லேவியராகமம் - அதிகாரம் 19

கர்த்தர் பற்பல கற்பனைகளையும் நீதிச்சட்டங்களையும் மறுபடி விதிக்கிறார்.

1. கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. இஸ்றாயேல் புத்திரர்களின் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதேதெனில்: நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

3.  உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் பிதாவுக்கும் தன் தன் மாதாவுக்கும் அஞ்சக் கடவான். நமது சாபத் நாட்களை ஆசரித்து வாருங்கள். நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர்.

4.  விக்கிரகங்களை நாடவும் வேண்டாம். வார்ப்பிக்கப் பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவும் வேண்டாம். நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர்.

5. கர்த்தர் (உங்கள் பேரில்) இரக்கங் கொண்டருளும்படி நீங்கள் சமாதானப் பலியை அவருக்குச் செலுத்தினால்,

6. அது பலியிடப்பட்ட அந்நாளிலேதானே அல்லது அடுத்த நாளிலே அதைப் புசிப்பீர்கள். மூன்றாம் நாளைக்கு மீதியாயிருப்பதை அக்கினியில் தகனிக்கக் கடவீர்கள்.

7. யாதாமொருவன் இரண்டு நாளைக்குப் பின் அதைப் புசிப்பானாகில் அவன் அவசங்கையுள்ளவனும் தேவதுரோகியுமாயிருக்கிறான்.

8. கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பங்கப் படுத்தினானாகையால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து தன் சனத்திலிராதபடிக்குக் கொலைசெய்யப்படக் கடவான்.

9. உன் நிலத்திலுள்ள பயிரை அறுக்கும் போது நீ பூமி மட்டத்தோடே அறுக்க வேண்டாம். சிந்திக் கிடக்கிற கதிர்களையும் பொறுக்கிக் கொள்ள வேண்டாம்.

10. அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழங்களையாவது, பழங்களின் மணிகளையாவது பொறுக்க வேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் பரதேசிகளுக்கும் விட்டு விடு. நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

* 10-ம் வசனம். வேதாகமங்களிலே அநாதப் பிள்ளைகள், விதவைகள், ஏழைகள் முதலியவர்களின்பேரில் விசேஷதயவு கட்டளையிடப் பட்டிருக்கிறதைக் காண்கிறோம். அது ஆச்சரியமல்ல. சத்தியவேதத்தின் கற்பனைகளெல்லாம் இரண்டு கற்பனைகளில் அடங்கும். அதுகளில் முதலாவது: எல்லாவற்றையும் பார்க்க முழு இருதயத்தோடும் முழுச் சித்தத்தோடும் சர்வேசுரனைச் சிநேகிக்கிறது. இரண்டாவது தன்னைத்தான் சிநேகிக்குமாப் போல் மற்றெல்லோரையும் சினேகிக்கிறது. இவ்விரண்டையும் நிறைவேற்றுகிறவன். எவனோ அவன் எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்றானென்று காண்க (மத்.22:40).

11. களவு பண்ணாதிருப்பீர்களாக. பொய் சொல்லாதிருப்பீர்களாக. எவனும் தன் பிறனை வஞ்சிக்க வொண்ணாது.

12. நமது நாமத்தைச் சொல்லிப் பொய்யாணை இடாமலும், உன் தேவனுடைய நாமத்தை அவசங்கை பண்ணாமலும் இருப்பாயாக. நாம் கர்த்தர்.

13. உன் பிறன் பேரில் அபாண்டஞ் சொல்லாமலும் அவனைப் பலவந்தம் பண்ணி ஒடுக்காமலும் இருப்பாயாக. உன் கூலியாளுடைய வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலி விடியற்காலமட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

14. செவிடனைத் திட்டாமலும், குருடன் முன் இடறல் வையாமலும், உன் தேவனாகிய கர்த்தருக்கு அஞ்சுவாயாக. ஏனெனில் நாமே கர்த்தர்.

15. அநியாயஞ் செய்யாதே. வழக்கிலே நீதிக்கு விரோதமான தீர்ப்புச் செய்யாதே. ஒருவன் ஏழையென்று பார்த்து அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் ஆஸ்திக்காரனென்று பார்த்து முகத்தாட்சணியம் பண்ணாதே. நீதியாக உன் பிறனுக்கு நியாயந் தீர்ப்பாய்.

16. நீ சனங்களுக்குள்ளே குற்றஞ் சாட்டிக் கோள் மூட்டித் திரியாதே. உன் பிறனுடைய இரத்தப் பழிக்கு உட்படாதே. நாம் ஆண்டவர்.

17. உன் சகோதரனை உன் இருதயத்தில் பகைக்காதே. ஆனால் அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்குப் பிரசித்தமாய் அவனுக்குப் புத்திசொல்லக் கடவாய்.

18. பழிக்குப் பழி வாங்கத்தேடாதே. உன் சனத்தார் உனக்கு அநியாயஞ் செய்தாலும் மனதில் பொறாமை கொள்ளாதே. உன்னில் நீ அன்புகூர்வது போலே உன் சிநேகிதனிலும் அன்பு கூர்வாயாக. நாம் ஆண்டவர்,

19. நமது பிரமாணங்களைக் கைக்கொள். உன் மிருக ஜீவன்களை வேறு ஜாதி மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இருவிதமான நூற்களால் நெய்யப் பட்ட வஸ்திரத்தை உடுத்தாதே.

20. ஒருத்தி வேலைக்காரி: அவளுக்குப் பக்குவப் பிராயமும் இருக்கும். ஆனால் அவள் மீட்கப் பட்டவளுமல்ல, சுயாதீனத்தைப் பெற்றவளுமல்ல; இவளோடு ஒருவன் சம்போகமாய்ச் சயனித்தானெனில் அவர்கள் இருவரும் கொலை செய்யப் படாமல் அடிக்கப் பட வேண்டும். ஏனென்றால் அந்தப் பெண் சுயாதீனமுள்ளவள் அல்ல.

21. ஆனால் அவன் தன் குற்றத்துக்காகச் சாட்சியக் கூடார வாசலிலே கர்த்தருக்கு ஓர் ஆட்டுக் கடாவைக் கொண்டு வருவான்.

22. ஆசாரியன் அவனுக்காகவும் அவன் பாவத்தினிமித்தமாகவும் கர்த்தர் சமூகத்தில் பிரார்த்திப்பான். அப்பொழுது கர்த்தர் அவன் மேல் இரக்கங் கொள்ளுவார். அவன் பாவமும் மன்னிக்கப் படும்.

23. நீங்கள அந்த தேசத்தில் பிரவேசித்துப் புசிக்கத் தக்க கனிகளைத் தருகிற மரங்களை நாட்டின பின்பு அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதாயிருக்கும். அம்மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளதாதலால் அதுகளைப் புசிக்க வேண்டாம்.

24. நான்காம் வருஷத்திலோவெனில் அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் தோத்திரமாகப் பிரதிஷ்டையாக்கப் படும்.

25. பிறகு ஐந்தாம் வருஷத்திலே நீங்கள் அவைகளின் கனிகளைப் பறித்துப் புசிக்கலாம். நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர்.

26. யாதொன்றையும் இரத்தத்தோடு புசிக்க வேண்டாம். சகுனம் பார்க்கவும் வேண்டாம். சொப்பனங்களின் அர்த்தந் தேடவும் வேண்டாம்.

27. உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம்.

28. இழவின் முகாந்தரமாய் உங்கள் சதையைச் சத்திரப் படுத்தாமலும், உடலிலே எவ்விதமான சித்திரத்தையாவது அடையாளத்தையாவது குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக. நாம் ஆண்டவர்.

29. தேசம் அசுசியாகாதபடிக்கும், பாவாக்கிரமத்தால் நிறைந்து போகாதபடிக்கும் நீ உன் குமாரத்தியை வேசித்தனத்திற்கு உட்படுத்தாதே.

30. நமது சாபத்தென்னும் ஓய்வு நாட்களை ஆசரித்து வாருங்கள். தேவ மூலஸ்தானத்தைக் குறித்துப் பயபக்தியாயிருக்க வேண்டும். நாம் ஆண்டவர்.

31. நீங்கள் தீட்டுப்படாத படிக்குப் பில்லி சூனியக்காரரை நாடவும் குறி சொல்லும் சகுனிகளிடத்தில் யாதொன்றைக் கேட்கவும் வேண்டாம்.

32. நரைத்தவன் வரக்கண்டால் நீ எழுந்திரு. முதிர்வயதுள்ளவனைக் கனம் பண்ணு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திரு. நாம் ஆண்டவர்.

33. யாதொரு அந்நியன் உங்கள் ஊரில் உங்களோடு வாசம் பண்ணினால் நீங்கள் அவனைப் பழிக்க வேண்டாம். 

34. அப்படிப்பட்டவனைச் சுதேசி போல் எண்ணி நீங்கள் உங்களைச் சிநேகிப்பது போல் அவனையும் நேசிக்க வேண்டும். நீங்களும் எஜிப்த்து தேசத்திலே அந்நியராயிருந்தீர்கள் அன்றோ? நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர்.

35. நியாய விசாரணையிலும் திட்டத்திலும் எடையிலும், அளவிலும் அநியாயஞ் செய்யாதீர்களாக.

36. சுமுத்திரையான துரைக்கோலும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கிருக்க வேண்டும். உங்களç எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே.

37. நம்முடைய சகல கற்பனைகளையும், நீதிச்சட்டங்களையும் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக் கடவீர்கள். நாம் ஆண்டவர்.