லேவியராகமம் - அதிகாரம் 10

கர்த்தர் தண்டித்தும் கண்டித்தும் குருவுக்குரிய ஊழியம் மகா கனமானதென்று காண்பித்தது.

1. ஆரோனுடைய குமாரர்களான நாதாப், அபியூ என்பவர்கள் தூபக் கலசங்களை எடுத்துக் கொண்டு நெருப்பையும் அதின் மேல் தூபத்தையும் போட்டுத் தங்களுக்குக் கற்பித்திருந்ததை மீறிக் கர்த்தர் சமூகத்தில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்திருக்கச் செய்தே,

2. கர்த்தரிடமிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களைப் பட்சித்தது. அவர்கள் கர்த்தருடைய சமூகத்திலே செத்து விழுந்தார்கள்.

3. அப்போது மோயீசன் ஆரோனை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: நம்மை அண்டி வருகிறவர்களால் நாம் அர்ச்சிக்கப் பட்டு எல்லாச் சனங்களுக்கும் முன்பாக மகிமைப் படுவோமென்கிறாரே என்று சொல்லக் கேட்டு ஆரோன் மெளனமாயிருந்து விட்டான்.

4. பின்னும் மோயீசன் ஆரோனின் சிறிய தகப்பனாகிய ஓஸியேலுடைய மக்களான மிசாயேலையும், எலிஸ்பானையும் கூப்பிட்டு: நீங்கள் போய் உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்துப் பாளையத்தின் புறம்பே கொண்டுபோங்கள் என அவர்களுக்குச் சொன்னான்.

5. அவர்கள் உடனே போய்த் தங்களுக்குக் கற்பனையானபடி அவர்களைக் கிடந்தவிதமாய், அதாவது: அவர்கள் உடுத்தியிருந்த மெல்லிய சணற் சட்டைகளோடும் எடுத்து வெளியே கொண்டு போனார்கள்.

6. மோயீசன் ஆரோனையும் எலேயசார், ஈத்தமார் என்னும் அவனுடைய மக்களையும் நோக்கி: நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப் போடவும் வேண்டாம். உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்கவும் வேண்டாம். செய்தால் நீங்களும் சாவீர்கள். எல்லாச் சபையார்கள் மேல் தேவ கோபமுண்டாகு¼ம் உங்கள் சகோதரர்களும் இஸ்றாயேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தி எழுப்பிய அக்கினியின் விஷயத்திலே புலம்புவார்களாக.

* 6-ம் வசனம். தேவவூழியத்திற்குப் பிரதிஷ்டையானவர்கள் இவ்வுலகில் சஞ்சரிப்பவர்களாயினும் இவ்வுலகத்தின்மேல் பற்றுதல் வைக்காமல் கடவுளோடு ஐக்கியமாயிருக்கக் கடவார்களென்று இதனால் தெளிவாகின்றது.

7. நீங்களோ சாட்சியக் கூடார வாசலுக்கு வெளியே போகாதேயுங்கள். போனால் சாவீர்களாக்கும். ஏனென்றால் திரு அபிஷேகத் தைலமானது உங்கள் மேல் இருக்கிறது என்றான். அவர்கள் மோயீசனுடைய கற்பனைப்படி எல்லாஞ் செய்தார்கள்.

8.  பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி:

9. நீயும் உன் குமாரருஞ் சாகாதபடிக்குச் சாட்சியக் கூடாரத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, திராட்ச இரசத்தையாகிலும் வேறு மதுவையென்கிலும் குடியாமலிருக்க வேண்டும். அது உங்கள் தலைமுறைகடோறும் நித்திய கற்பனையாம்.

* 9-ம் வசனம். தேவன் கட்டளையின்படி பழைய ஏற்பாட்டின் குருக்கள் தங்கள் குருவுக்குரிய அலுவலைச் செய்யப் போகும் போதெல்லாம் அன்று லாகிரியான வஸ்துவைத் தொடாமலும், சமுசாரக் கிரியை முதலாய்ச் செய்யாமலும் தேக பரிசுத்தராய் இருக்க வேண்டியதென்று நாம் யோசிக்கையில் அருள் வேதத்துக் குருக்கள் எம்மாத்திரம் பரிசுத்தருமாய் உத்தமருமாய் இருக்க வேண்டியது அவசியமென்று சுளுவிலே கண்டுபிடிக்கலாமல்லோ. சேசுநாதர் சுவாமி அப்போஸ்தலர்களையும், அவர்களுக்குப் பின்வரும் எல்லாக் குருமார்களையும் நோக்கி: நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப் போனால் எதினால் சாரம் ஆக்கப் படும்? வெளியே கொட்டப் படுவதற்கும், மனுஷர்களால் மிதிக்கப் படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாதே. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சம். மலையின் மேற் கட்டப் பட்ட நகரம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்படி எவ்விதமாய் அதை விளக்குத் தண்டின் மீது வைப்பார்களோ, அவ்விதமே மனுஷர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரமண்டலத்திலிருக்கிற உங்கள் பிதாவைத் துதிக்கும்படி உங்கள் வெளிச்சத்தை அவர்களுக்கு முன்பாகப் பிரகாசப்பிக்கக் கடவீர்களென்று திருவுளம் பற்றினார்.

10. ஏனெனில் நீங்கள் பரிசுத்தமானதையும் பரிசுத்தமில்லாததையும் தீட்டுள்ளதையும் தீட்டில்லாததையும் பகுத்தறியும் அறிவைக் கொண்டிருக்க வேண்டியதன்றியில்,

11. கர்த்தர் மோயீசன் மூலியமாய் இஸ்றாயேல் புத்திரருக்குத் திருவுளம் பற்றின நமது சகலப் பிரமாணங்களையும் நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கவும் வேண்டுமென்று திருவுளம் பற்றினார்.

12. பின்னும் மோயீசன் ஆரோனையும் அவனுக்கு இன்னமிருந்த வேறு குமாரர் ஆகிய எலேயசார், ஈட்டமார் இவ்விருவரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்த் பட்ட பலியிலே மீதியான போஜனப்பலியை எடுத்து அதைப் புளிப்பில்லாமல் பலி பீடத்தண்டையில் புசியுங்கள். ஏனெனில் அது மகா பரிசுத்தமுள்ளது.

13. கர்த்தருக்குப் படைக்கப் பட்ட பலிகளில் எது உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப் பட்டதோ அதை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியுங்கள். இப்படி நான் கட்டளை பெற்றிருக்கிறேன்.

14. அன்றியும் ஒப்புக் கொடுக்கப் பட்ட சிறு மார்க்கண்டத்ததையும், பிரிக்கப் பட்ட முன்னந்தொடையையும் நீயும் உன்னோடு கூட உன் குமாரரும் உன் குமாரத்திகளும் மகா பரிசுத்த இடத்திலே புசிப்பீர்கள். ஏனென்றால் அதுகள் இஸ்றாயேல் புத்திரருடைய திருப்பலிகளிலே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.

15. உள்ளபடி அவர்கள் தகனப் பலிகளின் சமயத்திலே முன்னந்தொடையையும் மார்க்கண்டத்தையும் பலிபீடத்தில் தகனிக்கப் பட்ட கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதிக்கு உயர்த்தி அசைவாட்டினார்கள். ஆனது பற்றி அதுகள் உனக்கும் உன் மக்களுக்கும் நித்திய கட்டளையாகச் சொந்தமாயிருக்கும் என்று கர்த்தர் கற்பித்திருக்கிறார் என்றான்.

16. அதற்குள்ளாகப் பாவ நிவாரணமாகப் படைக்கப் பட்டிருந்த வெள்ளாட்டுக் கடாவை மோயீசன் தேடின போது அது தகனிக்கப் பட்டிருந்தது கண்டு மீதியாயிருந்த எலேயசார், ஈட்டமார் என்னும் ஆரோனின் குமாரரின் பேரில் அவன் கோபம் கொண்டு:

17. நீங்கள் பாவநிவாரணப் பலியைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற் போனதென்ன? அது பரிசுத்தத்திலும் பரிசுத்தம் அல்லவா? சபையின் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டு நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் அவர்களுக்காக மன்றாடும்பொருட்டுத்தானே அது உங்களுக்குக் கொடுக்கப் பட்டது.

18. விசேஷம்: அதன் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப் படவில்லையே. நான் கற்பிக்கப் பட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசிக்க வேண்டியதாயிருந்தது என்று சொன்னான்.

19. அதற்கு ஆரோன்: கர்த்தர் சமூகத்தில் பாவ நிவாரணப் பலியும் தகனப் பலியும் செலுத்தப்பட்டது இன்றுதானே. ஆனால் எனக்கு நேரிட்ட துன்பம் உனக்குத் தெரியாதா? மகா துக்கத்தில் அமிழ்ந்திருக்க, அதை நான் எப்படிப் புசித்திருக்கலாம், அல்லது கர்த்தருக்குப் பிரியமாய் எப்படி திருச்சடங்குகளைப் பண்ணியிருக்கலாம் என்றன்.

20. மோயீசன் அதைக் கேட்டு அவன் சொல்லிய நியாயத்தைச் சரியென்று ஒப்புக் கொண்டான்.