எண்ணாகமம் - அதிகாரம் 18

ஆசாரியருக்கும் லேவியருக்கும் நியமிக்கப் பட்ட வேலையும்--அவனுடைய வரவும் லேவியருடைய வரவும்.

1. பின்னுங் கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடுகூட உன் குமாரர்களும் உன் பிதாவின் வீட்டாரும் தேவஸ்தலத்தைப் பற்றிய அக்கிரமத்தைச் சுமந்து கொள்ளுவீர்கள். குருத்துவத்çத் பற்றிய அக்கிரமத்தையோ நீயும் உன் குமாரர்களும் சுமந்து கொள்ளுவீர்கள்.

* குருத்துவத்தின் மகிமையும் மேன்மையும் எம்மாத்திரமோ, குருக்களுக்குண்டான கடமைகளும் பொறுப்பும் அம்மாத்திரமானவை. அவர்கள் சிலாக்கியத்தையும் பெருமையையும் தேடாமல் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைகளையும் தங்கள் அந்தஸ்தைச் சேர்ந்த தொழில்களையும் பண்ணுவதில் தங்கள் மனதைச் செலுத்தி எல்லாப் புண்ணியத்திலும் பிறத்தியாருக்கு நல்ல மாதிரிகை காட்டக் கடவார்கள். உலகத்திலே அவர்கள் சீவித்தாலும் உலகத்துக்கும் அதன் பற்றுதலுக்கும் துறந்தரராயிருக்கக் கடவார்கள்.

2. உன் தகப்பனாகிய லேவியின் செங்கோலை ஏந்தி, அவனுடைய கோத்திரத்தாராகிய உன் சகோதரரைச் சேர்த்துக் கொள். அவர்கள் உனக்கு உதவி செய்யவும் உன் வேலையைப் பண்ணவும் முஸ்திப்பாயிருக்கும்படி பார். ஆனால் நீயும் உன் குமாரரும் சாட்சியக் கூடாரத்துக்குள்ளே ஊழியஞ் செய்வீர்கள்.

3. லேவியர்கள் உன் சொற்படிக் கேட்டுத் தேவாலயத்தைச் சேர்ந்த எல்லா வேலைகளுக்குங் காத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களும் நீங்களும் ஒருங்குடன் சாகாதபடிக்கு அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பாத்திரங்களையும் தொடாமல், பீடத்தையும் அணுகாமல் எச்சரிக்கையாயிருக்கக் கடவார்கள். 

4. அவர்கள் உன்னுடனிருந்து சாட்சியக் கூடாரத்தைக் காவல் காக்கவும் கூடாரத்துக்கடுத்த பணிவிடையெல்லாஞ் செய்யவுங் கடவார்கள். அந்நியன் ஒருவனும் உங்களோடு வந்து சேரலாகாது.

5. இஸ்றாயேல் புத்திரர் மேலே நமக்குக் கடுங்கோபமுண்டாகாதபடிக்கு நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காத்து, பலிபீடத்தின் ஊழியஞ் செய்வதில் கவனிப்பாயிருங்கள்.

6. ஆசாரக் கூடாரத்திலே பணிவிடையைச் செய்ய உங்கள் சகோதரராகிய லேவியரை நாம் இஸ்றாயேல் புத்திரரின் நடுவிலிருந்து கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணி உங்களுக்குத் தத்தம் பண்ணினோம்.

7. நீயும் உன் குமாரர்களுமோ உங்கள் குருத்துவத்தைப் பத்திரமாய்க் காப்பாற்றுங்கள். பலிபீடத்துக்கடுத்த ஊழியத்தையும் திரைக்குட்புறத்தில் செய்ய வேண்டிய பணிவிடைகளையும் நீங்கள்தான் செய்து முடிக்க வேண்டும். யாதாம் ஒரு அந்நியன் கிட்ட வந்தால் அவன் கொலை செய்யப் படுவான் என்றார்.

8. மீண்டும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இதோ நம்முடையதான முந்தின பலன்களை உன் காவலிலே ஒப்பித்துவிட்டோம். இஸ்றாயேல் புத்திரரால் படைக்கப்படும் எல்லாவற்றையும் உங்கள் குரு ஊழியத்திற்கு வெகுமானமாக உனக்கும் உன் குமாரர்களுக்கும் தந்தோம். அது நித்தியமான பிரமாணமே.

9. ஆகையால் கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணிப் படைக்கப் பட்டவைகளில் உன்னுடையதாயிருப்பது எவையெனில்: அவர்கள் படைக்கும் எல்லாக் காணிக்கையும், பான போசனப் பலிகளும், பாவ நிவாரணப் பலிகளும், குற்ற நிவாரணப் பலிகளும் இவைகள் மகா பரிசுத்தமானபடியால் உனக்கும் உன் குமாரர்களுக்கும் சொந்த பாகமாகும்.

10. பரிசுத்த ஸ்தலத்திலே அவற்றைப் புசிப்பாய். அது உனக்காகப் பிரதிஷ்டையானதாகையால் ஆண்கள் மாத்திரம் அதைப் புசிப்பார்கள்.

11. இஸ்றாயேல் புத்திரர் நேர்ந்து உற்சாகமாய் ஒப்புக்கொடுக்கிறதுமான முந்தின பலன்களையோ உனக்கும் உன் குமாரர் குமாரத்திகளுக்கும் நித்திய சுதந்தரமாக அளித்திருக்கிறோம். உன் வீட்டாரில் பரிசுத்தன் எவனோ அவன் அவற்றைப் புசிப்பான்.

12. எண்ணெய், திராட்சரசம், கோதுமை முதலிய உத்தமமானவைகளையும், அவர்கள் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கிற எல்லா நவபலன்களையும் உனக்குத் தந்தோம்.

13. மண்ணில் உற்பவித்து முதல் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வந்து ஒப்புக்கொடுப்பதெதுலோ அதெல்லாம் உன்னுடையதாகும். உன் வீட்டில் சுததமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.

14. இஸ்றாயேல் புத்திரர் நேர்ந்து செலுத்துவதெல்லாம் உனக்குரியதாகும்.

15. மனிதரிலுஞ் சரி, மிருகங்களிலுஞ் சரி, கற்பந்திறக்கும் தலையீற்றில் கர்த்தருக்குச் செலுத்தப் படுவதெதுலோ அதுவெல்லாம் உனக்குரியவைகள். ஆனாலும் மனிதனின் முதற்பேற்றுக்குப் பதில் பணம் வாங்குவாய், சுத்தமல்லாத சீவசெந்துவின் தலையீற்று மீட்கப் படச் செய்வாய்.

16. இப்படி மீட்கப்பட வேண்டியவைகள் ஒரு மாதத்துக்கு மேற்பட்டதானால் பரிசுத்த ஸ்தலத்தின் சீக்கல் கணக்குப்படி ஐந்து சீக்கலால் மீட்கப் படும். ஒரு சீக்கலில் இருபது ஒபோல் உண்டு.

17. மாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப் பட வேண்டாம். அவைகள் கர்த்தருக்கு முன்பாகப் பரிசுத்தமானவை. அவைகளின் இரத்தத்தைப் பலி பீடத்தின்மேல் சிந்திப் போட்டுக் கொழுப்பைக் கர்த்தருக்கு அதிசுகந்த மணமாகத் தகனிக்கக் கடவாய்.

18. பிரதிஷ்டை செய்யப்பட்ட அவைகளின் மார்க்கண்டமும் முன்னந் தொடையும் போல அவைகளின் மாம்சங்களும் உன்னுடையதாயிருக்கும்.

19. இஸ்றாயேல் புத்திரரால் பரிசுத்த ஸ்தலத்திற் கென்று கர்த்தருக்குச் செலுத் தப்படும் நவப் பலன்கள் யாவையும் உனக்கும் உன் குமாரர் குமாரத்தி களுக்கும் நித்திய முறைமையாகத் தந்திருக்கின்றோம். கர்த்தருடைய சமூகத்திலே இது உனக்கும் உன் குமாரர்களுக்கும் என்றைக்குஞ் செல்லும் உப்பு உடன்படிக்கையாம் என்றார்.

* உப்பானது கெடாமலும் அழியாமலும் இருப்பது போல இவ்வுடன்படிக்கையும் அழியாது நிலைநிற்குமென்பதாம்.

20. மீளவுங் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீங்கள் ஒன்றையுஞ் சுதந்தரித்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் நடுவே உங்களுக்குப் பங்கு கிடையாது. இஸ்றாயேல் புத்திரர் நடுவில் நாமல்லோ உன் பங்கும் உன் காணியாட்சியுமாயிருக்கிறோம்.

21. இஸ்றாயேலியர் பத்தில் ஒரு பங்கு கொடுப்பவையெல்லாம் உடன்படிக்கைக் கூடாரத்தில் நமக்குப் பணிவிடை செய்து வருகிற லேவி புத்திரருக்கு வெகுமானமாக அளித்திருக்கிறோம்.

22. இஸ்றாயேல் புத்திரர் இனிமேல் ஆசாரக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கும்படியாகவும், சாவுக்குரிய பாவத்தைச் செய்யாதிருக்கும்படியாகவும அவ்விதமாய்ச் செய்தோம்.

23. ஆலயத்தில் நம்மைச் சேவித்துப் பிரஜையின் பாவங்களைச் சுமந்து கொள்ளும் லேவியரின் புத்திரருக்கு மாத்திரமே அவைகள் சொந்தம். இது உங்கள் தலைமுறைகடோறும் நித்தியப் பிரமாணமாகவிருக்கும். அவர்களுக்கு வேறு காணியாட்சியிராது.

24. அவர்களுடைய சவரட்சணைக்கும் அவசரங்களுக்கும் நாம் கொடுத்திருக்கிற தசம்பாகத்தை அவர்கள் வாங்கித் தங்களுக்குப் போதுமென்று சந்தோஷமாயிருக்கக் கடவார்கள்.

25. கர்த்தர் பின்னும் மோயீசனை நோக்கி:

26. நீ லேவியரோடு கட்டளையாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்றாயேல் புத்திரர் கையில் வாங்கிக் கொள்ளும்படி உங்களுக்கு நாம் சுதந்தரமாய்க் கொடுத்த தசம் பாகத்தை நீங்கள் வாங்கின போது அந்தத் தசம் பாகத்தில் பத்திலொரு பங்கைக் கர்த்தருக்குச் செலுத்தக் கடவீர்கள்.

27. அது களத்தின் நவப்பலனைப் போலும் ஆலை நவப்பலனைப் போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

28. இப்படியே நீங்கள் எவர்களிடத்தில் நின்று (தசம்பாகத்தை) வாங்கியிருப்பீர்களோ அதில் கொஞ்சம் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்த பின்பு ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்க வேண்டும்.

29. உங்களுடைய தசம பாகத்திலேயாவது மற்றுமுள்ள காணிக்கையிலேயாவது எதைக் கர்த்தருக்குச் செலுத்தவிருப்பீர்களோ அது உச்சிதமும் முதல் தரமுமாயிருக்க வேண்டும்.

30. மீளவும் நீ அவர்களுக்குச் சொல்வாய்: உங்கள் தசம பாகத்தில் நீங்கள் உத்தமமானவைகளையும் முதல்தரமானவைகளையும் செலுத்தினால் அது களத்தின் நவப்பலனைப் போலும் திராட்ச ஆலையின் நவப்பலனைப் போலும் உங்களுக்கு எண்ணப் படும்.

31. அதை நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் உங்கள் வீடுகளிலே எவ்விடத்திலுமாவது புசிக்கலாம். ஏனென்றால் நீங்கள சாட்சியக் கூடாரத்திற் செய்யும் பணிவிடைக்குச் சம்பளமதுவே.

32. மேலும் இஸ்றாயேல் புத்திரர் படைத்தவைகளை நீங்கன் தீட்டுப்படுத்தாதபடிக்கும் பிராண நாசம் உங்களுக்கு வராத படிக்கும் நீங்கள் உச்சிதமானவைகளையும் அதிகம் கொழுத்தவைகளையும் உங்களுக்காகப் பத்திரமாக வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவீர்கள் (என்றார்.)