இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 21

இஸ்றாயேலியர் கானானியரைச் செயித்ததும்--சனங்கள் மீண்டும் முறுமுறுத்துப் பேசியதும்--வெண்கலச் சர்ப்பம் ஊற்றி ஏற்றப்பட்டதும்-சேகோனும் ஓகும் வெட்டப் பட்டதும்.

1. தெற்கில் வசித்துக் கொண்டிருந்த கானானிய இராயனாகிய ஆராத் என்பவன், இஸ்றாயேல் வேவுக்காரரென்னப்பட்டவர்கள் வழியே வந்திருப்பதைக் கேள்விப்பட்ட போது அவன் அவர்களோடு போராடிச் சூறையாடி வெற்றி பெற்றான்.

2. இஸ்றாயேலரோவெனில் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்தச் சனங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுத்தால் அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிவிடுவோமென்று பொருத்தனை செய்திருக்க,

3, கர்த்தர் இஸ்றாயேலரின் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளிக் கானானையரை அவனுடைய கையிலே கொடுத்தார். அப்பொழுது இஸ்றாயேலியர் அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் நாசம் பண்ணி, அவ்விடத்திற்கு ஒர்மா, அதாவது: சபிக்கப் பட்ட ஊரென்று பெயரையிட்டார்கள்.

4. பின்னும் இஸ்றாயேலியர்கள் ஓரென்ற மலையிலிருந்து புறப்பட்டு ஏதோம் தேசத்தைச் சுற்றிப் போகத் தக்கதாக செங்கடலின் வழியாகப் பிரயாணம் பண்ணினார்கள். வழியின் கஷ்டத்தினாலே ஜனங்களுக்கு மனம் சலிக்கத் துடங்கி:

5. அவர்கள் தேவனுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எஜிப்த்திலிருந்து வரப் பண்ணினதென்ன? நாங்கள் வனாந்தரத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு அரோசிகமாயிருக்கிறதென்றார்கள்.

6. அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அவர்களுக்குள்ளே அனுப்பினார். அநேகர் கடியுண்டு சாகையில்,

7. சனங்கள் மோயீசனிடத்திற்குப் போய்: நாங்கள் தேவனுக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவிகளானோம். சர்ப்பங்கள் எங்களை விட்டு நீங்கும் படி மன்றாட வேண்டும் என்றார்கள். மோயீசன் பிரஜைக்காகப் பிரார்த்தித்திருக்க,

8. கர்த்தர் அவனை நோக்கி: வெண்கலத்தால் ஒரு சர்ப்பத்தின் ரூபத்தைச் செய்து அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடியுண்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்று திருவுளம்பற்றினார்.

9. இவ்வாறு மோயீசன் வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின்மேல் கட்டித் தூக்கக் கடியுண்ட பேர்கள் அதைப் பார்த்து சொஸ்தமானார்கள்.

* ஞானமென்கிற ஆகமத்தில் வசனிக்கப் பட்டதென்னவென்றால்: சுவாமீ! அவர்கள் அந்தச் சர்ப்பத்தினால் அல்லவே; சமஸ்தருக்கும் இரட்சணியமாகிய தேவரீர் ஒருவராலேயே அவர்கள் சொஸ்தமானார்கள் (16:7). ஏனென்றால் அந்தச் சர்ப்பமானது சிலுவையில் அறையப்பட்ட சேசுநாதருக்குப் பாவனையுங் குறிப்புமாக இருந்தது. அதற்குத் திருஷ்டாந்தம்: அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில். சேசுநாதர் சுவாமி திருவுளம்பற்றினதாவது: சர்ப்பம் மோயீசனாலே வனாந்தரத்திலே உயர்த்தப் பட்டது போல மனுஷ குமாரனும் தம்மை விசுவசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவியத்தை அடையும்படிக்கு (சிலுவையிலே) உயர்த்தப் பட வேண்டும் (அருள. 3:14).

10. பின்பு இஸ்றாயேல் புத்திரர் புறப்பட்டுப் போய் ஒபோத்திற் பாளையமிறங்கினார்கள்.

11. அங்கேயிருந்து பிரயாணம் பண்ணி கீழ்த்திசைக்கு நேராய் மோவாபுக்கு எதிரிலிருக்கிற வனாந்தரத்திள்ள ஜெயபாரிம் என்னும் ஸ்தலத்திலே பாளையமிறங்கினார்கள்.

12. அங்கேயிருந்து ஜாரேத் என்னும் ஓடையருகில் போய்ச் சேர்ந்தார்கள்.

13. ஜாரேதை விட்டு அர்னோன் (என்னும் ஆற்றுக்கு) இப்புறம் பாளையமிறங்கினார்கள். அது வனாந்தரத்திலே அமோறையர் எல்லையை அண்டிக் கொண்டு மோவாப் தேசத்துக்கு எல்லையாகவும் இருக்கிறது. உள்ளபடி அது மோவாப்பித்தாருக்கும், அமோறையருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.

14. ஆதலால் கர்த்தருடைய யுத்தங்கள் என்னும் புத்தகத்திலே எழுதியிருக்கிறதாவது: ஆண்டவர் செங்கடலில் எப்படிச் செய்தாரோ அப்படியே அர்னோன் ஆற்றிலும் செய்வாரே.

15. ஆர் என்னும் ஸ்தலத்திலே இளைப்பாறத் தக்கதாகவும், மோவாபித்தாருடைய எல்லைகளில் விழத் தக்கதாகவும் வெள்ளங்களின் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.

16. இஸ்றாயேலியர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில் ஒரு கிணறு கண்டடைந்தார்கள். அதைக் குறித்துத்தான் கர்த்தர் மோயீசனை நோக்கி: ஜனங்களைக் கூடிவரச் செய். அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.

17, 18. அப்பொழுது இஸ்றாயேலியர் எல்லோரும் கூடி ஒரே குரலாய் இராகமெடுத்து: கிணற்றுப் புனலே, பொங்கிவா! ஓ கிணறே! சட்டநிருபனான (கர்த்தர்) ஏவுதலால் அதிபதிகள் உன்னைத் தோண்டினர். சனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக் கொண்டு தோண்டினர் என்று பாட்டுப் பாடினார்கள். இஸ்றாயேலியர் வனாந்தரத்தை விட்டு மத்தனாவென்கிற ஸ்தலத்திற்கு;,

19. மத்தனாவிலிருந்து நகலியேலுக்கும், சகலியேலிலிருந்து பாமோட்டுக்கும் (வந்தார்கள்.)

20. பாமோட்டுக்கு அந்தண்டை மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதனருகே வனாந்தரத்திற்கெதிரே பஸ்காவென்று ஒரு மலையுமுண்டு. 

21. அங்கிருந்து இஸ்றாயேலியர் அமோறையரின் இராயனாகிய செகோனிடத்தில் தூதரை அனுப்பி,

22. உமது நாட்டின் வழியாய்க் கடந்து போக உத்தரவு கொடுக்க வேண்டும். நாங்கள் வயல்வெளிகளிலும் திராட்ச தோட்டங்களிலும் போகாமலே, உமதெல்லையைக் கடந்து போகுமட்டும் இராசபாçயில் செல்லுவோம் என்று சொல்லச் சொன்னான்.

23. செகோன் தன் எல்லை வழியாய்க் கடந்து போக இஸ்றாயேலியருக்கு உத்திரவு கொடாமல் படை எடுத்து வனாந்தரத்தில் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்து யுத்தம் பண்ணினான்.

24. ஆனால் இஸ்றாயேலியர் அவனைக் கருக்கான பட்டயத்தால் வெட்டி, அர்னோன் துடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்துக்கடுத்த செபோக் நாடு வரையிலுமே அவன் பூமியைக் கட்டிக் கொண்டார்கள். அம்மோனியரின் எல்லைகள் அரணிப்பாயிருந்தமையால் (அவர்கள் செபோக் என்னும் ஊருக்கப்பால் போகவில்லை.)

25. ஆகையால் இஸ்றாயேலியர் சேகோனின் பட்டணங்களையெல்லாம் பிடித்துக் கொண்டு அமோறையருடைய நகரங்களாகிய ஏசெபோனிலும் அதின் சுற்றுப்புறங்களிலும் குடியேற்றமாயினர்.

26. ஏசெபோன் செகோனுடைய நகரமாயிருந்தது. இவன் மோவாபின் அரசனோடு யுத்தம்பண்ணி அர்னோன் வரையிலும் இருந்த அவன் இராச்சியத்தையெல்லாம் கட்டிக்கொண்டிருந்தான்.

27. ஆனது பற்றி: ஏசெபோனுக்கு வாருங்கள், செகோனின் நகர் கட்டி ஸ்தாபிக்கப் படுவதாக!

28. ஏசெபோனிலிருந்து அக்கினியும், செகோனிலிருந்து சுவாலையும் புறப்பட்டு மோவாபியருடைய அர்னோன் என்னும் நகரத்தையும் அர்னோனுடைய மலைகளிலுள்ள வாசிகளையும் பட்சித்தது.

29. மோவாபே! உனக்குக் கேடாம்! காமோஸ் சனமே, நீ மடிந்தாய்! காமோஸ் தன்குமாரரை முதுகு காட்டி ஓடச்சொல்லித் தன் குமாரத்திகளை அமோறையரின் அரசனாகிய செகோனுக்கு ஒப்புக் கொடுத்தானே.

30. ஏசெபோன் துடங்கித் திபோன் வரைக்கும் அவர்களுடைய கடுங்கோன்மை நாசமாகி விட்டது. அவர்கள் ஓட்டம் பிடித்துக் களைத்ததினாலே நொப்பே நகரத்திலும் மெதபா பட்டணத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப் படும்.

31. அது கிடக்க, இஸ்றாயேலியர் ஆமோறையரின் நாட்டில் குடியிருந்தார்கள்.

32. மோயீசன் யாசேரைப் பரிசோதிக்க வேவுகாரரை அனுப்பினான். பிறகு அவர்கள் அதினுடைய ஊர்களையும் பிடித்து வாசிகளையும் வசப்படுத்தினார்கள். 

33. அதற்குப் பிற்பாடு அவர்கள் பாசானுக்குப் போகும் வழியாய்த் திரும்புகையில் பாசான் அரசனான ஓக் என்பவன் அவர்களை எதிர்த்து யுத்தம் பண்ணத் தக்கதாக எத்ராய்க்குப் புறப்பட்டு வந்தான்.

34. அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி: நாம் அவனையும் அவன் சனங்களெல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தோம். நீ அவனுக்குப் பயப்படாதே. ஏசெபோனில் குடியிருந்த அமோறையரின் அரசனாகிய செகோனுக்கு நீ செய்தது போல் இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.

35. அவ்வாறு அவர்கள் ஒருவரும் உயிருடன் மீதியாய் இல்லாதபடிக்கு அவனையும் அவன் குமாரரையும், அவனுடைய சகல சனங்களையும் வெட்டிப் போட்டு அவனுடைய தேசத்தைக் கட்டிக் கொண்டார்கள்.