இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 07

குற்ற நிவிர்த்திக்குச் செலுத்தப்படும் பலி விஷயத்திலும், சமாதானப் பலி விஷயத்திலும் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள்.

1. குற்ற விமோசனமாக ஒப்புக் கொடுக்கப்படும் பலியின் பிரமாணமாவது: அது அதி பரிசுத்தமானது.

2. ஆகையால் சர்வாங்கத் தகனப் பலிமிருகம் எவ்விடத்தில் கொல்லப் படுமோ அவ்விடத்தில்தான் குற்ற நிவாரணப் பலி மிருகமும் வெட்டப்படும். அதின் இரத்தம் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றப் படும்.

3. அதிலே வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,

4. இரண்டு சிறிய சிறுநீரகங்களையும், விலாக்களையடுத்த கொழுப்பையும், சிறிய உக்கல்களையும், ஈரலின் மேலும், சிறுநீரகங்களின் மேலும் இருக்கிற சவ்வையும் படைக்கப் படும்.

5. ஆசாரியன் அவைகளைப் பலிபீடத்தின் மேல் தகனிக்கக் கடவான். அது குற்ற நிவர்த்தியின் பொருட்டு, கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப் படும் தகன வாசனைப் பலியாம்.

6. இது பரிசுத்தத்திலும் பரிசுத்தமாகையால், அதன் இறைச்சிகளைக் குரு வமிசத்தைச் சேர்ந்த ஆண்மக்கள் மட்டும் பரிசுத்த ஸ்தலத்திலே புசிப்பார்கள்.

7. பாவ நிவாரணப் பலி எப்படியோ, குற்ற நிவிர்த்திப் பலியும் அப்படியே. அவ்விரண்டுக்குஞ் சட்டப் பிரமாணம் ஒன்றே. எந்த ஆசாரியன் அதுகளைப் படைத்தானோ அதுகள் அவனுக்குச் சொந்தமாம்.

8. தகனப்பலி மிருகத்தை ஒப்புக்கொடுக்கிற குரு அதின் தோலைத் தனக்காக வைத்துக் கொள்ளுவான்.

9. அடுப்பிலே பாகம் பண்ணப்படும் மெல்லிய மாவின் பலியும், இருப்புத் தட்டின் மேலும் சட்டியிலும் சமைக்கப்பட்டது எல்லாமும் அததைச் செலுத்துகிற ஆசாரியனுக்குச் சொந்தமாகும்.

10. எண்ணையால் தெளிக்கப் பட்டதும், சமைக்கப் படாததும் சரி, அததுள் ஆரோனுடைய குமாரரெல்லாருக்கும் சரியான பங்காகப் பங்கிடப் படும்.

11. கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கப் படுகிற சமாதானப் பலியைச் சேர்ந்த சட்டப் பிரமாணமாவது:

12. நன்றியறிந்து தோத்திரத்துக்காக ஒப்புக்கொடுப்பதாயிருந்தால், ஒப்புக்கொடுக்க வேண்டியதாவன: எண்ணையால் தெளிக்கப் பட்ட புளிப்பில்லா அப்பங்களும், எண்ணையால் தடவப்பட்ட புளியாப் பணிகாரங்களும், சமைக்கப்பட்ட மெல்லியமாவும், எண்ணை கலந்த பலகாரங்களும்,

13. சமாதானப் பலியின் தறுவாயில் செலுத்தப் படும் தோத்திரப் பலியும் புளித்த மாவினால் செய்யப்பட்ட அப்பங்களுமாம்.

14. இந்தப் படைப்புகளில் ஒவ்வொன்று நவப்பலனென்று கர்த்தருக்குச் செலுத்தப் படும். அது பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

15. அதின் இறைச்சிகளோ அதே நாளில் புசிக்கப் படுமல்லாமல் அதுகளில் யாதொன்றும் விடியற்காலமட்டும் நிற்கக் கூடாது.

16. யாதொருவன் பொருத்தனையாவது, உற்சாகமாயாவது ஒரு பலி செலுத்தினால் அதுவும் அதே நாளில் புசிக்கப் படும். ஆனால் அதில் மீதி ஏதாகிலும் இருக்குமாகில் மறுநாளிலும் புசிக்கலாம்.

17. ஆனால் அதில் மூன்றாம் நாளிலே எது காணப்படுமோ அதெல்லாம் சுட்டெரிக்கப் படக் கடவது.

18. யாதாமொருவன் சமாதானப் பலியின் மாமிசத்தில் மீதியானதை மூன்றாம் நாளில் புசிப்பானாகில் அந்தக் காணிக்கை வியர்த்தமாகி அதைச் செலுத்தினவனுக்குப் பலிக்காமல் போகுமேயொழிய அதைப் புசித்தவன் அதினாலே தீட்டுப்பட்டுப் பாதகத் தோஷவாளியாவான்.

19. தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாமிசம் பட்டதானால் அது புசிக்கப்படாது. நெருப்பிலே சுட்டெரிக்கப் படக் கடவது. (மற்ற) மாமிசத்தையோ சுத்தமாயிருக்கிறவன் புசிக்கலாம்.

20. தீட்டுள்ளவனாயிருக்கிறவன் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட சமாதானப் பலி மாம்சத்தைப் புசித்தால் அவன் தன் சனத்தாரிலில்லாதபடிக்குக் கொலையுண்டு அற்றுப் போவான்.

21. அப்படியே எவன் மனிதனுடைய தீட்டையாவது, மிருகத்தினுடைய தீட்டையாவகு, அல்லது தீட்டுப்படுத்தக் கூடிய வேறெந்த வஸ்துவின் அசுத்தத்தையாவது தொட்ட பின்பு (மேற்சொல்லிய) மாமிசத்தைப் புசிப்பானோ அவன் தன் சனத்தில் இராதபடிக்குக் கொலையுண்டு அற்றுப் போவான் என்றருளினார்.

22. மறுபடியும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

23. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவெனில்: ஆடு, மாடு, வெள்ளாடு இவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.

24. தானாய்ச் செத்த மிருகத்தினுடைய கொழுப்பையும், துஷ்ட மிருகத்தால் பிடியுண்ட மிருகத்தினுடைய கொழுப்பையும் நீங்கள் பலவிதமாய் உபயோகித்து வழங்கலாம்.

25. எவன் கர்த்தருக்குத் தகனப் பலியாக ஒப்புக் கொடுக்கப் பட வேண்டிய கொழுப்பைப் புசித்திருப்பானோ அவன் தன் சனத்தில் இராதபடிக்குக் கொலையுண்டு அற்றுப் போவான்.

26. பறவையானாலும் சரி, மந்தை மிருகமானாலும் சரி, நீங்கள் யாதொரு பிராணியுடைய இரத்தத்தையும் புசிக்கலாகாது. 

27. எவனாகிலும் இரத்தத்தைப் புசித்திருந்தால், அவன் தன் சனத்தாரில் இராதபடிக்குக் கொலையுண்டு அற்றுப் போவான் என்றருளினார்.

28. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

29. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியது என்னவெனில்: கர்த்தருக்குச் சமாதானப் பலி செலுத்துபவன் எவனோ அவன் கூடவே சொந்தப் பலியாகிய பான போஜனப் பலியையும் செலுத்தக் கடவான்.

30. அவன் பலி மிருகத்தினுடைய கொழுப்பையும், மார்பையும் கைகளில் பிடித்து, அவ்விரண்டையும் ஒப்புக் கொடுத்துக் கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணினவுடன் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.

31. இவன் கொழுப்பைப் பலி பீடத்தின் மேல் தகனிப்பான். மார்போவெனில் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் உடையதாகும்.

32. சமாதானப் பலி மிருகங்களுடைய வலது முன்னந்தொடை நவப்பலன் என்று குருவுக்குச் சொந்தமாகி விடும்.

33. ஆரோனுடைய குமாரரில் எவன் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துவானோ அவனுக்கு வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

34. ஏனென்றால் இஸ்றாயேல் புத்திரருடைய சமாதானப் பலிகளில் எழுச்சியாகிய மார்பையும், பிரித்தலாகிய முன்னந்தொடையையும் நாமே எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுத்து விட்டோம். இது சமஸ்த இஸ்றாயேல் பிரஜைகளால் நித்திய கட்டளையாக அநுசரிக்கப் பட வேண்டியது என்றருளினார்.

35. மோயீசன் ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசாரிய ஊழியம் செலுத்தும்படி அபிஷேகம் பண்ணின நாளில் அவர்களுக்குத் திவ்விய இரீதிச் சடங்குகளிலே உண்டான அபிஷேகப் பலனும் அதுவே.

36. இஸ்றாயேல் புத்திரர் நித்திய நியமமாய்த் தலைமுறை தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேணுமென்று கர்த்தரால் கற்பிக்கப்பட்டவைகளும் அதுவே.

37. பாவ நிவிர்த்திக்காகவும் குற்ற நிவாரணத்துக்காகவும் ஒப்புக் கொடுக்கப் படும் பலி, அபிஷேகப் பலி, சமாதானப் பலி ஆகிய பலிகளுக்கடுத்த சட்டப் பிரமாணமும் அதுவே.

38. சீனாயி வனத்திலிருந்த இஸ்றாயேல் புத்திரர் தங்கள் காணிக்கைகளைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமென்று ஆண்டவர் மோயீசனுக்குக் கற்வித்த போதுதான், அதை அவனுக்குச் சீனாயி மலையிலே திட்டப்படுத்தி அருளினார்.