லேவியராகமம் - அதிகாரம் 11

மிருகங்களிலும், மீன்களிலும், பறவைகளிலும் எது சாப்பிடத் தகும், எது சாப்பிடத் தகாதென்பதைக் குறித்து.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

2. நீங்கள் இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவென்றால்: பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தகும் சீவசெந்துக்களாவன:

3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயும், அசைபோடுகிறதாயும் இருக்கிறதெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.

4. ஆனால் ஒட்டகம் முதலிய ஜீவன்களைப் போல அசை போட்டும் குளம்பைக் கொண்டிருந்தும், விரிகுளம்புள்ள தல்லாததெல்லாம் நீங்கள் சாப்பிடாமல் அசுத்தமுள்ளவைகளாக எண்ணுவீர்கள்.

5. (இவ்வாறு) அசை போடுகிற குழிமுயல் விரிகுளம்புள்ளதல்ல ஆதலால் அது அசுத்தமானது.

6. முயலும் அப்படியே. ஏனெனில் மது அசைபோட்டாலும் அதற்கு விரிகுளம்பு இல்லை.

7. பன்றியும் அசுத்தமானது. அது விரிகுளம்புள்ளதாயினும் அசைபோடாது.

8. அவைகள் உங்களுக்கு அசுத்தமானவைகளாதலால் அதுகளின் இறைச்சிகளைப் புசிக்கவும் அதுகளின் செத்த உடல்களைத் தொடவும் வேண்டாம்.

9. சலங்களில் சனித்திருக்கிறவைகளுக்குள்ளே சாப்பிடத் தக்கவைகளாவன: கடல்கள், ஆறுகள், குளங்கள் ஆகிய தண்ணீர்களிலிருந்து சிறகுகளையும் செதில்களையும் உடையதெதுவோ அவையெல்லாம் புசிக்கலாம்.

10. ஆனால் சலங்களில் அசைவாடிச் சீவிக்கிற பிராணிகளில் சிறகுகளும் செதில்களுமில்லாததெல்லாம் உங்களுக்கு அருவருப்புக்குரியதாயும்,

11. வெறுக்கத் தக்கதாயும் இருக்கக் கடவது. அதுகளின் மாம்ஸத்தையும் நீங்கள் புசித்தலாகாது. அதுகளின் செத்த உடலையும் தொடப்படாது.

12. சலங்களில் சிறகுகளும் செதில்களும் இல்லாததெல்லாம் தீட்டுள்ளதாம்.

13. பறவைகளில் நீங்கள் சாப்பிடக் கூடாமல் விலக்க வேண்டியவைகளாவன: ஆகிலப் புள்ளும், கிறீப்பென்னும் கழுகும், கடலுராஞ்சிக் கழுகும்,

14. பருந்தும், சகலவித இராசாளியும், 

15. சகலவிதக் காக்கைகளும்,

16. தீக்குருவியும், கூகையும், நாரையும், வல்லூறும் இதைச் சேர்ந்தவைகளும்,

17. கோட்டானும், மீன்கொத்தியும், இபிஸ் நாரையும்,

18. அன்னமும் கூழை நாரையும், சிவந்த காலும் மூக்குமுள்ள குருகும்,

19. கொக்கும், சகலவித காதிரியானும, புழுக் கொத்தியும், வெளவாலும்,

20. பறவைகளுக்குள் நாலுகாலால் நடமாடுவதெல்லாம் உங்களுக்கு அரோசிகமாயிருப்பதாக.

21. ஆயினும் நாலுகாலால் நடமாடியும் எவைகள் தரையிலே தத்திப் பாயும்படி அதிநெடும் பின்னங்கால்களை யுடையதோ அவைகளை,

22. புசிக்கலாம். உதாரணம்: பிருக்குஸ் சாதியாயிருக்கிதையும் அதாக்குஸ் ஒப்பியமாக்குஸ் வெட்டுக்கிளி அததுகளின் சாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

23. பறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கும்.

24. அப்படிப் பட்டவைகளின் செத்த உடலைத் தொட்டிருப்பவன் எவனோ அவன் தீட்டுப் பட்டு அந்திகாலமட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான்.

25. அவைகளின் உடலை யாதாமொருவன் அவசரமாய்ச் சுமந்திருப்பானானால் அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துக் கழுவக் கடவான். அந்தி நேரமட்டுந் தீட்டுப் பட்டிருப்பான்.

26. நகத்தையுடையதாயிருந்தாலும் இரு பிளவான குளம்பில்லாமலும், அசைபோடாமலும் இருக்கிற சீவசெந்துக்கள் யாவும் அசுத்தமாயிருக்கும்.

27. சதுர்ப்பத சகல சீவன்களுக்குள்ளும் எவைகள் உள்ளங்காலை யூன்றி நடக்குமோ அவையெல்லாம் அசுத்தமானவைகள். அதுகளின் உடலைத் தொட்டிருப்பவன் எவனோ அவன் அந்திநேரம் வரையிலும் அசுத்தனாயிருப்பான்.

28. அப்படிப் பட்டவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக் கடவன். அவன் சாயுங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். இவைகள் எல்லாம் உங்களுக்குத் தீட்டாயிருக்கக் கடவது.

29. அல்லாமலும், பூமியில் நடமாடும் பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமென்றெண்ண வேண்டியவை யாதெனில்: பெருச்சாளியும், எலியும், முதலையும், இவைகளின் சாதியாயிருக்கிறதெல்லாமும்,

30. உடும்பும், பச்சோந்தியும், அரணையும், ஓணானும், அகழெலியும்,

31. ஆகிய இவைகளெல்லாம் அசுத்தமானவைகள். இவைகளில் செத்த உடலைத் தொட்டிருப்பவன் எவனோ அவன் அந்தி நேரம் வரையிலும் அசுத்தனாயிருப்பான்.

32. அதுகளின் செத்த உடல் எதின்மேல் விழுந்ததோ, அது தீட்டுப் பட்டதாகும். ஆதலால் மரப் பாத்திரமுஞ் சரி, வஸ்திரமுஞ் சரி, தோலுஞ்சரி, மயிர்க்கம்பளியும் சரி, எந்த வேலையும் செய்வதற்கேற்ற ஆயுதங்களும் சரியே. அவையெல்லாம் தண்ணீரில் கழுவ வேண்டும். அவைகள் சாயந்தரம் வரைக்கும் தீட்டாயிருக்கும். (தண்ணீரில் போட்ட பிறகு) அதுகள் சுத்தமாகும்.

33. அதுகளில் யாதொன்று யாதொரு மண் பாத்திரத்துக்குள்ளே விழுந்திருந்தால் அந்த மண்பாத்திரம் தீட்டுப் பட்டதாதலால் அதை உடைத்துப் போட வேண்டும்.

34. புசிக்கத் தக்கப் பதார்த்தத்தின் மேல் (மேற்சொல்லிய பாத்திரத்) தண்ணீர் பட்டால் அது அசுத்தமாகிறது. குடிக்கத் தக்க எவ்விதப் பாத்திரத்தின் எந்தப் பானமும் அசுத்தமாகும்.

35. அவைகளின் செத்த உடலில் யாதொன்று எதின்மேல் விழுந்ததோ அதுவும் அசுத்தமாகும். அடுப்பானாலும், தொட்டியானாலும் அசுத்தமானதினால் அதுகள் தகர்க்கப் படுவதாக்.

36. ஆனால் நீரூற்றுக்களும் கேணிகளும் ஏரி முதலியவைகளும் தீட்டுப் படாது. அதுகளிலுள்ள செத்த உடலைத் தொட்டிருப்பவனோ அசுத்தப் பட்டவனாவான்.

37. அது விதைக்குந் தானியத்தின் மேல் விழுந்தாலும் அது தீட்டுப் படாது.

38. ஆனால் தண்ணீர் வார்க்கப்பட்ட விதையின்மேல் செத்த உடலில் யாதொன்று விழுந்ததானால் அது அப்போதே தீட்டாகி விடும்.

39. நீங்கள் புசிக்கத்தக்க யாதொரு பிராணி செத்தால் அதின் உடலை எவன் தொட்டானோ அவன் சாயந்தரமட்டும் தீட்டுப் பட்டவனாயிருப்பான்.

40. அதின் மாம்ஸத்தைப் புசித்தவன் அல்லது அதைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துக் கழுவக் கடவான். அந்தி நேரம் வரைக்கும் அவன் தீட்டுப் பட்டவனாயிருப்பான்.

41. பூமியின் மேல் ஊருகிற சீவன்களெல்லாம் உங்களுக்கு வெறுக்கத்தக்கதாயிருக்கக் கடவது. அவை புசிக்கலாகாது.

42. நாலு காலும் அல்லது பல காலுமுடைய எந்தப் பிராணிகள் வயிற்றினால் நகருகிறதோ, அல்லது தரையில் ஊருகிறதோ, அவ்விதப் பிராணிகளை நீங்கள் புசிக்க வேண்டாம். ஏனெனில் அது வெறுக்கத் தக்கதாயிருக்கின்றது.

43. உங்கள் ஆத்துமங்களை அசுத்தப் படுத்தாதேயுங்கள். நீங்கள் அசுத்தராய்ப் போகாதபடிக்கு அவைகளில் யாதொன்றையும் தொடாதேயுங்கள்.

* 43-ம் வசனம். சர்வேசுரன் தமக்குரிய சனங்கள் விசேஷ பிரஜை பரிசுத்ததனத்தைக் காத்து அனுசரிக்கும்படிக்கு அவர் சித்தமுள்ளவரா யிருந்ததுமல்லாமல், அவர்கள் அஞ்ஞானிகளோடு சேர்ந்து போஜனம் பண்ணினால் இவர்களுடைய துர்மாதிரிகை துர்ப்போதனைக்குள்ளாகி மெள்ள மெள்ள விக்கிரகாராதனைப் பாதகத்தில் விழத் திரிவார்களாக்குமென்று அறிந்து சுத்தத்துக்கும் நல்ல சவுக்கியத்திற்கும் விரோதமான பற்பல உணவுகளை உண்ணக் கூடாதென்று விலக்கம் பண்ணினாரென்றறிக. அப்படிப் பட்ட விலக்கம் கிறீஸ்துவர்களுக்கில்லை என்றாலும், அவர்கள் சுத்தபோஜன நாட்களில் மாமிசம் சாப்பிடாமலும், ஒரு சந்தி நாட்களில் ஒருசந்தியாயிருக்கவும் வேண்டியதன்றி, பிறருக்குத் துர்மாதிரிகை கொடுக்காதபடிக்கு மனதறியப் பசாசுக்களுக்குப் படைக்கப் பட்ட மாவையும், இறைச்சி முதலிய உணவுகளையும் புசிக்கலாகாதென்று அவர்கள் எச்சரிக்கையாயிருக்கக் கடவர்.

44. ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தர்களாயிருங்கள். தரையின் மேல் ஊருகிற எவ்விதப் பிராணிகளிலும் உங்கள் ஆத்துமாக்களைத் தீட்டுப் படுத்தாதேயுங்கள்.

45. ஏனென்றால் உங்களுக்கு நாம் தேவனாகவிருக்கும்படி உங்களை எஜிப்த்து நாட்டிலிருந்து புறப்படச் செய்த கர்த்தரானவர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்கள்.

46. மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சலத்தில் அசைவாடுகிற சகல சீவசெந்துக்களுக்கும் தரையின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.

47. நீங்கள் சுத்தமானதுக்கும் அசுத்தமானதுக்கும் புசிக்கத் தக்க செந்துக்களுக்கும் புசிக்கத் தகாத செந்துக்களுக்கும் உள்ள வித்தியாசம் அதனால்தான் அறிவீர்கள்.