இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 09

ஆரோன் தன் ஊழியத்தைப் பண்ண ஆரம்பித்துத் தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பலி செலுத்தினதும்-மோயீசனும் ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதித்ததும்.

1. எட்டாம் நாள் ஆனபோது மோயீசன் ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்றாயேலரின் வயோதிகரானவர்களையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி:

2. நீ பாவநிவிர்த்திப் பலியாக ஓர் இளங்காளைçயும், சர்வாங்கத் தகனப் பலியாக மாசற்ற ஓர் ஆட்டுக் கடாவையும் மந்தையிலே தெரிந்து கொண்டு கர்த்தருடைய சமூகத்தில் கொண்டு வரக் கடவாய்.

3. பின்னும் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நீங்கள் பாவநிவாரணப் (பலிக்)கென்று ஆட்டுக் கடாவையும் சர்வாங்கத் தகனப் பலிக்கென்று ஓர் இளங்காளையையும் ஒரு வயதான பழுதற்ற ஆட்டுக் குட்டியையும்,

4.  சமாதானப் பலிக்கென்று (ஒரு) மாடும், (ஒரு) ஆட்டுக் கடாவும் கொண்டு வந்து அதுகளைக் கர்த்தருடைய சமூகத்திலே பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதுகளோடு கூட எண்ணையில் பிசைந்த மெல்லிய மாவையும் ஒப்புக் கொடுப்பீர்கள். ஏனெனில் இன்று கர்த்தர் உங்களுக்குத் தெரிசனமாவார் என்றான்.

5. அவர்கள் அவ்விதமே மோயீசன் கற்பித்திருந்திருந்ததெல்லாவற்றையும் கூடார வாசலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லோரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையிலே,

6. மோயீசன் அவர்களை நோக்கி: கர்த்தர் திருவுளம் ற்றின வாக்கியமின்னது. நீங்கள் (அவ்வாறு) செய்யுங்கள். அவருடைய மகிமையும் உங்களுக்குக் காணப் படும் என்று சொன்னான்.

7. பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் வந்து உன் பாவ நிவாரணமாகப் பலியிட்டுத் தகனத்தையும் ஒப்புக் கொடுத்து உனக்காகவும் பிரஜைக்காகவும் மன்றாடு. பிறகு பிரஜையுடைய பலி மிருகத்தை வெட்டிச் செலுத்தின பின்பு கர்த்தர் கற்பித்தபடியே ஜனங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள் என்று சொன்னான்.

8. அப்பொழுது ஆரோன் பலி பீடத்தண்டையிலே வந்து தன் பாவ நிவாரணப் பலியாகிய இளங்காளையை வெட்டிப் போட்டான்.

9. அவன் குமாரர் அதின் இரத்தத்தை அவனுக்குச் சமர்ப்பித்திருக்க, அவன் அதில் விரலைத் தோய்த்துப் பீடக் கொம்புகளைத் தடவி மீதியானதை அதின் பாதத்தில் ஊற்றினான்.

10. பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலின் சவ்வையும் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடி பீடத்தின் மேல் தகனித்தான்.

11. அதின் இறைச்சிகளையும் தோலையும் பாளையத்தின் புறம்பே சுட்டெரித்தான்.

12. பிறகு அவன் சர்வாங்கத் தகனப் பலி மிருகத்தையும் பலியிட்டான். அவன் குமாரர்கள் அதின் இரத்தத்தை அவனுக்குச் சமர்ப்பித்திருக்க, அவன் அதைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தான்.

13. பலியையும் துண்டாக வெட்டி அதைத் தலையோடும் ஒவ்வொரு உறுப்புகளோடும் அவனுக்குச் சமர்ப்பித்தார்கள். அவன் எல்லாத்தையும் பலிபீடத்தின்மேல் நெருப்பிலே சுட்டெரித்தான்.

14. முன்னே குடல்களும், கால்களும் தண்ணீரில் கழுவப் பட்டிருந்தன.

15. பின்பு அவன் பிரஜைக்குரிய பாவ நிவிர்த்திப் பலியைக் கொண்டு வந்து ஆட்டுக்கடாவையும் கொன்று பீடத்தைச் சுத்திகரப்படுத்திய பின்னர்,

16. அதைச் சர்வாங்கத் தகனப் பலியாக்கினதன்றி,

17. காலையில் செலுத்தும் சர்வாங்கத் தகனப் பலியைப் பற்றிய ஆசாரங்களையும் அல்லாமல், அவன் மேற்படி பலியோடு கூட பான போஜனப் பலியையும் சேர்த்து, அதுகளைப் பீடத்தின்மேல் தகனித்தான்.

18. அன்றியும் பிரஜையின் சமாதானப் பலிகளாகிய மாட்டையும், ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். அவன் குமாரர் அவனுக்கு இரத்தத்தைச் சமர்ப்பித்திருக்க, அவன் அதைப் பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்தான்.

* 18-ம் வசனம். இதோ ஆரோனென்பவர் அபிஷேகம் பெற்றுப் பிரதான ஆசாரியர் ஆனார். குருத்துவத்தின் சம்பூரணம் அவருக்குச் சொந்தமாய் விட்டமையால் அவர் பாவ நிவிர்த்திக்காகச் சமாதானப் பலிகளென்கிற மூன்று வகைப்பட்ட பலிகளையும் செலுத்துகின்றார். அதுகளோடு இரத்தஞ் சிந்தப் படாத பலிகளையும் ஒப்புக் கொடுக்கிறார். பின்வரும் 22-ம் வசனம் காட்டுமாப்போல, அவர் சனங்களின் மேலே கரங்களை நீட்டி ஆசீர்வாதம் புரிகிறார். கத்தோலிக்குத் திருச்சபையில் தினந்தோறும் ஒப்புக் கொடுக்கப் படுகிற திவ்விய பலிபூசையானது பாவ நிவிர்த்திக்காகவும், தோத்திரத்துக்காகவும், சேசுநாதருடைய இஷ்டப் பிரசாதங்களை மன்றாடுவதுக்காகவும்தான் நடந்தேறுகிறது. பூசை முடியும் முன்னே குருவும் விசுவாசிகளும் சற்பிரசாதத்தை உட்கொள்ளுகிறார்கள். கடைசியில் குருவானவர் முகமலர்ந்து சனங்களின் பேரில் கைகளை நீட்டி ஆசீர்வாதம் தந்தருளுகிறார்.

19. ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கடாவின் வாலையும், சிறுநீரகங்களுக்கடுத்த நிணங்களையும், கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும்,

20. மார்க்கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புகள் சுட்டெரிக்கப் பட்ட பிற்பாடு,

21. ஆரோன், மோயீசன் கற்பித்திருந்த படி சமாதானப் பலிகளுடைய மார்க்கண்டங்களையும் வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்துக் கர்த்தருடைய கமூகத்தில் உயர்த்தி அசைவாட்டினான்.

22. கடைசியில் சனங்களுக்கு நேராகக் கரங்களை விரித்து அவர்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு அவன் நிவாரணப் பாவப் பலிகளையும் சர்வாங்கத் தகன முதலிய சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர் இறங்கி வந்தான்.

23. அப்போது மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்து சனங்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் கர்த்தருடைய மகிமை எல்லாச் சனங்களுக்கும் காணப் பட்டது. 

24. (எங்ஙனமெனில்) இதோ கர்த்தர் சமூகத்திலிருந்து அக்கினி புறப்பட்டப் பீடத்தின் மீதிருந்த சர்வாங்கத் தகனப் பலியையும் அதின் கொழுப்புகளையும் சுட்டெரித்து விட்டது. சனங்கள் எல்லோரும் அதைக் கண்ட போது முகங் குப்புற விழுந்து ஆண்டவரைத் தோத்தரித்தார்கள்.

* 24-ம் வசனம். இவ்வித அற்புதமான அக்கினி காணப் பட்டுப் பலியின் இறைச்சிகளைச் சுட்டெரிக்கும்படி சர்வேசுரன் செய்வானேனென்று கேட்கில், அவர் அந்தப் பலி சுகந்த வாசனையைத் தாம் ஏற்றுக் கொண்டருளினதற்குத் திருஷ்டாந்தமாகத்தானே இத்தகையான புதுமையானது சலோமோன் தேவாலயத்தை அபிஷேகம் பண்ணின போதும், (2 நாளாகம் 7:1), பாபிலோன் அடிமைத்தன வாசத்தினின்று திரும்பிய பின் நேமியாயஸன்பவராலே இரண்டாம் தேவாலயம் அபிஷேகமான போது (2மக்க. 1:22) தேவ கிருபையினால் எல்லோரும் ஆச்சரியப்பட நடந்தேறிற்று.