இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 03

 லேவியர் திரு ஸ்தலத்து வேலை செய்யும்படி நியமிக்கப் பட்டதும்--லேவிய வமிசத்தார் குடும்பங்களாகக் கணக்கிடப் பட்டதும்.

1. கர்த்தர் சீனாயிமலையில் மோயீச னுக்குத் திருவாக்கருளின காலத்திலே ஆரோன் மோயீசன் என்பவர்களுடைய வம்ச வரலாறாவது:

2. ஆரோனுடைய குமாரர்கள்: முதல் பிறந்தவன் நாதாப், பின்பு அபியூ, யலேயசார், ஈட்டமார் என்பவர்களே.

3. ஆசாரிய உத்தியோகஞ் செலுத்தும் பொருட்டுத் தைலப் பூசுதலைப் பெற்றுக் கரங்கள் நிறைக்கப் பட்டு பரிசுத்த மாக்கப் பட்ட ஆரோனின் குமாரர் ஆகிய குருக்களின் பெயர்கள் அவைகளேயாம்.

4. ஆனால் நாதாப், அபியூ என்பவர்கள், சீனாயி வனாந்தரத்திலே கர்த்தர் சமூ கத்தில் அந்நிய அக்கினியைச் சமர்ப்பித்தமையால் சந்தானமின்றி மரித்தார் கள். எலேயசாரும் ஈட்டமாரும் தங்கள் தந்தையாகிய ஆரோனின் முன் னிலையில் ஆசாரிய ஊழியஞ் செலுத்தினார்கள்.

5. கர்த்தரோவென்றால் மோயீசனை நோக்கி:

6. நீ லேவியரின் கோத்திரத்தாரை வரச் சொல்லி அவர்கள் பிரதான ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படிக்கும், சாட்சியக் கூடாரத்தைக் காக்கும்படிக்கும்,

7. தேவ வாசஸ்தலத்துக்கு முன்பாகத் திருச்சபையார் செய்யும் இரீதிச் சடங்கு முதலியவைகளை விசாரித்து வரும்படிக்கும்,

8. (ஆசாரக்) கூடாரத்தின் தட்டுமுட்டுகளைக் காத்துக் கொண்டு ஆரோனுக்கு உதவியாயிருக்கும்படிக்கும் அவனுடைய முகதாவிலே நிறுத்தக் படவாய்.

9. லேவி கோத்திரத்தார்களை நன்கொடையாக,

10. ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் கொடுப்பாய். இஸ்றாயேல் புத்திரர் இவர்களுக்கு அவர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஆரோனையும் அவன் குமாரர்களையும் ஆசாரிய உத்தியோகத்தில் நியமனம் பண்ணுவாய். யாதாமொரு அந்நியன் அந்த அலுவலைச் செய்யத் துணிவானாகில் அவன் கொலைசெய்யப் படக் கடவன்.

11. மீண்டுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

12. இஸ்றாயேல் புத்திரரில் தாயின் உதரத்தைத் திறந்து பிறக்கிற எல்லாத் தலைச்சன் பிள்ளைகளுக்கும் பதிலாய் நாம்லேவிய வம்சத்தாரை இஸ்றாயேல் புத்திரரிலிருந்து எடுத்துக் கொண்டோமாகையால் அந்த வம்சத்தார் நம்முடையவர்களாம்.

13. ஏனென்றால் முதற்பேறானவையெல்லாம் நம்முடையது. நாம் எஜிப்த்து தேசத்திலே முதற்பேறானவையெல்லாஞ் சங்கரித்தது முதற்கொண்டு இஸ்றாயேலின் மனிதன் முதல் மிருக ஜீவன் மட்டும் தலைப்பேறானதெல்லாம் நம்முடையதாகும் என்று பரிசுத்தமாக்கினோம். அவையெல்லாம் நம்முடையது. நாம் ஆண்டவர் என்றார்.

14. மறுபடியுங் கர்த்தர் சீனாயி வனாந்தரத்திலே மோயீசனை நோக்கி: 

15. நீ லேவியின் புத்திரர்களை அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களின்படியும் அவர்களுடைய குடும்பத்தின் படியும் எண்ணக் கடவாய். ஒரு மாத வயது முதல்அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாம் எண்ணிப் பார் என்றார்.

* ஒன்றரை மாத வயது முதல் வம்ஸத்தாரை எண்ண வேண்டிய முகாந்தரமேதெனில், சிறுபமுதற்கொண்டு தேவ ஊழியத்திற் பழக்னிவனே மேற்படி ஊழியங்களை இனி செம்மையாகச் செலுத்துவானென்று நம்பலாமல்லோ. கிறீஸ்துவர்கள் இங்கே கவனிக்க வேண்டியதேதெனில்: தங்கள் குமாரர்களில் ஒருவன் இனி குருப்பட்டம் பெறும்படி ஆசையாயிருக்கிற தாய் தந்தையர், மேற்படி பிள்ளையைப் பாலிய முதற்கொண்டே பக்தி மார்க்கமாய் நடத்த வேண்டுமென்று இதனால் அறிந்து கொள்ளலாம்.

16. கர்த்தர் கற்பித்திருந்தபடி மோயீசன் அவர்களை எண்ணினான்.

17. லேவியின் குமாரர்களிலே காணப்பட்டவர்களின் பேரென்னவென்றால் ஜேற்சோன், ககாட், மேறாரி,

18. ஜேற்சோனின் மக்கள் லோப்னியும் சேமையீயுமாம்.

19. ககாட்டின் மக்கள்: அம்ராம், ஜெஸார், ஏபிரோன், ஓசியேல் என்பவர்களாம்.

20. மேறாரியின் மக்கள்: மொகோலியும் மூசியுமாம்.

21. ஜேற்சோனினின்று லோப்னியாலும் சேமையியாலும் இரண்டு வம்சங்கள் உண்டாயின:

22. இவைகளின் சனத்தொகையாவது: ஒரு மாத வயது முதற்கொண்டுள்ள ஆண்பிள்ளைகள் ஏழாயிரத்தைந்நூறு பேராம்.

23. இவர்கள் மேற்புறத்தில் (ஆசாரக்) கூடாரத்தின் பின்னாகப் பாளையமிறங்குவார்கள்.

24. அவர்களுக்கு லயேலின் குமாரனாகிய ஒலியஸாபே அதிபதி.

25. அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளே காவல் காத்துக் கொண்டு,

26. வாசஸ்தலத்தையும் அதை மூடும் மூடியையும், உடன்படிக்கைக் கூடார வாசலின் முன்பாகத் தொங்கும் திரையையும், மண்டபத்தின் சுற்றிலுமுள்ள சீலைகளையும், கூடார மண்டபத்தின் பிரவேசத்திலே தொங்கும் திரையையும் பலிபீடத்தைச் சேர்ந்த வேலைகளுக்குரிய கயிறுகளையும் தட்டுமுட்டு ஏனங்களையும் விசாரித்து வருவார்கள்.

27. ககாட்டினின்று அம்ராம், ஜெஸார், ஏபிரோன், ஓசியேல் என்னும் பெயர்களைக் கொண்டே வம்சங்கள் உண்டாயின. இவைகளே தம்தம் பெயர்களின்படி எண்ணிக்கையிடப்பட்ட ககாட்டின் வம்சங்களாம்.

28. ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணாயிரத்தறுநூறு பேர் காணப்பட்டனர். இவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் காவல் காத்துக் கொண்டு,

29. தென்புறத்திலே பாளையம் இறங்குவார்கள்.

30. அவர்களுக்கு ஓஸியேலின் குமாரனாகிய எலிஸபானே அதிபதி.

31. அவர்கள் பெட்டகத்தையும் மேசையையும் கிளைவிளக்கையும் பீடங்க ளோடு (தேவ) சேவைக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் பாத்திரங்களையும் திரை யையும் இது முதலிய தட்டுமுட் டுக்கள் அனைத்தையும் காத்துக் கொள்வார்கள்.

32. லேவியருடைய அதிபதிகளுக்கு அதிபதியும் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரனுமாயிருக்கிற எலேய-ஸாரோவென்றால், பரிசுத்த ஸ்தலத்தில் காவற் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தலைவனாயிருப்பான்.

33. மேறாரினினின்றோவென்றால், மொகோலி, மூசி என்னும் பேர் கொண்ட வம்சங்களும் தம் தம் நாமங்களின் படி எண்ணப் பட்டு

34. ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகள் ஆறாயிரத்திருநூறு பேராம்.

35. இவர்களுக்கு அபிகயேலின் குமாரனாகிய சுரியேஸ் அதிபதியாம். இவர்கள் வடபுறத்தில் பாளையம் இறங்குவார்கள்.

36. கூடாரப் பலகைகளும், அதுகளின் தண்டுகளும், பாதங்கள், தூண்கள், இத்தகையதான ஆசாரச் சாமான்களும் அவர்களுடைய காவலிலே வைக்கப் பட்டன.

37. அவர்கள் மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்களையும் அவற்றின் பாதங்களையும் முளைகளையும் கயிறுகளையும் விசாரித்து வருவார்கள்.

38. கீழ்ப்புறத்தில் அதாவது: உடன்படிக்கைக் கூடார முன்னிலையில் மோயீசனும் ஆரோனும் இவன் குமாரர்களும் பாளையம் இறங்குவார்கள். இவர்கள் இஸ்றாயேல் புத்திரரின் நடுவிலே பரிசுத்த ஸ்தலத்தைக் காத்துக் கொண்டிருப்பார்கள். யாதாமொரு அந்நியன் கிட்ட வந்தால் அவன் கொலைசெய்யப் படக் கடவான்.

39. மோயீசனும் ஆரோனும் கர்த்தருடைய கற்பனைப் படி லேவி எம்சத்தில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளை யெல்லாம் தங்கள் குடும்பங்களின்படி எண்ணினார்கள். அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.

40. மீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி: இஸ்றாயேல் புத்திரரில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தலைப்பேறான ஆண்பிள்ளைகளை எல்லாம் எண்ணித் தொகையைப் பத்திரம் வைக்கக் கடவாய்.

41. இஸ்றாயேல் புத்திரரின் எல்லாத் தலைச்சன் பிள்ளைகளுக்குப் பதிலாய் லேவிய வம்சத்தாரையும், இஸ்றாயேல் புத்திரரின் மந்தைகளிலுள்ள தலையீற்றான மிருக ஜீவன்களுக்குப் பதிலாய் லேவியரின் மந்தைகளையும் நமது பேராலே நீ பிரித்தெடுப்பாய். நாம் ஆண்டவர் என்றார்.

42. மோயீசன் கர்த்தருடைய கற்பனைப்படி இஸ்றாயேலியருடைய தலைச்சன் குமாரர்களை எண்ணியிருக்கையில்,

43. ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் பேர் பேராக எழுதினான். அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து முன்று பேராயிருந்தார்கள்.

44. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி:

45. இஸ்றாயேலியர் புத்திரரின் எல்லாத் தலைச்சன் குமாரர்களுக்குப் பதிலாய் லேவியர்களையும், அவர்களுடைய மந்தைப் பிராணிக்குப் பதிலாய் லேவியருடைய மந்தைகளையும் பிரித்தெடு; லேவியர்கள் நம்முடையவர்களாவார். நாம் ஆண்டவர்.

* லேவியர் தங்கள் பிதாப்பிதாக்களைப் போல் மேய்ப்பர்களாயிருந்ததினால், ஆடுமாடுகளே அவர்களுக்கு முக்கியமான உடமை. ஆனால் அவர்கள் தேவ ஊழியத்தின் மீது அதிக கவனமாயிருக்கும்பொருட்டு நிலங்களை வாங்கிக் கொள்ள, பயிரிட அவர்களுக்கு உத்தரவு இல்லை.

46. அன்றியும் இஸ்றாயேல் புத்திரருடைய தலைச்சன் குமாரர்களில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப் படவேண்டிய இருநூற்றெழுபத்து மூன்று பேர் இருக்கிறார்களே.

47. பரிசுத்த ஸ்தல நிறைப்படி தலைக்கு ஐந்து சீக்கல்களை வாங்கிக் கொள்ளுவாய். சீக்கலுக்கு இருபது ஒபோல்.

48. நீ மேற்பட்டவர்களின் மீட்புக் கிரயமாகிய அந்தப் பணத்தைச் சேர்த்து ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் கொடுப்பாய் என்றார்.

49. அப்படியே மோயீசன் அந்தத் தொகைக்கு மேற்பட்டு, லேவியர்களால் மீட்கப் பட்டவர்களின் மீட்புப் பணத்தைச் சேர்த்து,

50. அந்தத் தொகையிலே இஸ்றாயேலியர் புத்திரர்களிலுள்ள தலைச்சன் பிள்ளைகளுக்காகப் பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் ஆயிரத்து முன்னூற்றருபத்தைந்து சீக்கல் எடுத்து,

51. கர்த்தர் அவனுக்குக் கற்பித்திருந்த படி அதை ஆரோனுக்கும் அவன் குமாரர்களுக்கும் கொடுத்தான்.