லேவியராகமம் - அதிகாரம் 20

பற்பல அக்கிரமங்களுக்கு விதிக்கப் பட்ட ஆக்கினை

1. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. இஸ்றாயேல் புத்திரரோடு நீ சொல்ல வேண்டியதாவது: இஸ்றாயேல் புத்திரரிலாகிலும், இஸ்றாயேலரோடு குடியிருக்கற அந்நியர்களிலென்கிலும் எவனாகிலும் தன் சந்தானத்தில் ஒரு பிள்ளையை மொலோக் என்னும் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்தால் அவன் சாகவே சாகக் கடவான். நாட்டுச் சனங்கள் அவனைக் கல்லாலெறிந்து கொல்லுவார்கள்.

3. அப்படிப்பட்டவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் என்னும் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்து நம்முடைய மூலஸ்தானத்தைத் தீட்டுப் படுத்தி நம்முடைய திருநாமத்தைப் பங்கப் படுத்தினதினிமித்தம், அவனுக்கு நாம் விரோதமாய் எதிர்த்து அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டு போகப் பண்ணுவோம்.

4. அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக்குக்கு நேர்ந்து கொடுத்தான் என்று அறிந்தாலுஞ் சட்டை பண்ணாமல் தேசத்து ஜனங்கள் தேவகட்டளையை அற்பமாய் எண்ணி அவனைக் கொல்லாதபடிக்குக் கண்சாடையாய் விட்டு விட்டாலோவெனில்,

5. நாம் அந்த மனிதனுக்கும் அவன் உறவின் முறையாருக்கும் விரோதமாக எதிர்த்து நின்னு அவனையும் அவன் மொலேக்குடன் விபசாரஞ் செய்வதற்கு உடந்தையாயிருக்கும் யாவரையும் தங்கள் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டு போகப் பண்ணுவோம்.

6. பில்லிசூனியக்காரரையும் குறிசொல்லுகிறவர்களையும் அண்டி அவர்களோடு சோரம் போகிறவனெவனோ அவனுக்கு நாம் விரோதமாக எதிர்த்து நின்று தன் சனத்திலிராதபடிக்கு அவனைச் சங்காரம் பண்ணுவோம். தன் சனத்திலிராதபடிக்கு அவனைச் சங்காரம் பண்ணுவோம்.

7. நாம் உங்கள் தேவனாகிய கர்த்தராகையால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப் படுத்திப் பரிசுத்தராகுங்கள்.

8. நமது கற்பனைகளைக் கைக்கொண்டு அதுகளின்படி நடவுங்கள். நாம் உங்களைப் பரிசுத்தராக்குகிற ஆண்டவர்.

9. தன் தகப்பனையாகிலும் தாயையென்கிலும் எவன் சபித்தானோ அவன் சாகவே சாகக் கடவான். அவன் தன்னைப் பெற்ற தாய் தகப்பனையும் அல்லவா சபிக்கத் துணிந்தான். ஆகையால் அவன் இரத்தப் பழி அவன் மேலிருப்பதாக.

10. ஒருவன் மற்றொருவனுடைய மனைவியைக் கற்பழித்தால் அல்லது பிறனுடைய மனைவியோடு விபசாரம் பண்ணினால் விபசாரஞ்செய்த அவனும் சேரம்போன அவளும் கொலை செய்யப் படக் கடவார்கள்.

* 10-ம் வசனம். இந்த அதிகாரத்திலே சர்வேசுரன் விளம்பரம் பண்ணின சில நீதிச்சட்டங்களுக்கடுத்த ஆக்கினை மகா கண்டிப்பானதென்று பல பேர்களுக்குத் தோன்றும். ஆனால் இஸ்றாயேல் புத்திரர்களுக்குச் சுபாவப்படி உண்டாயிருந்த கடின மனதையும் மூர்க்ககுணத்தையும் எவர்கள் கற்றறிந்தார்களோ, அவர்களுக்கு அவ்விதமாய்த் தோன்றாது. அன்றியும் அக்காலத்து சாதிகளுக்குள்ளே வழங்காநின்ற ஆசார ஒழுக்கங்களையும் அவர்களுடைய சாதாரண எண்ணங்களையும் கணக்கிலே வைக்கவும் வேண்டியது. கடைசியில் இக்காலத்திலும் பல தேசத்தாருக்குள்ளே வழங்கும் நீதிச்சட்டங்களைப் பார்க்கிலும் இவைகள் அதி இளக்காரமாய்க் காணப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை.

11. தன் தகப்பன் மனைவியோடே சயனித்து தன் தகப்பனுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தினவனெவனோ அவனும் அவளும் கொலைசெய்யப் படக் கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்களின் மேலிருப்பதாக.

12. ஒருவன் தன் மருமகளோடு சயனித்திருந்தால், இருவரும் அருவருப்பான பாதகத்தைக் கட்டிக் கொண்டவர்களாதலால் இருவருமே சாகக் கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக.

13. ஒருவன் ஸ்திரீயோடு சம்போகம் பண்ணுமாப்போலே ஆண்பிள்ளைகளோடு கூடினால் அருவருப்பான தாறுமாறு பண்ணின அவர்களிருவரும் கொலை செய்யப் படக் கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்களின்மேல் இருப்பதாக.

14. குமாரத்தியை மனைவியாக்கிக் கொண்டவன் பிறகு தாயையும் கொண்டானானால் அவன் பாதகனானான். இப்படிப் பட்ட அக்கிரமம் உங்களுக்குள் நிலைத்திராதபடிக்கு அவனையும் அவர்களிருவரையும் அக்கினியில் சுட்டெரிக்க வேண்டும்.

15. மாட்டோடேயாவது ஆட்டோடேயாவது ஒருவன் புணர்ந்தால் அவன் கொலை செய்யப்படுவான். அந்த மிருகத்தையும் கொல்லக் கடவீர்கள்.

16. ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடு சேர்ந்தால் அவளும் அந்த மிருகமும் கொலை செய்யப்பட வேண்டும். அவைகளின் இரத்தப் பழி அவைகளின்மேல் இருப்பதாக.

17. யாதாமொருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது பிறந்த குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியோடு சேர்ந்து அவன் அவளுடைய நிருவாணத்தையும் அவள் அவனுடைய நிருவாணத்தையும் பார்த்திருந்தால் அவர்கள் அடாத பாதகத்தைக் கட்டிக் கொண்டார்கள். ஒருவன் மற்றொருவனுக்குத் தன் நிருவாணத்தைக் காட்டினமையால் இருவரும் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக் கொலைசெய்யப் படுவார்கள். தங்கள் அக்கிரமத்தைத் தாங்களே சுமருவார்கள்.

18. ஒருவன் சூதக ஸ்திரீயோடு சயனித்து அவன் அவளை நிருவாணமாக்கினதினாலும் அவள் தன் லச்சைக் கேட்டைக் காட்டினதாலும் இருவரும் தங்கள் சனத்திலிராதபடிக்குக் கொலை செய்யப் படுவார்கள்.

19. உன் பெரியாயி அல்லது உன் சின்னாயி இவர்களுடைய காணாத ஸ்தலத்தைத் திறக்காதே. இப்படிச் செய்பவன் எவனோ அவன் தன் நிருவாணத்தின் அவலட்சணத்தைக் காட்டுகிறான். இருவரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமருவார்கள்.

20. தன் தாய்க்கு அல்லது தன் தகப்பனுக்குச் சகோதரனானவனுடைய மனைவியோடு எவன் சயனித்தானோ அவன் தன் இனத்தாருடைய அவமானத்தைத் திறந்து காட்டினான். அவர்கள் இருவரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமருவார்கள். பிள்ளை சந்தானமில்லாமற் சாவார்கள்.

21. தன் சகோதரனுடைய மனைவியை விவாகம் பண்ணிணவனெவனோ அவன் செய்யலாகாத காரியம் செய்திருக்கிறான். தன் சகோதரனுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தினான். அவர்களிருவரும் பிள்ளைகளில்லாதிருப்பார்கள்.

22. நீங்கள் நம்முடைய பிரமாணங்களையும் நீதிச் சட்டங்களையும் கைக்கொண்டு, அந்தப்படி நடவுங்கள். இல்லாவிடில் நீங்கள் குடியிருப்பதற்காக நாம் உங்களைக் கொண்டு போகிற தேசம் உங்களைக் கக்கிப் போடும்.

23. நாம் உங்கள் முன்னிலையில் நின்று துரத்திவிடப் போகிற சனங்களுடைய வழிப்பாடுகளில் நீங்கள் நடக்க வேண்டாம். அவர்கள் மேற்சொல்லப் பட்ட அக்கிரமங்களையெல்லாம் செய்தபடியால் நாம் அவர்களை வெறுத்துப் போட்டோம்.

24. நாம் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கப் போகிற அவர்களுடைய தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளுங்களென்று நாம் உங்களுக்குச் சொல்லுகிறோம். அந்தத் தேசம் பாலும் தேனுமொழுகுகிற தேசம். உங்களை மற்றச் சனங்களிலே நின்று பிரித்தெடுத்தவர் உங்கள் தேவனாகிய நாம்.

25. ஆனது பற்றி நீங்களும் அசுத்தமான மிருகத்துக்கும் சுத்தமான மிருகத்துக்கும், அசுத்தமான பறவைக்கும் சுத்டதமான பறவைக்கும் வித்தியாசம் பண்ணிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பட்சிகளாலும் பூமியில் நடமாடுகிற எவ்வகைப்பட்ட பிராணிகளாலும் உங்கள் ஆத்துமத்தை அசுசியப் படுத்தாதேயுங்கள்.

26. கர்த்தராகிய நாம் பரிசுத்தராகையாலும், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாயிருக்க வேண்டும் நீங்கள் நமது சொந்த சனமாயிருக்கும்படியல்லோ உங்களை மற்றுமுள்ள சனங்களை விட்டுப் பிரித்தெடுத்தோம்.

* 26-ம் வசனம். சுவாமி தமது பிரசைக்கு இவ்வளவு கடினமான கற்பனையெல்லாம் விதித்ததற்கு முகாந்தரம் என்ன? அவரே சொல்லுகிறார்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தர்களாயிருக்கக் கடவீர்கள். தகப்பன் எப்படியோ அவன் மகனும் அப்படியே இருக்க வேண்டுமென்பது நியாயந்தானே.

27. பில்லிசூனியம் பார்க்கிறதற்கும் குறிசொல்லுகிறதற்கும் ஏதுவான பேய்ப்புத்தி ஒரு புருஷனுக்காகிலும் ஒரு ஸ்திரீக்கென்கிலும் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் சாகவே சாகக் கடவார்கள். அவர்களைக் கல்லெறிந்து கொல்லுங்கள். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் மேல் இருக்கக் கடவதாக.