லேவியராகமம் - அதிகாரம் 08

மோயீசன் ஆரோனையும் அவருடைய குமாரர்களையும் அபிஷேகம் பண்ணினதும் -- அபிஷேகச் சடங்குகளும், அதற்கடுத்த பலிகளும்

1. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ ஆரோனையும் அவன் குமாரர்களையும் வரவழைத்து அவர்களுடைய ஆடைகளையும் அபிஷேகத் தைலத்தையும், பாவ நிவாரணப் பலிக்கு ஒரு இளங்காளையையும் இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லாத அப்பங்களையும் கொண்டு வந்து,

* 2-ம் வசனம். ஆரோனைப் போல் தேவனால் அழைக்கப் பட்டவர்களொழிய மற்ற எவனும் குருப்பட்டமடைவதற்கு ஆசிக்கவும் தேடவும் ஒண்ணாது. கிறீஸ்துநாதர் முதலாய் தமது சுயேச்சைப்படி குருவாயிருக்கவில்லை. “நீர் என்னுடைய குமாரன், இன்று உம்மைச் சனிப்பித்தோம்,” “நீர் மெல்கிசெதேக்கின் முறைமையின் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறீர்” என்று பிதாவாகிய சர்வேசுரனே சொல்லி அவரைத் தேர்ந்து கொண்டார்.

3. சபை முழுவதையும் கூடார வாசலிலே கூட்டுவாய் (என்றார்.)

4. மோயீசன் கர்த்தர் கற்பித்திருந்தபடி செய்தான். கூடார வாசலின் முன்பாகச் சபையாரெல்லாருங் கூடியிருக்கையிலே,

5. அவன் சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கற்பித்த காரியம் இன்னதென்று சொல்லி,

6. உடனே ஆரோனையும் அவன் குமாரர்களையும் சனங்களுக்குக் காண்பித்து அவர்களை ஸ்நானம் செய்வித்த பின்பு,

7. பிரதான ஆசாரியனுக்கு மெல்லிய சணல் நூலால் நெய்யப் பட்ட உள்ளங்கியை உடுத்தி, அவனுக்கு இடைக்கச்சை கட்டி, நீல மேலங்கியை உடுப்பித்து அதின் மேல் ஏப்போத்தை வைத்து,

8. அத்தோடு மார்பதக்கத்தைச் சரிப்படுத்திக் கச்சையால் கட்டின பின்பு, நெஞ்சாபரணத்தையும் தரிப்பித்தான். இதிலே சாஸ்திரம், சத்தியம் இவ்விரண்டு பதங்கள் எழுதியிருந்தன.

9. அன்றியும் அவன் தலையின் மேல் கிரீடத்தைத் தரிப்பித்த பிற்பாடு கர்த்தர் அவனுக்குக் கற்பித்திருந்தபடி, அபிஷேகத்தினால் அர்ச்சிக்கப்பட்ட கொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினான்.

10. பிறகு (மோயீசன்) அபிஷேகத் தைலத்தை எடுத்து வாசஸ்தலத்தையும், அதிலுள்ள சகல தட்டுமுட்டுக்களையும் பூசினான்.

11. பலிபீடத்தை ஏழு தரமும் தெளித்து அர்ச்சித்த பிள்பாடு, அதையும் அதின் எல்லாப் பாத்திரங்களையும் தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்த தைலம் ஊற்றித் தடவி அர்ச்சித்தான்.

12. அதில் கொஞ்சம் ஆரோனுடை தலையின்மீது வார்த்துப் பூசி அவனை அபிஷேகம் பண்ணினான்.

13. அல்லாமலும் கர்த்தர் கற்பித்திருந்தபடி அவனுடைய குமாரர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மெல்லிய சணல் நூலால் அமைத்த அங்கிகளை உடுத்திக் கச்சைகளைக் கட்டிக் கிரீடங்களையும் தரிப்பித்தான்.

14. அப்போது பாவ நிவாரணத்துக்கான இளங்காளையை ஒப்புக் கொடுத்தான். ஆரோனும் அவன் குமாரரும் அதன் தலையின் மீது தங்கள் கரங்களை வைத்துக் கொண்ட பிற்பாடு,

15. மோயீசன் அதை வெட்டி இரத்தத்தை எடுத்து அதில் தோய்த்த விரலால் பீடக் கொம்புகளைச் சுற்றிலும் தடவிப் பிராயச்சித்தஞ் செய்து அர்ச்சித்து, மீதியான இரத்தத்தை அதின் பாதத்திலே ஊற்றினான்.

16. பின்பு அவன் குடல்களின் மேலிருந்த கொழுப்பையும், கல்லீரலின் சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதுகளிலுள்ள கொழுப்புகளையும் பீடத்தின் மீது தகனித்தான்.

17. இளங்காளையைத் தோலோடும் இறைச்சிகளோடும் சாணியோடும் கர்த்தர் கற்பித்திருந்தபடி பாளையத்தின் புறம்பே சுட்டெரித்தான்.

18. பின்னும் ஓர் ஆட்டுக்கடாவையும் சர்வாங்கத் தகனப் பலியாகச் செலுத்தினான். அதன் தலையின்¼ல் ஆரோனும் அவன் குமாரர்களும் தங்கள் கரங்களை வைத்த போது,

19. அவன் அதை வெட்டி அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தான். 

20. பிறகு அந்த ஆட்டுக்கடாவையும் துண்டு துண்டாக அறுத்து, அதின் தலையையும் உறுப்புகளையும் கொழுப்பையும் அக்கினியில் தகனித்தான்.

21. பிற்பாடு குடல்களையும், கால்களையும் தண்ணீரால் கழுவியான பின்பு, மோயீசன் ஆட்டுக்கடா முழுவதையும் பீடத்தின் மேல் சுட்டெரித்தான். ஏனென்றால் அது கர்த்தருக்கு அதி சுகந்த வாசனையுடைய தகனப் பலியாம். இவையெல்லாம் கர்த்தர் அவனுக்குக் கற்பித்திருந்தபடி செய்து முடித்தான்.

22. பிறகு குருக்களின் அபிஷேகத்திற்காக மற்றொரு ஆட்டுக்கடாவையும் ஒப்புக் கொடுத்தான். ஆரோனும் அவன் குமாரரும் அதன் தலையின் மேல் தங்கள் கரங்களை வைத்துக் கொண்டார்கள்.

23. மோயீசன் அதை வெட்டி அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கைகால்களின் பெருவிரல்களிலும் தடவினான்.

24. பிறகு அவன் ஆரோனின் குமாரரையும் அழைத்து, அவர்களுடைய வலது காதின் மடலிலும் பலது கைகால்களின் பெருவிரல்களிலும் தடவினான்.

25. ஆனால் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய நிணம் முழுவதையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் பிரித்தெடுத்தான்.

26. அப்போது கர்த்தருடைய கமூகத்திலிருந்த புளிப்பில்லாத கூடையினின்று புளிப்பில்லாத ஒரு அப்பத்தையும், எண்ணையால் தெளிக்கப் பட்ட ஒரு பலகாரத்தையும், ஒரு பணகாரத்தையும் எடுத்து அதுகளைக் கொழுப்பு மேலும், வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,

27. அவைகளை எல்லாம் ஏகமாய் ஆரோனுடைய கையிலும் அவன் குமாரர் கையிலும் வைத்தான். அவர்கள் அவைகளைக் கர்த்தர் சமூகத்திற்கு உயர்த்தின பின்பு,

28. மோயீசன் அவர்கள் கைகளிலிருந்து அவைகளை மீண்டும் வாங்கித் தகனப் பலி பீடத்தின்மேல் சுட்டெரித்தான். ஏனென்றால் அதுகள் அபிஷேகத்துக்கடுத்த காணிக்கையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையுமான பிரதிஷ்டைப் பரிகள்.

29. பிறகு ஆட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை எடுத்துக் கர்த்தர் சமூகத்திற்கு உயர்த்தின பின்பு கர்த்தர் கற்பித்திருந்த படி அபிஷேக ஆட்டுக்கடாவிலே தனக்குண்டான பங்காக அங்கீகரித்துக் கொண்டான்.

30. அன்றியும் அபிஷேகத் தைலத்திலும் பலிபீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் பேரிலும், அவன் வஸ்திரங்களின் பேரிலும், அவன் குமாரர் பேரிலும், அவர்களுடைய வஸ்திரங்களின் பேரிலும் தெளித்தான்.

31. அவன் அவர்களை வஸ்திரங்களின் மூலமாய்ப் பரிசுத்தமாக்கின பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் அந்த இறைச்சிகளைக் கூடார வாசலின் முன்பாகச் சமைத்து அங்குதானே அதுகளைப் புசியுங்கள். கூடையில் வைக்கப் பட்டிருக்கிற அபிஷேக அப்பங்களையும் சாப்பிடுங்கள். இப்படியே கர்த்தர் என்னை நோக்கி: ஆரோனும் அவன் குமாரரும் அதுகளைப் புசிக்கட்டும்.

32. ஆனால் மாமிசத்திலும் அப்பங்களிலும் மீதியாயிருப்பதெல்லாம் அக்கினியிலே தகிக்கப் படுமென்று சொன்னாரே.

33. அபிஷேக நாட்கள் நிறைவேறுமட்டும் நீங்கள் ஏழுநாளும் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதேயுங்கள். அபிஷேகமானது ஏழுநாளில் நிறைவேறும்.

34. பலியின் இரீதிச் சடங்கு நிறையும் பொருட்டு அன்று அவ்விதமே செய்யப் பட்டது.

35. நீங்கள் சாகாதபடிக்கு இராப்பகல் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கிக் கொண்டு கர்த்தருடைய காவலைக் காக்கக் கடவீர்கள். ஏனெனில் எனக்கு இவ்வாறு கற்பிக்கப் பட்டதே என்றான்.

36. கர்த்தர் மோயீசன் மூலியமாய்க் கற்பித்த எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரர்களும் நிறைவேற்றினார்கள்.