இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 02

யாத்திரையிலிருக்கும் போதும் பாளையமிறங்கும் போதும் இஸ்றாயேலியர் அநுசரிக்க வேண்டிய ஒழுங்கு.

1. மீண்டுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கிச் சொன்னதாவது:

2. இஸ்றாயேல் புத்திரர் அவரவர்களுடைய அணிவகுப்பு, விருது, கொடி, இனம், சனம் (முதலிய) ஓழுங்குத் திட்டத்தின்படி தங்கள் தங்கள் கூடாரங்களைப் போட்டுச் சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றுப்பக்கத்திலும் பாளையமிறங்குவார்கள்.

3. எப்படியெனில்) யூதா தன் சேனையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே தன் கூடாரமடிக்கக் கடவான். அமினதாபுடைய குமாரன் நகஸோன் யூதாவின் கோத்திரத்தாருக்குச் சேனாதிபதியாயிருப்பான்.

4. அவனுடைய கோத்திரத்திலுள்ள வீரர்களுடைய தொகை: எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

5. இவனருகில் இசாக்கார் கோத்திரத்தார் பாளையமிறங்குவார்கள். இசாக்கார் கோத்திரத்தாருக்குச் சூவார் குமாரனான நத்தானியேல் சேனாதிபதியாயிருப்பான்.

6. அவனுடைய வீரர்களின் தொகை: ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர்களாம்.

7. சாபுலோன் கோத்திரத்துச் சேனாதிபதி எலோன் குமாரன் எலியா பென்பவன்.

8. இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்களின் தொகை: ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்களாம்.

9. யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர்; புறப்படும் போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதல் பாளையமாகப் போகக் கடவார்கள்.

10. ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் குமாரனாகிய எலிசூர் அவர்களுக்குச் சேனாதிபதியாயிருப்பான்.

11. அவனுடைய சேனையில் எண்ணப் பட்ட வீரர்களின் தொகை: நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்கள்.

12.இவனருகில் சீமையோனின் கோத்திரத்தார் பாளையமிறங்குவார்கள். சுரிஸதை குமாரன் சலமியேல் என்பவன் சேனாதிபதியானான்.

13. அவனுடைய சேனையில் எண்ணப் பட்ட வீரர்களின் தொகை: ஐம்பத்தொன்பதினாயிரத்து முன்னூறு பேர்கள்.

14. காதென்பவனின் கோத்திரத்திலே துயேடைய குமாரன் எலியஸாப் சேனாதிபதியானான்.

15. அவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்களுடைய தொகை: நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது பேர்கள்.

16. ரூபனின் பாளையத்தில் எண்ணப் பட்டவர்கள் எல்லாரும் ஒரு லட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பிரயாணப் படுகையில் இவர்களே இரண்டாவதாய் தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி நடக்கக் கடவார்கள்.

17. பின்பு சாட்சியக் கூடாரம் லேவியரினாலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுக்கப் படும். அது எப்படி கட்டி ஸ்தாபிக்கப் பட்டதோ அப்படியே அது இறக்கப் படும். அவரவர்கள் தங்கள் வரிசையிலும் தங்கள் நிறையிலும் நடக்கக் கடவார்கள்.

18. எப்பிராயீம் புத்திரருடைய பாளையம் மேற்புறத்திலிருக்கும். அம்மியூதின் குமாரன் எலிஸமா அவர்களுக்குத் தளகர்த்தன்.

19. அவனுடைய சேனையில் எண்ணப் பட்ட வீரர்களுடைய தொகை நாற்பதினாயிரத்தைந்நூறு பேர்கள்.

20. அவனருகே மனாசேயின் புத்திராகிய கோத்திரத்தார் (பாளையமிறங்குவார்கள்.) இவர்களுக்குப் பின் பகதூரின் குமாரனாகிய கமலியேல் தளகர்த்தனானான்.

21. அவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்களுடைய தொகை: முப்பத்தீராயிரத்து இருநூறு பேர்கள்.

22. பெஞ்சமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு செசெயோனின் குமாரனாகிய அபிதான் சேனாதிபதியானான்.

23. இவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்களின் தொகை: முப்பத்தைந்தாயிரத்து நானூறு பேர்கள்.

24. எப்பிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப் படி எண்ணப்பட்ட வீரர்களின் தொகை ஒரு லட்சத்து எண்ணாயிரத்தொருநூறு பேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்லுவார்கள்.

25. டான் புத்திரர்கள் வடபுறத்திலே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாபு குமாரனான ஐயேசர் தளகர்த்தனானான்.

26. இவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்களின் தொகை: அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்கள்.

27. அவன் அருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் குமாரன் பெகியேல் அதிபதியானவன்.

28. இவனுடைய சேனையில் எண்ணப் பட்ட வீரர்களின் தொகை: நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்கள்.

29. நேப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் குமாரனான ஐரா அதிபதியானவன்.

30. இவனுடைய சேனையில் உட்பட்ட வீரர்களின் தொகை: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்கள்.

31. டானின் பாளையத்திலே எண்ணப்பட்ட சமஸ்த வீரர்களின் தொகை: ஒரு லட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு பேர்கள். புறப்படுகையில் இவர்கள் கடைசியாக நடப்பார்கள்.

32. தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், தங்கள் தங்கள் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்டு சேனைகளில் வகுக்கப் பட்ட இஸ்றாயேலின் புத்திரர்களுடைய முழுத்தொகை: ஆறு இலட்சத்து முலாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்கள்.

33. லேவியரோவென்றால் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடியே இஸ்றாயேல் புத்திரருக்குள் எண்ணப் படவில்லை.

34. ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்றாயேல் புத்திரர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்புப் பிரகாரம் பாளையம் இறங்கித் தங்கள் வம்ச குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர்.