அர்ச். பிலோமினாளின் அருளிக்கங்கள் முஞ்ஞானோ பட்டணத்திற்கு வரும்போது புதுமைகள் நடந்தன. ஒரு மனிதன் பல மாதங்களாக நோயுற்று படுக்கையிலிருந்தான். மறுநாள் பிலோமினம்மாள் அவ்விடத்திற்கு வருகிறாள் என்றறிந்த அவன், அர்ச்சியசிஷ்டவளின் அருளிக்கத்தை முத்தம் செய்யக்கூடிய அளவிற்காவது தனக்கு திடன் அருளும்படி மன்றாடினான். அவன் கேட்டதற்கு மாறாக அவனுடைய வேதனை அதிகரித்தது. மறுநாள் காலையில் பிலோமினம்மாளின் வரவை கோவில் மணிகள் அறிவித்தன. இந்த நோயாளி தன் பலமெல்லாம் கூட்டி எப்படியாவது தான் அந்த பவனியில் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று மிகுந்த சிரமத்துடன் தன்னையே இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தான். ஆச்சரியமாக அந்த விநாடியில் அவன் குணமடைந்து, பவனியில் மகிழ்ச்சி யுடன் கலந்து கொண்டான்.
புதுமை வரத்தியான அர்ச். பிலோமினம்மாள் தன் விருப்ப இருப்பிடமான முஞ்ஞானோ ஊருக்கு வந்து சேர்ந்து விட்டாள்! ஆலயத்தின் சுவிசேஷ பக்கத்தில் ஒரு அழகிய மாடத்தின் கீழ் அவளது அருளிக்க சுரூபப் பேழை அமர்ந்தது. நன்றியறிதல் பாடற்பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டது. முஞ்ஞானோ இருந்த நோலா மேற்றிராசனத்தில் அன்று கடன் திருநாளாக அறிவிக்கப்பட்டது. அன்று 1805, ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியாகும்.
பங்குக்குரு சங். லூஸியாவின் பிரான்சிஸ்கோ சுவாமி தாம் விரும்பி முயன்று, கொண்டு வந்த கன்னியும் வேத சாட்சியுமான அர்ச். பிலோமினாம்மாளின் திருப்பண்டங் களை முஞ்ஞானோ பங்கு மக்களுக்கு உரியதாக்கினார். இந்த நன்கொடையை அரசுப் பதிவாளர் திரு. தோமாஸோ டி ஆந்திரேயர் என்பவர் பதிவு செய்தார்.