இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 13

வாக்குத்தத்தப் பூமியைப் பார்வையிட வேவுக்காரர் அனுப்பப் பட்டது-அவர்கள் திரும்பி வந்து ஆச்சரியத்துக்குரிய செய்தி சொன்னதும்.

1. இப்பால் சனங்கள் ஆயஸரோட்டில் நின்று புறப்பட்டுப் போய், பாரானென்னும் வனாந்தரத்திலே கூடாரங்களை அடித்தார்கள்.

2. அங்கே கர்த்தர் மோயீசனை நோக்கி:

3. நாம் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான் பூமியைச் சுற்றிப் பார்க்கும்படி நீ மனிதரை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவை அனுப்பக் கடவாய் என்றார்.

* மோயீசன் தேவனுடைய வாக்கியத்தை உறுதியாய் நம்பினவரன்றி ஒருக்காலும் அதைக் குறித்துச் சந்தேகமுற்றவரல்ல. ஆனால் இஸறாயேலியரில் அதிபதிகளாயிருந்தவர்கள் கானான் பூமியைப் பார்க்கும்படி மிகவும் ஆசையாயிருந்தார்கள். அவர்களைத் திடப்படுத்துவதற்குக் கர்த்தர் மோயீசனை நோக்கி: கானான் தேசத்திற்கு வேவுக்காரரை அனுப்பென்று கட்டளையிட்டார்.

4. மோயீசன் கர்த்தர் கற்பித்திருந்தபடி செய்து பாரான் வனாந்தரத்தினின்று பெரியத்தனமுள்ள புருஷர்களை அனுப்பினான். அவர்களுடைய பெயர்களாவன:

5. ரூபன் கோத்திரத்தில் யஸக்கூரின் குமாரனாகிய சம்முவா,

6. சிமையோன் கோத்திரத்தில் ஊறியின் குமாரனாகிய ஸப்பக்.

7. யூதா கோத்திரத்தில் ஜெப்போனேயின் குமாரனாகிய காலேப்,

8. இசாக்கார் கோத்திரத்தில் ஜோஸேப்பின் குமாரனாகிய இசால்,

9. ஏப்பிறாயீம் கோத்திரத்தில் நூனின் குமாரனாகிய ஓசை,

10. பெஞ்சமீன் கோத்திரத்தில் ரப்புவின் குமாரனாகிய பால்த்தி,

11. சபுலோன் கோத்திரத்தில் சோடியின் குமாரனாகிய கெதியேல்,

12. ஜோசேப் கோத்திரத்தில் மனாஸே வம்சத்தானாகிய சுஸியின் குமாரன் கக்தி,

13. தான் கோத்திரத்தில் ஜெமல்லியின் குமாரனாகிய அம்மியேல்,

14. ஆஸேர் கோத்திரத்தில் மிக்காயேலின் குமாரனாகிய ஸ்தூர்,

15. நேப்தலி கோத்திரத்தில் வாப்ஸியின் குமாரனாகிய நாகாபி,

16. காத் கோத்திரத்தில் மாக்கியின் குமாரனாகிய குயேல்,

17. இவர்களையே மோயீசன் பூமியைச் சுற்றிப் பார்க்க அனுப்பினான். அப்போது நூனின் குமாரனாகிய ஓசை என்பவனை ஜோசுவாவென்றழைத்தான்.

18. மோயீசன் அவர்களைக் கானான் தேசத்தைப் பார்த்து வரும்படி அனுப்புகையில் அவர்களை நோக்கி: நீங்கள் தெற்கே போய் மலைகளிடத்தில் சேர்ந்தபோது,

19. அந்தத் தேசம் எப்படிப்பட்டதென்று நன்றாய்ப் பாருங்கள். அதில் குடியிருக்கிறவர்கள் எவ்வித சனம்; பலசாலிகளோ, பலவீனர்களோ; குடிகள் சிலரோ அநேகரோவென்றும்,

20. பூமி நல்லதோ கெட்டதோவென்றும், பட்டணங்கள் எவைகள்? கோட்டைமதில் சுற்றியவைகளோ அல்லவோவென்றும்,

21. நிலவாசி, வளப்பமோ இளப்பமோ? மரங்கள் அநேகமுண்டோ இல்லையோவென்றும் நுணுக்கமாய்; பார்த்துக் கொள்ளுங்கள். தைரியசாலிகளாயிருங்கள். தேசத்தின் காய் கனிகளிலும் சிலதைக் கொண்டு வாருங்கள் என்றான். அக்காலமோ திராட்சைச் செடி முதற் பழங்கள் பழுக்கிற காலமாயிருந்தது.

22. அவர்கள் போய்ச் சீனா வனாந்தரத்திலிருந்து எமாத்துக்குப் போகும் வழியாகிய ரொகோப் வரையிலும் தேசத்தைச் சுற்றிக் கொண்ட பிற்பாடு,

23. தெற்கே திரும்பிச் சென்று ஏபிரோனில் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கின் புத்திரராகிய அக்கிமான், சீஸயி, தால்மயி என்பவர்கள் இருந்தார்கள். ஏனென்றால் ஏபிரோன் எஜிப்த்திலுள்ள தனிம் என்னும் நகரத்துக்கு முன்னமே ஏழு வருஷங்களாய்க் கட்டப் பட்டிருந்ததாம்.

24. பின்பு அவர்கள் திராட்சைக்குலை என்னும் ஆறுமட்டும் போய் ஒரு திராட்சச் செடியில் ஒரு குருத்துங் குருத்தோடு ஒரு பழத்தையும் அறுத்து அதை இரண்டு பேர் ஒரு தண்டில் கட்டி எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலுள்ள மாதுளம் பழங்களிலும் சீமை அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள்.

25. அவ்விடத்திலிருந்து இஸ்றாயேல் புத்திரர் திராட்சப் பழங் கொண்டு வந்ததால் அந்த ஸ்தலமானது நேகலஸ்கோல், அதாவது: திராட்சக் குலையாறு என்னப்பட்டது.

26. அவர்கள் தேசத்தை முழுவதும் சுற்றிப் பார்த்து நாற்பது நாள் சென்ற பின்பு திரும்பி,

27. காதேஸிலிருக்கும் பாரான் வனாந்தரத்திற்கு வந்து மோயீசன், ஆரோன் மற்றுமுள்ள இஸ்றாயேலிய புத்திரர் ஆகிய சபையார் எல்லோரையும் பார்த்து அவர்களோடுஞ் சனங்களோடும் பேசிக் கொண்டு தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

28. அவர்கள் மோயீசனை நோக்கி: நீர் எங்களை அனுப்பிய தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலுந் தேனும் பொழிகிற தேசம். இதற்கு அத்தாட்சி இந்தக் கனிகளே.

29. ஆனாலும் அந்தத் தேசத்திலே குடியிருக்கிற சனங்கள் மகா வலியவர். அநேகப் பட்டணங்கள்பெரியவைகளாயும் அரணிப்புடையதாகவும் இருக்கின்றன. அவ்விடத்தில் ஏனாக்கின் வமிசத்தாரையும் கண்டோம்.

30. அமலேக்கியர் தென்புறத்திலும், ஏட்டையர், ஜெபுசையர், அமோறையர் மலையிலுள்ள நாட்டிலுமே வாசம்பண்ணுகிறார்கள். கானானையரோவெனில் கடல் அருகிலும் யோர்தான் நதி சுற்றியோடுகிற நாடுகளிலும் குடியிருக்கி றார்கள்.

31. அப்பொழுது மோயீசனுக்கு விரோதமாய்ச் சனங்கள் முறுமுறுத்துப் பேசுவதைக் கேட்டுக் காலேப் என்பவன் அவர்களை அமர்த்தத் தக்கதாக: நாம் உடனே போய் அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுவோமாக. சுளுவிலே அதை வசப்படுத்திக் கொள்ளலாம் என்றான்.

32. ஆனால் அவனோடு போய்வந்த மனிதரோவெனில்: ஏது? நாம் போய் அந்தச் சனங்களோடு போராட நம்மாலே முடியாது. நம்மைப் பார்க்கிலும் அவர்கள் பலவான்கள் என்றார்கள்.

33. மறுபடியும்: நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோமே, அந்தத் தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசமாம். நாங்கள் அதிலே கண்ட சனங்கள் மகா நெட்டைய ஆட்களாம்.

34. அங்கே நாங்கள் கண்ட ஏனாக்கின் சந்தான புத்திரரில் சிலர் எங்குமில்லாத இராட்சதராயிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோமேயாம் என்றார்கள்.