எண்ணாகமம் - அதிகாரம் 08

விளக்கேற்றும் முறைமையும்--லேவியரின் அபிஷேகமும்--அவர்கள் ஊழியஞ் செய்யும் வயதும் காலமும்.

1. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ ஆரோனோடு சொல்ல வேண்டியதென்னவெனில்: நீ ஏழு விளக்குகளை ஏற்றும்போது விளக்குத் தண்டு தென்புறத்திலே ஸ்தாபிக்கக் கடவாய். ஆதலால், விளக்குகள் காணிக்கை அப்பங்களின் மேசைக்கு நேரே வடபுறத்தை நோக்கும்படி கட்டளையிடுவாய். அதுகள் விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று சொல்வாயென்றார்.

3. ஆரோன் இதைச் செய்து, கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியே விளக்குகளை அதுகளின் விளக்குத் தண்டின் மேலே ஏற்றினான்.

4. இந்த விளக்குத்தண்டு செய்யப் பட்ட விதமாவது: நடுத்தண்டு முதல் கிளைகளின் இரு பக்கத்தி லுமுள்ள பூக்கள் வரைக்கும் பொன்னினாலே அடிப்பு வேலையாய்ச் செய்யப் பட்டிருந்தது. கர்த்தர் மோயீசனுக்குக் காண்பித்திருந்த மாதிரிகையின்படியே அதனை உண்டுபண்ணினான்.

5. மீண்டுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

6. நீ இஸ்றாயேல் சந்ததியாரினின்று லேவியர்களைப் பிரித்தெடுத்து அவர்களைச் சுத்திகரிக்கக் கடவாய்.

7. எவ்விதமென்பாயோ? நீ அவர்களின் மேல் சுத்திகரிப்புத் தீர்த்தந் தெளித்த பின்பு அவர்கள் சர்வாங்க க்ஷவரம் பண்ணித் தங்கள் வஸ்திரங்களையும் தங்களையும் கழுவின பிற்பாடு,

* இவ்விடத்திற் சொல்லப்பட்ட சுத்திகரத் தீர்த்தம் உண்டாக்கும் விதத்தையும் அதற்கடுத்த ரீதியையும் குறித்துப் பின்வரும் 19-ம் அதிகாரத்தில் காண்கவும்.

8. மந்தையினின்று ஒரு காளையையும் அதற்கடுத்த போஜனப் பலிக்கு வேண்டிய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவையும் கொண்டு வருவார்கள். நீயோ பாவப் பரிகாரத்திற்காக மந்தையினின்று வேறொரு காளையைத் தெரிந்தெடுத்துக் கொண்டு,

9. இஸ்றாயேல் புத்திரரின் சபையார் எல்லோரையும் வரச் சொல்லி லேவியர்களை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் அணுகச் செய்வாய்.

10. லேவியர்கள் கர்த்தர் சமூகத்தில் நிற்கும் பொழுதோ இஸ்றாயேல் புத்திரர் அவர்களின் மீது தங்கள் கைகளை வைக்கக் கடவார்கள்.

11. ஆரோனும் லேவியர்களை இஸ்றாயேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருடைய பணிவிடை செய்யும்பொருட்டு அவர்களைக் கர்த்தருக்குச் சமர்ப்பிப்பான்.

12. அதன் பிறகு லேவியர்களும் காளைகளின் தலை மீது தங்கள் கைகளை வைப்பார்கள். நீயோ பாவ நிவாரணப் பலியாக இரண்டில் ஒரு காளையையும் அவர்களினிமித்தம் நீ வேண்டிக் கொள்ளும்படி கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலியாக மற்றொரு காளையையும் பலியிடுவாய்.

13. பிறகு நீ லேவியர்களை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக நிறுத்தி அவர்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து அபிஷேகம் பண்ணுவாய்.

14. லேவியர்கள் நம்முடையவர்களாயிருக்கும்படி நீ அவர்களை இஸ்றாயேல் புத்திரரிலிருந்து பிரித்து எடுக்கக் கடவாய்.

15. இவையெல்லாம் தீர்ந்தான போது நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்திலே பிரவேசிப்பார்கள். இப்படி நீ அவர்களை சுத்திகரித்துக் கர்த்தராகிய நமக்கு இஸ்றாயேல் புத்திரரால் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களென்று அபிஷேகம் பண்ண வேண்டிய இரீதியாம்.

16. இஸ்றாயேலின் தாயின் கர்ப்பந் திறந்து பிறக்கிற சகல தலைப்பேறுக்கும் பதிலாக நாம் அவர்களை எடுத்துக் கொண்டோம்.

17. இஸ்றாயேல் புத்திரரிலே மனிதரிலும் மிருகங்களிலும் முதல் பேறானதெல்லாம் நம்முடையதல்லவா? நாம் எஜிப்த்து தேசத்திலே முதல் பேறானதெல்லாம் சங்கரித்த நாள் முதற்கொண்டு அவள்ளை நமக்கே பரிசுத்தப் படுத்தினோமாகையால்,

18. இஸ்றாயேல் புத்திரருடைய சகல சிரேஷ்ட குமாரர்களுக்குப் பதிலாக லேவியர்களை நமக்கென்று பரிசுத்தப் படுத்த,

19. அவர்கள் இஸ்றாயேல் புத்திரருக்குப் பதிலாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்றாயேல் புத்திரரில் மற்ற எவனாகிலும் மூல ஸ்தானத்தில் உட்பிரவேசிக்கத் துணிந்தால் இஸ்றாயேல் சந்ததியாருக்கு வாதை உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும் நாம் லேவியரைப் பிரஜையினின்று எடுத்து ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் தத்தமாய்க் கொடுத்தருளினோமென்றருளினார்.

20. அப்பொழுது மோயீசனும் ஆரோனும் இஸ்றாயேல் புத்திரரின் சபையார் எல்லோரும் கர்த்தர் லேவியர்களைக் குறித்து மோயீசனுக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து வந்தார்கள்.

21. லேவியர்கள் சுத்திகரிக்கப் பட்டுத் தங்கள் வஸ்திரங்களைக் கழுவின பின்பு, ஆரோன் அவர்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து,

22. அவர்கள் சுத்திகரிக்கப் பட்டவர்களாய் ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் முன்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யப் பிரவேசிக்கும்படி அவர்களைப் பற்றி மன்றாடினான். கர்த்தர் லேவியரைக் குறித்து எப்படிக் கட்டளையிட்டாரோ, அப்படியே செய்தார்கள்.

23. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

24. லேவியரைப் பற்றிய பிரமாணமேதெனில், இருபத்தைந்து வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் யாவரும் உடன்படிக்கைக் கூடாரத்திலே தங்கள் பணிவிடை செய்யப் பிரவேசிப்பார்கள்.

25. ஐம்பது வயது நிறைவேறின பின்போ அவர்கள் திருப்பணிவிடையை விட்டு விடுவார்கள்.

26. அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்திலே தங்களுக்கு ஒப்பிக்கப் பட்டவைகளைக் காவல் காக்கத் தங்கள் சகோதரருக்கு உதவியாயிருப்பார்கள்.  ஆனால் ஆசாரியருக்கடுத்த திருப்பணிச் சடங்குகளை அவர்கள் பரிச்சேதம் செய்யலாகாது.  இப்படி லேவியர்கள் செய்ய வேண்டிய வேலையைக் குறித்து நீ திட்டம் பண்ணக் கடவாய் என்றார்.