லேவியராகமம் - அதிகாரம் 18

முறைகெட்ட விவாகம்--முறைகெட்ட இச்சைகள்--சுபாவத்திற்கு விரோமான துர்க்கிரியைகள்.

1. பின்னும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரருக்குச் சொல்ல வேண்டியதென்னவெனில் நாம் உங்களுக்குத் தேவனாகிய கர்த்தர்.

3. நீங்கள் முன் குடியிருந்த எஜிப்த்து தேசத்தின் ஆசாரத்துக்கேற்றவிதமாய் ஒழுகவும் வேண்டாம். நாம் உங்களை அழைத்துக் கொண்டு போகிற கானான் தேசத்தாருடைய நடபடிக்கொத்த மேரையாய் நடக்கவும் வேண்டாம். அவர்களுடைய முறைமைகளையும் அனுசரிக்கவும் வேண்டாம்.

* 3-ம் வசனம். எஜிப்த்து தேசத்தாருக்கு உறவின் முறையாரோடு விவாகம் பண்ணுவது வழக்கமானதினால் அவர்களிலே சிலர் தங்கள் சொந்தச் சகோதரியை முதலாய் மணஞ்செய்து வருவார்கள் என்று தோன்றுகிறது. அது தேவப் பிரமாணத்திற்கு நேர் விரோதமென்று மோயீசன் இஸ்றாயேலித்தாருக்குச்சொல்லி கலியாணத்திற்கு விக்கினமுள்ள முறைகளையும் காட்டி, அடாத போகங்களையும் விலக்குகின்றார். கானான் நாட்டிலோவென்றால் நானாவித அக்கிரமங்களும் பிரசித்தமாய் நடக்கும்! இஸ்றாயேலிய சனங்கள் அப்படிப் பட்ட அக்கிரமங்களைப் பண்ணாதபடிக்கு எவன் அது விஷயத்தில் குற்றவாளியாவானோ அவன் உடனே கொலையுண்பான் என்று மோயீசன் கற்பித்தார்.

4, நமது நீதிமுறைகளின் படி நடந்து நம்முடைய கட்டளைகளை நிறைவேற்றி நம்முடைய கற்பனை நெறியில் செல்லக் கடவீர்களாக. உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே.

5. நமது பிரமாணங்களையும் நீதிச் சட்டங்களையும் கைக்கொள்ளக் கடவீர்கள். அவைகளின்படி செய்பவன் எவனோ அவன் அவைகளால் சீவித்திருப்பான்.

* 5-ம் வசனம். ஆதியிலே விவாகங்களுக்கு உறவின் முறை விக்கினங்களைக் குறித்து ஆண்டவர் விசேஷ விலக்கமொன்றும் செய்யவில்லை. மேலும் அவர் அபிரகாமுடைய வமிசத்தைத் தமக்குச் சொந்தப் பிரசையாயிருக்கும்படி தெரிந்து கொண்ட பிற்பாடு பலமனைவிக் கலியாணத்துக்குத் தற்காலம் உத்தரவு கொடுத்தார். ஏனெனில் அந்த வம்சத்தார் மற்ற சாதிகளோடும் சனங்களோடும் சேராமலும், கலியாண சம்பந்தம் செய்யாமலும் இருக்க வேண்டுமென்கிறதினாலே அவர்களுக்கு அந்த உத்தரவு கொடுக்கத் திருவுளமானார். ஆனால் இப்போது கர்த்தர் கலியாணத்திற்கு நானாவித விக்கினங்கடிள ஏற்படுத்தி மோயீசனைக் கொண்டு விளம்பரம் பண்ணச் சித்தமுள்ளவரானார். கடைசியிலே சேசுநாதசுவாமி பூமியிலே சத்திய வேதத்தைப் போதித்த போது, பல ஸ்திரீ விவாகத்துக்கு தேவன் முன்னே கொடுத்த உத்திரவை அவர் ரத்து பண்ணினாராதலால் (மார்க்கு சுவி, 10-ம் அதி.) இந்நாட்களில் பல பெண்சாதிகளை விவாகம் பண்ண எவருக்கும் அதிகாரமில்லை.

6. எந்த மனிதனாயினுந் தனக்கு நெருங்கிய உறவின் முறையான ஸ்திரீயைச் சார்ந்து அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. நாம் கர்த்தர்.

7. உன் தகப்பனுடைய நிருவாணத்தையும் உன் தாயுடைய நிருவாணத்தையும் நீ வெளிப்படுத்த வேண்டாம். அவள் உன் தாயென்று அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.

8. உன் தகப்பனுடைய மனைவியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன் தகப்பனுடைய நிருவாணமே.

9. உன் தகப்பனுக்காகிலும் உன் தாய்க்கென்கிலும் வீட்டிலேயாவது புறத்தியிலேயாவது பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.

10. உன் குமாரனுடைய மகளையாவது, உன் குமாரத்தியுடைய மகளையாவது நிருவாணமாக்கலாகாது. அவளுடைய நிருவாணம் உன்னுடைய நிருவாணமே.

11. உன் தகப்பனுடைய மனைவியின் வயிற்றில் பிறந்த குமாரத்தியை நிருவாணமாக்கலாகாது. அவள் உனக்குச் சகோதரியே.

12. உன் தகப்பனின் சகோதரியுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனெனில் அவளுடைய மாம்சமும் உன் தகப்பனுடைய மாம்சமும் ஒன்றுதான்.

13. உன் தாயின் சகோதரியுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனெனில் அவளுடைய மாம்சமும் உன் தாயின் மாம்சமும் ஒன்றுதான்.

14. உன் தகப்பனுடைய சகோதரனை நிருவாணப் படுத்தலுமாகாது. அவனுடைய மனைவியோடு சேரலுமாகாது. ஏனெனில் அவளுக்கும் உனக்கும் சம்பந்தமுண்டு.

15. உன் மருமகளுடைய நிருவாணத்தையும் வெட்கத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனெனில் அவள் உன் மகனுடைய பெண்சாதி.

16. உன் சகோதரனுடைய மனைவியை நிருவாணமாக்கலாகாது. ஏனெனில் அவளுடைய நிருவாணம் உன் சகோதரனுடைய நிருவாணமே.

17. உன் மனைவியுடைய நிருவாணத்தை ஒருவருக்குங் காட்டலாகாது. அவள் குமாரத்தியுடைய நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய குமாரனின் மகளையும் நிருவாணமாக்கத் தக்கதாக விவாகம் பண்ணலாகாது. ஏனெனில் இவர்கள் அவளுக்கு நெருங்கின சம்பந்தம். அது முறைகேடு.

18. உன் பெண்சாதி இருக்கையில் அவளோடுகூட அவளுடைய சகோதரியைப் பெண்டாள வைத்து நிருவாணமாக்கலாகாது.

19. மாதவிடாயுள்ள ஸ்திரீயோடு சேர்ந்து அவள் அசுசியத்தை வெளிப்படுத்தலாகாது.

20. உன் பிறனுடைய மனைவியோடு சயனித்தலாகாது. அவளோடு சேர்ந்து இரத்தக் கலப்பினால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. 

21. உன் பிள்ளைகளில் எவனையும் மொலோக் விக்கிரகத்திற்கு நேர்ந்திருக்கும்படி கொடுக்கலுமாகாது. உன் தேவனுடைய நாமத்தைப் பங்கப் படுத்தவுமாகாது. நாமே ஆண்டவர்.

* 21-ம் வசனம். ஆமோனியர் அக்கினியைத் தேவனாகவெண்ணித் தங்கள் பிள்ளைகளை நெருப்புக்கு இரையாகக் கொடுக்கத் துணிவார்கள். இந்தத் தேசத்திலும் தீ கடக்கும் பண்டிகையுண்டல்லவா? அவையெல்லாம் எப்படிப்பட்ட அக்கிரமமென்று சொல்லவேண்டுமோ? விக்கிரக ஆராதனை அஞ்ஞானமே!!

22. பெண்ணோடு சம்போகம் பண்ணுவது போல் ஆணோடு சம்போகம் பண்ணாதே. அது அருவருப்பான அக்கிரமம்.

* 22-ம் வசனம். இங்கே சொல்லப் பட்ட இலச்சைக் கேடான அக்கிரமம் கானான் தேசத்தில் முக்கியமாய் வழங்கி வந்ததுபோலும். ஆனால் கிரேசியருடைய ஞானிகள் மனுக்குல சிரோன்மணியென்னும் பேர் வகித்த சொககிராதஸ் பண்டிதனும் வேறனேக வித்துவான்களும் அப்படிப்பட்ட அவலட்சணமான பாவத்திற்குப் பழகிக் கொண்டிருந்தார்களென்று சொல்லுகிறார்கள். அக்கியான தேசங்களிலே எத்தனையோ பெரிய சாஸ்திரிகளும் புத்திமான்களும் அருவருப்புக்குரிய இவ்வித அக்கிரமங்களைக் கூசாமல் செய்துவந்தார்களென்று அறியவேணுமானால் அர்ச்., சின்னப்பர் (ரோம. 1:22) எழுதியதை வாசித்தாலே போதும்.

23. எந்த மிருகத்தோடேயும் நீ புணர்ச்சி செய்து அதினால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. ஸ்திரீயானவள் மிருகத்தோடு புணரும்படி அதற்குத் தன் மடியை வெளிப்படுத்தலாகாது. அது பொல்லாத அக்கிரமமல்லவா?

24. நாம் உங்கள் முன்னின்று துரத்தி விடப் போகிற சகல ஜாதிகளும் அப்படிப்பட்டவைகளால் தங்களைப் பங்கப் படுத்தியிருக்கிறார்களே. நீங்கள் அவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள்.

25. அப்படிப்பட்ட அக்கிரமங்களால் அவர்களுடைய தேகமும் தீட்டுப் படுத்தப்பட்டது. ஆதலால் அதின் பாவங்களை நாம் விசாரிப்போம். இந்தத் தேசம் தன் குடிகளைக் கக்கிப் போடும்படி செய்வோம்.

26. நீங்களோ நமது பிரமாணங்களையும் நீதிச் சட்டங்களையும் கைக்கொண்டு அருவருப்புக்குரிய அந்தத் துர்க்கிரியைகளில் ஒன்றையும் செய்யாதீர்கள். தேசத்தில் பிறந்தவனும் உங்கள் நடுவே குடியிருக்கிற அந்நியனும் அவைகளை விலக்கக் கடவார்கள்.

27. உங்களுக்கு முன்னிருந்த இத்தேசத்துக் குடிகள் வெறுக்கத்தக்க மேற்படி பாதகங்களை எல்லாம் பண்ணித் தங்கள் பூமியைத் தீட்டுப் படுத்தினார்கள்.

28. ஆகையால் நீங்கள் அப்படிப்பட்டவைகளைச் செய்தால் பூமியானது முன்னே தன் குடிகளைக் கக்கினதுபோல் உங்களையும் கக்கிப் போடுமென்று எச்சரிக்கையாயிருங்கள்.

29. மேற்சொல்லிய அருவருப்புக்குரிய துர்க்கிரியைகளில் ஒன்றையாவது எவன் செய்வானோ அவன் தன் சனத்திலிராதபடிக்குக் கொல்லப் படுவான்.

30. நமது கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். உங்களுக்கு முன் இருந்தவர்கள் பண்ணின துர்க்கிரியைகளை நீங்கள் செய்து அவைகளாலே அசுசிகளாய்ப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவீர்கள். நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர்.