இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 12

மரியாளும் ஆரோனும் செய்த கலகத்துக்காகத் தண்டிக்கப் பட்டார்கள்.

1. எத்தியோப்பிய ஸ்திரீயை மோயீசன் விவாகம் பண்ணியிருந்தபடியினாலே மரியாளும் ஆரோனும் அவனுக்கு விரோதமாய்ப் பேசி,

* மதியான் நாட்டிற்கு எத்தியோப்பியாவென்னும் பெயரும் வழங்கினதினால் இவ்வசனத்தில் செப்பொறாள் எத்தியோப்பிய ஸ்திரீ என்னப் பட்டது.

2. கர்த்தர் மோயீசனைக் கொண்டு மாத்திரமா பேசினார்? எங்களைக் கொண்டும் அவர் பேசவில்லையா? என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

3. (மோயீசனோவெனில் பூமியிலுள்ள சகல மனிதர்களைப் பார்க்கிலும் அதிக சாந்த குணமுள்ளவனாயிருப்பான்.)

4. சடுதியில் (கர்த்தர்) அவனையும் ஆரோன், மரியாள் என்பவர்களையும் நோக்கி: நீங்கள் மூன்று பேருமே உடன்படிக்கைக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டு வந்திருக்க,

5. கர்த்தர் மேகத் தூணிலிறங்கி ஆலயப் பிரவேசத்தில் நின்று கொண்டவராய் ஆரோனையும் மரியாளையும் அழைத்தார். இவர்கள் இருவரும் போனார்கள்.

6. அப்பொழுது அவர்: நம்முடைய வார்த்தைகளை உற்றுக் கேளுங்கள். உங்களுக்குள்ளே ஒருவன் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருந்தால் அவனுக்குத் தெரிசனத்தில் நம்மைக் காண்பிப்போம். அல்லது சொப்பனத்திலே அவனோடு பேசுவோம்.

7. நம்முடைய தாசனாகிய மோயீசனோ அப்படிப்பட்டவனல்லவே. அவன் நம்முடைய வீட்டிலெங்கும் அதி விசுவஸ்தனாயிருக்கிறான்.

* 6-7-ம் வசனம். மோயீசனின் மகிமைப் பிரதாபத்தை மநுஷன் புகழ வேண்டியதில்லை. இதோ கடவுளே அவரைப் புகழ்ந்தார். (எபிரே. 3:2).

8. நாம் அவனோடு முகமுகமாய்ப் பேசுகிறோம். நம்மை அவன் மறைவிலாவது போலியிலாவது காணாமல் பிரத்தியட்சமாகவே நம்மைத் தரிசிக்கிறான். ஆதலால் நீங்கள் நமது ஊழியனாகிய மோயீசனை விரோதித்துப் பேச அஞ்சாதிருப்பானேன் என்று சொல்லி,

9. அவர்கள் மேலே சினங்கொண்டு மறைந்தனர்.

10. அவர்கள் மறைந்தவிடத்தில் கூடாரத்தின் மீதிருந்த மேகம் நீங்கிப் போயிற்று. நீங்கவே இதோ மரியாள் உறைந்த பனிபோல் வெண்குஷ்டம் பிடித்த தேகத்தையுடையவளாகக் காணப்பட்டாள். ஆரோன் அவளைப் பார்த்துக் குஷ்டரோகம் அவளை முடினதென்று கண்டவுடனே,

11. மோயீசனை நோக்கி: ஆண்டவனே! நாங்கள் புத்தியில்லாமல் கட்டிக் கொண்ட இந்தப் பாவத்தை எங்கள் மேல் சுமத்த வேண்டாமென்று பிரார்த்திக்கிறேன்.

12. இவள் செத்தவளைப் போலவும், தாயின் கர்ப்பத்திலிருந்து செத்து விழுந்த பிள்ளையைப் போலவும் ஆகாதிருப்பாளாக.! இதோ ஏற்கனவே அவள் சரீரத்திலே பாதி தசை தின்னப்பட்டிருக்கிறதே என்றான்.

13. அப்பொழுது மோயீசன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: என் தேவனே! உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைச் சொஸ்தமாக்கியருளும் என்றான்.

* மோயீசனுக்கு இடைக்கிடையாய் மகா துன்பங்கள் நேரிட்டாலும் அவர் கர்த்தருடைய சித்தத்துக்கு அமைந்து அவைகளைப் பொறுமையுடன் அனுபவிப்பார். ஏனெனில் அவருக்குத் தெரியும் துன்பங்களின் அருமை. அர்ச். சின்னப்பர் சொல்லுமாப்போல் உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரிட்சையையும், பரிட்சை நம்பிக்கையையும் உண்டாக்கும். நம்பிக்கையோ நம்மை வெட்கப் படுத்தாது. (ரோம.5:3,5).

14. அதற்குக் கர்த்தர்: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பியிருந்தால், அவள் ஏழு நாளாகிலும் வெட்கப்பட்டுக் காணாமலிருக்க வேண்டுமன்றோ? அது போலவள் ஏழுநாள் பாளையத்தின் புறம்பே விலக்கப் பட்டிருக்கட்டும். பிறகு திரும்ப அவளைச் சேர்க்கலாமென்றார்.

15. அப்படியே மரியாள் ஏழு நாளும் பாளையத்திற்குப் புறம்பே விலக்கமாயினாள். அவள் சேர்த்துக் கொள்ளும் வரைக்கும் சனங்கள் பிரயாணப்படாமல் அங்கேதானிருந்தார்கள்.