இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 22

இஸ்றாயேலியர் மோபியருடைய தேசத்திலே பாளையம் இறங்கினதும்--அவர்களுடைய இராசாவாகிய பலாக் என்பவன் பலாமென்னும் குறிகாரனை அழைப்பித்ததும்--ஒரு கழுதை பலாமைத் தடுத்ததும்--பலாக் அவனை உபசரித்ததும்.

1. அதன்பிறகு இஸ்றாயேலியர் பிரயாணம் பண்ணி யோர்தான் நதிக்கு அக்கரையிலுள்ள ஜெரிக்கோ பட்டணங் கட்டியிருக்கிற மோவாப் மைதானங்களில் பாளையம் இறங்கினார்கள்.

2. சேப்போரின் குமாரனான பலாக்கென்பவன் இஸ்றாயேலியர் அமோறையருக்குச் செய்த யாவையும் கேள்விப்பட்டு,

3. பயத்தினால் சித்தங் கலங்கிய மோவாபியர் அவர்களுக்கு ஆற்ற மாட்டாமல் பின்னடைவார்கள் என்று கண்டு,

4. மதியானரின் மூப்பரை நோக்கி: மாடானது வேர்மட்டும் புல்லை மேய்கிறது போல இஸ்றாயேலியர் நமது எல்லைகளுக்குள்ளே வசித்திருக்கிற யாவரையும் பட்சித்துப் போடுவார்கள். அக்காலத்தில் மோவாபிலே அரசனாயிருந்தவன் இந்தப் பலாக்தான்.

5. அவன் என்ன செய்தானெனில் அம்மோனியர் தேசத்திலோடும் நதியருகே குறிசொல்பவனான பேயோரின் குமாரனாகிய பலாமென்றொருவன் இருந்தான். அவனை அழைத்துவரும்படி பலாக் ஸ்தானாபதிகளை அனுப்பி: எஜிப்த்திலிருந்து ஒரு சனக் கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் தேசமெங்கும் பரவி எனக்கெதிரே பாளையமிறங்கினார்கள்.

6. அவர்கள் என்னிலும் வலியர், எப்படியாவது நான் அவர்களை முறிய அடித்து நாட்டினின்று துரத்தும்படியாய் நீர் இங்கு வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். ஏனெனில் நீர் எவர்களை ஆசீர்வதிக்கிறீரோ அவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் என்றும், எவர்களைச் சபித்தீரோ அவர்கள் சபிக்கப் பட்டவர்களென்றும் எனக்குத் தெரியும் என்று சொல்லச் சொன்னான்.

7. அவ்வாறு மோவாபின் பெரியோர்களும் மதியான் மூப்பர்களும் குறிசொல்வதற்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பிரயாணமானார்கள். அவர்கள் பலாமிடத்தில் போய்ச் சேர்ந்து பலாக்கின் வார்த்தைகளைச் சொல்லிய பின்பு,

8. அவன் அவர்களை நோககி: நீங்கள் இராத்திரிக்கு இங்கே தங்குங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்வதெல்லாம் உங்களுக்கு அறிவிப்பேன் என்றான். அவர்கள் பலாமிடத்தில் தங்கிக் கொண்டிருக்கையிலே கர்த்தர் வந்து அவனை நோக்கி:

9. உன்னிடத்திலிருக்கிற அந்த மனிதர்கள் என்னத்திற்கு வந்தார்கள்? என்று வினவ,

10. அவன்: சேப்போரின் குமாரனான பலாக்கென்னும் மோவாபியருடைய இராசா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:

11. தேசமெங்கும் பரம்பிய ஒரு சனக்கூட்டம் எஜிப்த்திலிருந்து வந்திருக்கிறது. ஆகையால் நீ வந்து அவர்களைச் சபிக்க வேண்டும். சபித்தால் நான் எப்படியாவது அவர்களோடு யுத்தம்பண்ணி ஒருவேளை அவர்களைத் துரத்தி விடலாமென்று சொல்லச் சொன்னான் என்றான்.

12. தேவன் பலாமை நோக்கி: நீ அவர்களோடு போகாதே! அந்தச் சனக்கூட்டத்தையும் நீ சபிக்க வேண்டாம். அது ஆசீர்வதிக்கப் பட்ட சனமே என்றருளினார்.

* இந்தப் பலாமென்பவன் சத்திய கடவுளை அறிந்தவனோவென்றும், மெய்யான தீர்க்கத்தரிசியோவென்றும் வேதபண்டிதர் பரீட்சிக்கையிலேபலர் அவனை அக்கியானியென்றும் குறிசொல்பவன் மாத்திரமென்றும் சொல்லியும் வேறநேகர் அதற்கு விபரீதமாய்ப் பேசுகிறார்கள். வேறு சிலர்: அவன்மெய்யானதேவனை அறிந்தது வாஸ்தவமென்றும், ஆனால்தன்னைச் சுற்றிலும் அஞ்ஞானிகளுக்குச் சனுவாக அவன் அடிக்கடி பேசி சாதாரண நிமித்திகனைப் போல் லஞ்சம் வாங்கிச் சீவனம் பண்ணிவந்தானென்றும் உத்தேசிக்கின்றார்கள். அர்ச். இராயப்பர் (2-ம் நிரூபம் 2-ம் அதி. 16-ம் வசனம்.) பலாமைத் தீர்க்கத்தரிசியென்று கூப்பிடுகிறார்.

13. பலாம் காலையிலெழுந்து: கர்த்தர் உங்களோடு போக வேண்டாமென்று விலக்கம் பண்ணினார். ஆதலால் நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்வரலாமென்று சொன்னான்.

14. பிரபுக்கள் திரும்பிப் பலாக் இடத்துக்குப் போய்: பலாம் எங்களோடு வரமாட்டேனென்று சொன்னான் என்றார்கள்.

15. பலாக் அவர்களைப் பார்க்கிலும் அதிகமானதும் அதிக உயர்குலமானதுமான பிரபுக்களை மறுபடியும் (அனுப்பினான்).

16. இவர்கள் பலாமிடத்தில் போய்: சேப்போரின் குமாரனாகிய பலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடை செய்ய வேண்டாம்.

17. உம்மைக் கனப்படுத்தவும், நீர் கேட்கிறதெல்லாங் கொடுக்கவும் முஸ்திப்பாயிருக்கிறேன். வாரும். அந்தச் சனத்தைச் சபியும் என்று உம்மிடத்தில் சொல்லக் கற்பித்தான் என்றார்கள்.

18. பலாம் அவர்களைப் பார்த்து: பலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியையும் பொன்னையும் தந்தாலும் நான் தேவனாகிய கர்த்தர் சொல்லியதற்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சொல்லி அவருடைய வாக்கியத்தைப் புரட்ட என்னால் கூடாது.

19. ஆயினும் கர்த்தர் மறுபடியும் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்பொருட்டு நீங்கள் இந்த இராத்திரியிலும் இங்கே தங்க வேண்டுமென்று உங்களை மெத்தவும் மன்றாடுகிறேன் என்றான்.

20. இரவிலே தேவன் பலாமிடத்தில் வந்து: இந்த மனிதர்கள் உன்னை அழைக்க வந்தார்களாதலால் நீ எழுந்து அவர்களுடன் போனாலும் போகலாம். ஆனால் நாம் உனக்குக் கற்பித்தபடி மாத்திரஞ் செய்வாய் என்றுரைத்தார்.

21. பலாம் காலையிலெழுந்து தன் கோளிகைக் கழுதைக்குச் சேணங்கட்டி அவர்களுடன் புறப்பட்டுப் போனான்.

22. அவன் போனதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது. ஆண்டவருடைய தூதனானவர் பலாமுக்கு எதிரேவந்து வழியிலே நின்று கொண்டிருந்தார். பலாமோ தன் கழுதை மேல் உட்கார்ந்திருந்தான். அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் சகிதமாக நடந்து வந்தார்கள்.

23. கழுதையானது வாளையுருவிப் பாதையில் நின்றுகொண்டிருந்த தேவதூதனைக் கண்டு வழியை விட்டு வயலிலே விலகிப் போயிற்று. பலாம் அதை அடித்துப் பாதையிலே திருப்பப் பார்த்தான்.

24. (அங்கே) மதில்களால் சூழப்பட்ட திராட்சத் தோட்டங்கள் இருந்தன. தேவதூதன் அந்த இரு சுவர்களின் இடுக்கிலே நின்றுகொண்டனர்.

25. கோளிகைக் கழுதை அவரைக் கண்டு சுவரோரமாய் ஒதுங்கிப் பலாமுடைய காலைச் சுவரோடு நெருக்கி நசுக்கிப் போட்டது. அவனோ அதைத் திருப்பவும் அடித்தான்.

26. அப்பொழுது தூதனானவர் வலது புறம் இடது புறம் விலக இடமில்லாத இடுக்கமான ஸ்தலத்திலே ஒதுங்கி நின்னர்.

27. கழுதை நின்று கொண்டிருந்த தூதனை நோக்கிவே தன் மேல் உட்கார்ந்தவனுடைய கால்களின் கீழ் படுத்துக் கொண்டது. பலாம் சினங்கொண்டு கழுதையை மேன்மேலும் தடியால் அடிக்க,

28. கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பலாமைப் பார்த்து: நீர் என்னை ஏன் அடிக்கிறீர்? மூன்று விசையும் அடித்தீரே, நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

* இந்தப் புதுமையைக் குறித்து அர்ச். இராயப்பர் எழுதியதாவது (2-ம் நிரூபம், 2-ம் அதி. 15,16-ம் வச.): சிலர் செம்மையான வழியைவிட்டுத் தவறி அக்கிரமத்தின் சம்பளத்தை விரும்பின பேயோரின்குமாரர் பலாமுடைய நெறியைப் பின்பற்றி நடக்கிறார்கள். அவன்அநீதத்தின் கூலியை விரும்பினதினாலே தன்னுடைய பேராசையின் நிமித்தம் கடிந்துகொள்ளப் பட்டான்.கீழ்ப்பட வேண்டிய மிருகமும், பேசாத சீவ செந்துமாகிய (அந்தக் கழுதை) மனிதர் பேச்சைப் பேசித் தீர்க்கத்தரிசியினுடைய மதிகேட்டை மறுத்துத் தடுத்ததே என்றவாறு.

29. பலாம்: என்னைப் பரியாசம் பண்ணிக் கொண்டதினால் நீ அடிக்குப் பாத்திரமாயிருக்கிறாய். என் கையில் ஒரு பட்டயமிருந்தாலோ உன்னைக் கொன்று போடுவேன் என்றான்.

30. கோளிகைக் கழுதை: என்னைக் கொண்ட நாள் முதல் இந்நாள் வரைக்கும் நீர் ஏறின கழுதை நான்தான் அல்லவா? இப்படி உமக்கு நான் துடுக்குப் பண்ணினதுண்டோவென்று கேட்க, பலாம் இல்லையென்றான்.

31. அந்நேரத்திலே கர்த்தர் பலாமுடைய கண்களைத் திறந்தார். அவன் வாளுருவிப் பாதையில் நின்று கொண்டிருந்த தேவதூதனைக் கண்டு குப்புற விழுந்து அவரை நமஸ்கரித்தான்.

32. தேவதூதன் அவனைநோக்கி: உன் கோளிகைக் கழுதையை நீ முன்றுதரம் அடிப்பானேன்? உன் நடபடி கெட்டது. அது எனக்கு மாறுபாடாயிருக்கிறதினாலே நான் உனக்கு எதிரியாக வந்து நிற்கிறேன்.

33. உன் கோளிகைக் கழுதை விலகி எனக்கிடங் கொடுக்காதிருந்ததாகில், உன்னைக் கொன்றுபோட்டு அதை உயிரோடு வைத்து விட்டிருப்பேன் என,

34. பலாம்: நான் பாவம் செய்தேன். வழியிலே நீர் எனக்கு எதிராக நின்று கொண்டீரென்று அறியாதிருந்தேனே. இப்பொழுது நான் வழிபோகிறது உமக்கொவ்வாதே போனால் இதோ திரும்பிப் போகிறேன் என்று கூற,

35. தேவதூதன் அவனை நோக்கி:நீ இவர்களோடு போ. ஆனால் நான் உனக்குக் கற்பிக்கிற வார்த்தையன்றி நீ வேறு வார்த்தை சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். அப்படியே (பலாம்) பிரபுக்களோடு கூடப் போனான்.

36. பலாம் வருகிறதைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் பலாக்கென்னும் (அரசன்) அர்னோன் (நதியின்) கடைசி எல்லையிலுள்ள மோவாபியரின் ஒரு பட்டணம் வரைக்கும் அவனுக்கு எதிர்கொண்டு போய்,

37. பலாமை நோக்கி: நான் ஸ்தானாபதிகளை உம்மை அழைக்கும்படி அனுப்பியிருந்தேனே, நீர் என்னிடத்திற்கு ஏன் சீக்கிரமாய் வரவில்லை? தகுந்த சம்பாவனை உமக்குக் கொடுக்க என்னாலாகாதென்று நினைத்துத்தானோ அப்படிச் செய்தீரென்று வினவ,

38. பலாம்: இதோ வந்தேன்! தேவன் என் வாயிலே வைக்கும் வார்த்தையன்றி வேறு வார்த்தை சொல்ல என்னால் ஆகுமோ என்று பிரதி கூறினான்.

39. ஆகையால் அவர்கள் இருவரும் கூடிப்போய் (பலாக்குடைய) இராச்சியத்தைச் சேர்ந்த கடைசி எல்லையிள்ள ஒரு பட்டணத்தில் சேர்ந்தார்கள்.

40. அங்கே பலாக் ஆடுமாடுகளையும் அடித்துப் பலாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் ஈகைகளையும் அனுப்பினான்.

41. மறுநாள் காலமே பலாக் (அரசன்) பலாமையழைத்து, பாவாலின் மேடுகளின் மேல் அவனைக் கூட்டிக்கொண்டு போனான். அங்கிருந்து பலாம் இஸ்றாயேலியருடைய கடைசிப் பாளையத்தைக் கண்டான்.