இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 16

தாத்தான், கொறே, அபிரோன் கலகம் பண்ணினதும்--தண்டிக்கப் பட்ட சனங்கள் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசினதும்-தண்டிக்கப் பட்டதும்.

1. இதன்பின் இதோ லேவியனுக்குப் பிறந்த காதின் புத்திரனான இஸாரின் குமாரன் கொறேயென்பவனும், எலியாபின் குமாரர்களாகிய தாத்தான், அபிரோன் என்பவர்களும் ரூபனுடைய வம்சத்திலுள்ள பெலேத்தின் குமாரனாகிய ஒன் என்பவனும்,

* கொறே யென்பவன் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் கிட்டின உறவினன். அவன் லேவியனாயிருந்தும் பெரிய ஆசாரியனாயிராததைப் பற்றிக் காய்மகாரப் பட்டான். பெருமை ஆசையினால் கணக்கற்ற தீமைகள் விளைகிறதுண்டு.

2. இஸ்றாயேல் புத்திரருக்குள் திருச்சபைக்குத் தலைவர்களும், சங்கமிருக்கும் போது பெயர் பெயராய் அழைக்கப் பட வேண்டிய கனவான்களுமான வேறு இருநூற்றைம்பது பேர்களைச் சேர்த்து மோயீசனுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி,

3. மோயீசனுக்கும் ஆரோனுக்கும் எதிரே வந்து: சபையாரெல்லாரும் பரிசுத்தர்களாயிருப்பதும், ஆண்டவர் அவர்களோடு வீற்றிருப்பதும் உங்களுக்குப் போதாதோ? நீங்கள் கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்களென்றார்கள்.

4. மோயீசன் இதைக் கேட்டவுடன் முகங் குப்புற விழுந்து,

5. பிறகு கொறே என்பவனையும் அவனுடைய கூட்டாளிகளையும் நோக்கி: நாளைக்குக் காலமே கர்த்தர் தம்மைச் சேர்ந்தவர்களை இன்னாலேன்று காண்பித்துப் பரிசுத்தர்களானவர்களைத் தம்மிடத்தில் சேர்ப்பார். அப்பொழுது அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் அவரை அண்டுவார்கள்.

6. ஆகையால் நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். கொறேயனாகிய நீயும் உன் கூட்டாளிகளெல்லோரும் ஒவ்வொருவனாய் உங்கள் தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

7. நாளைக்கு அவைகளில் நெருப்புப் போட்டு அதின்மேல் ஆண்டவருடைய சமூகத்தில் தூபத்தை இடுங்கள். அப்போது அவர் தெரிந்து கொண்டிருப்பவன் எவனோ அவன் பரிசுத்தனாம். லேவியின் குமாரர்களே, உங்கள் காலம் அதிகமானதே என்று கொன்னான்.

8. மீண்டும் கொறே என்பவனை நோக்கி: லேவியினுடைய குமாரனே! உற்றுக் கேள்!

9. இஸ்றாயேலின் தேவனானவர் உங்களை முழுச் சபையாரிலிருந்து பிரித்தெடுத்துத் தம்முடைய வாசஸ்தலத்தில் பணிவிடைகளைச் செய்யபும் கபையாரின் முன் நிற்கவும் அவர்கள் கர்த்தருக்குச் செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் செய்யவும் உங்களைத் தம்மண்டையில் சேர்த்து வைத்தது சொற்பமாயிற்றோ?

10. அவர் உன்னையும் லேவியின் குமாரராகிய உன் சகோதரர்களையும் இப்படி தம்மண்டையில் சேர்த்தார் என்னத்துக்கு? நீங்கள் ஆசாரியப் பட்டத்தையும் அபகரிக்கும்படிதானோ?

11. உனது குழாமெல்லாம் கர்த்தருக்கு விரோதமாய்க் கலாபிக்கும்படிதானோ? நீங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறுமுறுப்பதென்ன? அவன் எம்மாத்திரந்தான் என்றான்.

12. பின்னும் மோயீசன் எலியாபின் குமாரராகிய தாத்தான், அபிரோன் என்பவர்களை அழைத்தனுப்பியிருக்க, அவர்கள்: நாங்கள் வர மாட்டோம்.

13. நீ எங்களை வனாந்தரத்திற் கொல்லும்படி பாலும் தேனும் ஓடுகிற பூமியிலிருந்து எங்களைக் கொண்டு வந்தது போதாமல் இன்னும் எங்கள் மேல் அதிகாரஞ் செலுத்தப் பார்க்கிறாயோ?

14. ஆ! ஆ! எங்களை நல்ல தேசத்திற்குக் கொண்டு வந்தாய்! பாலும் தேனும் ஓடுகிற தேசமாம்! நல்ல வயல்களையும் திராட்சத் தோட்டங்களையும் எங்களுக்குச் சுதந்திரமாய்த் தந்தது வாஸ்தவமாம்! இன்னும் எங்கள் கண்களைப் பிடுங்கப் பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.

15. அப்போது மோயீசனுக்குக் கடுங்கோபம் மூண்டது. அவன் ஆண்டவரை நோக்கி: இவர்களுடையகாணிக்கைகளை அங்கீகரியாதீர். அடியேன் அவர்களிடத்திலே ஒரு வேசரிக் குட்டியையும் ஒருபோதும் வாங்கினேனில்லை என்றும் அவர்களில் ஒருவனையும் நான் உபாதித்தே னில்லை என்றும் தேவரீர் அறிவீரே என்று சொல்லி,

16. பிறகு மோயீசன் கொறேயை நோக்கி: நீயும் உன் கூட்டாளிகளும் நாளைக்குக் கர்த்தர் சமூகத்திலே ஒரு பக்கமாகவும், ஆரோன் மற்றொரு பக்கமாகவும் நின்று கொள்ள வாருங்கள்.

17. உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபக்கலசங்களைக் கையேந்திக் கொண்டு அவைகளில் தூபத்தைப் போட்டுத் தங்கள் தங்கள் தூபக்கலசங்களாகிய இருநூற்றைம்பது தூபக் கலசங்களையும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பீர்கள். ஆரோனும் தன் தூபக் கலசத்தை ஏந்திக் கொள்வான் என்றான்.

18. மோயீசனும் ஆரோனும் அங்கு நின்று கொண்டிருக்கையில் அவர்கள் அப்படியே செய்து,

19. சாட்சியக் கூடார வாசலுக்கு முன்பாகச் சனக் கூட்டத்தையெல்லாம் அவர்களுக்கு விரோதமாகக் கூட்டினார்கள். அப்பொழுது ஆண்டவருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

20. ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் பேசிய பிறகு மறுபடியும் அவர்களை நோக்கி:

21. நாம் இவர்களை இக்கணமே சங்கரிக்கும் பொருட்டு நீங்கள் (இருவரும்) இந்தச் சபையை விட்டுப் பிரியுங்கள் என்று கட்டளையிட,

22. அவர்கள் முகங் குப்புற விழுந்து: மாம்சமான யாவருடைய ஆவிகட்குச் சர்வ வல்ல தேவனே! ஒருவன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லோரும் தேவரீருடைய கோபத்திற்கு ஆளாவார்களே! என்று கெஞ்ச,

23. ஆண்டவர் மோயீசனை நோக்கி:

24. சனங்களெல்லாம் கொறே, தாத்தான், அபிரோன் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு அகன்று போகச் சொல்லென்றார்.

25. அப்போது மோயீசன் எழுந்து தாத்தான் அபிரோன் என்பவர்களிடத்தில் போனான். இஸ்றாயேலின் மூப்பர்கள் அவனைப் பின்சென்றார்கள்.

26. மோயீசன் சனங்களை நோக்கி: மகா துங்டர்களான இந்த மனிதர்களுடைய பாவப்பழியில் நீங்கள் வாரிக்கொள்ளப் படாத படிக்கு அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்களென்றான்.

27. அப்படியே ஜனங்கள் அவர்களுடைய கூடாரங்களின் சுற்றுப்புறத்தை விட்டு நீங்கின பின்னரோ, தாத்தானும் அபிரோனும் வெளியே வந்து தங்கள் கூடாரங்களின் பிரவேசத்திலே தங்கள் மனைவிளோடும் பிள்ளைகளோடும் தங்களைச் சேர்ந்தவர்களோடும் நின்று கொண்டிருக்க,

28. அப்பொழுது மோயீசன்: நான் செய்து வருகிற கிரியைகளெல்லாம் செய்வதற்கு ஆண்டவர் என்னை அனுப்பினாரேயன்றி நான் என் மனதின்படியே செய்யவில்லை என்று நீங்கள் எதினால் அறியலாமென்றால்,

29. மனிதர்கள் சாதாரணமாய்ச் சாகிற விதத்தில் இவர்களும் செத்தால், அல்லது மற்றவர்களுக்கு நேரிடும் வியாதி முதலியவை இவர்களுக்கு நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை.

30. ஆனால் கர்த்தர் நூதனம்பண்ணிப் பூமி தன் வாயைத்திறந்து இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படி இவர்களையும் இவர்களுக்குண்டான யாவையும் விழுங்கிப் போடுகிறதானால் அவ்வடையாளத்தினாலே இவர்கள் ஆண்டவரைத் தூ´த்தார்களென்று நிச்சயித்துக் கொள்வீர்கள் என்றான்.

31. அவன் பேசி முடிந்த மாத்திரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த நிலம் பிளந்தது.

32. பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுக்குண்டான யாவற்றையும் விழுங்கிப் போட்டது.

33. அவர்கள் உயிரோடு பாதாளத்தில் விழுந்தார்கள். பூமி அவர்களை மூடிக் கொண்டது. இப்படி அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்து போனார்கள்.

34. அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த இஸ்றாயேலியர் யாவருமோவென்றால் அழிந்து போகிறவர்களுடைய கூக்குரலைக் கேட்கவே: பூமி ஒருவேளை எங்களையும் விழுங்கிப் போடுமோ? என்று ஓடிப் போனார்கள்.

35. அல்லாமலும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்ட ஓர் அக்கினி, தூபத்தைக் காட்டின இருநூற்றைம்பது பேர்களையும் பட்சித்துப் போட்டது.

* அந்நேரத்திலே கொறே என்பவன் தன் கூடாரத்திற் போய் ஒதுங்கினான். தாத்தான், அபிரோன் என்பவர்களோடு பூமியால் விழுங்கப் பட்டான். ஆனால் அவனுடைய புத்திரர்கள் அந்தக் காலத்திலே உட்படாமலிருந்ததினாலேயோ, அல்லது சுவாமிக்குப் பயந்து பொறுத்தலைக் கேட்டுக் கொண்டதினாலேயோ திட்டமாய்த் தெரியாது, அவர்கள் தப்பித்துக் கொண்டதாக 26-ம் அதி. 11-ம் வசனத்தில் எழுதியிருக்கிறது.

36. இதன்பின் கர்த்தர் மோயீசனை நோக்கி:

37. அக்கினிக்குள் அகப்பட்டிருக்கும் தூபக் கலசங்களை எடுத்து அவைகளிலுள்ள அனலை அங்கங்கே கொட்டி விடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயஸாருக்குக் கட்டளை கொடு. ஏனெனில் அந்தத் தூபக் கலசங்கள்

38. பாவிகளின் மரணத்தால் பரிசுத்தமாயின. பிறகு அதுகளில் கர்த்தருக்குத் தூபஞ் சமர்ப்பிக்கப் பட்டதினாலும் அதுகள் பரிசுத்தமுள்ளதென்பதினாலும் அவன் அவற்றைத் தட்டையான தகடுகளாக்கிப் பலிபீடத்தில் பதிக்கக் கடவான். அவைகள் இஸ்றாயேல் புத்திரருக்கு அடையாளமும் குறிப்புமாய்க் காணப்படுமென்றார்.

39. அவ்விதமே ஆசாரியனாகிய எலெயஸார் அக்கினிக்கிரையானவர்கள் கொண்டு வந்த தூபக் கலசங்களை எடுத்துத் தகடாக்கிப் பீடத்திற் பதிய வைத்தான்.

40. அதனாலே அந்நியனும் ஆரோ னின் வம்சத்தான் அல்லாதவனும் ஆண்டவருக்குத் தூபங் காட்டலாகாதென்றும், காட்டத் துணிந்தால் கர்த்தர் மோயீசனோடு பேசின நாளில் கொறே என்பவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் எவ்வாறு சம்பவித்ததோ அவ்வாறே அவனுக்கும் சம்பவித்தாலும் சம்பவிக்கும் என்றம் மேலைக்கு இஸ்றாயேல புத்திரர் அறிக்கையிடப் பட்டார்கள்.

41. மறுநாளிலோவென்றால் இஸ்றாயேல் புத்திரராகிய சபையாரெல்லாரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசி: நீங்கள் கர்த்தருடைய பிரசையை அழித்துப் போட்டீர்கள் (என்றார்கள்.)

42. கலகம் பரம்பி எழும்ப, ஆரவாரமும் மும்மரிக்கக் கண்டு,

43. மோயீசனும் ஆரோனும் உடன்படிக்கைக் கூடாரத்திற்கு ஓடியொதுங்கினர். அவர்கள் அதிற் பிரவேசித்த மாத்திரத்தில் மேகமானது அதை மூடக் கர்த்தருடைய மகிமை காணப்பட்டது.

44. கர்த்தர் மோயீசனை நோக்கி:

45. நீங்கள் இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள். ஒரு நிமிஷத்தில் அவர்களை அதம் பண்ணிப் போடுவோம் என்றார். அவர்கள் தரையில் விழுந்திருக்கையில்,

46. மோயீசன் ஆரோனை நோக்கி: நீ தூபக்கலசத்தை எடுத்துப் பலிபீடத்திலிருக்கிற நெருப்புப் போட்டு அதின்மேல் தூபமிட்டுச் சீக்கிரம் சபையினிடத்தில் போய் அவர்களுக்காக வேண்டிக் கொள். ஏனென்றால் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கோபத்தீ இதோ புறப்பட்டதே, உபாதிக்கத் துடங்கிற்று என்றான்.

47. ஆரோன் அவ்வாறு செய்து சபையின் நடுவிலோடிச் சனங்கள் தீப்பிரளயத்தில் அமிழ்ந்திருக்கக் கண்டு தூபம் காட்டினான்.

48. மரித்தோருக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நன்று கொண்டு சனங்களுக்காகப் பிரார்த்திக்கத் துடங்கினான். பிரார்த்திக்கவே வாதை நின்று போயிற்று

49. அன்று அதம்பண்ணப் பட்டவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால், கொறே என்பவனுடைய கலகத்திலே செத்தவர்கள் போக, இதில் பதினாலாயிரத்து எழுநூறு பேர்கள் செத்தார்கள்.

50. வாதை நிறுத்தப்பட்ட பிறகு ஆரோன் உடன்படிக்கைக் கூடார வாசலிலிருந்த மோயீசனிடத்தில் திரும்பி வந்தான்.