இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 14

இஸ்றாயேலியர் குழப்பமாய்ப் பேசினதும்--அவர்களை வனாந்தரத்திலே சாவார்கள் என்று தேவன் தீர்ப்புச் சொன்னதும்--கானானையரும் அமலேக்கியரும் அவர்களை முறிய அடித்ததும்.

1. அதைக் கேட்டுச் சனங்கள் எல்லோரும் அன்றிரவில் கூக்குரலிட்டுப் புலம்பினர்.

2. இஸ்றாயேல் புத்திரர் யாவரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்கள்.

3. அவர்களை நோக்கி: நாங்கள் எஜிப்த்திலே செத்துப் போனோமானால் தாவிளை! நாங்கள் பட்டயத்தால் வெட்டுண்டு மடியும்படியாகவும் எங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் பிடியுண்டு கொண்டு போகப் படும்படியாகவும் கர்த்தர் எங்களை அந்தத் தேசத்தில் கொண்டு போவதை விட நாங்கள் இப்பவும் இந்த விஸ்தீரண வனாந்தரத்தில் செத்துப் போகிறது உத்தமமே! என்றார்கள்.

4. பிறகு ஒருவன் ஒருவனை நோக்கி: நமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எஜிப்த்துக்குத் திரும்பிப் போவோமாக என்றார்கள்.

* சீனாயி மலையடிவாரத்திலே சம்பவித்த குழப்பத்திற்கு இது மெத்தவும் சமானமாயிருக்கிறது. இஸ்றாயேலியர் ஓயாமல் முறுமுறுக்கிறதையும் முரண்டடிக்கிறதையும் கண்டுகொண்டு வருகிறோம். தேவன் அவர்களுக்கு எவ்விதப் புத்தி சொல்லி வந்தாலும், எப்படிப்பட்ட தண்டனை செய்தாலும் முதற் கோணல் முற்றும் கோணுமென்பதற்கிசைய அவர்கள் மனந்திரும்பவேயில்லை. அவர்களுடைய மூர்க்கத்தனத்தின் திருஷ்டாந்தம் இனியும் பார்க்கப் போகிறோம். சாமுவேல் காலத்திலே அவர்கள் தேவ இராசாங்கத்தை வேண்டாமென்று மறுத்துத் தங்களுக்குள்ளே ஒருவனை இராசாவாக நியமிக்கும்படி கேட்பார்கள் (1 அரச. 8:5). கடைசியாய் தேவ இரட்சண்ணிய காலத்தில் இராசாதி இராசாவாகிய சேசுக்கிறீஸ்து நாதரை முதலாய் மறுதலித்து: இவன் எங்களுக்கு இராசாவாயிருக்க வேண்டாம் (லூக். 19:14) என்றும், சேஸாரேயன்றி எங்களுக்கு வேறரசனில்லை (அருள்.19:15) என்றும் தூஷணமாய்க் கூக்குரலிடவும் நேரிட்டதென்று அறிவோம்.

5. மோயீசனும் ஆரோனும் இதைக் கேட்டு இஸ்றாயேல் புத்திரரின் முழு சபைக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள்.

6. அப்பொழுது தேசத்தைச் சுற்றிப் பார்த்து வந்தவர்களில் நூனின் குமாரனாகிய ஜோசுவாவும், ஜெப்பனேயின் குமாரனான காலேபும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்து,

7. இஸ்றாயேல் புத்திரராகிய சங்கத்தாரெல்லோரையும் பார்த்து: நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோமே, அந்தத் தேசம் மகா நல்ல தேசம். 

8. ஆண்டவர் நமது பேரில் சனுவாயிருப்பாரானால் அந்தத் தேசத்திற்கு நம்மைக் கொண்டு போய் பாலுந் தேனுமோடுகிற அந்தப் பூமியை அவர் நமக்குக் கொடுப்பார்.

9. நீங்கள் சுவாமிக்கு விரோதமாய்க் கலகம் பண்ணவேண்டாம். அந்தத் தேசத்தின் குடிகளுக்கு நீங்கள் பயப்படவும் வேண்டாம். ஏனெனில் அப்பம் புசிக்கிறது போல் நாம் அவர்களைப் பட்சிக்கலாம். அவர்களுக்குத் தேவசகாயமே கிடையாது. கர்த்தர் நம்மோடேயிருக்கிறார். அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்று சொன்னார்கள்.

10. அப்போது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டு அவர்கள் மேல் கல்லெறிய இருக்கையில் அதோ கர்த்தருடைய மகிமை உடன்படிக்கைக் கூடாரத்தின் மீது இஸ்றாயேல் புத்திரர் அனைவருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

11. கர்த்தர் மோயீசனை நோக்கி: இந்தச் சனங்கள் எதுவரைக்கும் என்னை நிந்திப்பார்கள்? அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நாம் காட்டி வந்த அற்புதங்களையெல்லாம் அவர்கள் கண்டும் எதுவரைக்கும் நம்மை விசுவசியாதிருப்பார்கள்?

12. ஆனபடியால் நாம் அவர்களைக் கொள்ளை நோயினால் தண்டித்துச் சங்கரித்துப் போடுவோம். உன்னையோ அவர்களைப் பார்க்கிலும் பெரிதும் வலியதுமான ஒரு சாதிக்கு அதிபதியாக ஏற்டுத்துவோம் என்றருளினார்.

13. மோயீசனோ கர்த்தரை நோக்கி: எவர்களுடைய நடுவிலிருந்து இந்தச் சனங்களைக் கொண்டு வந்தீரோ அந்த எஜிப்த்தியரும்,

14. இந்தத் தேசத்து வாசிகளும் இதைக் கேட்டு என்ன சொல்லுவார்கள்? அவர்கள் நடுவில் கர்த்தராகிய தேவரீர் இந்தச் சனங்களின் நடுவே வாசம் பண்ணுகிறதையும், இவர்களுடைய கண்களுக்கு முகமுகமாய்த் தெரிசிக்கப் படுகிறதையும் உம்முடைய மேகம் இவர்கள் மேல் நிற்கிறதையும், பகலில் மேகத் தூணிலும், இரவில் அக்கினிமயமான தூணிலும் தேவரீர் இருந்து இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேள்விப்பட்டிருக்கிறார்களல்லோ?

15. தேவரீர் ஒரே மனிதன் கொலைக்கும் கணக்கற்ற மனிதர்களின் கொலைக்கும் வித்தியாசம் ஒன்றும் பாராமல் (இஸ்றாயேலியர்) எல்லோரையும் சாகடிப்பீராகில் அவர்கள் சொல்லப் போவது என்னவென்றால்,

16. கர்த்தர் ஆணையிட்டு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட அசக்தராயிருந்ததினால் அல்லவா அவர்களை வனாந்தரத்திலே கொன்று போட்டார் என்பார்களே.

17. ஆகையால் தேவரீருடைய வல்லபம் தழைத்தோங்கக் கடவதாக. உள்ளபடி தேவரீர் சத்தியமாய்க் கூறியிருக்கிறது என்னவென்றால்,

18. கர்த்தர் பொறுமையும் மிகுந்த கிருபையுமுள்ளவர். அக்கிரமத்தையும் பாவத்தையும் மன்னிக்கிறார். அவர் பிதாக்கள் செய்த அக்கிரமத்தை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை விசாரிக்கிறார். ஆனால் குற்றமில்லாதவர்களை ஆதரித்து வருகிறார்.

19. (ஆ சுவாமி!) தேவரீரை மன்றாடுகிறேன். உம்முடைய வல்லமையுள்ள கிருபையினாலே எஜிப்த்தை விட்டகன்ற நாள் முதல் இந்நாள் வரைக்கும் தேவரீர் இந்தச் சனங்களுக்கு மன்னித்து வந்ததெப்படியோ அப்படியே இப்பவும் இவர்களுடைய அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

20. அதற்குக் கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தோம்.

21. நாம் சீவிக்கிறவர்! பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும்.

22. ஆயினுங் (கேள்): நமது மகிமைப் பிரதாபத்தையும் நாம் எஜிப்த்திலும் வனாந்தரத்திலும் காட்டிய அற்புதங்களையும் தரிசித்திருந்தும் எவர்கள் நம்மை ஏற்கனவே பத்து முறையும் பரிட்சித்து நமது கட்டளைகளை மீறியிருக்கிறார்களோ அம்மனிதரில் ஒருவனும்,

23. நாம் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தைக் காண மாட்டார்கள். அவர்களில் எவர் நம்மை அவமதித்துப் பேசினார்களோ அவர்கள் யாராகத்தானிருந்தாலும் அதைத் தரிசிப்பதில்லை.

24. நம்முடைய தாசனாகிய காலேபோவெனில் அவன் அந்தத் துர்ப்புத்தி யில்லாமல் நற்புத்தியுள்ளவனாகி நம்மைப் பின்பற்றி வந்தானே. அவன் போய்ச் சுற்றிப் பார்த்த தேசத்திலே அவனைச் சேரப் பண்ணுவோம். அவனுடைய சந்ததியார் அதனைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

25. அமலேக்கியரும் கானானையரும் இப்பள்ளத்தாக்குகளில் குடியிருக்கிறபடியால் நாளைக்கு நீங்கள் பாளையம் வாங்கி செங்கடலுக்குப் போகும் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் பிரயாணம் பண்ணுங்கள் என்றருளினார்.

26. பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

27. பெரிய துஷ்டராகிய இந்தச் சனங்கள் எதுமட்டும் நமக்கு விரோதமாய் முறுமுறுப்பார்கள்? இஸ்றாயேல் புத்திரருடைய முறைப்பாடுகளைக் கேட்டுக் கொண்டோமே.

28. ஆகையால் நீ அவர்களோடு சொல்லுவதென்னவென்றால், கர்த்தர் சொல்லுகிறதாவது: நாம் சீவிக்கிறவர். நீங்கள் நமது செவிகள் கேட்கச் சொல்லிய பிரகாரமே உங்களுக்குச் செய்வோம். 

29. இந்த வனாந்தரத்தில்தானே உங்கள் பிரேதங்கள் கிடக்கும். உங்களில் இருபது வயது உள்ளவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமாக எவர்கள் எண்ணப்பட்டு நமக்கு விரோதமாய் முறுமுறுத்துப் பேசினார்களோ,

* இந்த ஆக்கினை இருபது வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் மாத்திரமே விதிக்கப் பட்டது. அன்றியும் லேவி கோத்திரத்தார் இந்தக் கலகத்தில் உட்படவில்லை. ஆதலால் அவர்களுகம் தப்பிப் போனார்கள். ஆனது பற்றி ஆரோனுடைய புத்திரனாகிய எலெயஸார் என்பவன் வாக்குத்தத்த பூமியில் பிரவேசிப்பதை மேலைக்குக் காண்போம். (ஜோசுவா ஆகமம் காண்க.)

30. ஜெப்பனேயின் குமாரன் காலேப், நூனின் குமாரன் ஜோசுவா என்பவர்களைத் தவிர, மற்றவர்களாகிய உங்களில் எவனும் நாம் உங்களைக் குடியேறப் பண்ணுவோமென்று ஆணையிட்டு வாக்குத்தத்தம் பண்ணின அந்தத் தேசத்திலே பிரவேசிப்பதில்லை.

31. சத்துருக்கள் கையில் அகப்படுவார்களென்று உங்கள் பிள்ளைகளைக் குறித்துச் சொன்னீர்களே, நாம் அவர்களையே அதில் பிரவேசிக்கச் செய்வோம். நீங்கள் அசட்டை பண்ணின பூமியை அவர்கள் தரிசிக்கப் பெறுவார்கள்.

32. உங்கள் பிரேதங்கள் இந்த வனாந்தரத்தில் கிடக்கும்.

33. அவைகள் வனாந்தரத்திலே விழுந்து அழிந்து தீருமட்டும் உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து உங்கள் விசுவாச காதகத்தைச் சுமந்து போவார்கள்.

34. நீங்கள் அத்தேசத்தைச் சுற்றிப் பார்த்த நாற்பது நாள் கணக்கின்படியே ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாகக் கணிக்கப் படும். அப்படியே நீங்கள் நாற்பது வருஷமாய் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து கொள்ளுவதினால் நமது பழியைக் கண்டுணருவீர்கள்.

35. நமக்கு விரோதமாய் எழும்பின இந்த மகாப் பொல்லாத சனங்களுக்கு நாம் பேசின பிரகாரமே செய்வோம். அவர்கள் இவ்வனாந்தரத்திலே வாடி வதங்கிச் சாவார்கள்.

36. ஆகையால் அந்தத் தேசத்தைக் சோதித்துப் பார்க்கும்படி மோயீசனால் அனுப்பப் பட்டுத் திரும்பி அதைக் குறித்துத் துர்ச்செய்தியைக் கொண்டு வந்து சனமெல்லாம் மோயீசனுக்கு விரோதமாய்ப் பேசும்படி காரணமாயிருந்தவர்கள் ஆகிய,

37. அவர்களெல்லோரும் கர்த்தருடைய சமூகத்தில் வாதையினால் செத்தார்கள்.

* 1 கொரிந்த். (10:10), யூதித் (8:25) வாசிக்கவும்.

38. தேசத்தைச் சோதித்துப் பார்க்கப் போயிருந்த சமஸ்தரிலும் நூனின் குமாரனாகிய ஜோசுவா, ஜெப்பனேயின் குமாரனாகிய காலேப் என்பவர்கள் மாத்திரம் உயிர் வாழ்ந்தார்கள்.

39. மோயீசன் இவ்வாக்கியமெல்லாம் இஸ்றாயேல் புத்திரர் அனைவரோடும் சொலலிய பொழுது சனங்கள் மிகவே பிரலாபித்தழுதார்கள்.

40. அதிகாலமே அவர்கள் எழுந்து: நாங்கள் பாவஞ் செய்தோம். கர்த்தர் பேசின ஸ்தலத்திற்குப் போக முஸ்திப்பாயிருக்கிறோம் என்று மலையின் உச்சியிலேறத் துணிந்தார்கள்.

41. மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருடைய வாக்கியத்தை மீறுகிறதென்ன? இது உங்களுக்கு வாய்க்குமா? இல்லை.

* தேவ வரப்பிரசாதத்தை நாம் புறக்கணித்தால் அது நீங்குமே யன்றிப் பிறகு தபஞ் செய்தாலும் திரும்பி வருமென்பது மெத்த சந்தேகம். சுய மனதின்படி ஒழுகத் தேடினோமாகில், சுவாமி நம்மைக் கை விட்டு விடுவதால் நாம் பசாசினாலே ஆட்டப் பட்ட பொம்மையாகிக் கெட்டுப் போகத் திரிவோமென்பதற்கு இங்கு சொல்லப் பட்ட திருஷ்டாந்தமே அத்தாட்சி.

42. நீங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிபடாதபடிக்கு ஏறிப் போகாதீர்கள். கர்த்தர் உங்களோடு இல்லை.

43. உங்களுக்கு முன்னே அமலேக்கியரும் கானானையரும் இருக்கிறார்கள். நீங்கள் கர்த்தருக்குப் பணியாததால் கர்த்தர் உங்களோடு இருக்கவே மாட்டார். ஆகையால் நீங்கள் அவர்களுடைய பட்டயத்துக்கு இரையாய்ப் போவீர்கள் என்றான்.

44. ஆனால் அவர்கள் குருட்டாட்டமாய் மலையுச்சியில் ஏறினார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டகமும் மோயீசனும் பாளையத்தை விட்டுப் போகவில்லை.

45. அப்பொழுது மலையில் வசித்திருந்த அமலேக்கியரும், கானானையரும் இறங்கி வந்து அவர்களைத் தோற்கடித்து வெட்டி ஓர்மா மட்டுந் துரத்தியோட்டினர்.