இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 16

பெரிய குரு தேவசந்நிதியில் பிரவேசிக்க வேண்டிய முறைமை--சனங்களின் பாவங்களைச் சுமக்கும் வெள்ளாட்டுக் கடா - பாவ நிவாரணப் பண்டிகை.

1. சாதாரணத் தீக்கட்டியை உபயோகித்துக் கொண்டிருந்த ஆரோனுடைய குமாரர்கள் மரித்து ஆனபிற்பாடு கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. ஆரோன் என்னும் உன் சகோதரன் சாகாதபடிக்குத் திரு ஸ்தலத்திலே, அதாவது: பெட்டகத்தை மூடுகின்ற கிருபாசனத்துக்கு முன்னிருக்கிற திரைக்குட்புறத்திலே, சகல வேளையிலும் வரவேண்டாமென்று அவனுக்குச் சொல்லு. (உள்ளபடி விடையாசனத்தின் மேல் ஒரு மேகத்தில் நாம் காணப்படுவோம்.

3. (அதில் பிரவேசிப்பதற்கு முன்னமே) அவன் செய்யவேண்டியதேதெனில்: பாவ நிவாரணப் பலியாக ஓர் இளங்காளையையுஞ் சர்வாங்கத் தகனப் பலியாக ஓர் ஆட்டுக் கடாவையும் செலுத்தக் கடவான்.

4. மெல்லிய சணல் நூல் சட்டையையும் உடுத்தித் தன் அரைக்குச் சணல் நூல் சல்லடத்தையும் போட்டுச் சணல் நூல் இடைக்கச்சையையும் கட்டித் தலையிலே சணல் நூல் பாகையையுந் தரித்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகள் பரிசுத்த ஆடைகளாதலால் ஸ்நானம் பண்ணித் தான் அவைகளையெல்லாம் அணிந்து கொள்ளுவான்.

5. அப்போது இஸ்றாயேல் புத்திரராகிய சபையாரிடத்திலே பாவப்பரிகாரத்திற்கு இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் சர்வாங்கத் தகனத்திற்கு ஓர் ஆட்டுக்கடாவையும் வாங்கிக் கொண்டு,

6. காளையை ஒப்புக்கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பிரார்த்தித்த பின்னர்,

7. சாட்சியக் கூடார வாசலில் கர்த்தர் சமூகத்திலே அவ்விரண்டு வெள்ளாட்டுக் கடாக்களை நிறுத்தி வைத்து,

8. அவ்விரு கடாக்களைக் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும் பிராயச்சித்தக் கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு

9. கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவைப் பாவநிவாரணப் பலியாகச் செலுத்திய பின்பு,

10. பிராயச்சித்தக் கடாவுக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவைக் கர்த்தர் சந்நதியில் உயிரோடு நிறுத்தி அதின்மேல் மன்றாட்டைப் பொழிந்து அதை வனாந்தரத்திலே ஓட்டிப் போக விடுவான்.

11. இவைகளை வேண்டிய ஆரவாரத்துடன் முறைமைப்படி நிறைவேற்றின பிற்-பாடு அவன் கன்றுக் குட்டியை ஒப்புக் கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பிரார்த்தித்து அதைப் பலியிடுவான்.

12. பீடத்திலுள்ள தணல்களால் துVபக் கலசத்தை நிரப்பி எடுத்துக் கொண்டும் தூபத்திற்காக உண்டாக்கப் பட்ட பரிமணத்தைக் கையில் வாரிக் கொண்டும் திரைக்கு உட்புறத்திலுள்ள மூலஸ்தானத்திறகுள் பிரவேசித்து,

13. தான் சாகாதபடிக்கு நெருப்பின் மேல் பரிமளத் திரவியங்களைப் போட்டு அதுகளின் புகையும் மணமும் சாட்சியப் பெட்டகத்தின் மீதிருக்கிற விடையாசனத்தை மூடும்படி பார்க்கக் கடவான்.

14. அன்றியும் அவன் இளங்காலையின் இரத்தத்திலே கொஞ்சமெடுத்து, ஏழு முறை கிருபாசனத்தின் பேரில் கீழ்த்திசை நோக்கி விரலால் தெளித்திடுவான்.

15. மேலும் ஜனங்களின் பாவ நிவாரணப் பலியாகிய வெள்ளாட்டுக் கடாவைப் பலியிட்ட பின்பு, அதன் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து இளங்காளையின் இரத்தத்தைக் குறித்துக் கற்பிக்கப் பட்டபடி விடையாசன முகமாய்த் தெளித்துப் போடக் கடவான்.

16. இஸ்றாயேல் புத்திரருடைய அசுத்தங்களினிமித்தமும், அவர்களுடைய மீறுதல் முதலிய சகல பாவங்களினிமித்தமும் பரிசுத்த ஸ்தலத்திற்கு உண்டான அவசங்கை நிமித்தமும் திரு ஸ்தலம் (மேற்சொல்லியபடி சுத்திகரம் செய்யப் படும்.) கடைசியிலே ஆசாரியன் அவர்களுடைய வீடுகளின் அசுசியங்களுக்குள்ளே ஸ்தாபிக்கப பட்ட சாட்சியக் கூடாரத்தையும் அவ்விதமாகத்தானே சுத்திகரிக்கக் கடவான்.

17. பிரதான குரு தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும்இஸ்றாயேல் சமஸ்த சபையாருக்காகவும் பிரார்த்திக்கும் படி மூலஸ்தானத்திற்குள் பிரவேசித்தது முதல் அவன் வெளியே வருமளவும் சாட்சியக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.

18. ஆனால் புறப்பட்டுக் கர்த்தருடைய சமூகத்திலிருக்கிற பலிபீடத்தண்டை வந்தபோது, அவன் தனக்காக மன்றாடிக் கொண்டு இளங்காலையின் இரத்தத்திலும் ஆட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சமெடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளின் மேல் சுற்றிலும் வார்த்து,

19. தன் விரலினால் அதை ஏழுதரந் தெளித்து இஸ்றாயேல் புத்திரரின் அசுசியங்கள் நீங்கும்படி சுத்திகரித்து அர்ச்சிக்கக் கடவான். 

20. அவன் இப்படி முலஸ்தானத்தையும் சாட்சியக் கூடாரத்தையும் பீடத்தையும் சுத்திகரம் பண்ணித் தீர்ந்த பின்பு உயிருள்ள வெள்ளாட்டுக் கடாவை ஒப்புக் கொடுப்பான். 

21. அப்பொழுது அவன் அதினுடைய தலைமேல் தன்னிரு கரங்களையும் வைத்து இஸ்றாயேல் புத்திரரின் சகல அக்கிரமங்களையும், எல்லாக் குற்றங்களையும் பாவங்களையும் சங்கீர்த்தனம் பண்ணி அவைகளை ஆட்டுக் கடாவின் தலையில் சுமத்தி, அதை அதற்கு நேமிக்கப் பட்ட ஓர் ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பி விடக் கடவான்.

22. இப்படி வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன் மேல் சுமந்து கொண்டு நிர்மானுஷியமான இடமான வனாந்தரத்திலே போகவிடப் பட்ட பிற்பாடு,

23. ஆரோன் சாட்சியக் கூடாரத்தினுள் திரும்பி வந்து முன்னேதான் மூலஸ்தானத்தினுட் பிரவேசிப்பதற்கு உடுத்தியிருந்த மெல்லிய சணற்பு நூல்ஆடைகளைக் களைந்து அங்கேயே விட்டு விட்டு

24. பரிசுத்த ஓரிடத்திலே ஜலத்தில் ஸ்நானம் பண்ணித் தன் வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு வெளியே வந்து தன் சர்வாங்கத் தகனப் பலியையும், ஜனங்களுடைய சர்வாங்கப் பலியையும் இட்ட பின்பு தனக்காகவும் பிரஜைக்காகவும் பிரார்த்திக்கக் கடவான்.

25. அப்பொழுது அவன் பாவ நிவாரணப் பலியின் கொழுப்பைப் பீடத்தின்மீது தகனிக்கக் கடவான்.

26. சபிக்கப் பட்ட ஆட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்ட ஆளோவெனில், அவன் தன் வஸ்திரங்களையும் தோய்த்து ஸ்நானம் பண்ணிய பின்பு பாளையத்திற்சுள் வருவான்.

27. பாவ நிவிர்த்திக்கென்று பலியிடப்பட்டு மூலஸ்தானத்துக்குள் இரத்தங் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணப் பலியாகிய காளையையும் ஆட்டுக் கடாவையுமோ அதுகளைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய், அதுகளின் தோலையும் மாம்ஸத்தையும் சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக் கடவார்கள்.

28. அன்றியும் அவைகளைச் சுட்டெரித்தவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் முழுகிய பிற்பாடு பாளையத்திற்குள் பிரவேசிப்பான்.

29. இது உங்கட்கு நித்தியப் பிரமாணமாகவிருக்கும். (என்னவெனில்) ஏழாம் மாதம் பத்தாந் தேதியிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்த்தி ஒறுத்தல் செய்யக் கடவீர்கள். நீங்களும் சுதேசியும் உங்களுக்குள் சஞ்சரிக்கும் பரதேசியும் ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்.

30. அன்றுதானே உங்கள் பிராயச்சித்த நாளும் உங்கள் பாவமெல்லாம் விமோசனமாகத் தக்க நாளுமாம். கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமாவீர்கள். உங்கள் சுத்திகரிப்பின் நாள்.

31. அது உங்கட்கு விசேஷித்த ஓய்வு நாள். அந்நாளிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்த்தித் துன்பப் படுத்தக் கடவீர்கள். இது நித்திய கட்டளை.

32. இப்படிப் பட்ட பிராயச்சித்தம் பண்ணுபவனாரெனில், தன் தகப்பனுக்குப் பதிலாய் ஆசாரிய ஊழியத்தைச் செலுத்தும்படி எவன் குருப்பட்டம் பெற்றுத் தன் கரங்களில் பூசப் பட்டு அர்ச்சிக்கப் பட்டானோ அவனே. அவன் மெல்லிய சணல் நூல் அங்கியையும் பரிசுத்த ஆடைகளையும் அணிந்து கொண்டிருப்பான்.

* 32-ம் வசனம். இதிற் குறிக்கப் பட்ட ஆடம்பரமான சுத்திகரத்தை நடத்தப் பெரிய ஆசாரியருக்கு அதிகாரமொழிய மற்ற யாவருக்குமில்லை. அதைச் செய்து முடிப்பதற்காகவே அவர் வருஷத்துக்கு ஒருவிசை, அதாவது ஏழாம் மாதத்தில் பத்தாந் தேதியிலே மூலஸ்தானத்திற்குள் பிரவேசிப்பார். மற்றுமுள்ள நாட்களில் அவர் பரிசுத்தத்திலும் பரிசுத்தமான மூலஸ்தானத்தில் நுழையாமல் அதற்கு முன்னறையிலே மாத்திரம் பிரவேசிப்பார்.

33. மூலஸ்தானமும், சாட்சியக் கூடாரமும், பலிபீடமும், சமஸ்த குருக்களும், சனங்= களும் அவனாலேயே சுத்திகரிக்கப் படுவார்கள்.

34. இப்படி வருஷத்திலேஒரு தரம் நீங்கள் இஸ்றாயேல் புத்திரருக்காகவும் அவர்களுடைய சகல பாவ தோஷங்களுக்காகவும் பிரார்த்திக்கக் கடவீர்கள். உங்களுக்கு அது நித்தியப் பிரமாணமாக இருக்கும் என்று (திருவுளம் பற்றினார்.) இவையெல்லாம் மோயீசன் கேட்டுக் கர்த்தர் தனக்குக் கற்பித்த படியே செய்தான்.