லேவியராகமம் - அதிகாரம் 15

ஸ்திரீ பூமான்களுக்குத் தெரியாமல் உண்டாகும் அசுத்தங்களைக் குறித்து.

1, பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

2. நீங்கள் இஸ்றாயேல் புத்திரரிடத்திற் சொல்லவேண்டியதென்னவெனில், பிரமியம் எவனுக்கு உண்டானதோ அவன் தீட்டுள்ளவனாவான்.

3, அவன் உபஸ்தத்திலே இடைவிடாது பிரமியம் ஊறி ஊறி, மாம்ஸத்தில் ஒட்டிக் கொண்டு அதிகப்பட்டுப் போகிறதைக் கண்டால் அவ்வடையாளத்தினாலே அவனுக்குப் பிரமேகம் உண்டென்று அறியலாம்.

4. பிரமியமுள்ளவன் படுக்கிற படுக்கையும், உட்கார்ந்த எந்த இடமும் தீட்டுள்ளதாகும்.

5. அவனது படுக்கையை எவன் தொட்டானோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தண்ணீரில் முழுகக் கடவான். அவன் சாயந்திரம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

6. அவன் உட்கார்ந்திருந்த இடத்திலே எவன் உட்கார்ந்தானோ அவனுந் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத்தண்ணீரில் முழுகக் கடவான். அவன் சாயந்திரம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

7. அவனுடைய சரீரத்தைத் தொட்டிருப்பவன் எவனோ அவனுந் தன் வஸ்திரத்தைத் தோய்த்துக் குளிப்பான். அவன் சாயந்திரம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

8. பிரமியமுள்ள மனிதன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால் அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தண்ணீரில் முழுகுவான். அவன் சாயந்திரம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

9. அவன் உட்கார்ந்த சேணமும் தீட்டாயிருக்கும்.

10. பிரமியமுள்ளவனுக்குக் கீழ் இருந்தது எதுவோ அதுவெல்லாம் சாயரட்சை வரைக்குந் தீட்டாயிருக்கும். அதில் எதையுஞ் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானும் தண்ணீரிலே முழுகிச் சாயந்தரம் வரைத் தீட்டுப் பட்டிருப்பான்.

11. அப்படிப்பட்ட வியாதியுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவுகிறதற்கு முந்தி மற்றொருவனைத் தொட்டிருப்பானாகில் அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் முழுகிச் சாயந்தரம் வரை தீட்டுப் பட்டிருப்பான்.

12. பிரமியமுள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படக்கடவது. மரத்தினால் அமைந்த பாண்டமோ தண்ணீரில் கழுவப்பட வேண்டியது.

* 12-ம் வசனம். மண்பாத்திரத்திலே அசுத்தங்கள் எளிதிற் பதிந்திருப்பதினாலும் புது மண்பாத்திரத்தைப் பெரிய செலவில்லாமல் கம்பாதிக்கலாமென்பதினாலும், அசுத்தப்பட்ட இத்தகைய பாத்திரத்தையுடைக்கக் கட்டளையிடுகிறது நியாயந்தானே.

13. அவ்விதமான நோயைக் கொண்டவன் சொஸ்தமடைந்தானேயாகில், தான் சுத்தனாயின பின்பு ஏழுநாளை எண்ணிவருவான். அப்புறம் ஊற்று நீரில் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானுங் குளித்தபின் சுத்தனாவான்.

14. எட்டாம் நாளிலோஅவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு மாடப் புறாக் குஞ்சுகளையாவது எடுத்துக் கொண்டு வந்து கர்த்தருடைய சமூகத்திலே சாட்சியக் கூடார வாசலில் வந்து அதுகளைக் குருவுக்குக் கொடுப்பான்.

15. குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் சர்வாங்கத் தகனத்திற்கு மற்றொன்றையும் பலியிட்டுப் பிறகு அந்தப் பிரமியமுள்ளவன் பிரமியத்தினின்று சுத்திகரம் அடையும்படி (குரு) ஆண்டவர் நசந்நிதியில் பிரார்த்திக்கக் கடவார்.

16. ஒருவனிலிருந்து அனுபோக இந்திரியம் கழிந்ததானால் அவன் தண்ணீரிலே முழுகி அந்தி வரையிலும் அசுத்தனாயிருப்பான்.

17. மேலும் அவன் தரித்திருந்த வஸ்திரத்தையும் தோலாடையையும் தண்ணீரில் தோய்ப்பான். அதுவோ அந்தி வரையிலும் அசுத்தமாயிருக்கும்.

18. அவனோடு சயனித்த ஸ்திரீயும் தண்ணீரில் முழுகிச் சாயந்தரம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பாள்.

19. சூதக ஸ்திரீயானவள் தன் இரத்த ஊறலின் நிமித்தம் ஏழுநாள் விலக்கத்திலிருக்கக் கடவாள்.

20. அவளைத் தொட்டிருப்பவன் எவனும் சாயந்தரம் மட்டும் அசுத்தனாயிருப்பான்.

21. அன்றியும் விலக்கமாயிருக்கிற நாட்களில் அவள் எதின்மீது தூங்கி அல்லது உட்கார்ந்திருப்பாளோ அது தீட்டுப்பட்டது.

22. அவளுடைய படுக்கையைத் தொட்டிருப்பவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானுந் தண்ணீரில் முழுகிச் சாயுங்கால மட்டும் தீட்டுப்பட்டிருப்பாள்.

23. அவள் உட்கார்ந்திருந்த (மணை முதலிய) எந்தச் சாமானையும் தொடுபவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் முழுகிச் சாயுங்காலமட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

24. மாதவிடாய் காலத்தில் அவளோடு சயனித்த புருஷன் ஏழுநாளுந் தீட்டுள்ளவனாயிருப்பதுமன்றி அவன் படுக்கும் எவ்விதப் படுக்கையும் தீட்டுப்படும்.

25. ஒரு ஸ்திரீ விலகியிருக்க வேண்டிய காலமல்லாமல் அவளுடைய உதிரம் பலநாள் ஊறிக் கொண்டிருந்தாலும், அல்லது அந்தக் காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருக்கும் பட்சத்திலும் அது கண்டிருக்கும் நாள் எல்லாம் அந்த ஸ்திரீ மாதவிடாய் விலக்கம் போல் விலகி இருக்கக் கடவாள்.

26. அவள் படுத்திருக்கும் எந்தப் படுக்கையும் அவள் உட்கார்ந்திருக்கும் எந்த மணை முதலியவையும் தீட்டுப் பட்டிருக்கும்.

27. இப்படிப்பட்டவைகளைத் தொட்டிருப்பவன் எவனோ அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் முழுகிச் சாயுங்கால மட்டும் அசுத்தனாயிருப்பான்.

28. உதிர ஊறல் நின்று ஆன போது, அவள் தன் சுத்திகரத்திற்காக ஏழு நாள் எண்ணிக் கொண்டு,

29. எட்டாம் நாளிலே தனக்காக இரண்டு காட்டுப் புறாக்களையாவது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது சாட்சியக் கூடார வாசலில் குருவிடம் கொண்டுவரக் கடவாள்.

30. அவன் பாவப்பரிகாரத்திற்கு ஒன்றையும் சர்வாங்கத் தகனத்திற்கு மற்றொன்றையும் பலியிட்டுக் கர்த்தர் சமூகத்திலே அவளுக்காகவும் அவளுடைய அசுசிய உதிர ஊறலினிமித்தமாகவும் பிரார்த்திப்பான்.

31. ஆகையால் இஸ்றாயேல் புத்திரர் அசுசியத்துக்குப் பயப்பட்டுத் தங்கள் நடுவேயிருக்கிற நமது வாசஸ்லத்தை அசுத்தப் படுத்தின பின்பு தங்கள் அசுசியங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று அவர்களுக்குப் புத்தி சொல்லக் கடவீர்கள்.

32. பிரமியமுள்ளவனுக்கும், அனுபோக இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,

33. மாதவிடாயின் நிமித்தமாக விலகியிருக்கிறவளுக்கும், அல்லது மிதமிஞ்சின உதிர ஊறலைக் கொண்டிருக்கிறவளுக்கும் இப்படிப் பட்டவளோடு சயனித்த புருஷனுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.