இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 06

கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப் பட்ட நசரேயருக்கடுத்த கட்டளை--ஆசாரியன் சனங்களை ஆசீர்வதிக்கும் முறைமை.

1. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. நீ இஸ்றாயேல் புத்திரரோடு சொல்ல வேண்டியதென்னவென்றால், புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் தங்களுடைய ஞான நன்மையைப் பற்றி தங்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி விரதம் பண்ண விரும்பினால்,

* பூர்வீக முதல் சாங்கோபாங்கம் அடைய வேண்டுமென்று அநேகம்பேர் தேவனுக்குத் தோத்திரமாக உலகச் சுகங்களையும் வெறுத்துத் தங்களையும் ஒறுத்துப் பக்திமார்க்கம் அனுசரித்துக் கொண்டு வருகிறார்கள். தேவ பிரசையில் அவர்களை நசரேயர் என்பார்கள்.

3. அவர்கள் திராட்ச இரசத்தையும் மற்றும் மதுபானத்தையும் விலக்கக் கடவார்களன்றி திராட்ச இரசத்தினால் செய்யப்பட்ட காடியையும், மற்றுமுள்ள லாகிரி வஸ்துக்களையும், திராட்சப் பழங்களைப் பிழிந்து செய்த எவ்வித ரசத்தையும் குடிக்காமலும் திராட்சப் பழங்களையாவது, திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,

4. தாங்கள் தங்கள் பொருத்தனை பண்ணிக் கர்த்தருக்குப் பிரதிஷ்டையாயிருக்கும் நாளெல்லாம் அவர்கள் திராட்சப் பழ முதல் திராட்சப் பழத்திலுள்ள விதை மட்டும் திராட்சக் கொடியில் நின்று உண்டாகிற யாதொன்றையும் புசிக்கலாகாது.

5. (நசரேயன்) கர்த்தருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த தன் விரத நாளெல்லாம் நிறைவேறியாகாமுன்னே நாவிதனுடைய கத்தி அவன் தலையின்மேல் படலாகாது. அவன் பரிசுத்தனாயிருந்து தன் தலை மயிரை வளரவிடக் கடவான்.

6. தன் பொருத்தனையின் சகல நாட்களிலும் யாதொரு சவமிருக்கும் இடத்திலும் அவன் போகலாகாது.

* வழக்கப்படி இஸ்றாயேலியரில் சந்நியாசம் பெற்றுக் கொண்டிருந்த நசரேயர் மேற்படி விரதத்தைச் சிலகாலத்திற்கு மட்டும் அநுசரிக்க வேண்டுதல் பண்ணுவார்கள். ஆயினும் சிற்சிலர் உயிர்காலத்திற்கெல்லாம் நசரேயராயிருந்தர்களென்று (நியாயாதிபதி 13:4; இராச.1:11) கண்டு வருகிறோம்.

7. மரணமடைந்தவர் தன் தகப்பனானாலும் சகோதரன் சகோதரியானாலும் அவர்களுடைய இழவைப் பற்றி முதலாய்த் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. ஏனெனில் அவன் தன் தேவனுக்குத் தன்னைப் பிரதிஷ்டை பண்ணின அந்த விரதம் அவன் தலைமேலிருக்கின்றது.

8. அவன் தன் சந்நியாச நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தனாக இருப்பான்.

9. ஆனால் யாதாமொருவன் சடுதியில் அவன் முன்னிலையில் மரணம டைந்தால் நசரேய விரதத்தையுடைய அவன் தலை தீட்டுப் பட்டதினாலே அவன் தன் சுத்திகர நாளிலும் ஏழாம் நாளிலும் தன் தலைமயிரை இரண்டு விசை சிரைத்துக் கொண்டு,

10. எட்டாம் நாளில் சாட்சிய உடன்படிக்கைக் கூடார வாசலிலே இரண்டு காட்டுப் புறாக்களையாவது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வருவான்.

11. குரு ஒன்றைப் பாலநிவாரணப் பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்கத் தகனப்பலியாகவும் படைத்த பிறகு சவத்தினாலே அவனுக்குண்டான தோஷத்தைப் பற்ற மன்றாடி அன்றுதானே அவன் தலையைப் பரிசுத்தப் படுத்துவான்.

12. அதுவுமன்றி அவன் திரும்பவும் தன் சந்நியாச நாட்களைக் கர்த்தருக்குப் பிரதிஷ்டை பண்ணி ஒரு வருஷத்திய ஆட்டுக் குட்டியைப் பாவ நிவிர்த்திப் பலியாக ஒப்புக்கொடுப்பான். அப்படிக்கிருந்தும் அவனுடைய சந்நியாச விரதம் தீட்டுப்பட்டுப் போனதினாலே முந்தின நாட்கள் விருதாவாய்ப் போயிற்று.

13. சந்நியாச விரதப் பிரமாணம் அதுவே. அவன் இந்தச் சந்நியாச நாட்கள் நிறைவேறின பின்பு (குரு) அவனை உடன்படிக்கைக் கூடார வாசலண்டைக் கூட்டிக் கொண்டு வந்து,

14. அவனுடைய காணிக்கையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பான். அதாவது: சர்வாங்கத் தகனப் பலிக்காகப் பழுதில்லாத ஒரு வருஷத்திய ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வருஷத்திய பழுதற்ற ஒரு பெண்ணாட்டையும் சமாதானப் பலிக்காகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

15. ஒரு கூடையிலே எண்ணையால் தெளிக்கப்பட்ட புளிப்பற்ற அப்பங்களையும் புளிப்பேறாத எண்ணை தடவப்பட்ட அடைகளையும், அவைகளுக்கடுத்த பானப் போஜனப்பலிகளையும் கொண்டுவரக் கடவான்.

16. இவற்றையெல்லாம் ஆசாரியன் எடுத்து கர்த்தருடைய சமூகத்திலே வைத்துப் பாவ நிவிர்த்திப் பலியையும் சர்வாங்கத் தகனப் பலியையும் செலுத்துவான்.

17. ஆனால் அவன் ஆட்டுக்கடாவைச் சமாதானப் பலியாகக் கொன்று போடுவதோடு கூடவே புளியாதவைகளுக்காகக் கூடையையும் வழக்கமாய்ச் செலுத்த வேண்டிய பானப் பொருட்களையும் படைக்கக் கடவான்.

18. அப்பொழுது உடன்படிக்கைக் கூடார வாசலிலே நசரேயனானவனுடைய சந்நியாசத் தலைமயிர்கள் சிரைக்கப் படும். ஆசாரியன் இந்தத் தலைமயிர்களை எடுத்துச் சமாதானப் பலியின் கீழேயுள்ள நெருப்பிலே போடுவான்.

19. பிறகு வேலிக்கப்பட்ட கடாவின் முன்னந்தொடைகளில் ஒன்றையும், கூடையிலுள்ள புளிப்பில்லாத ஒரு அப்பத்தையும், புளிப்பேறாத ஓர் அடையையும் எடுத்து மொத்தையாக்கப் பட்டு நசரேயனுடைய உள்ளங்கையிலே வைத்து,

20. அவற்றை மறுபடியும் அவன் கையிலிருந்து வாங்கிக் கர்த்தர் சமூகத்திலே அசைவாட்டுவான். பிரதிஷ்டை செய்யப்பட்ட மேற்கண்ட பொருட்களும், முன்னமே கட்டளைப்படி பிரிக்கப் பட்ட மார்க்கண்டமும், முன்னந்தொடையும் ஆசாரியனைச் சேரும். அது ஆனபிறகு நசரேயன் திராட்சை இரசத்தைக் குடிக்கலாம்.

21. பொருத்தனை செய்து தன்னைக் கர்த்தருக்குப் பிரதிஷ்டை செய்த நாளில், கைக்கு உதவுகிறவை நீங்கலாக நசரேயன் ஒப்புக்கொடுக்க வேண்டிய காணிக்கையின் பிரமாணம் அதுவே. அவன் தன் ஆத்தும நன்மைக்கும் சாங்கோபாங்கத்திற்கும் என்னென்ன பொருத்தனை பண்ணியிருப்பானோ அந்தப்படிக்குச் செய்வான் என்று (கர்த்தர்) அருளினார்.

* நசரேய அந்தஸ்து கடுந்தவ அந்தஸ்தாயிருந்த போதிலும் நாள்படப்பட விசேஷமாய் இரட்சணிய நாள் சமீபிக்கச் சமீபிக்க இஸ்றாயேலியரில் அநேகர் அதைக் கைக்கொண்டார்கள். அவர்களுக்கு விவாகம் பண்ணுவதற்குத் தடையில்லையாயினும் அவர்களில் பலபேரும் வேண்டுமென்று விரத்தராயிருந்தார்கள். கத்தோலிக்குத் திருச்சபையிலெங்கும் வழங்கி வருகிற சமுசாரம் துறந்த குருமார்களுக்கும், சந்நியாசிமார்களுக்கும் முன்சொல்லப் பட்ட நசரேயர்களே முன்மாதிரிகையா யிருந்தார்கள்.

22. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

23. நீ ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: இஸ்றாயேல் புத்திரரை ஆசீர்வதிக்கையில் நீங்கள் அவர்களைப் பார்த்து வசனிக்க வேண்டியதாவது:

24. ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக!

25. கர்த்தர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து உன்மேல் கிருபையாயிருப்பாராக.

26. கர்த்தர் உன் மேலே தம்முடைய திருமுகத்தைத் திருப்பி உனக்குச் சமாதானம் கட்டளையிடுவாராக என்பதாம்.

27. இப்படி அவர்கள் இஸ்றாயேல் புத்திரரின்மீது நம்முடைய நாமத்தைக் கூறி பிரார்த்திக்கையில் நாம் அவர்களை ஆசீர்வதிப்போம் என்றருளினார்.