லேவியராகமம் - அதிகாரம் 17

கர்த்தருக்கன்றிப் பசாசுகளுக்குப் பலி செலுத்தலாகாது--போஜன வஸ்துக்களிலே சுத்தமாயிருக்க வேண்டியதினாலே இரத்தத்தையும் தானாயிறந்து போனதையுந் துஷ்ட மிருகத்தால் பீறுண்டதையும் புசித்தலாகாது.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்றாயேல் புத்திரர் அனைவருக்கும் நீ கர்த்தருடைய கற்பனைப்படி சொல்ல வேண்டியதாவது:

3. இஸ்றாயேல் குடும்பத்தாரில் எவனாகிலும் பாளையத்திற்குள்ளாவது பாளையத்தின் புறம்பேயாவது மாட்டையாவது, ஆட்டையாவது, வெள்ளாட்டையாவது கொன்று போட்டு,

* 3-ம் வசனம். பூர்வீகக் காலத்தில் சாதாரணமாய்க் குடும்பங்களுக்கு யார் தலைவர்களாயிருந்தார்களோ அவர்களே தேவாராதனைக்கடுத்த சடங்குகளையும் கர்த்தருக்குப் பலி செலுத்தவேண்டிய பலிகளையும் நடத்திக்கொண்டு வருவார்கள். இனிமேல் அப்படிக்கிராது. அபிஷேகம் பெற்ற குருக்கள் மேற்சொல்லிய ஊழியத்தைச் செலுத்தலாமன்றி மற்றவர்களுக்கு அதிகாரமில்லை. (இராசா. 1-ம் புத், 13-ம் அதி.) சவுல் அரசன் அதிகாரமில்லாமல் பலியிட்டதினாலே சாமுவேல் தீர்க்கதரிசி அவனை அதட்டிக் கண்டித்த விதத்தை நினையுங்கள். மறுபடியும் பழைய ஏற்பாட்டின் குருத்துவம் சேசுகிறீஸ்து நாதரால் ஒழிக்கப்பட்டது. அருள் வேதத்திலே அப்போஸ்தலர்களுடைய பாரம்பரையான அதிகாரம் பெற்ற மேற்றிராணியாராலே குருப்பட்டம் எவர்கள் பெற்றாரோ அவர்கள் மட்டுமே குருக்கள். மற்றவர்கள் குருக்களல்லலே, புரோட்டெஸ்டான்ட்டுகள் இதைக் கவனிக்க வேண்டும்.

4. அவை சாட்சியக் கூடார வாசலுக்கு முன்பாகக் கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராதிருந்தால் அது அவனுக்கு இரத்தப் பழியாக இருக்கும். அந்த மனிதன் இரத்தஞ்சிந்திக் கொலை செய்திருக்கிறவனைப் போலத் தன் சனத்தில் இராதபடிக்குக் கொலையுண்பான்.

5. ஆகையால் இஸ்றாயேல் புத்திரர் எந்தப் பலிப் பிராணியையும் வெளியில் அடித்திருப்பார்களோ, அவைகளைக் கூடார வாசலின் முன் கர்த்தருக்குப் பிரதிஷ்டையாகும்படிக்கும், அவர்கள் அதுகளைக் கர்த்தருக்குச் சமாதானப் பலிகளாகச் செலுத்தும்படிக்கும் குருவினத்தில் சமர்ப்பிக்கக் கடவார்கள்.

6. குரு சாட்சியக் கூடார வாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் இரத்தத்தை ஊற்றிக் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த மணமாகத் தகனிக்கக் கடவான்.

7. ஆகையால் அவர்கள் எந்தப் பசாசுக்களோடு சோரமாய்த் திரிந்தார்களோ அதுகளுக்குத் தங்கள் பலிகளை இனி செலுத்தாதிருப்பார்களாக. இது அவர்களுக்கும் அவர்கள் புத்திர சந்தானத்தாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும்.

* 7-ம் வசனம். தன் கணவனைவிட்டு ஒரு ஸ்திரீ பிறனோடுபோனால் அவளை விபசாரியென்பார்கள். தன் பத்தினியை மோசம் பண்ணின கணவனையும் விபசாரன் என்று அழைப்பது நியாயம். ஒரே கடவுளுக்குச் செலுத்த வேண்டிய ஆராதனையைப் படைப்புண்ட யாதொரு நவ வஸ்துவுக்குச் செலுத்தி வருகிறவர்களெவர்களோ அவர்கள் விபசாரம் பண்ணுகிறார்கள் என்று சொல்லுவது நியாயமே.

8. மேலும் நீ அவர்களைப் பார்த்து: இஸ்றாயேல் சபையாரிலும் உங்களுக்குள் சஞ்சரிக்கின்ற அன்னியரிலும் எவன் சர்வாங்கத் தகனப் பலி முதலானவைகளை இட்டு,

9. சாட்சியக் கூடார வாசலண்டை கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டு வராதிருப்பானோ அவன் தன் சனத்திலிராதபடிக்குக் கொலை செய்யப் படுவான்.

10. இஸ்றாயேல் குடும்பத்தாரிலும் அவர்களுக்குட் சஞ்சரிக்கின்ற அந்நியர்களிலும் எவனாயினும் இரத்தத்தைப் புசித்தால் அவன் ஆத்துமத்திற்கு விரோதமாக நாம் நமது முகத்தை ஸ்திரப்படுத்தி அவனைத் தன் சனத்தில் இராதபடிக்குச் சங்காரம் பண்ணுவோம்.

11. ஏனெனில் உடலின் உயிர் இரத்தத்தில் உண்டாம். இதையோ நாம் உங்களுக்குப் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும் உங்கள் ஆத்தும சுத்திகரத்திற்கு உதவும்படிக்குமே தந்தருளினோமல்லவா?

* 11-ம் வசனம். இரத்தமானது உயிருக்கு இருப்பிடமென்று இங்கே சொல்லியிருக்கிறது. உள்ளபடி இரத்தமோடுகிற உறுப்பு அவயவங்கள் உயிருள்ளவையென்றும் இரத்தமோடான அவயவங்களோ உயிரற்றவை என்றும் அறிந்திருக்கிறோம். ஆனது பற்றி இரத்தத்தை எவன் சிந்தினானோ அவன் உயிரையும் ஒழித்தானென்று சொன்னாலும் சொல்லலாம். சேசுநாதருடைய ஆகமனத்துக்கு முன் ஒரு பலி மிருகத்தைக் கர்த்தருக்குச் செலுத்தும் பாவிகள் தங்கள் இரத்தத்துக்குப் பதிலாக அந்த மிருகத்தின் இரத்தத்தை அவருக்கு ஒப்புக் கொடுக்கிறார்களென்று சொல்லக் கூடும். ஆனால் சேசுநாதர் நமக்காகத் தம் இரத்தத்தை எப்போது சிந்தினாரோ அதுமுதல் மிருகங்களையாவது, வேறு படைப்புண்ட வஸ்துக்களையாவது பாவத்திற்கு நிவாரணமாகப் படைப்பது கர்த்தருக்குத் துரோகமாயிருக்குமென்று உலகத்தார்கள் யோசிக்க வேண்டும்.

12. அதினிமித்தம் நாம் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி, உங்களில் ஒருவனும் உங்களுக்குள்ளே சஞ்சரிக்கின்ற அந்நியர்களில் ஒருவனும் இரத்தத்தைப் புசிக்க வேண்டாமென்று திருவுளம் பற்றினோம்.

13. இஸ்றாயேல் புத்திரரிலும் உங்களுக்குள் சஞ்சரிக்கின்ற அந்நியர்களிலும் எவனாயினும் வேட்டையாடி அல்லது கண்ணி வைத்துப் புசிக்கத் தக்க ஒரு மிருகத்தையாகிலும், ஒரு குருவியையென்கிலும் பிடித்தால் அவன் அதின் உதிரத்தைச் சிந்தப் பண்ணி மண்ணைக் கொண்டு அதை மூடக் கடவான்.

14. ஏனெனில் உடலின் உயிர் உதிரத்திலுண்டாம். ஆனபடியால் நாம் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: உடலின் உயிர் இரத்தத்தினுள் உண்டாயிருக்கின்றமையால் நீங்கள் எந்த மாம்சத்திலுமுள்ள இரத்தத்தைப் புசிக்க வேண்டாம். அதை எவன் புசிப்பானோ அவன் கொலையுண்பான் என்று சொன்னோம்.

15. சுதேசிகளாகிலும் அந்நியர்களிலென்கிலும் எவன் தானாய்ச் செத்ததையாவது துஷ்ட மிருகத்தால் பீறுண்டதையாவது புசிப்பானோ அவன் தன் வஸ்திரங்களையும் தோய்த்துத் தானும் தண்ணீரிலே முழுகிச் சாயந்தர மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். இதை அவன் அநுசரித்து வந்தால் சுத்தமாவான்.

16. ஆனால் அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும் தான் ஸ்நானம் பண்ணாமலும் இருப்பானானால் தன் அக்கிரமத்தைத்தானே சுமந்து கொள்ளுவான் என்று சொல்வாய் என்றார்.