இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 01

சனங்களைக் கணக்கிடத் தேவன் கட்டளையிட்டது--வம்சங்களின் பிரபுக்கள்-ஒவ்வொரு வம்சத்தின் சனத்தொகை-லேவியர் கணக்கிடப் படாதது.

1. மீளவும் இஸ்றாயேலியர் எஜிப்த்திலிருந்து புறப்பட்ட மறு வருஷத்தில் இரண்டாம் மாதம் முதராந் தேதியில் கர்த்தர் சீனாயி வனாந்தரத்திலிருந்த உடன்படிக்கைக் கூடாரத்திலே மோயீசனை நோக்கி:

2. நீங்கள் இஸ்றாயேல் புத்திரர்களுடைய முழுச்சபையை அவரவர் வீடு, அவரவர் வம்சக் கிரமப்படி எண்ணிப் பார்க்கக் கடவீர்கள். புருஷராயிருக்கிறவர்களெல்லோரையும் பேர் பேராக எழுதக் கடவீர்கள்.

3. நீயும் ஆரோனும் இஸ்றாயேலியரிலே இருபது வயது முதற்கொண்டு பலசாலியானவர்களையெல்லாம் அணியணியாய் எண்ணிக்கை இடுவீர்களாக.

4. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தங்கள் வம்சத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கிற பிரபுக்கள் உங்களோடிப்பார்கள்.

5. இவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்திலே சேதெயூருடைய குமாரனான எலிசூர்;

6. சீமையோனின் கோத்திரத்தில் சுரிஸதையுடைய குமாரனாகிய சலமியேல்;

7. யூதாவின் கோத்திரத்தில் அமினதாபுடைய குமாரனான நகஸோன்;

8. இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய குமாரனான நத்தானியேல்;

9. சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய குமாரனான எலியாப்;

10. ஜோசேப்பு புத்திரருக்குள்ளேயோவென்றால், எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரனான எலிஸிமா. மனாசே கோத்திரத்தில் பகதூருடைய குமாரனான கமலியேல்;

11. பெஞ்சமீன் கோத்திரத்தில் செதெயோனின் குமாரனான அபிதான்;

12. டான் கோத்திரத்தில் அமிகதாகுடைய குமாரனான ஐயேசர்;

13. ஆசேர் கோத்திரத்தில் ஒக்கிரானுடைய குமாரனான பெகியேல்;

14. காத் கோத்திரத்திலே துயேலுடைய குமாரனான எலியஸாப்;

15. நேப்தலி கோத்திரத்திலே ஏனானுடைய குமாரனான ஐரா என்பவர்களாம்.

16. இவர்களே தங்ள் தங்கள் கோத்திரங்களிலும் வம்சங்களிலும் மிகப் பிரபலியமுள்ள சபைப் பிரபுக்களும் இஸ்றாயேலியரில் சேனாதிபதிகளுமாயிருக்கிறவர்கள் என்றருளினார்.

17. அப்படியே மோயீனும் ஆரோனும் மேற்படி பிரபுக்களையும் இஸ்றாயேலின் முழு சனச் சங்கத்தாரையும் வரச் சொல்லி,

18. இரண்டாம் மாதம் முதலாந் தேதி (பொதுக்)கூட்டங் கூட்டிப் புருஷரெல்லாரையும் அவரவருடைய வம்சம், வீடு, குடும்பம், நபர், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி இருபது வயதுள்ளவர்களையும் அதற்கு மேற்பட்ட பிராயமுள்ளவர்களçயும் எண்ணிப் பார்த்தார்கள்.

* ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொரு குடும்பத்திலும் முன்னோர்களுடைய ஞாபகம் நிலைத்திருக்கும்படி இஸ்றாயேலியர்கள் தங்கள் தங்கள் வம்சத்தையும் குடும்பத்தையும் கலக்கமின்றிக் காப்பாற்றும் படிக்கும் இந்த எண்ணிக்கையிலே அவையெல்லாம் எழுதி வைத்தார்கள்.

19. கர்த்தர் அப்படிச் செய்யும்படி கற்பித்திருந்தார். அவர்கள் சீனாயி வனாந்தரத்திலே எண்ணப் பட்டார்களாம்.

20. இஸ்றாயேலுடைய மூத்த கோத்திரத்திலே அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, நபர், பெயர் என்னும் ஒழுங்குப்படி பார்த்து இருபது வயது முதல் யுத்தத்திற்குப் போகத்தக்க புருஷர் எண்ணப் பட்ட தொகை,

21. நாற்பத்தாறாயிரத்து ஜந்நூறு பேர்கள்.

22. சீமையோனின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம் , குடும்பம், வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

23. ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு பேர்கள்.

24. காதின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

25. நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது பேர்கள்.

26. யூதாவின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

27. எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்கள்.

28. இசக்காரின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

29. ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர்கள்.

30. சாபுலோனின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

31. ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்கள்.

32. ஜோசேப்புடைய புத்திரருக்குள்: எப்பிராயீமின் புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

33. நாற்பதினாயிரத்தைந்நூறு பேர்கள்.

34. மனாசேயுடைய புத்திரரிலோவென்றால்: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

35. முப்பத்தீராயிரத்திருநூறு பேர்கள்.

36. பெஞ்சமீனுடைய புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

37. முப்பத்தையாயிரத்து நானூறு பேர்கள்.

38. டானுடைய புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

39. அறுபத்தீராயிர் தெழுநூறு பேர்கள்.

40. ஆசேருடைய புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

41. நாற்பத்தோராயிரத்தைந்நூறு பேர்கள்.

42. நேப்தலியுடைய புத்திரரிலே: அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, நபர் பெயர் என்னும் ஒழுங்குப்படிப் பார்த்து இருபது வயது முதல் யுத்தத்துக்குப் போகும் புருஷர் எண்ணப்பட்ட தொகை:

43. ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்கள்.

44. மோயீசனாலேயும் ஆரோனாலேயும் பன்னிரண்டு பிரபுக்களாலேயும் எண்ணப் பட்டவர்கள் இவர்களேயாம். ஒவ்வொருவர் அவரவருடைய வம்சத்து வீட்டின் ஒழுங்குப்படி (எண்ணப் பட்டார்கள்.)

45. ஆகையால் இருபது பிராய முதல் தங்கள் தங்கள் வம்சப் படியும் குடும்பப் படியும் எண்ணப் பட்ட இஸ்றாயேலின் புத்திரர்களுக்குள்ளே யுத்தத்துக்குப் போகத் தக்க வீரர்களுடைய பெரிய தொகை:

46. ஆறு இலட்சத்து மூவாயிரத் தைந்நூற்றைம்பதாம்.

47. லேவியரோவென்றால், தங்கள் குடும்பக் கோத்திரத்திலே எண்ணப் பட்டதில்லை.

48. ஏனெனில் கர்த்தர் மோயீசனை நோக்கி:

49. நீ லேவியரின் கோத்திரத்தை எண்ணவும் வேண்டாம். லேவியர்களின் தொகையை இஸ்றாயேல் புத்திரர்களின் கணக்கிலே சேர்க்கவும் வேண்டாம்.

50. அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும் அதில் உதவும் சகல தட்டுமுட்டுகளையும் இரீதிச் சடங்குகளுக்கடுத்தவைகளையும் விசாரிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதின் சகல சாமான்களையும் சுமந்து கொள்ளவும், (தேவ) ஊழியங்களைச் செலுத்தவும் கடவார்கள். கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.

51. புறப்பட வேண்டியதாயிருக்கையிலே லேவியர் கூடாரத்தை இறக்கி வைப்பார்கள். பாளையமிறங்க வேண்டியதாயிருக்குங்கால் அதை அவர்களே ஸ்தாபித்து வைப்பார்கள். அன்னியனெவனாயினும் அதற்கருகே வந்தால் அவன் கொலை செய்யப் படுவான்.

52. இஸ்றாயேலி புத்திரரோவென்றால் தங்கள் தங்கள் அணிவகுப்பும் படையும் சேனையும் சேர்த்து பாளையமிறங்குவார்கள்.

53. லேவியரோ இஸ்றாயேல் புத்திரராகிய சபையின் மீது (தேவ) கோபம் வராதபடிக்குத் (திரு) கூடாரத்தண்டையில் தங்கள் கூடாரங்களை விரித்துக் கட்டி, சாட்சியக் கூடாரத்தைக் காத்தலில் உத்தியோகமாயிருப்பார்கள் என்றருளினார்.

54. ஆகையால் இஸ்றாயேல் புத்திரர் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து வந்தார்கள்.