுண்டவர்களின் செந்நீரைக் குடிக்குமட்டும் அது படுத்துக்கொள்ள மாட்டபதென்று சொன்னான்.

25. பலாக் (அரசன்) பலாமை நோக்கி: அவர்களை நீ சபிக்கவும் வேண்டாம். ஆசீர்வதிக்கவும் வேண்டாமென,

26. அவன்: கடவுள் எனக்குக் கற்பித்திருப்பதெல்லாம் நான் செய்வேன், என்று உமக்குச் சொல்லிக் கொண்டேனன்றோ? என,

27. பாலாக் அவனை நோக்கி: வேறோரிடத்திற்கு உம்மைக் கூட்டிக் கொண்டு போகிறேன் வாரும். ஒருவேளை அங்கேயாவது நீர் அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,

28. வனாந்தரத்திற் கெதிராயிருக்கிற போகோர் மலையின் கொடுமுடியின் மேல் அவனைக் கூட்டிக் கொண்டு போயிருக்க,

29. பலாம்: எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம் பண்ணுவீர் என்று சொன்னான்.

30.பலாம் சொன்னபடி பலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் வைத்தான்.