லேவியர்கள் செய்ய வேண்டிய பற்பல விசேஷ அலுவல்கள் குறிக்கப் பட்டது.
1. மீண்டுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. லேவியர்களுக்குள்ளே ககாட் புத்திரருடைய கணக்கேற்றி அவரவருடைய குடும்பங்களின் கிரமப்படியும் வீடுகளின் கிரமப் படியும் எண்ணக் கடவீர்கள்.
* ககாட் என்பவன் லேவியின் இரண்டாவது புத்திரன்தான். ஆனால் மோயீசனும் ஆரோனும் அவன் வமிசத்திற் பிறந்ததினால் லேவி வமிசங்களின் வரிசையிலே அது முதன்மையாக எண்ணப் பட்டு வருகிறது.
3. (அந்தக் கணக்கிலே) உடன்படிக்கைக் கூடாரத்தில் இருக்கவும் வேலை செய்யவும் பிரவேசிக்கிறவர்களாகிய முப்பது வயது மட்டுமுள்ள எல்லோரையும் எண்ண வேண்டும்.
4. ககாட்டின் புத்திரருக்குடைத்தான அலுவல் என்னவெனில், பாளையம் எழும்புதலின் போது உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளேயும், பரிசுத்தத்திலும் பரிசுத்தமான ஸ்தலத்தினுள்ளேயும்,
5. ஆரோனும் அவன் குமாரர்களும் பிரவேசித்து, வாசலின் முன் தொங்கிய திரையை இறக்கி அதைக் கொண்டு சாட்சியப் பெட்டகத்தை மூடி,
6. அதின் மேல் ஊதாத் தோல்களால் செய்யப் பட்ட மூடுசீலையையும் போர்த்தி, அதன்மீது முழுவதும் நீலத் துப்பட்டியை விரித்துப் பின்பு தண்டுகளைப் பாய்ச்சி,
7. காணிக்கை (அப்பங்களின்) மேசையை நீலத் துப்பட்டியால் சுற்றிப் போட்டு, தூபக் கலசங்களையும், சிமிள்களையும் பானபோஜனப் பரிகளைச் சிந்துதற்குரிய பாத்திரங்களையும் கலசங்களையும் கிண்ணிகளையும் கூட வைப்பார்கள். காணிக்கை அப்பங்கள் அதின் மேல் எப்பொழுதுமே கிடக்கும்.
8. அதின்மீது இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து மறுபடியும் அதைத் தகசுத் தோல்களால் செய்யப் பட்ட துப்பட்டியால் மூடிய பின்பு தண்டுகளைப் பாய்ச்சி,
9. வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்துவிளக்குத் தண்டையும் அதின் அகல்களையும் கதிர்களையும் முள், துறடு, சாம்பல் தட்டுக்களையும் அகல்களுக்குரிய எண்ணைப் பாத்திரங்களையும் மூடி,
10. இவைகள் அனைத்தையும் தகசுத் தோல் மூடிக்குள்ளே போட்டுப் பிற்பாடு தண்டுகளைப் பாய்ச்சி,
11. பொன் பீடத்தையும் இளநீலத் துப்பட்டியால் மூடி, அதின்மேல் தகசுத் தோலைப் போர்த்தி, அதன் தண்டுகளைப் பாய்ச்சி,
12. மூலஸ்தானத்தில் நடத்தப் படும் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுமெடுத்து இளநீலத் துப்பட்டியிலே போட்டு தகசுத் தோல் மூடியினாலே மூடி தண்டின் மேற் கட்டி,
13. பலிபீடத்தில் இருந்து சாம்பல்களை நீக்கிச் சுத்தப்படுத்தி அதின் மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
14. அதனோடுகூட ஆராதனைக்குரிய சகல தட்டுமுட்டு பாத்திரங்களாகிய தீச்சட்டிகள், முள்ளுகள், திரிசூலங்கள், கொளுவி, துடுப்பு (முதலியவைகளையும்) வைத்துத் தகசுத் தோல் மூடியால் மூடித் தண்டுகளையும் பாய்ச்சுவார்கள்.
15. பாளையம் எழும்புதலின்போது ஆரோனும் அவன் மக்களும் மூலஸ்தானத்தையும், அதற்கடுத்த சகல பணிமுட்டுக்களையும் மூடித் தீர்ந்தவுடனே, ககாட் புத்திரர் அதுகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு வரக் கடவார்கள். அதுகள் மூடியிருக்கிறது போல் எடுப்பார்களே அல்லாது அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுக்களைக் கையால் ஸ்பரிசிக்கக் கூடாது. தொட்டால் சாவார்கள். உடன்படிக்கைப் பெட்டகத்தின் விஷயத்திலே அதுவே அவர்களுடைய கடமை.
16. பெரிய ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலேயஸார் ககாட் புத்திரர்களுக்கு அதிபதி. அவன் அகல்களுக்கு எண்ணையும் சுகந்த தூபவர்க்கத்தையும் அனுதினமும் இட வேண்டிய பலியையும் அபிஷேகத் தைலத்தையும் வாசஸ்தலத்து ஆராதனைக்கடுத்த யாவையும் மூலஸ்தானத்திலுள்ள சமஸ்த பணிமுட்டுக் களையும் விசாரிக்கக் கடவான் என்றருளினார்.
17. மீண்டுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
18. நீங்கள் லேவியர்களுக்குள்ளே ககாட் வம்சத்தார் அழிந்து போக விடாதேயுங்கள்.
19. அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை ஸ்பரிசித்தால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்கத் தக்கதாக நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் குமாரரும் உள்ளே போய் அவர்களில் அவனவன் செய்ய வேண்டிய வேலையையும் சுமக்க வேண்டிய சுமையையும் பிரத்தியேகமாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள்.
20. மற்றவர்களோ பரிசுத்த ஸ்தலத்தில் உள்ளவைகள் மூடப்படுவதற்கு முந்தி ஆசைப்பட்டு எட்டிப் பார்க்கவும் வேண்டாம். பார்த்தால் சாவார்கள் என்றார்.
21. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:
22. ஜேற்சோனின் புத்திரர்களையும் எண்ணித் தொகை பார்க்கக் கடவாய். அவரவரைத் தன் தன் வீடு குடும்பம் இனம் ஆகிய இதுகளின் ஒழுங்குத் திட்டத்தின்படி எண்ணிக்கை இடக் கடவாய்.
23. முப்பது வயது முதல் ஐம்பது வயது மட்டுமுள்ள எல்லாரையும் எண்ணி உடன் படிக்கைக் கூடாரத்திற் பிரவேசித்து ஊழியம் பணணுகிறவர்கள் இத்தனையென்று கணக்கேற்றுவாய்.
24. ஜேற்சோனென்னும் வம்சத்தாருடைய உத்தியோகமேதென்றால்,
25. அவர்கள் கூடாரத்திற்குரிய தொங்குதிரையையும் உடன்படிக்கையை மூடும் மூடிச் சீலையையும் இன்னொரு துப்பட்டியையும் இவற்றின் மீதுள்ள தகசுத் தோல் போர்வையையும் உடன்படிக்கைக் கூடாரப் பிரவேசத்திலே தொங்கும் மற்றவைகளையும்,
26. மண்டபத்திலுள்ள திரைகளையும் உட்பிரவேசத்திலுள்ள திரையையும் பலிபீடத்தைச் சேர்ந்ததெல்லாவற்றையும் (தேவ) ஊழியத்திற்கு உதவியாயிருக்கிற கயிறுகளையும், பணிமுட்டுகளையும்,
27. ஜேற்சோன் புத்திரர் ஆரோனுடைய கட்டளையின்படியாவது, அவன் குமாரர்களுடைய கட்டளையின்படியாவது எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அவனவன் தான் எந்தச் சுமையை எடுக்க வேண்டுமென்று அறியக் கடவார்கள்.
28. உடன்படிக்கைக் கூடாரத்தில் ஜேற்சோன் வம்சத்தார் செலுத்த வேண்டிய வேலை இதுவே: அவர்கள் பிரதான ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவார்கள்.
29. மேறாரியின் புத்திரரையும் அவரவர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கை இடக் கடவாய்.
30. முப்பது வயது முதற்கொண்டு ஐம்பது வயது மட்டும் உடன்படிக்கைக் (கூடாரத்துக்கடுத்த) ஊழியத்திற்காகவும் ஆராதனைக்காகவும் உட்பிரவேசிக்கிறவர்கள் எல்லாரையும் எண்ணிப் பார்க்கக் கடவாய்.
31. இவர்கள் சுமக்க வேண்டிய சுமை என்னவென்றால், கூடாரத்தினுடைய பலகைகளையும் தண்டுகளையும் தூண்களையும் அதுகளின் பாதங்களையும்,
32. மண்டபத்துச் சுற்றிலுமுள்ள தூண்களையும் அதுகளின் பாதங்களையும் முலைகளையும், அதுகளின் கயிறுகளையும் அன்றியுந் தன் தன் எண்ணின் படி எல்லாத் தட்டுமுட்டுக்களையும் வாங்கி அவற்றைச் சுமந்து கொண்டு போவார்கள்.
33. மேறாரியென்னும் வம்சத்தாரைச் சேர்ந்த உத்தியோகமும், அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்திற் செலுத்த வேண்டிய வேலையும் அதுவே. அவர்கள் பிரதான ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவார்கள் என்றருளினார்.
34. அப்படியே மோயீசனும் ஆரோனும் இவன் குமாரர்களும் சபை அதிபதிகளும் ககாட்டின் புத்திரர்களை அவரவர்களுடைய பிதாக்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணி,
35. முப்பது வயது முதல் ஐம்பது வயது மட்டும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியம் செய்யும்படி பிரவேசிக்கிறவர்கள் அனைவரையும் கணக்கேற்றிய போது,
36. ஈராயிரத்தெழுநூற்றைம்பது பேராக இருந்தார்கள்.
37. உடன்படிக்கைக் கூடாரத்திற் பிரவேசிக்கிற ககாட்டின் வம்சத்தா ருடைய தொகை அதுவே. கர்த்தர் மோயீசன் மூலமாகக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசனும் ஆரோனும் எண்ணி வந்தார்கள்.
38. ஜேற்சோனின் புத்திரர்களும் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கையிடப் பட்டு,
39. முப்பது வயது முதல் ஐம்பது வயதுமட்டும் உடன்படிக்கைக் கூடா ரத்தில் ஊழியஞ் செய்யும்படி பிரவேசிக்கிறவர்கள் எல்லோரையும் கூட்டிய போது,
40. ஈராயிரத்தறுநூற்று முப்பது பேராயிருந்தார்கள்.
41. மோயீசனும் ஆரோனும் கர்த்தருடைய கட்டளைப்படி எண்ணிக் கொண்ட ஜேற்சோனின் வம்சத்தாருடைய தொகை இதுவே.
42. மேறாரியின் புத்திரர்களும் தங்கள் தங்கள் பிதாக்களின் வீட்டு வம்சங்களின் படி எண்ணப் பட்டார்கள்.
43. முப்பது வயது முதற்கொண்டு ஐம்பது வயது மட்டும் உடன்படிக்கைக் கூடாரத்தில் இரீதிச் சடங்குகளை நிறைவேற்றும்படி பிரவேசிக்கிறவர்கள் அனைவரையும் கணக்கிட்டுப் பார்த்தபோது,
44. மூவாயிரத்திருநூறு பேராயிருந்தார்கள்.
45. மேறாரியின் புத்திரருடைய தொகை இதுவே. கர்த்தர் மோயீசன் மூலியமாய்க் கட்டளையிட்டிருந்தபடி மோயீசனும் ஆரோனும் அவர்களை எண்ணி வந்தார்கள்.
46. லேவியர்களிலே எவர்கள் தங்கள் தங்கள் பிதாக்களின் வீட்டு வம்சப் பிரகாரம் மோயீசனாலும் ஆரோனாலும் இஸ்றாயேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டு மோயீசனாலே வேர்வேராக எழுதப்பட்டார்கள்.
47. முப்பது வயது முதல் ஐம்பது வயது மட்டும் கூடாரத்து ஊழியம் பண்ணவும் சுமைகளைச் சுமக்கவும் திரு ஸ்தலத்தில் பிரவேசிக்கத் தக்கவர்களுடைய தொகை:
48. எண்ணாயிரத் தைந்நூற்றெண்பது பேர் இருந்தார்கள்.
49. கர்த்தருடைய கட்டளையின்படியே அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமை விசேஷத்திற்கென்றும் எண்ணப் பட்டார்கள். அவ்விதமாய்ச் செய்யக் கர்த்தர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.