இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 20

 மரியாள் மரணித்ததும், தண்ணீரில்லாமல் மக்கள் முறுமுறுத்துப் பேசினதும்-புதுமையால் தண்ணீர் கற்பாறையிலே நின்று புறப்பட்டதும்--ஆரோன் மரித்ததும்.

1. பின்னரும் இஸ்றாயேல் புத்திரரின் சபையாரெல்லாம் முதல் மாதத்திலே சீன் என்னும் வனாந்தரத்தில் சேர்ந்த போது, சனங்கள் காதேஸில் தங்கிக் கொண்டிருக்கையிலே மரியாள் மரணித்து அவ்விடத்தில் அடக்கம் பண்ணப் பட்டாள்.

* மரியாள் தன் சகோதரன் ஆரோனுக்கு நான்கு மாதத்திற்கு முன் தனது நூற்றுமுப்பதாம் (130) பிராயத்தில் மரித்தாள். அவள் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் பட்சமுள்ள சகோதரி. 12-ம் அதி. அவளும் ஆரோனும் மோயீசனுக்குக் கொஞ்சங் கஸ்தி கொடுத்தார்கள். ஆனால் அது நீங்கலாக மரியாள் எப்போதும் தன் சகோதரர்களின் விஷயத்திலே அன்புள்ள அன்னையைப் போல் அவர்களுடைய கருத்தின் வழி ஒழுகலானாள். ஜோசேப் என்னும் சரித்திர நூலோனுடைய காலத்திலே மரியாளுடைய சமாதி இன்னும் காணப்பட்டிருந்தது. மரியாள் புருஷ ஸ்பரிசம் அறியாத நித்திய கன்னிகையாயிருந்தாளென்று நீஸ் கிறெகோரியாரும் அம்புரோஸியாரும் வசனித்திருக்கிறார்கள்.

2. அப்போது சனங்களுக்குத் தண்ணீரில்லாததைப் பற்றி மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் அவர்கள் கூட்டங் கூடி,

3. குழப்பம் பண்ணிக் கொண்டு, எங்கள் சகோதரர்கள் கர்த்தருடைய சந்நிதியிலே மாண்டபோது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே;

4. நீங்கள் கர்த்தருடைய சபையை வனாந்தரத்தில் அழைத்துக் கொண்டு வருவானேன்? நாங்களும் எங்கள் மிருகங்களும் சாகும்படிதானோ?

5. இங்கே விதைப்புமில்லை, அத்தி மரமுமில்லை. திராட்சக் கொடியுமில்லை. மாதளஞ் செடியுமில்லை. குடிக்கத் தண்ணீர் முதலாயில்லை. நீங்கள் எங்களை எஜிப்த்து தேசத்திலிருந்து இந்தக் கெட்ட இடத்தில் கொண்டு வந்ததென்ன? என்றார்கள்.

6. அப்பொழுது மோயீசனும் ஆரோனும் சனத்தை அனுப்பி விட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுட் போய்த் தரையிற் குப்புற விழுந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய தேவனே! தேவரீர் இந்தப் பிரசையின் கூக்குரலைக் கேட்டருள்வீர். அவர்கள் திருப்தியடைந்து முறுமுறுக்காதபடி உம் திரவியமாகிய நல்ல தண்ணீர் ஊறணியைத் தந்தருளக் கடவீர் என்றார்கள். தக்ஷணமே கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

7. கர்த்தர் மோயீசனை நோக்கி:

8. நீ உன் கோலை எடுத்துக் கொண்டு, நீயும் உன் சகோதரன் ஆரோனும் சனங்களைக் கூடிவரச் செய் யுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்னே நீங்கள் கற்பாறையைப் பார்த்துப் பேசினால் அதிலிருந்து தண்ணீர் புறப்படும். அவ்விதமே நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் சுரக்கச் செய்த பிற்பாடு அவர்களெல்லோரும் குடிப்பார்கள். அவர்களுடைய மிருகங்களும் குடிக்கும் என்றார்.

9. ஆகையால் மோயீசன் கர்த்தர் கட்டளைப்படி கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்துக் கொண்டான.

10. சபையெல்லாம் கற்பாறைக்கு முன்பாகக் கூட்டங் கூடிய போது, மோயீசன் அவர்களை நோக்கி: விசுவாசமில்லாத குழப்பக் காரர்களே! கேளுங்கள்! இப்பாறையினின்று உங்களுக்குத் தண்ணீரைச் சுரக்கப் பண்ணுவது எங்களால் கூடுமானதா? என்று சொல்லி,

11. தன் கையை ஓங்கிக் கற்பாறையைக் கோலினால் இரண்டுதரம் அடித்தான். அதிலிருந்து தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது. சனங்களெல்லோரும் குடித்தார்கள். மிருகங்களும் குடிக்கத் துடங்கின.

12. பின்பு கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் நம்மை நம்பாமலும் இஸ்றாயேல் புத்திரர் கண்களுக்கு முன்பாக நம்மைப் பரிசுத்தம் பண்ணாமலும் நடந்தீர்களாதலால் நாம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கிற தேசத்தில் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.

13. இவ்விடத்தில் இஸ்றாயேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய் வாக்குவாதம் பண்ணியும், அவருடைய பரிசுத்தம் அவர்களுக்குள்ளே விளங்கினதினாலே அந்தத் தண்ணீர் வாக்குவாதத் தண்ணீர் என்னப் பட்டது.

* 13-ம் வசனம். இத்தருணத்தில் மோயீசனும் ஆரோனும் செய்த குற்றமின்னதென்று ஸ்பஷ்டமாய் விளங்கவில்லை. மோயீசன் கற்பாறையை ஒரு தரமடிக்காமல் இரண்டு தரம் அடித்தமையால் தேவவாக்கின் மீது அவன் விசுவாசத்திலே கொஞ்சம் தத்தளித்தானென்பதோ? அல்லது அவனும் ஆரோனும் மனதிலே மட்டும் நம்பிக்கைக் குறைச்சலாக இருந்தார்களென்பதோ தெரியாது. ஆனால் இருவரும் யாதொரு குற்றஞ் செய்திருக்க வேண்டியது நிச்சயம். இதை வாசிக்கும் யாவரும் சர்வேசுரனுடைய கண்டிப்பான நீதித் தீர்ப்புக்கு எவ்வளவோ பயப்படத் தகும். இதோ இரண்டுபேர் மகா பக்தியுள்ளவர்கள், விசுவாசமுள்ளவர்கள், கர்த்தருக்காக அனேகக் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்தவர்கள்! அதெல்லாம் அப்படியிருந்தாலும் அவர்கள் செய்த தப்பிதத்தை ஆண்டவர் சும்மா விடாமல் கண்டிப்பாய்த் தண்டித்தார். அவர்கள் பெரிய உத்தியோகத்திலிருக்கிறார்கள் என்று அவர் மன்னிக்கவில்லை. அதைக் கண்டு பாவிகளாகிய நமக்கு என்ன வருமோவென்று அஞ்சுகிறது நியாயமல்லவா? ஆஆ! “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் ஈடேற்றத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்”என்று அர்ச்.சின்னப்பர் (பிலிப். 2:12) வசனித்தது மெய்யாகத்தானிருக்கின்றதே.

14. பின்பு மோயீசன் காதேசிலிருந்து ஏதோமின் இராயனிடத்திற்குத் தூதர்களை அனுப்பி: உம்முடைய சகோதரனாகிய இஸ்றாயேல் உமக்குச் செய்தி சொல்லுகிறது என்னவென்றால் நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் உமக்குத் தெரியும்.

15. எங்கள் பிதாக்கள் எஜிப்த்துக்குப் போனதும், நாங்கள் எஜிப்த்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எஜிப்த்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரியம் பண்ணினதும்,

16. நாங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டிருக்க, அவர் எங்களை நன்றாகக் கேட்டருளி எங்களை எஜிப்த்திலிருந்து விடுதலையாக்கும்படி ஒரு தூதனானவரை அனுப்பினதும் இவையெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கிறது. இப்பொழுது நாங்கள் உமது கடை எல்லைக்குச் சமீபமான காதேஸ் ஊரில் வந்தருக்கிறோம்.

17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்து போகும்படி உத்தரவு கொடுக்க மன்றாடுகிறோம். வயல்வெளிகள் வழியாகவும் திராட்சத் தோட்டங்களின் வழியாகவும் நாங்கள் போகாமலும், உமது கேணி துரவு தண்ணீரைக் குடிக்காமலும் இராசபாதையில்தானே நடந்து உமது எல்லைகளைத் தாண்டிப் போகுமட்டும் வலதுபுறம் இடது புறம் சாயாமல் நேராய்ச் செல்லுவோம் என்று சொல்லச் சொன்னான்.

18. இதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்து போகக் கூடாது. போனால் நான் படைகளோடு உன்னை எதிர்க்க வருவேன் என்று பதில் சொல்ல,

19. இஸ்றாயேல் புத்திரர்: நடப்பான பாதையில் செல்லுவோமேயன்றி நாங்களும் எங்கள் மிருகங்களும் சிலவேளை உம்முடைய தண்ணீரைக் குடித்தால் அதற்குத் தகுந்த கிரயம் கொடுப்போம். இது விஷயத்திலே விக்கினமொன்றுமில்லை, நாங்கள் தீவிரமாய் கடந்தோமாகில் எங்களுக்குப் போதுமென,

20. அவன்: இல்லை, போகக் கூடாது என்று கூறி, க்ஷணமே கணக்கிறந்த சனங்களோடும் பலத்த படையோடும் எதிர்நிற்கப் புறப்பட்டான்.

21. இப்படி ஏதோம் தன் எல்லை வழியாகக் கடந்து போகும்படி கேட்டுக் கொணட இஸ்றாயேலுக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆதலால் அவர்கள் சுற்றுவழியாகவே போனார்கள்.

22. அவர்கள் காதேஸிலிருந்து புறப்பட்டு ஓர் என்னும் மலைக்குச் சேர்ந்தார்கள். அந்த மலை ஏதோமின் எல்லைக்குச் சமீபம்.

23. அவ்விடத்திலே கர்த்தர் மோயீசனை நோக்கி:

24. ஆரோன் தன் சனத்தாரோடு சேர்க்கப் படக் கடவான். அவன் வாக்குவாதத் தண்ணீர் என்னப்பட்ட இடத்திலே நமது வாக்கியத்தை நம்பாததைப் பற்றி நாம் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

25. ஆரோனையும் அவனோடு அவன் குமாரனையும் நீ அழைத்துக் கொண்டு ஓர் என்னும் மலையின் மேல் ஏறி,

26. ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரத்தைக் கழற்றி அவைகளை அவன் குமாரனாகிய எலெயஸாரைத் தரிப்பிக்கக் கடவான். ஆரோன் அங்கே மரித்து (தன் சனத்தாரோடு) சேர்க்கப் படுவான் என்றார்.

27. மோயீசன் கர்த்தர் கற்பித்திருந்தபடி செய்தான். சனங்கள் எல்லாரும் பார்க்க ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.

28. அங்கே மோயீசன் ஆரோனுடைய வஸ்திரங்களைக் கழற்றியெடுத்து அவைகளை அவன் குமாரனாகிய எலெயஸாருக்கு உடுத்தினான்.

29. ஆரோன் மலையின் உச்சியில் இறந்து போனான். அப்போது மோயீசனும் எலெயஸாரும் இறங்கி வந்தார்கள்.

* ஆரோன் (123) நூற்றிருபத்து மூன்றாம் வயதிலே மரணித்தார். கர்த்தருடைய கட்டளையின்படி அவர் வாக்குத்தத்தப் பூமியிற் பிரவேசியாமலே மரணித்தார். ஆயினும் தமது மேலான பட்டம் தம்முடைய குமாரனுக்கு வந்ததென்று கண்டு சற்றாவது ஆறுதலடைந்தார்.

30. ஆரோன் செத்துப் போனான் என்று கண்டு எல்லாச் சனங்களும் தங்கள் தங்கள் குடும்பத்தில் ஏழுநாள் துக்கங் கொண்டாடினார்கள்.