எண்ணாகமம் - அதிகாரம் 11

இஸ்றாயேலியர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பேசினதும்--அவராலே தண்டிக்கப் பட்டதும்--மோயீசன் சன விசாரணையைக் குறித்து முறையிட்டதும்-அவனுக்கு உதவி கொடுக்க எழுபது மூப்பர் நேமிக்கப் பட்டதும்--சனங்கள் வனாந்தரத்திலே அற்புதமாக ஆகாரம் பெற்றதும்.

1. அக்காலத்தில் ஒருநாள் வழியில் தங்களுக்குண்டான ஆயாசத்தைப் பற்றிச் சனங்கள் கர்த்தருக்கு விரோதமாய் முறையிடத் துடங்கினர். அதைக் கேட்டுக் கர்த்தர் கோபித்துக் கொண்டார். அவராலே உண்டான ஓர் அக்கினி பாளையத்தின் கடைசி முனையைப் பட்சித்து நிர்மூலம் ஆக்கி விட்டது.

2. அப்போது சனங்கள் மோயீசனை நோக்கிக் கூப்பிட்டார்கள். மோயீசன் கர்த்தரைப் பிரார்த்தித்த மாத்திரத்தில் அக்கினி அவிந்து போயிற்று.

3. கர்த்தருடைய அக்கினி அவர் களுக்குள்ளே பற்றி எரிந்ததினால் எவ்விடத்துக்கு அக்கினிக் காடென்று பெயரிட்டான்.

4. பின்பு இஸ்றாயேலியரோடு கூட வந்திருந்த பல சாதியான சனங்கள் (மாம்சத்தைப் புசிக்க வேணுமென்று) பேராசை கொண்டார்கள்.

5. நாம் எஜிப்த்திலே செலவில் லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், பெருமுள்ளிக் கீரைகளையும், வெங்காய வெள்ளுள்ளிகளையும் நினைத்துக் கொள்ளுகிறோமே.

6. இப்பொழுதோவென்றால் நமது பிராணன் வாடிப் போகிறது. மன்னா வைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றுமில்லையே (என்றார்கள்.)

7. மன்னாவோவெனில் கொத்தமல்லி வித்தைப் போலவம் உலூக முத்து நிறமாகவும் இருந்தது.

8. சனங்கள் சுற்றித் திரிந்து அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து எந்திரக் கல்லிலரைத்து அல்லது உரலிற் குத்தியிடித்து சட்டியிற் சமைப்பார்கள். பிறகு அதை அப்பங்களாக்குவார்கள். அதன் உருசி ஒலீவெண்ணையில் பிசைந்த பணியாரம் உருசி போலிருக்கும்.

9. இராமாறு பனி பாளையத்தின் மீது பெய்யும்போது மன்னா கூடவே பெய்யும்.

10. சனங்கள் தங்கள் தங்கள் குடும்பத்திலே தங்கள் தங்கள் கூடார வாச லிலே அழுவதை மோயீசன் கேட்டான். கர்த்தருக்குக் கோபம் மூண்டது. மோயீசனுக்கும் பொறுக்கக் கூடாத காரியமாயிருந்தது.

11. அவன் கர்த்தரை நோக்கி: தேவரீர் அடியேனை உபாதிப்பானேன்? தேவரீருக்கு முன்பாக எனக்குக் கிருபை கிடையாததென்ன? தேவரீர் இந்த எல்லாச் சனத்தின் பாரத்தை என்மேலே சுமத்தினதென்ன?

12. இந்தச் சனங்களையெல்லாம் கர்ப்பந் தரித்தது நானோ? நானோ அவர்களைப் பெற்றேன்? அப்படியிருக்கத் தேவரீர் அடியேனை நோக்கி: ஒரு தாயின் முலையுண்கிற சிசுவைச் சுமப்பது போல நீ அவர்களை உன் மடியில் சுமந்து கொண்டு போய் நாம் ஆணையிட்டு அவர்கள் பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு நீ அவர்களை அழைத்துக் கொண்டு போவென்று தேவரீர் எனக்குச் சொல்லுவானேன்?

13. அத்தனை சனங்களுக்கு இறைச்சி கொடுக்க எனக்கு எங்கிருந்து வரும்? புசிக்க எங்கட்கு இறைச்சி கொடுவென்று என்னைப் பார்த்து அழுது முறையிட்டுக் கேட்கிறார்களே!

14. அவர்களெல்லோரையும் நான் ஒருத்தனாய்த் தாங்கக் கூடுமா? என்னால் முடியாது.

15. தேவரீருடைய சித்தம் என் சித்தத்திற்கு இணங்குவது கூடாதாயின் அப்படிப்பட்ட சகிக்கக் கூடாத உபத்திரவத்தை நான் காணாமல் தேவரீர் இப்பொழுதே அடியேனைக் கொன்று போட்டு உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்கும்படி செய்தாலே உத்தமம் என்று சொல்லக் கேட்டு,

16. கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ இஸ்றாயேலிலுள்ள மூப்பர்களில் சனங்களை ஆளத் தக்கவர்களும் உன் புத்திக்கு விமரிசையுள்ளவர்களுமாகிய எழுபது பேர்களைத் தெரிந்து கொண்டு உடன்படிக்கைக் கூடார வாசலில் நிறுத்தி உன்னோடுகூட வந்து நிற்கும்படி செய்.

17. நாம் இறங்கி வந்து உன்னோடு பேசி நீ ஒருவனாய்ச் சனங்களின் பாரத்தைச் சுமக்காமல் அவர்கள் அதைச் சுமப்பதற்கு உனக்கு உதவி செய்யத் தக்கதாக உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியபடி நாமெடுத்து அவர்கள் மேல் வைப்போம்.

18. இதுவுந் தவிர, நீ சனங்களைப் பார்த்து: உங்களைப் பரிசுத்தம் பண்ணுங்கள்: நாளைக்கு இறைச்சிகளைச் சாப்பிடுவீர்கள். உள்ளபடி எங்களுக்கு இறைச்சி புசிக்கக் கொடுப்பவர் யார் என்றும், எஜிப்த்திலே எங்களுக்குச் சவுக்கியமாயிருந்ததென்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆனது பற்றி நீங்கள் சாப்பிடும் பொருட்டு கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார்.

19. நீங்கள் ஒரு நாள் இரண்டு நாள் ஐந்து நாள் இருபது நாள் மாத்திரமல்ல, 

20. ஒருமாதம் வரைக்கும் சாப்பிடுவீர்கள்? உங்கள் மூக்காலே புறப்பட்டு உங்களுக்குத் தெவிட்டிப் போகுமட்டும் சாப்பிடுவீர்கள். ஏனெனில் நீங்கள் கர்த்தரை நிந்தித்து நாங்கள் எஜிப்த்தை ஏன் விட்டுப் புறப்பட்டோமென்று அவருடைய முன்னிலையில் அழுதீர்களே என்று சொல்லென்றார்.

21. அதற்கு மோயீசன்: அவர்கள் ஆறு லட்சம் காலாட்களாயிருக்க ஒருமாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சிகளைப் புசிக்கத் தருவோமென்று தேவரீர் சொல்லுகிறீரே!

22. அவர்கட்குப் போதுமாயிருக்கும்படி ஆடுமாடுகளையெல்லாம் அடிக்க வேண்டுமோ? அல்லது கடல் மச்சங்களையெல்லாம் சேர்த்துப் பிடித்தும் அவர்களுக்குத் திருப்தி கொடுக்கப் போதுமாயிருக்குமோ என்று கேட்க,

23. கர்த்தர்: ஆண்டவருடைய கை பலவீனமாய்ப் போயிற்றோ? இதோ நம்முடைய வாக்கியத்தின்படி நடக்குமோ நடவாதோ என்று நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

24. ஆகையால் மோயீசன் போய் சர்த்தருடைய வார்த்தைகளைச் சனங்களுக்குச் சொல்லி இஸ்றாயேலிய மூப்பரில் எழுபது பேரைக் கூட்டிக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

25. கர்த்தரோ மேகத்திலிருந்திறங்கி வந்து அவனோடு சம்பா´த்த பின்பு மோயீசனிடத்திலிருந்த ஆவியில் எடுத்து அதை அவ்வெழுபது பேர்களுக்குக் கொடுத்தார். ஆவி அவர்கள் மேல் வந்து தங்கின மாத்திரத்தில் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்நாள் முதல் அவர்கள் ஓயாமல் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

26. அப்பொழுது எல்தாத், மேதாதென்று அழைக்கப் படும் இரண்டு புருஷர் மேல் ஆவி விழுந்திருந்தும் அவர்கள் (எழுபது மூப்பர்களுடைய) பேர்வழியில் எழுதப் பட்டிருந்தும் சாட்சியக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வராமல் பாளையத்திலே இருந்து விட்டார்களாம்.

27. அவர்கள் பாளையத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில் பிள்ளையாண்டான் ஒருவன் மோயீசனிடம் ஓடிவந்து: இதோ எல்தாத், மெதாத் என்பவர்கள் பாளையத்திலே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என அறிக்கையிட்டான்.

28. உடனே நூனின் குமாரனும் மோயீசனுடைய காரியஸ்தர்களில் பிரபலியமானவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: என் ஆண்டவனே அதைத் தடைபண்ணுமென்றான்.

29. அதற்கு மோயீசன்: என் விஷயத்தில் நீ எரிச்சலாயிருப்பானேன்? சனங்களெல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லத் தக்கதாக கர்த்தர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்குமே என்றான்!

* மோயீசனுடைய தாழ்ச்சி இதனில் நேர்த்தியாக விளங்குகிறது. அவர் தமது பெருமையையும் கீர்த்தியையும் தேடுகிறவரல்லர். சனங்களெல்லோரும் இஸ்பிரீத்துவானவருடைய வரங்களை அடையும்படி ஆசித்திருந்தார்.

30. பின்னும் மோயீசன் இஸ்றாயேல் மூப்பர்களோடு கூட பாளையத்திற்குத் திரும்பி வந்தான்.

31. அது நிற்க, கர்த்தர் வீசப் பண்ணின ஒரு காற், கடலுக்கு அந்தண்டையிலுள்ள தேசத்தில் இருந்து காடைகளைத் (திரளாகப்) பாளையத்தில் கொண்டு வந்தடித்தது. பாளையத்தில் மாத்திரமல்ல, பாளையத்துக்குச் சுற்றிலும் ஒரு நாள் பயணம் எவ்வளவோ, அவ்வளவு துலைவில் மேற்படி காடைக் கூட்டம் பரம்பித் தரையின் மேல் இரண்டு முழ உயரத்திலே பறக்கும்.

32. அதைக்கண்டு சனங்கள் எழுந்து அன்று பகல் முழுவதும் இரா முழுவதும் மறுநாளிலும் காடைகளைச் சேர்த்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஒமர் அளவு சேர்த்தான். பாளையத்திற்குச் சுற்றி அவைகளை வற்றலிட்டார்கள்.

33. பற்கள் நடுவே இருக்கும் இறைச்சிகளை அவர்கள் மென்று தின்று கொண்டிருக்கையிலே இதோ சனங்களின் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டு அவர்களை மகா பெரிய வாதையால் வாதித்தது.

34. ஆனது பற்றி அந்த ஸ்தலத்திற்கு இச்சைக்கோரி என்று பேர் இடப்பட்டது. ஏனெனில் எவர்கள் இறைச்சிகளை இச்சித்திருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் பண்ணினார்கள். பிறகு அவ்விடம் விட்டு ஆசரோத்தில் வந்து தங்கினார்கள்.

* விலக்கப் பட்ட நாட்களில் மாமிசம் சாப்பிட இச்சிக்கும் கிறீஸ்துவர்கள் இதைக் கண்டு பயப்படக் கடவாரல்லோ?