இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 09

பாஸ்கா பண்டிகைக்கடுத்த கட்டளையும்--இஸ்றாயேலியர் பிரயாணப்படவும், தங்கித் தரிக்கவும், மேகஸ்தம்பம் குறி காண்பிக்கும் விதமும்.

1. மீளவும் கர்த்தர் இஸ்றாயேலியர் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டு வந்த இரண்டாம் வருஷத்தில் முதலாம் மாதத்திலே சீனாயி வனாந்தரத்திலே கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. இஸ்றாயேல் புத்திரர் பாஸ்காவின் பண்டிகையைக் குறித்த காலத்திலே,

3. அதாவது: இம்மாதத்தின் பதினான்காம் நாள் சாயந்தர வேளையிலே அதுக்கடுத்த சகல ஆசார முறைமைகளின்படி கொண்டாடக் கடவார்கள் என்றார்.

4. ஆகையால் மோயீசன் இஸ்றாயேல் புத்திரர் பாசேயைக் கொண்டாடும்படி கட்டளையிட்டான்.

5. அவர்கள் அந்தச் சீனாயிமலையிலே குறித்த காலமாகிய அம்மாதம் பதினான்காம் நாள் சாயந்தர வேளையில் ஆசரித்தார்கள். இஸ்றாயேல் புத்திரர் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியெல்லாம் செய்து வந்தார்கள்.

6. ஆனால், இதோ சிலபேர்கள் ஒருவன் இறந்து போன முகாந்தரமாய்த் தீட்டுப்பட்டவர்களாயிருந்து பாஸ்கா பண்டிகை ஆசரிக்கக் கூடாதவர்களாயிருந்து மோயீசனுக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து,

7. அவரகளை நோக்கி: நாங்கள் ஒரு மனிதன் மரித்ததினாலே தீட்டுப் பட்டவர்கள். குறித்த காலத்தில் இஸ்றாயேல் புத்திரரோடுகூட கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு நாங்கள் விலக்கப் பட வேண்டியதென்ன என்று முறையிட,

8. மோயீசன்: பொறுங்கள், உங்கள் விஷயத்தில் கர்த்தர் என்ன கட்டளை கொடுப்பாரென்று கேட்கப் போகிறேன் எனப் பிரதி கூறினான்.

9. அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி:

10. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதென்னவெனில்: உங்கள் சந்ததியாரிலே எவனாகிலும் ஒரு சாவின் முகாந்தரத்தினாலே தீட்டுப்பட்டிருப்பானென்கிற முகாந்தரத்தினாலும், அல்லது பிரயாணம் பண்ணி உங்கள் ஜனத்துக்குத் தூரத்தில் இருப்பானென்கிற முகாந்தரத்தினாலும் அவன் கர்த்தருடைய பாஸ்கா பண்டிகையை,

11. இரண்டாம் மாதத்திலே அம்மாதத்து பதினான்காம் தேதி சாயந்திர நேரத்திலே கொண்டாடக் கடவான். அப்படிப்பட்டவன் புளிப்பில்லாத அப்பத்தோடும் காட்டுக் கீரைகளோடும் அதைப் புசிப்பான்.

12. விடியற் கால மட்டும் அதில் எதையும் மீதியாக வைக்காமலும், எலும்புகளிலொன்றையும் முறிக்காமலும், பாஸ்காவைக் குறித்து கற்பிக்கப் பட்ட சகல முறைமைகளின் படி ஆசரிக்கக் கட வார்கள்.

13. ஆனால் சுத்தமாயிருக்கிறவர்களிலும், அல்லது தூரப் பிரயாணம் போகாதவர்களிலும் எவன் பாஸ்காவை அஜசரியாதிருப்பானோ அவன் தன் சனத்திலிராதபடிக்குக் கொலை செய்ய்ப படுவான்.

14. ஒரு பரதேசியாவது, ஒரு அந்நியனாவது உங்களிடத்தில் தங்கினால் அவர்கள் முறைமைப் பிரமாணப்படி பாஸ்காவை ஆசரிப்பார்கள். இது பரதேசியைக் குறித்தும் அந்நியனைக் குறித்தும் உங்களுக்கு ஒரு கட்டளை என்றருளினார்.

15. இது நிற்க கூடாரம் ஸ்தாபகம் செய்யப் பட்ட நாளில் மேகமானது அதை மூடிற்று. சாயுங்காலம் ஆனபோது வாசஸ்தலத்தின் மேல் அக்கினி மயமான ஒரு தோற்றம் உண்டாகி விடியற்காலமட்டும் அது காணப் பட்டது.

16. இவ்வாறு நிதமும் சம்பவிக்கும், (எங்ஙனமெனில்) பகலில் ஒரு மேகமும், இரவில் அக்கினித் தோற்றமும் வாசஸ்தலத்தை மூடிக் கொண்டிருக்கும்.

17. கூடாரத்தை மூடும் அக்கினி எப்போது மறையுமோ அப்போது இஸ்றாயேல் புத்திரர் புறப்பட்டுப் போவார்கள். மேகம் எவ்விடத்தில் தங்கிக் கொண்டிருக்குமோ அவ்விடத்திற் பாளையமிறங்குவார்கள்.

18. இப்படி கர்த்தருடைய கற்பனையின்படி பிரயாணப் படுவார்கள். அவருடைய கற்பனையின்படி கூடாரத்ததை ஸ்தாபகம் பண்ணுவார்கள். வாசஸ்தலத்தின் மேலே மேகம் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டிருப்பார்கள்.

19. மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருக்கும்போது இஸ்றாயேல் புத்திரர் பிரயாணப் படாமல், கர்த்தருடைய திருவுளத்திற்குக் காத்திருந்தார்கள்.

* கர்த்தருடைய கட்டளைக்கு அடங்கி இஸ்றாயேலியர் பாளையமிறங்குவார்கள், அல்லது வாங்கிப் போடுவார்கள். இதில் கஷ்டமிருந்தாலும் அவர்கள் அதைச் சட்டை பண்ண மாட்டார்கள். தேவ சித்தத்தை அனுசரித்தால் தப்பது வாக்குத்தத்தப் பூமியில் தாங்கள் பிரவேசிப்பதாக நன்றாய் அறிந்து கொண்டிருந்தார்கள். மோட்சத்தை நாடி யாத்திரை பண்ணுகிற கிறீஸ்துவனும் அப்பிரகாரமாக நடந்தொழுக வேண்டும்.

20. எத்தனை நாளுக்கு மேகம் கூடாரத்தை மூடுமோ அத்தனை நாளும் அவர்கள் அந்த ஸ்தலத்தில் இருப்பார்கள். கர்த்தருடைய கட்டளைப்படி பாளையமிறங்குவார்கள், கர்த்தருடைய கட்டளைப் படி பாளையம் வாங்கிப் போடுவார்கள்.

21. மேகமானது சாயந்தரமுதல் விடியற்காலமட்டும் நின்று கொண்டு விடியற்காலத்தில் உயர எழும்பும்போது அவர்கள் புறப்படுவார்கள். ஒரு பகலும் ஒரு இரவும் தங்கின பின்பு அது நீங்குமேயாகில் அவர்கள் பாளையம் வாங்கிப் போடுவார்கள்.

22. ஆனால் மேகம் இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு மாதத்துக்கு மேலாவது கூடாரத்தின் மேலே தங்கினால் இஸ்றாயேல் புத்திரர் பிரயாணப்படாமல் அங்குதானே தரித்துக் கொண்டிருப்பார்கள். அது உயரம் எழும்பிற்றோ அட்சணமே புறப்படுவார்கள்.

23. ஆதலால் கர்த்தருடைய வாக்கியப்படி கூடாரம் அடிப்பார்கள். அவருடைய வாக்கியப்படி வழிப்படுவார்கள். கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்தபடியே அவர்கள் அவருடைய திருவுளத்திற்குக் காத்திருந்தார்கள்.