இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 15

போஜனப் பானக் காணிக்கையைக் குறித்த கட்டளை--அறியாமல் செய்த தப்பிதத்துக்காக இட வேண்டிய பலி-ஓய்வு நாளாகிய சாபத் நாளை மீறி நடந்தவன் கல்லெறியுண்டு செத்தது-அங்கியின் குஞ்சத்தைக் குறித்த கட்டளை.

1. கர்த்தர் மோயீசனை நோக்கி: 

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவெனில்: நீங்கள் குடியிருக்கும்படி நாம் உங்களுக்குக் கொடுக்குந் தேசத்தில் நீங்கள் பிரவேசித்த பின்பு,

3. கர்த்தருக்கு விசேஷமான பொருத்தனையாவது உற்சாகத் தானமாவது செலுத்திச் சர்வாங்கத் தகனப் பலியையாகிலும், மற்ற யாதொரு பலியையென்கிலும் அல்லது உங்கள் பண்டிகைகளில் மாடடிலும் ஆட்டிலும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கத் தகனப் பலி முதலியவைகளையும் நீங்கள் செலுத்த வரும்போது,

4. மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கீன் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவை கூட ஒப்புக்கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால் ஏப்பி என்னும் மரக்காலிலே பத்திலொரு பங்கேயாம்.

5. அன்றியும் சர்வாங்கத் தகன முதலிய பலிகளுக்காக அவன் பானப் பலிக்குக் கீன் என்னும் அளவிலே நான்கில் ஒரு பங்கு திராட்ச இரசத்தையும் ஆட்டுக் குட்டியையும் கொண்டு வருவான்.

6. ஆட்டுக்கடாப் பலியானால் பத்தில் இரண்டு பங்கானதும் ஒரு கீனில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணையோடு பிசைந்ததுமான மெல்லிய மாவை போஜனப் பலியாகவும்,

7. கர்த்தருக்குச் சுகந்த மணமாகக் கீனில் மூன்றில் ஒரு பங்கு திராட்ச இரசத்தைப் பானப் பலியாகவும் ஒப்புக் கொடுப்பான்.

8. ஆனால் நீ யாதொரு பொருத்தனை செலுத்துவதற்கு ஒரு மாட்டை சர்வாங்கப் பலியாகவாவது, சாதாரணப் பலியாகவாவது கொண்டு வந்தாயோ,

9. ஒவ்வொரு மாட்டோடு கூட பத்தில் மூன்று பங்கு மாவையும், அதன்மேல் தெளிக்கத்தக்க ஒரு கீன் அளவிலே பேர்ப்பாதி எண்ணையையும் (போஜனப் பலிக்குக் கொண்டு வந்து),

10. கீனில் பாதி திராட்ச இரசத்தையும் பானப் பலிக்கு ஒப்புக் கொடுக்கக் கட வாய்.

11. இவ்விதமாகவே,

12. ஒவ்வொரு மாட்டுக்காகிலும் ஆட்டுக்கடாவுக்காகிலும் ஆட்டுக் குட்டி வெள்ளாட்டுக்குட்டிக்காகிலும் செய்யக் கடவாய்.

13. சுதேசிகளாகிலும் பரதேசிகளாகிலும்,

14. அந்த விதிப்பிரகாரமே பலியிடுவார்கள்.

15. உங்களுக்கும் (உங்களோடு குடியிருக்கிற) அந்நியருக்கும் ஒரே கற்பனையும் பிரமாணமும் இருக்கும் என்றருளிச் செய்தார்.

16. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

17. நீ இஸ்றாயேல் புத்திரராடு சொல்ல வேண்டியதேதெனில்,

18. நாம் உங்கட்குக் கொடுக்கப் போகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

19. அத் தேசத்தின் ஆகாரத் தைப் புசிக்கும்போது அதன் நவபல னாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி பத்திரம் வைக்கக் கடவீர்கள்.

20. அதுபோலப் போர் அடிக்கிற களத்தின் நவபலனாகிய காணிக்கையையும் கர்த்தருக்குச் செலுத்தும்படி பத்திரம் வைக்கக் கடவீர்கள்.

21. பிசைந்த மாவிலேயும் முதற் பலனைக் கர்த்தருக்குச் சமர்ப்பிக்கக் கடவீர்கள்.

22-23. ஆனால் ஒருவேளை கர்த்தர் மோயீசனுக்குச் சொல்லியவைகளிலும் அவர் மோயீசன் முலியமாய் உங்க ளுக்குக் கற்பிக்கத் துடங்கின துவக் கத்திலும் பிற்காலத்திலே அறிவித்தவைகளிலும் நீங்கள் யாதொன்ற அறியாமையினாலே தப்பித் தவறி நடந்திருப்பீர்களாகில்,

24. அல்லது பிரசை அதை மறதியினாலே செய்யாமல் விட்டிருக்குமாகில் அப்படிப் பட்டவர்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனப் பலிக்கு ஒரு பசுவின் கன்றையும், அதற்கேற்ற போஜனப்பலி பானப் பலியையும் முறைமைப்படி கொண்டு வருவதுடன் பாவ நிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் ஒப்புக்கொடுப்பார்கள்.

25. ஆசாரியன் இஸ்றாயேல் புத்திரரின் முழுச்சபைக்காகப் பிரார்த்திப்பான். அப்பொழுது அவர்களுடைள குற்றம் மன்னிக்கப் படும். ஏனெனில் அது அறியாமையினால் செய்யப் பட்டிருந்தது. ஆயினும் அவர்கள் தங்களுக்காகவும், அறியாமற் செய்த குற்றனிமித்தமாகவும் கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலியை ஒப்புக் கொடுக்கக் கடவார்கள்.

26. (அந்தக் குற்றம்) அறியாமையினாலே எல்லாச் சனங்களுக்கும் வந்தாகையால் அது இஸ்றாயேல் புத்திரர் அனைவருக்கும், அவர்கள் நடுவில் சஞ்சரிக்க வந்த அந்நியருக்கும் மன்னிக்கப் படும். 

27. ஒரே ஒருவன் தெரியாமலே பாவம் செய்தானாகில் அவன் த்ன பாவ நிவிர்த்தியாக ஒரு வயதான வெள்ளாட்டை ஒப்புக் கொடுக்கக் கடவான்.

28. அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக அறியாமையினால் பாவம் செய்தவனுக்காக ஆசாரியன் மன்றாடி மன்னிப்புக்குப் பிரார்த்தித்த பின்பு அந்தக் குற்றம் அவனுக்கு மன்னிக்கப் படும்.

29. சுதேசிகளுக்கும் அந்நியர்களுக்கும் அறியாமையினால் செய்த பாவ விஷயத்திலே ஒரே பிரமாணமிருக்கும்.

30. ஆனால் எவனாகிலும் ஆங்காரத்தினாலே துணிந்து யாதொரு பாவத்தைச் செய்தால் அவன் சுதேசியாகிலும் பரதேசியென்கிலும் (கர்த்தருக்குத் துரோகியானதினாலே) தன் சனத்திலிராதபடிக்குக் கொலை செய்யப் படுவான்.

* தேவனையும் மனிதனையும் நிந்தித்து எவன் பணிய மாட்டேன் (எரேமியாஸ் 2:20) என்று சொல்லி ஆங்காரம் பாராட்டி நடக்கிறானோ அவன் பூமிக்கு வெறும் சுமை. அவன் செத்தாலும் நலந்தான்.

31. அவன் கர்த்தருடைய வாக்கியத்தை நிந்தித்து அவருடைய கற்பனையை வியர்த்தமாக்கினமையால் கொலை செய்யப் படுவான். அவன் அக்கிரமம் அவன் தலைமேலிருக்கும் என்றருளினார்.

32. இஸ்றாயேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையிலே சாபத் நாளில் விறகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். 

33. கண்டுபிடித்தவர்கள) அவனை மோயீசன், ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டு வந்து ஒப்பித்தார்கள்.

34. அவனுக்குச் செய்ய வேண்டியது இன்னதென்று தெரியாமல் அவனைக் காவலில் வைத்தார்கள்.

35. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி: அம்மனிதன் நிச்சயமாகச் சாகக் கடவான். சனங்கள் எல்லாரும் அவனைப் பாளையத்தின் புறம்பே கொண்டுபோய் கல்லெறியக் கடவார்கள் என்றார்.

36. அவர்கள் அவனை வெளியே கூட்டிக் கொண்டு போய்க் கல்லாலெறியக் கர்த்தருடைய கற்பனைப்படி செய்தான்.

37. மீளவுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

38. நீ இஸ்றாயேல் புத்திரரோடு பேசி அவர்கள் வஸ்திரங்களின் முனைகளிலே இளநீல நாடாவைத் தைத்துக் குஞ்சங் கட்டித் தொங்கவிட வேண்டுமென்று சொல்லு.

39. (இதன் முகாந்தரமேதெனில்) அவர்கள் அதைப் பார்க்கும்போதெல்லாம் பலவற்றை இச்சிக்கும் விபசாரரைப் போன்ற தங்களுடைய சொந்த மனதிஷ்டங்களையும் கண்களை மருட்டும் ரூபங்களையும் பின்பற்றிப் போகாமல், தாங்கள் ஆண்டவருடைய கட்டளைகளையும்,

40. பிரமாணங்களையும் நினைத்தவர்களாய் அதுகளை நிறைவேற்றவும், பரிசுத்தராகவும் வேண்டுமென்று ஞாபகப் படக் கடவார்கள்.

41. நாம் உங்களுக்குத் தேவனாகிய கர்த்தர்; உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி நாம் உங்களை எஜிப்த்திலிருந்து புறப்படப் பண்ணின ஆண்டவர் என்றார்.